யு.எஸிலிருந்து இரண்டு வார விடுப்பில் மகன்கள் இருவருடனும் வந்திருந்த சின்ன தங்கை ஒவ்வொருவர் வீடாக சென்றால் பயணத்திலேயே பாதி நாட்கள் கழியுமே என நானும் பெங்களூரில் இருக்கும் இன்னொரு தங்கையும் நெல்லையில் அம்மா வீடு செல்ல முடிவெடுத்தோம். என் மகனுக்கும் செமஸ்டர் விடுமுறை. தங்கை மகளுக்கும் விடுமுறை. வசதியாயிற்று. அத்தைகளுக்காகவும் கஸின்களுக்காகவும் அங்கே ஆவலாய் காத்திருந்தான் தம்பியின் ஒன்றரை வயது மகன். குடும்பம் ஒன்று கூடினால் குதூகலத்துக்குக் கேட்க வேண்டுமா? இனிதே கழிந்தது விடுமுறை.
கருங்குளம் சென்றிருந்தோம். குன்றின் மேல் அமைந்த பெருமாள் கோவில்.சுற்றிச் சூழ பசுமையைப் பறை சாற்றும் வயல்கள். ஆங்காங்கே மந்தை மந்தையாய் ஆடுகள். வயல்வெளிகள். சுதந்திரமாய் உலவியபடி சில குதிரைகளும் குட்டிகளும்.

மேலே சென்றதும் அப்படியொரு இதமான காற்று. மேகங்கள் விரைந்தபடி இருக்க வெகு அழகாய் ஆகாயம். எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது அங்கு காண நேர்ந்த மக்களின் மிக எளிமையான வாழ்க்கை.
தரிசனம் முடித்து வெளிவந்த சமயம் கோவிலுக்கு எதிரே ஒரு முதியவர், வயதின் காரணமாக பார்வை குறைந்த நிலையில். பக்கத்தில் ஒரு எவர்சில்வர் கேனில் சூடான சுக்குவென்னீர். வேட்டி மடிப்பில் கட்டி வைத்திருந்த கவரில் டிஸ்போஸிபிள் கோப்பைகள். எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் மிதந்து வந்த பாடலுக்கு அவரது விரல்கள் விடாமல் தாளமிட்டபடி இருந்தன.
கூடவே இளம் வயதில் சுண்டல் வியாபாரி. அவர் மகன் எனத் தெரிய வந்தது. ‘சூடாயிருக்கு கொண்டை கடலை. வாங்குங்கம்மா’ என்றார். ‘அத்தனை பேருக்கும்’ என்றதும் முகத்தில் ஒரு பளீர் சிரிப்பு. சந்தோஷமாய்ப் பொட்டலமிட ஆரம்பித்தார்.

‘அண்ணே ரெண்ரெண்ட் ரூபாய்க்கா அஞ்சு சுண்டல்’ என வந்து நின்றார்கள் சில சிறுமியர். ‘முதலில் அவர்களுக்கு கொடுங்க’ என்றோம். பேச்சுக் கொடுத்ததில் சிலர் பக்கத்து கிராமம். அத்தை வீடு வந்தோம் வார இறுதி என்பதால் என்றார்கள் இருவர். எல்லோருமாய் சுண்டலை வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த பாறையை நோக்கி நடையைக் கட்டினார்கள்.
அந்த வயதிலும் பேரனைத் தூக்கிக் கொண்டு கிடுகிடுவெனப் படியேறி அவர்களிடம் வந்தார் ஒரு வயதான பெண்மணி. ‘வந்துட்டியா?’ எங்களுக்காக சுக்குவென்னீர் கோப்பையை ஒன்றொன்றாக மகனிடம் தந்தபடியிருந்த முதியவர் சந்தோஷமாய் குரல் எழுப்பினார். பெண்மணி ‘ம்’ என்றிட ‘அவன்’ என்றார். ‘அவனில்லாம நா ஏன் வாரேன்’ என சிரித்தார்.

வேலையை முடித்து விட்டு ‘கொண்டா கொண்டா’ எனக் காற்றைக் கைகளால் துழாவினார். மகன் வாங்கி அந்த சிசுவை தாத்தாவின் மடியில் வைக்க, முதியவருக்கு என்ன ஒரு சந்தோஷம். குழந்தையும் தாத்தாவிடம் தாவி வந்தமர்ந்து சிரித்து விளையாடத் தொடங்கியது. சிறிது நேரத்தில் ‘இருட்டப் போவுது. நாளை வாரேன்’ என குழந்தையை வாங்கிக் கொண்டு மறுபடி சிட்டாய்ப் பறந்தார் பாட்டி, படிகளின் வழியே.
அது தினசரி வழக்கம் என்பதும் குழந்தை தாத்தாவோடு வசிக்கவில்லை என்பதும் புரிந்தது. அவரிடம் காட்டுவதற்காக மட்டுமே அழைத்து வரப்படுவது கோவிலுக்குச் செல்லாமல் அப்பெண்மணி மறுபடி விடுவிடுவென படியிறங்கிச் சென்றதில் புரிந்தது. மகள் வயிற்றுப் பேரனோ கொள்ளுப் பேரனோ சகோதரியின் பேரனோ தெரியாது.

குன்றின் கீழிருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லலாமென வந்த வாகனங்களை நோக்கி நாங்கள் நடக்க ஆரம்பிக்க கண்ணில் பட்டார்கள் சுண்டல் வாங்கிச் சென்ற சிறுமியர். ஆகா என்ன ரசனையான வாழ்க்கை. பாறை மேல் அமர்ந்து மலை, வாழைத்தோப்பு, பரந்த வானம், மறையும் சூரியன், வீசும் தென்றல் எல்லாவற்றையும் அனுபவித்து ரசித்தபடி சுண்டலைக் கொறித்தவாறு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ‘முகம் பார்க்காமல் அலைதொலைபேசிகளிலும் இணையத்திலும் அடிக்கும் அரட்டையெல்லாம் ஒரு அரட்டையா? எங்களைப் பாருங்கள்’ என ‘கப கப’க்க வைத்தார்கள்.
அடிவாரத்தில் சிவன் கோவில். ‘காரிலேயே செருப்பை விட்டு விடட்டுமா’ பெங்களூர் கோவில் வாசலில் இதுவரை நாலைந்து முறை குடும்பமாக, ஏழெட்டு ஜோடிகளை மொத்தமாக தொலைத்த அனுபவத்தில் மகன் கேட்டான். அதுவும் மிகச் சமீபமாக ஊர் கிளம்பும் இரண்டு தினம் முன்னர் தொலைத்ததும், அவசரமாய் வேறு வாங்கியதும் நினைவிடுக்கிலிருந்து எட்டிப் பார்த்து எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும்:). ‘இங்கேயெல்லாம் யாரும் அப்படி எடுக்க மாட்டார்கள். தைரியமாய் அணிந்து வா. கோவில் வாசலில் விட்டுக் கொள்ளலாம்’ என்றேன்.
அரைமணியில் வெளிவந்தோம். குன்றின் மேல் பார்வை சென்ற போது அந்தச் சிறுமியர் கைகளை நீட்டி ஆட்டி இன்னும் அரட்டை அடித்தபடி. என் மகனுக்கும் சின்னத் தங்கைக்கும் ‘நாமெல்லாம் அப்படி உட்கார்ந்து பேசவில்லையே. எவ்வளவு ஜாலியாய் இருந்திருக்கும்’ மறுபடி காதிலே புகை. ‘சரி ஊர் போகும் முன் இன்னொரு முறை வருவோம்’ என அம்மா சமாதானம் செய்து அடுத்திருந்த ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.
குழந்தைகளுக்கு ஐயப்பன் கதையையும் புலிவாகனத்தைக் காட்டி புராணத்தையும் சொல்லியபடியே அங்கிருந்து கிளம்பிய வேளையில் மெதுவாக இருள் கவியத் தொடங்கியிருந்தது. கோவில் முன்னிருந்த குறுகிய சாலையில் கூட்டத்தின் ஊடாக மெல்ல மெல்ல நகர்ந்த வாகனத்துள் இருந்து கண்ட காட்சி.. சுண்டல் வியாபாரியின் ஒரு கை தலையிலிருந்த கூடையைப் பிடித்திருக்க மறு கையிடுக்கில் சற்று நீண்ட கம்பு. கம்பின் இன்னொரு முனையைப் பற்றியபடி அவனுடன் வேகமாய் நடந்து கொண்டிருந்தார் முதியவர்.
நெகிழ்வாய் உணர்ந்தோம். 'பேசாம வீட்டோடு இரு’ யாரும் சொல்லவில்லை. ஒருபடி மேலாக அக்கறையுடன் அழைத்துச் செல்லும் மகன். தாத்தாவைப் பார்க்க தினசரி பேரன் அனுப்பி வைக்கப் படுகிறான். உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை எதை என்று சொல்ல. பெரிய கனவுகள் லட்சியங்கள் இவர்களுக்கு இருக்குமா தெரியாது. அன்றாட உழைப்பில் அன்றைய ஜீவனம். தேவைகள் தீர்மானிக்கப்பட்டு தேடல்கள் வரையறுக்கப்பட்டு சீரான பாதையில் செல்லும் தெளிந்த நீரோடையை போன்றதான வாழ்க்கை. கிராமத்துக் காற்றைப் போல சுத்தமாய் மனம்.
அவரசயுகத்தில் இழந்த வாழ்க்கை முறைகளுக்காகவும், ஏன்.. அந்த சிறுமியரைப் போன்று ஏகாந்தமான சூழலில் அரட்டையடிக்க முடியாததற்கும் கூட எழுகிற நம் ஏக்கம் எத்தனை உண்மையானது? தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாய் வாழ வரம் தருகிறேன்’ என குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம்? பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்?
கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து, காற்றில் அங்குமிங்கும் அலைந்து, வேகவேகமாய் வெள்ளை மேகங்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டன வெட்கப்பட்டு.
***
உயிர்மை.காமின்
இன்றைய உயிரோசையிலும்.., நன்றி உயிரோசை!