அப்பா வீடு திரும்புகிறார்
என் அப்பா பின்மாலைப் புகைவண்டியில் பயணிப்பார்
மஞ்சள் ஒளியில் அமைதியான பயணிகளுக்கு நடுவே நின்றபடி
கவனிக்காத அவரது கண்களை புறநகர்கள் நழுவிக் கடந்து செல்லும்
அவரது சட்டையும் கால்சட்டையும் நனைந்திருக்க
புத்தகங்கள் திணிக்கப்பட்ட அவரது பை
சரிந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
வயதினால் மங்கிய அவரது கண்கள்
வீடு இருக்கும் திசையை நோக்குகின்றன
ஈரப்பதமான மழைக்கால இரவின் ஊடாக.
நீண்ட வாக்கியத்திலிருந்து கைவிடப்படும் ஒரு வார்த்தையை போன்று
புகைவண்டியிலிருந்து இறங்கும் அவரை
இப்போது என்னால் பார்க்க முடிகிறது.
அவர் துரிதமாக கடக்கிறார் நீண்ட சாம்பல் நிற நடைமேடையை,
அவரது செருப்புகள் சேறினால் பிசுபிசுப்பாக இருக்க
இருப்புப் பாதையைக் கடந்து, சந்தில் நுழைந்து, விரைகிறார்.
மீண்டும் வீடு, நான் பார்க்கிறேன் அவர் நலிந்த தேநீரைப் பருகுவதை,
பழைய சப்பாத்தியை உண்பதை, புத்தகம் வாசிப்பதை.
கழிவறைக்குள் செல்கிறார்
மனிதரால் உருவாக்கப்பட்ட உலகிலிருந்து
மனிதர் விலகுவதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க.
வெளியில் வந்தவர் நடுங்குகிறார் பீங்கான் தொட்டி அருகில்,
குளிர்ந்த நீர் ஓடுகிறது அவரது பழுப்புநிறக் கைகளின் மேல்,
சில நீர்த்துளிகள் அவரது மணிக்கட்டுகளின்
நரைத்த ரோமங்களில் ஒட்டிக் கொள்கின்றன.
அவரது பாராமுகப் பிள்ளைகள் எப்போதுமே
அவருடன் பகிர்ந்திட மறுத்து விடுகிறார்கள்
வேடிக்கைப் பேச்சுகளையோ இரகசியங்களையோ.
இப்போது அவர் தூங்கப் போகிறார்
கரகரக்கும் வானொலியைக் கேட்டபடி,
தன் முன்னோர்களையும், பேரக் குழந்தைகளையும் பற்றிக் கனவு கண்டபடி,
குறுகலான கணவாய்களின் வழியாக
துணைக் கண்டங்களுள் நுழையும் நாடோடிகளை நினைத்தபடி.
*
மூலம்: “Father Returning Home” by Dilip Chitre
*
திலீப் புருஷோத்தம் சித்ரே (1938 – 2009) இந்தியா விடுதலை பெற்ற பின் தோன்றிய மிக முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களுள் ஒருவராவார். கவனிப்புக்குரிய இருமொழி எழுத்தாளர். மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதி வந்தவர். ஆசிரியர், சிறந்த ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளர்.
*
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
**
நன்றி சொல்வனம்!
சொல்வனம் இதழில் இக்கவிதைக்கு எழுத்தாளர் இரா. முருகன் அவர்களது பின்னூட்டம். திலிப் சித்ரே குறித்த மேலதிகத் தகவல்களுக்காகவும் குறிப்பாக மகனை இழந்த சோகம் இக்கவிதையை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுவதாலும் இங்கும் சேமிக்கிறேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி
திரு. இரா.முருகன்!
***
அப்பா பற்றிய கவிதை நெகிழ்வு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஇரா முருகன் அவர்கள் கருத்து மேலும் சில விவரங்கள் தருகிறது.
பதிலளிநீக்குஆம்.
நீக்குசிறப்பான கவிதை. இரா முருகன் அவர்கள் அளித்த மேலதிகத் தகவல்களும் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குநெகிழ்வான கவிதை.
பதிலளிநீக்குஇரா. முருகன் அவர்கள் உங்கள் மொழிபெயர்ப்பை பாராட்டி, வாழ்த்தியது மகிழ்ச்சி.
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
நன்றி கோமதிம்மா.
நீக்குஉறவுகளின் விலகல், ஒதுக்கி வைக்கப்படுதல், தனிமை, வெறுமை என முதிர் வயதின் துயரங்களை மழையின் ஊடான புகைவண்டி பயணத்திலும், பிசுபிசுப்பான சேறு நிறைந்த செருப்பை அணிந்த நடை வழியாகக் காட்சிப்படுத்தியது அந்த உணர்வுகளையும், நிதர்சனங்களையும் எளிதாக உள் வாங்க முடிகிறது.
பதிலளிநீக்குநலிந்த தேநீர், பழைய சப்பாத்தி, பேசவும், முக்கிய விசயங்களைப் பகிர மறுக்கும் பராமுக பிள்ளைகள்.., முக்கியத்துவம் இழந்த முதுமை காலத்தின் அனுதின நிகழ்வுகளை கண்முன் காட்சிப்படுத்துகின்றன. புத்தகங்கள் திணிக்கப்பட்ட பை, கரகரக்கும் வானொலி, கனவுகள் மட்டுமே உடன் துணையாக இறுதிவரை தொடர்கிறது. இந்த உண்மையை கசப்பின்றி, முறுமுறுப்பின்றி எதிர்கொள்வது நலம். ஆழ்ந்த உணர்தலின் வரிகள். நல்லதொரு கவிதையைத் தெரிவு செய்து வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.
/ கசப்பின்றி எதிர்கொள்வது / சிரமம் எனினும் நிதர்சனத்தில் அது மட்டுமே சாத்தியம்.
நீக்குவிரிவான தங்கள் கருத்துகளுக்கு நன்றி.