ஞாயிறு, 24 மே, 2026

அக்னி நட்சத்திரம் - குறுங்கவிதைகள் 15 - பண்புடன் மின்னிதழில்..

 

1. 
எங்கும் வெயில்
வெப்பச் சாலைகளில் நிசப்தம்
நீளும் மதியம்.

2. 
சுருங்கி மறையும் நிழல்கள்
தலைக்கு மேல் நண்பகல்
கனக்கும் அமைதி.

3.
சுழலும் மின்விசிறி
சோம்பல் முறிக்கும் வட்டங்கள் 
கரைகிறது நேரம்.

4.
பொன்னாக மாம்பழங்கள்
பிசுபிசுக்கும் கைகள்
ஒளியாக வழிகிறது இனிப்பு.

5.
சூடான நிலம்
வெற்றுப் பாதங்கள் 
ஓடுகிறது குழந்தைமை.

6.
நெற்றியில் வியர்வை
உப்பு வெயிலின் சந்திப்பு
உடலோடு ஒட்டும் பகல்.

7.
தொலைதூரக் குயிலோசை
வெயிலில் வளையும் பாடல்
உருகும் எதிரொலி.













8.
சுருண்டு உடையும் சருகுகள்
குளிர்ச்சியைத் தேடும் காற்று
ஏங்கும் பூமி.

9.
அசையாத திரைச்சீலைகள்
வழி மறக்கும் தென்றல்
நிரம்பும் மெளனம்.

10.
வந்தது மாலை 
ஆசுவாசிக்கிறது செவ்வானம் 
தளர்கிறது வெப்பம்.

11.
சில்வண்டுகளின் ரீங்காரம்
பகலைக் குளிர்விக்கும் இரவு
மருந்தாகிறது இருட்டு.

12.
மண்பானைத் தண்ணீர்
தொண்டையில் குளிர்ச்சி
மண்ணைச் சுவைத்த நிம்மதி.

13.
கானலாகச் சாலைகள் 
ஏமாற்றும் கண்கள்
சூடான கனவுகள்.

14.
ஆடாத பனைகள்
அவற்றின் தலைகளில் வெயில்
கொட்டாவி விடுகிறது பொழுது.

15. 
வானில் முதல் கருமேகம்
நீலக்கடலில் நம்பிக்கை
காத்திருக்கிறது மழை.
***

குறுங்கவிதைகள் மற்றும் 
ஒளியாய் வழியும் இனிப்பு, குயில் படங்கள்: ராமலக்ஷ்மி

*

3 கருத்துகள்:

  1. படிப்படியாக நகர்கிறது கவிதைத்தொகுப்பு வெயிலிலிருந்து மழையை நோக்கி! நிஜத்தில் வெப்பம் அதிகம்.

    பதிலளிநீக்கு
  2. பகலை விட இரவுகளில் வெம்மை அதிகம்.  தகிக்கிறது பஞ்சணைகள்.

    பதிலளிநீக்கு
  3. மழையைச் சுமந்து செல்லும்
    மேகங்கள்
    எல்லா இடத்திலும் பொழிந்து விடுவதில்லை. 
    அங்கேயும் தட்டுப்பாடு போலும். 
    பிரார்த்தனைகளுக்கு
    முதலிடம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin