புதன், 27 மே, 2026

சிரிக்கும் இதயம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (27) - பண்புடன் இணைய இதழில்..

  

சிரிக்கும் இதயம்


உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-
இருண்ட அடிமைத்தனத்திற்குள்
அதை நசுங்க விடாதீர்கள்.

விழிப்புடன் இருங்கள்.
வெளியேற வழிகள் உள்ளன.
எங்கோ ஒரு ஒளி உள்ளது.
அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.
ஆயினும் அது
இருளை வென்று கொண்டேயிருக்கும்.

விழிப்புடன் இருங்கள்.
தெய்வங்கள் 
உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.
அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மரணத்தை உங்களால் வெல்ல முடியாது;
ஆனால் சில நேரங்களில்
வாழ்க்கைக்குள் இருக்கும் மரணத்தை
உங்களால் வெல்ல முடியும்.
அதை எத்தனை அதிகமாக
கற்றுக் கொள்கிறீர்களோ
அத்தனை அதிகமாக
ஒளி பெருகும்.

உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-
உங்களிடம் இருக்கும் போதே
அதை அறிந்து வாழுங்கள்.

நீங்கள் அற்புதமானவர்கள்.
உங்களில் மகிழ்வதற்காக
தெய்வங்கள் காத்திருக்கின்றன.
*

மூலம்: "The Laughing Heart" By Charles Bukowski 
*
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*

சார்லஸ் புக்கோவ்ஸ்கி  (1920 – 1994):













ருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார்.  புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. 

ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. சார்லஸ் புக்கோவ்ஸ்கி இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போர் ஆகியவற்றைத் தன் வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவர் படைப்புகளில் பரவலாக வெளிப்படும் அவநம்பிக்கை, கசப்புணர்வு ஆகியவற்றுக்கு இந்தக் காலக்கட்டங்களே காரண கர்த்தாவாகக் கைகாட்டப் படுகின்றது.

**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin