Thursday, March 11, 2010

கால காலமாய்..

கோவிலில்
அர்ச்சனைக்குக் கொடுத்திருக்கிறாளாம்
அவர் பெயரில்

அழைத்து நின்ற மனைவிக்கு
அவள் செல்லமகன் கடைக்குட்டியைக்
கைகாட்டி விட்டு
மனையெங்கும் நிறைந்திருந்த
மற்ற உறவுகளைக்
கூட்டினார் ஒன்றாகக் கூடத்தில்

அடுத்த ஐந்து தினங்களில்
வரவிருந்த தன் ஐம்பதாவது
மணவிழாக் கொண்டாட்டத்தில்
எவரெவருக்கு என்ன பொறுப்பெனப்
பிரித்துக் கொடுத்துவிட்டுப்
பெருமிதமாய் நிமிர்ந்தமர்ந்தார்

வருகின்றயாவரும் வாய்பிளந்து
ஆச்சரியப் பெருமூச்செறிந்து
கண்ணிமைக்கவும்தான்
மறந்துபோகிற வண்ணமாய்
பரிசொன்றைத் தரவேண்டும்
சபையிலே தன்னவளுக்கு

கவுரவத்தைக் காக்கும்வகையில்
கச்சிதமான பொருளினைப்
பரிந்துரைக்கும் நபருக்கும்
தருவேன் என்றார் அன்பளிப்பாய்
தங்கத்தில் மோதிரமொன்று
நடுவில் உயர்ரத்தினம் பதித்து

முன்வந்து சிலாகித்தாள்
மூத்த கொழுந்தியாள்
அன்றொருநாள் போத்தீஸில்
வியந்துபார்த்து வாங்காதுவிட்ட
பாட்டுப்பாடும் சீலையை

'வைரத்தில்ஆரம் வனப்பாய்
இருக்கும் அண்ணிக்கு'
குரல் கொடுத்தாள் தங்கை
வேண்டும் போது பெற்றிடலாம்
உரிமையோடு இரவல் என்று

'தனியாகக் கார் இருந்தால்
சவுகரியம் பாட்டிக்கு'
ஊர்சுற்ற தனக்கும்
உள்ளுக்குள் நினைத்தபடி
செல்லமகளின் சீமந்தப் புத்திரன்

'ப்ளாஸ்மா நல்லாயிருக்குமே'
தென்றலும் திருமதிசெல்வமும்
இனிவிரிவார்கள் பெரியதிரையில்
கற்பனையில் அகமகிழ்ந்தபடி மருமகள்

பெரியமகன் சொன்னது
சகலைக்குப் பிடிக்கவில்லை
அயித்தான் சொன்னது
அத்தைக்கு ஒப்புதலில்லை
அவரவர் ஆசைக்கு
அடுத்தவர் சொல்வது
அத்தனை ரசிக்கவில்லை

ஆனாலும் பெரிதுபடுத்தாது
நவநாகரீக பிளாட்டின நகைமுதல்
அதிநவீனக் கைபேசி வரை
ஒவ்வொருவர் ஒன்றைச் சொன்னார்
தவற விடுவானேன்
தனிபரிசையெனப் பலபேரும்
அக்கறையில் வெகுசிலபேரும்

எவர்சொன்னதிலும் திருப்தியின்றி
அவகாசம் வாங்கிக்கொண்டு
கூட்டத்தைக் கலைத்திட்டார்
குழப்பத்துடன் எழுந்திட்டார்
ஓய்வாக உள்ளறையில்
ஆழ்ந்துபோனார் சிந்தனையில்

ஆடியதுநிழல் வாசற்படியிலே
அன்னைக்குத் துணையாக
ஆலயம் சென்றிருந்தவன்
நின்றிருந்தான் நெடுமரம்போலே

ஏனோ தன்னோடு அதிகம்
ஒட்டுவதில்லை எனும்
நெஞ்சடைக்கும் ஏக்கத்தால்
அதீத பிரியம்தான்
எப்போதும் இவன்மேலே

சொல்லெனக் கண்ணாலேபேசிக்
கனிவாய்ப் பார்த்திருந்தார்
ஆடும் நாற்காலியில்
முன்னும்பின்னும் போனபடி

சின்னத் தயக்கத்துக்குப்பிறகு
திறந்தான் சின்னவன் மனதை
"இனியாவது அம்மாவுக்கு
மதிப்பு சந்தோசம் நிம்மதி"

நின்றது நாற்காலி.
நிற்காமல் காலகாலமாய்
ஓடிக் கொண்டிருந்தது
அறைமூலையில்
ஆளுயரப் பாட்டன்கடிகாரம்

திருகப்பட்ட சாவிக்குத்
தடையற்ற
சேவையைத் தந்தபடி
கடந்துபோன
நிகழ்வுகளுக்கு எல்லாம்
கனமான மவுனசாட்சியாய்..?!
***

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்
பி.கு: ‘இப்படியா நடத்தப் படுகிறார் மகளிர் ?’ எனக் கேட்டால் ‘இப்படியும்தான்! ’ என்பதே பதில்.


 • 6 மார்ச், விகடன்.காம் சக்தி 2010 மகளிர் தினச் சிறப்பிதழில் வெளியான கவிதை.
77 comments:

 1. பாராட்டுகளோடு சேர்த்து வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. interesting expression. keep writing.

  ReplyDelete
 3. //சின்னத் தயக்கத்துக்குப்பிறகு
  திறந்தான் சின்னவன் மனதை
  "இனியாவது அம்மாவுக்கு
  மதிப்பு சந்தோசம் நிம்மதி"//

  உண்மைதான்! பல குடும்பங்களில், வாழ்க்கை பயணம் மேற்கொள்ளும் சகபயணிக்கும் நிம்மதியானதொரு நிலை கிட்டுவதில்லை :(

  ReplyDelete
 4. கவிதையும் ஊர்கதை பேசுதே!! அருமையான கவிதை வரிகள்,

  நல்லாருக்கு ராமலட்சுமி மேடம்.

  ReplyDelete
 5. நல்ல கவிதை ராமலஷ்மி

  ReplyDelete
 6. வாழ்த்துகள்...

  மிக்க நன்று...அருமையாக சொல்லியுள்ளீர்கள்

  ReplyDelete
 7. //இனியாவது அம்மாவுக்கு
  மதிப்பு சந்தோசம் நிம்மதி//


  இதைவிட சிறந்த பரிசை குடும்ப தலைவிக்கு குடும்ப தலைவன் கொடுக்க முடியாது.

  சின்னவனுக்கு வரும் வாழ்க்கை
  துணைக்கு மதிப்பு,சந்தோஷம் நிம்மதி
  கிடைக்கும் என நினைக்கும் போது மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படுகிறது.

  நல்ல கவிதை பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 8. அநேக பெண்களின் தேவை இதுவாகதான் இருக்கும், வெளிப்படையாக சொல்லாவிட்டாலும்.
  அருமையான, யதார்த்தமான சொற்சித்திரம் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 9. //இனியாவது அம்மாவுக்கு
  மதிப்பு சந்தோசம் நிம்மதி//
  சின்னவங்களுக்கெல்லாம் ஒரு பாடம். எப்படி இருக்கணுங்கிறது போல எப்படி இருக்கக் கூடாது என்பதையும் அழகாக புரிந்து கொண்டிருக்கிறான் அந்த சின்னவன்.

  ReplyDelete
 10. //"இனியாவது அம்மாவுக்கு
  மதிப்பு சந்தோசம் நிம்மதி"//

  அப்படியே திக்கென்றது மனது

  ReplyDelete
 11. பி.கு: ‘இப்படியா நடத்தப் படுகிறார் மகளிர் ?’ எனக் கேட்டால் ‘இப்படியும்தான்! ’ என்பதே பதில்.//
  மாறிக்கொண்டிருப்பதாக என் எண்ணம்

  ReplyDelete
 12. நல்லாருக்கு - ஒரு நாவலை சுருக்கமா தந்துட்டீங்களா! :-)

  ReplyDelete
 13. தன் கல்யாண நாளைன்னைக்கு வீட்டுக்காரர் சர்ப்ரைஸா கொடுத்த கொடுக்காபுளிக்கு ஒரு மனுஷி பட்ட சந்தோஷத்தை அம்மம்மா சொல்லியிருக்காங்க.

  அழகாய் நீங்களும் சொல்லியிருக்கீங்க

  ReplyDelete
 14. அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் பின் குறிப்பையும் ரசித்தேன் தோழி.

  ReplyDelete
 15. /நிற்காமல் காலகாலமாய்
  ஓடிக் கொண்டிருந்தது
  அறைமூலையில்
  ஆளுயரப் பாட்டன்கடிகாரம்/

  தலைமுறை,தலைமுறையாக தொடர்ந்து கொண்டுருக்கும்
  அவலத்தினை அழகான வார்தைகளோடு பதிவு செய்து உள்ளீர்கள்.இருப்பினும் தற்போதைய தலைமுறை மாறிகொண்டுதான் உள்ளது.


  மீண்டும் ஒருமுறை
  //நல்லாருக்கு - ஒரு நாவலை சுருக்கமா தந்துட்டீங்களா! :-)//

  ReplyDelete
 16. நல்ல கவிதை.... பாராட்டுக்கள்!

  ReplyDelete
 17. அருமையாக உள்ளது. வசதிகள் தான் பரிசென பலர் எண்ண, நிம்மதி என்ற பரிசுக்கு மனதுள் ஏங்கும் பெண்கள் பலருண்டு. அவர்களின் குரலாக இருக்கிறது /*இனியாவது அம்மாவுக்கு
  மதிப்பு சந்தோசம் நிம்மதி*/

  ReplyDelete
 18. உண்மைதான் என்று தோன்றினாலும் பல குடும்பங்களில் ஓய்வெடுக்க விரும்பாமல் உழைக்கும் பெண்கள் இருக்கிறார்கள். என் தொண்ணூற்றேழு வயதுப் பாட்டி தனது ராஜ்ஜியத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.

  உணர்வுகளை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்...

  ReplyDelete
 19. அங்கேயும் படித்தேன்!இங்கே பூங்கொத்து!

  ReplyDelete
 20. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் ரோஜா வெளிநாடு கிளம்பும்போது அவரது சித்தியும் மற்றவர்களும் வாங்கி வரவேண்டிய பொருள் என்று பெரிய பட்டியலையே நீட்டுவார்கள். கார்த்திக்கும் ஒரு துண்டு சீட்டை நீட்டுவார். அதில் பத்திரமா போயிட்டு திரும்பி வாங்க அப்படின்னு எழுதியிருக்கும். அந்தக் காட்சியை இந்தக் கவிதை நினைவூட்டியது. (இது தாய்மைக்கே உள்ள குணம். தொண்ணூத்து ஒன்பது சதவீத வீட்டுல இந்த கேரக்டர் நிச்சயம் இருக்கும்.)

  ReplyDelete
 21. பின் குறிப்பு சரியான ‘நச்’
  இனியாவது புழுதியிலிருந்து எடுத்து சுருதி சேர்த்து சுகராகம் இசைக்கவேண்டும்.

  அருமை அருமை!!!

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி

  கவிதை யதார்த்தம்

  ReplyDelete
 23. ‘இப்படியா நடத்தப் படுகிறார் மகளிர் ?’ எனக் கேட்டால் ‘இப்படியும்தான்! ’ என்பதே பதில்.


  ......... well-said. super, akka!

  ReplyDelete
 24. வரிக்கோர்பு ஈர்க்கிறது வழக்கம் போல :)) அத்தனையும் நிஜம். ஆனால், இங்கு பின்னூட்டிய சிலர் கூறிய 'மாறிக் கொண்டு தான் இருக்கிறது தலைமுறை', எனது கருத்தும்.

  ReplyDelete
 25. ரொம்ப நல்லாயிருக்கு மேடம்...

  ReplyDelete
 26. அழகான வாழ்க்கை கதை.. ராமலக்‌ஷ்மி..

  மாறிக்கொண்டுதான் இருக்கிறது என்கிறபோதே இன்னும் முழுதுமாய் மாறிவிடவில்லை என்று தெரிகிறதே. மாறாத குடும்பத்தில் ஒர் பெண் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பாள் நிம்மதியற்று இருப்பாள் என்கிற போது வலி தோன்றுவது இயற்கை தானே..

  ReplyDelete
 27. குழந்தைகளுக்காக விருப்பு வெறுப்பின்றி உயிருள்ள பிணங்களாய், துறவிகளாய், சுயமரியாதைத் தொலைத்துவிட்டு கண்களில் ம்ட்டுமே உயிரைவைத்துக்கொண்டு வாழும் எத்தனை மகளிர் ......ம்....

  ReplyDelete
 28. அருமையா சொல்லிட்டீங்க..
   
  கவிதை பாதி கதை பாதி கலந்து செய்த கலவையோ :-)

  ReplyDelete
 29. எனக்கு கவிதை புரிய ரொம்ப சிரமமா இருக்கு.. :-)

  ReplyDelete
 30. அக்கா.. சாட்டையடி..

  அருமையா இருக்கு.

  ReplyDelete
 31. அசத்துங்க..........
  சுப்பர்

  ReplyDelete
 32. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ராமலஷ்மி மேடம்.. அந்த அம்மாவின் மனதை படித்துவிட்டீர்கள்.

  ReplyDelete
 33. மேடம் கவிதை காட்சியா கண் முன்னாடி வந்து நிக்குது,,,

  பின் குறிப்பு வருத்தமளிக்கிறது எப்பவுமே எல்லாரும் அப்படி நட்த்துறதில்லயே

  :(

  ReplyDelete
 34. கோமதி அரசுவின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 35. goma said...

  //பாராட்டுகளோடு சேர்த்து வாழ்த்துக்கள்//

  பதிந்ததுமே மின்னலாய் வந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 36. Dr.Rudhran said...

  //interesting expression. keep writing.//

  மிக்க நன்றி டாக்டர்.

  ReplyDelete
 37. ஆயில்யன் said...
  //உண்மைதான்! பல குடும்பங்களில், வாழ்க்கை பயணம் மேற்கொள்ளும் சகபயணிக்கும் நிம்மதியானதொரு நிலை கிட்டுவதில்லை :( //

  கிட்டுகிறதா என அறிவதிலும் ஆர்வம் காட்டப் படுவதில்லை:(! நன்றி ஆயில்யன்!

  ReplyDelete
 38. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //கவிதையும் ஊர்கதை பேசுதே!! அருமையான கவிதை வரிகள்,

  நல்லாருக்கு ராமலட்சுமி மேடம்.//

  கதை சொல்லும் கவிதைதான். நன்றி ஸ்டார்ஜன்!

  ReplyDelete
 39. சின்ன அம்மிணி said...

  // நல்ல கவிதை ராமலஷ்மி//

  நன்றி அம்மிணி.

  ReplyDelete
 40. ஆ.ஞானசேகரன் said...

  //வாழ்த்துகள்...

  மிக்க நன்று...அருமையாக சொல்லியுள்ளீர்கள்//

  நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 41. கோமதி அரசு said...

  ***/ //இனியாவது அம்மாவுக்கு
  மதிப்பு சந்தோசம் நிம்மதி//


  இதைவிட சிறந்த பரிசை குடும்ப தலைவிக்கு குடும்ப தலைவன் கொடுக்க முடியாது./***

  இதைவிட வேறென்ன வேண்டும்?

  //சின்னவனுக்கு வரும் வாழ்க்கை
  துணைக்கு மதிப்பு,சந்தோஷம் நிம்மதி கிடைக்கும் என நினைக்கும் போது மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படுகிறது.

  நல்ல கவிதை பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி.//

  புரிதலுடனான கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா!

  ReplyDelete
 42. தமிழ் பிரியன் said...

  // Good Narration!//

  நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 43. அம்பிகா said...

  //அநேக பெண்களின் தேவை இதுவாகதான் இருக்கும், வெளிப்படையாக சொல்லாவிட்டாலும்.
  அருமையான, யதார்த்தமான சொற்சித்திரம் ராமலக்ஷ்மி.//

  நன்றி அம்பிகா!

  ReplyDelete
 44. சகாதேவன் said...

  ***/ //இனியாவது அம்மாவுக்கு
  மதிப்பு சந்தோசம் நிம்மதி//
  சின்னவங்களுக்கெல்லாம் ஒரு பாடம். எப்படி இருக்கணுங்கிறது போல எப்படி இருக்கக் கூடாது என்பதையும் அழகாக புரிந்து கொண்டிருக்கிறான் அந்த சின்னவன்./***

  அழகாய் சொன்னீர்கள்! கருத்துக்கு மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 45. ஈரோடு கதிர் said...

  ***/ //"இனியாவது அம்மாவுக்கு
  மதிப்பு சந்தோசம் நிம்மதி"//

  அப்படியே திக்கென்றது மனது/***

  சிந்திக்க வேண்டியது, இல்லையா? நன்றி கதிர்.

  ReplyDelete
 46. கண்மணி/kanmani said...

  //பி.கு: ‘இப்படியா நடத்தப் படுகிறார் மகளிர் ?’ எனக் கேட்டால் ‘இப்படியும்தான்! ’ என்பதே பதில்.//
  மாறிக்கொண்டிருப்பதாக என் எண்ணம்//

  நிச்சயமாக. ஆனால் இப்படியே வாழ்ந்து கழித்து விட்டது ஒரு தலைமுறை. அதன் மிச்ச சொச்சங்கள் எங்கேனும் தொடர்ந்து கொண்டிருக்கத்தான் கூடும். அவர்களும் மாற வேண்டும் என்பதே கவிதையின் நோக்கம். நன்றி கண்மணி!

  ReplyDelete
 47. சந்தனமுல்லை said...

  //நல்லாருக்கு - ஒரு நாவலை சுருக்கமா தந்துட்டீங்களா! :-)//

  அப்படியேதான் முல்லை:)! நன்றி.

  ReplyDelete
 48. வெள்ளிநிலா ஷர்புதீன் said...

  //:)//

  புன்னகைக்கு நன்றி!

  ReplyDelete
 49. புதுகைத் தென்றல் said...

  //தன் கல்யாண நாளைன்னைக்கு வீட்டுக்காரர் சர்ப்ரைஸா கொடுத்த கொடுக்காபுளிக்கு ஒரு மனுஷி பட்ட சந்தோஷத்தை அம்மம்மா சொல்லியிருக்காங்க.

  அழகாய் நீங்களும் சொல்லியிருக்கீங்க//

  ஆமாம் தென்றல். கடந்த தலைமுறைகளிடம் நிறைய இப்படியான கதையுண்டு.

  ReplyDelete
 50. ஜெஸ்வந்தி said...

  //அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் பின் குறிப்பையும் ரசித்தேன் தோழி.//

  நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 51. aambalsamkannan said...

  ***/ /நிற்காமல் காலகாலமாய்
  ஓடிக் கொண்டிருந்தது
  அறைமூலையில்
  ஆளுயரப் பாட்டன்கடிகாரம்/

  தலைமுறை,தலைமுறையாக தொடர்ந்து கொண்டுருக்கும்
  அவலத்தினை அழகான வார்தைகளோடு பதிவு செய்து உள்ளீர்கள்.இருப்பினும் தற்போதைய தலைமுறை மாறிகொண்டுதான் உள்ளது./***

  நிச்சயமாக. இப்படி வாழ்ந்திட பெண்களும் இப்போது தயாராகயில்லை:)! இருந்தாலும் நீங்களே மீண்டும் சொல்லியிருக்கிறது போல...

  //நல்லாருக்கு - ஒரு நாவலை சுருக்கமா தந்துட்டீங்களா! :-)//

  ஆம் எனக் கொள்ளலாம்:)!

  ReplyDelete
 52. Priya said...

  //நல்ல கவிதை.... பாராட்டுக்கள்!//

  நன்றி ப்ரியா.

  ReplyDelete
 53. க.பாலாசி said...

  //நல்ல கவிதை...//

  நன்றி பாலாசி.

  ReplyDelete
 54. அமுதா said...

  //அருமையாக உள்ளது. வசதிகள் தான் பரிசென பலர் எண்ண, நிம்மதி என்ற பரிசுக்கு மனதுள் ஏங்கும் பெண்கள் பலருண்டு. அவர்களின் குரலாக இருக்கிறது /*இனியாவது அம்மாவுக்கு
  மதிப்பு சந்தோசம் நிம்மதி*/ //

  ஆமாம், அந்த நிம்மதியும் அவரை மதிப்பதில்தான் கொடுக்க முடியும். கருத்துக்கு நன்றி அமுதா.

  ReplyDelete
 55. ஸ்ரீராம். said...

  //உண்மைதான் என்று தோன்றினாலும் பல குடும்பங்களில் ஓய்வெடுக்க விரும்பாமல் உழைக்கும் பெண்கள் இருக்கிறார்கள்.//

  பெண்கள் என்றைக்கும் அயராது உழைப்பதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் உரிய மதிப்புடன் நடத்தப் படுகையில். ஆனால் ‘ஓய்வற்ற’ என்பது கவனிக்கப்பட வேண்டியதே. உடல்நலம் பாதிக்கப்படும் வரை மற்றவருக்குப் புரிவதில்லை. Taken for granted என நடத்தப் படுவது இப்போது கூடத் தொடரத்தான் செய்கிறது பல இடங்களில்.

  ஒரு காலத்தில் தங்கள் குழந்தைகளின் திருமணம் போன்றவற்றில் கூட கருத்து சொல்ல வழியற்று இருந்திருக்கிறார்கள். [இந்தக் காலத்தில் பிள்ளைகள் எங்கே பெற்றோர் விருப்பத்தைக் கேட்கிறார்கள் என்கிறீர்களா? அது வேறுகதை:)!]

  //என் தொண்ணூற்றேழு வயதுப் பாட்டி தனது ராஜ்ஜியத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.//

  தன்னைச் சுற்றி அவர்கள் எழுப்பிக் கொண்ட கோட்டைக்குப் பின்னேயும் இருக்கக்கூடும் பகிர விரும்பாமல் பல கதைகள். அப்படியில்லையெனில் சந்தோஷமே.

  // உணர்வுகளை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்...//

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 56. அன்புடன் அருணா said...

  //அங்கேயும் படித்தேன்!இங்கே பூங்கொத்து!//

  மிக்க நன்றி அருணா!

  ReplyDelete
 57. திருவாரூரிலிருந்து சரவணன் said...
  //அதில் பத்திரமா போயிட்டு திரும்பி வாங்க அப்படின்னு எழுதியிருக்கும். அந்தக் காட்சியை இந்தக் கவிதை நினைவூட்டியது.(இது தாய்மைக்கே உள்ள குணம். தொண்ணூத்து ஒன்பது சதவீத வீட்டுல இந்த கேரக்டர் நிச்சயம் இருக்கும்.)//

  உண்மைதான் சரவணன். அழகான ஒரு காட்சியை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

  ReplyDelete
 58. நானானி said...

  //பின் குறிப்பு சரியான ‘நச்’
  இனியாவது புழுதியிலிருந்து எடுத்து சுருதி சேர்த்து சுகராகம் இசைக்கவேண்டும்.

  அருமை அருமை!!!//

  நன்றி நானானி, நல்லதோர் வீணையை நினைவு படுத்தியமைக்கும்.

  ReplyDelete
 59. thenammailakshmanan said...

  // வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி

  கவிதை யதார்த்தம்//

  கருத்துக்கு நன்றி தேனம்மை.

  ReplyDelete
 60. Chitra said...

  // ‘இப்படியா நடத்தப் படுகிறார் மகளிர் ?’ எனக் கேட்டால் ‘இப்படியும்தான்! ’ என்பதே பதில்.


  ......... well-said. super, akka!//

  நன்றி சித்ரா.

  ReplyDelete
 61. சதங்கா (Sathanga) said...

  //வரிக்கோர்பு ஈர்க்கிறது வழக்கம் போல :)) அத்தனையும் நிஜம்.//

  நன்றி சதங்கா.

  //ஆனால், இங்கு பின்னூட்டிய சிலர் கூறிய 'மாறிக் கொண்டு தான் இருக்கிறது தலைமுறை', எனது கருத்தும்.//

  நானும் அதை மறுக்கவில்லை:)!

  ReplyDelete
 62. தண்டோரா ...... said...

  //ரொம்ப நல்லாயிருக்கு மேடம்...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணிஜி!

  ReplyDelete
 63. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //அழகான வாழ்க்கை கதை.. ராமலக்‌ஷ்மி..

  மாறிக்கொண்டுதான் இருக்கிறது என்கிறபோதே இன்னும் முழுதுமாய் மாறிவிடவில்லை என்று தெரிகிறதே.//

  அதேதான் முத்துலெட்சுமி. யாராலும் இப்படி இல்லவேயில்லை என சொல்ல முடியவில்லையே!

  //மாறாத குடும்பத்தில் ஒர் பெண் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பாள் நிம்மதியற்று இருப்பாள் என்கிற போது வலி தோன்றுவது இயற்கை தானே..//

  அழகாய் சொன்னீர்கள். இந்தப் புரிதலுடன் அணுகுவோம். சிந்திப்போம்.

  ReplyDelete
 64. கண்ணகி said...

  //குழந்தைகளுக்காக விருப்பு வெறுப்பின்றி உயிருள்ள பிணங்களாய், துறவிகளாய், சுயமரியாதைத் தொலைத்துவிட்டு கண்களில் ம்ட்டுமே உயிரைவைத்துக்கொண்டு வாழும் எத்தனை மகளிர் ......ம்....//

  அவர்களை அப்படியே கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள் கண்ணகி. நன்றி!

  ReplyDelete
 65. "உழவன்" "Uzhavan" said...

  //அருமையா சொல்லிட்டீங்க..

  கவிதை பாதி கதை பாதி கலந்து செய்த கலவையோ :-)//

  அதேதான்:)! நன்றி உழவன்.

  ReplyDelete
 66. கிரி said...

  // எனக்கு கவிதை புரிய ரொம்ப சிரமமா இருக்கு.. :-)//

  விட்டு விடுங்கள்:)! தாயையும் மனைவியையும் மதிப்பவர் நீங்கள் என்பதை உங்கள் பதிவுகளின் மூலம் அறிந்திருக்கிறேன். ஆகையால் உங்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை.

  ReplyDelete
 67. சுசி said...

  //அக்கா.. சாட்டையடி..

  அருமையா இருக்கு.//

  மிக்க நன்றி சுசி.

  ReplyDelete
 68. vidivelli said...

  //அசத்துங்க..........
  சுப்பர்//

  நன்றி விடிவெள்ளி.

  ReplyDelete
 69. அமைதிச்சாரல் said...

  //அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ராமலஷ்மி மேடம்.. அந்த அம்மாவின் மனதை படித்துவிட்டீர்கள்.//

  நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 70. பிரியமுடன்...வசந்த் said...

  //மேடம் கவிதை காட்சியா கண் முன்னாடி வந்து நிக்குது,,,//

  நன்றி வசந்த்.

  //பின் குறிப்பு வருத்தமளிக்கிறது எப்பவுமே எல்லாரும் அப்படி நட்த்துறதில்லயே

  :(//

  வருத்தம் எதற்கு? ஆண்களைச் சாடுவது போலிருக்கிறதே என்றா? நன்றாகப் பாருங்கள். ‘இப்படித்தான்’ என சொல்லவில்லை ‘இப்படியும்தான்’ என்றே சொல்லியுள்ளேன். இந்த வட்டத்தினுள் வராதவர்கள் வருத்தப்படவே வேண்டாம். அல்லாதவர் சிந்திக்கட்டும். சரிதானா:)?

  ReplyDelete
 71. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //கோமதி அரசுவின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete
 72. மின்னஞ்சலில்..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'கால காலமாய்..' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th March 2010 12:49:05 PM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/201572

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழிஷில் வாக்களித்த 18 பேருக்கும், தமிழ்மணத்தில் வாக்களித்த 10 பேருக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete
 73. Lovely write up.. Sure, I myself have seen women treated like this... very nice..

  ReplyDelete
 74. @ அப்பாவி தங்கமணி,

  ஆம் புவனா, பார்த்த அனுபவத்தில் எழுதியதே. மிக்க நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin