யோக நரசிம்மர் திருக்கோயில்
#1
மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை ஊராட்சியின் கீழ்வரும் யானைமலையின் அடிவாரத்தில் நரசிங்கம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது யோக நரசிங்கப் பெருமாள் கோயில் (அல்லது) யோக நரசிம்மர் திருக்கோயில்.
#2
பெருமாள் எடுத்த 10 அவதாரங்களில் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம், முதன் முதலில் இங்குதான் எடுக்கப்பட்டதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. அதன் பொருட்டு இங்கு இந்த யோக நரசிம்மர் கோயில் அமைந்ததாகவும், ஏறத்தாழ 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான கோயில் என்றும் கூறப்படுகிறது.
#3
2009_ஆம் ஆண்டு மதுரை சென்றிருந்தபோது இக்கோயிலில் தரிசித்த நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் மனக்கண்ணில் நின்றபடியால் மீண்டும் தரிசிக்க விரும்பிச் சென்றிருந்தேன். கருவறையிலுள்ள இப்பெரிய சிலை ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டது.
#4
மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாருக்குத் தனி சன்னதி உள்ளது.
மாலையில் கோயில் திறக்கும் முன்னரே மக்கள் வந்து காத்திருக்கின்றனர். அப்படியாக நாங்களும் காத்திருந்த நேரத்தில் எடுத்த படங்கள் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.
**
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
#5
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் யானைமலை ஒத்தகடைக்கு சற்று தொலைவிலேயே திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து அடுக்கு கொண்ட ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நான்கு பிரகாரங்கள் உள்ளன.
#6
விஷ்ணு புராணத்தில் பெருமாள் மோகினியாக அவதாரம் எடுத்து பஸ்மாசுரனை அழித்து சிவபெருமானுக்கு உதவியது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த சம்பவம் நடந்த இடத்தில் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மோகினி அவதாரத்தைக் குறிப்பிடும் விதமாகவே ‘திருமோகூர்’ எனும் பெயரும் வந்துள்ளது.
மூலஸ்தானத்தில் காளமேகப் பெருமாள் பஞ்சாயுத கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருக்கிறார். சயன கோலத்தில் ரங்கநாதர் தனி சன்னதியில் இருக்கிறார். மோகனவல்லி தாயாருக்கு அடுத்த பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.
இறைவனே மோகினி வேடம் ஏற்றதால் தாயார், திருவிழாக்களுக்குக் கூட கருவறையை விட்டு வெளியே வருவதில்லை என்றும் உற்சவருடன் ஆண்டாள் மட்டுமே வருவார் என்றும் தகவல்கள் உள்ளன. அங்கிருந்த வயதான பூசாரியும் இதனைத் தெரிவித்தார். 104 வைணவத் தலங்களில் தாயார் வெளியே வருவார் என்றும் மீதமுள்ள நான்கு தலங்களில் இக்கோயிலில் இவ்வழக்கம் என்றும் தெரிவித்தார்.
விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகளைப் பெறுவதால், இக்கோயில் சக்கரத்தாழ்வார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
#7
இக்கோயில் சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்து, மதுரை காஞ்சி மற்றும் ஐம்பெரும் காப்பியங்கைல் ஒன்றான சிலப்பதிகாரம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலை வேளையில் கூட்டம் இருக்கவில்லை. கோயிலுக்கு உள்ளே படம் எடுக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டுமென்றும் தெரியாததால், கோபுர தரிசனத்தைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
**
மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
உலகப் பிரசித்தி பெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு அறிமுகக் குறிப்பு அவசியமில்லைதான் என்றாலும் சுருக்கமாக சில தகவல்கள்:
மதுரை மாநகரம் இக்கோயிலை மையமாக வைத்தே உருவானது. கோயில் சுமார் 65000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பல அரசாட்சிகளின் போது, அந்தந்த காலக் கட்டத்தில் வளர்ச்சி பெற்று வந்தள்ளது. கி.பி. 1623-1655 ஆண்டுகளில் திருமலை நாயக்கரின் ஆட்சி காலத்தில் மிகச் சிறந்த விரிவாக்கத்தைப் பெற்றது.
மதுரைக்கு ஒத்த பெயர் பெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலை மையமாக வைத்தே மதுரை நகரம் உருவானது. ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று என்பது மட்டுமின்றி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பழையானதும் ஆகும். இந்தக் கோவில், பல இராஜ பரம்பரை ஆண்டு வந்தபோதிலும், அவரவர் ஆட்சிக் காலத்தில் பெரிதும் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் (65000 சதுர மீட்டர்) அமைந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இக்கோவில் கி.பி. 1623-1655 ஆண்டுகளில் ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலத்தில் சிறந்த விரிவாக்கம் பெற்றது.
சிவபெருமான் மனித உருவில் சுந்தரேஸ்வரராக அவதாரம் செய்து, கயல் போன்ற கண்களை உடைய மீனாட்சியை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட ஸ்தலம் இது. சுந்தரேஸ்வரருக்கும் மீனாக்ஷிக்கும் தனித்தனியாக இரு கோயில்கள் உள்ளன. அவற்றைச் சுற்றி மிகப் பெரிய நான்கு வாயில்களும் எட்டு கோபுரங்களும் இரண்டு விமானங்களும் உள்ளன.
பொற்றாமரைக் குளமும், ஆயிரங்கால் மண்டபமும் இக்கோயிலுக்கு மேலும் புகழ் சேர்க்கின்றன. எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் தூண்களும், மண்டபத்தின் நுழைவாயில் அருகே இருக்கும் இசைத் தூண்களும் ஆயிரங்கால் மண்டபத்தின் சிறப்பம்சமாகும்.
**
முதல் நாள் திரும்பரங்குன்றத்தில் தரிசனம் முடித்து விட்டு அங்கிருந்து நேராக இக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். நுழைவுச் சீட்டு வாங்கி பத்தரை மணி அளவில் வரிசையில் சேர்ந்தோம். திரையை மூடி பூஜை நடக்கிறதென வரிசை நிறுத்தப்பட்டது. ஒன்றரைமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. திரை திறந்த பிறகு நல்ல தரிசனம். அதன் பிறகு வேகமாக மற்ற சன்னதிகளையும் தரிசனம் செய்ய முடிந்தது.
பொற்றாமரைக் குளம், அங்கிருந்து தெரியும் கோபுரங்கள் இன்றும் அதே அழகு, பொலிவு. 15 ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்த போது இவற்றைப் படமெடுக்க வாய்த்ததை எண்ணித் திருப்தி பட்டுக் கொண்டேன். ஏனெனில், இப்போது நுழைவாயிலில் மொபைலை லாக்கரில் வைத்து விட்டுதான் செல்ல வேண்டும். ஆகையால் கேமரா, மொபைல்களை வண்டியிலேயே வைத்து விட்டிருந்தோம். கோயில் வளாகத்திற்குள் படம் எடுக்க அனுமதியில்லை.
2009_ஆம் ஆண்டில் எடுத்தவை:
சென்ற முறை பார்க்கத் தவறிய ஆயிரங்கால் மண்டபத்தை, நண்பர்கள் பகிர்ந்த படங்களைப் பார்த்து நானும் படமெடுக்க ஆசைப்பட்ட, ஆனால் அதற்கு இனி வாய்ப்பில்லாத கலை மண்டபத்தை, கண்களால் படமெடுத்து மனதில் இருத்திக் கொண்டேன்:). பிரமிக்க வைக்கும் கலை நயம்.., தூண் வரிசைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் கலைநயமிக்க அழகிய நடராஜர் சிலை, சன்னதியில் நிலவிய தெய்வீக அமைதி.., மறக்க இயலா அனுபவம்.
இந்த முறை கோயிலுக்கு வெளியே எடுத்த ஒருசில படங்கள் பார்வைக்கு:
புனரமைக்கும் பணி நடக்கிறது ஒரு கோபுரத்தில்..:
#8
அழகிய நுழைவாயில் கோபுரம்:
#9
#10
#11 புராதான ஓவியங்கள்:
#12 கோபுரச் சிற்பங்கள்:
மிக அருமையான புகைப்படங்கள். இந்த மூன்று இடங்களுமே நானும் சென்றிருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி. இங்கும் நானும் படங்கள் எடுத்திருந்தேன். சலங்கை ஒலி காட்சி நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குமதுரையில் வசித்தவர்கள் நிச்சயம் சென்றிருப்பார்கள். மகிழ்ச்சி.
நீக்குசலங்கை ஒலியில் எந்தக் கோயில் இடம் பெற்றிருக்கிறது? இந்தத் தகவல் புதிது.
சலங்கை ஒலியில் இந்த இந்த கோவில் பற்றி எதுவும் காண்பிக்க மாட்டார்கள்.
நீக்குஒரு சிறுவன் புகைப்படம் எடுப்பான் கமலஹாசனை. ஜெயப்பிரதாவும் எடுப்பார். சிறுவன் எடுப்பதற்கும் ஜெயப்பிரதா எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கும். அந்த சிறுவன் போல நான்..!!
அந்தக் காட்சியைதான் சற்றுமுன் யுட்யூபில் தேடிப் பார்த்தேன், அதில் வரும் கோயில் இவற்றில் ஒன்றோ என. நீங்கள் சொல்ல வந்தது புரிகிறது :))! உண்மையில் நீங்கள் எடுக்கும் படங்கள் நன்றாகவே உள்ளன.
நீக்குமதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சுதந்திரமாக தரிசனம் செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. வாசலில் கடும் காவல் இல்லை, கேமிரா, மொபைல் அனுமதி உண்டு.
பதிலளிநீக்குஅதற்கும் முன்னர் மிக சுதந்திரமாக சுற்றி தரிசனம் செய்த நாட்கள் இனிமையானவை. அரசாங்கம் பாதுகாப்பு, ஒழுங்குபடுத்தல் என்கிற பெயரில் நிறைய படுத்துகிறது.
ஆம், சென்ற முறை ஆயிரங்கால் மண்டபத்தைத் தவற விட்டது ஆதங்கமாகவே உள்ளது. பல கோயில்களில் இப்போது கேமராவுக்குத் தடை. சன்னதி தவிர பிற இடங்களில் எடுக்கலாம் என்கிற விதிமுறையை மீண்டும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இப்போது காமிரா, செல்போன் அனுமதி இல்லை இருந்து இருந்தால் நிறைய நல்ல படங்கள் உங்களிடமிருந்து கிடைத்து இருக்கும்.
பதிலளிநீக்குஅனைத்து கோயில் படங்களும் அழகு. அருமையான பயணம்.
தொடருங்கள்.
படங்களும் தகவல்களும் சிறப்பு. மதுரைக்கு சிறு வயதில் சென்றபோது மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம் சென்றது. நினைவு தெரிந்து இங்கே சென்றதில்லை.
பதிலளிநீக்குவாய்ப்புக் கிடைத்தால் ஆதி, ரோஷிணியுடன் சென்று வாருங்கள். நன்றி வெங்கட்.
நீக்குஆலய தரிசனப் பயணங்கள் மகிழ்ச்சி, உற்சாகம் கடந்து தெய்வீக அமைதியையும், மன நிறைவையும் தருபவை. உங்கள் அனுபவ வார்த்தைகள் அதை உறுதி செய்கின்றது. தலம் குறித்த தகவல் குறிப்புகள் மற்றும் சிறந்த ஆலய தரிசனப் படங்களும் நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தந்தது. அத்துடன். இவற்றில் சில ஆலயங்களுக்குச் சென்று வந்த நிகழ்வுகளையும் அவை நினைவுபடுத்தியது. நல்லதொரு பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குதங்கள் பயணங்களை நினைவு படுத்திக் கொள்ள முடிந்தது அறிந்து மகிழ்ச்சி. மிக்க நன்றி.
நீக்கு