செவ்வாய், 24 ஜனவரி, 2023

புத்தியும் இதயமும் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (21) - சொல்வனம் இதழ்: 282

புத்தியும் இதயமும்

விவரித்துச் சொல்லமுடியாதபடி நாம் தனித்திருக்கிறோம்
என்றென்றைக்கும் தனித்திருக்கிறோம்
அது அப்படியாக இருக்கவே 
விதிக்கப்பட்டிருக்கிறது,
அது வேறெப்படியும் இருக்க 
என்றைக்கும் விதிக்கப்படவில்லை -
மரணத்துடனான போராட்டம் தொடங்குகையில்
கடைசியாக நான் பார்க்க விரும்புவது
என்னை சுற்றித் தெரியும்
மனித முகங்களாலான வளையத்தை -
அதுவும் எனது பழைய நண்பர்களை
என் சுயத்தின் சுவர்களை,
அவர்கள் மட்டுமே அங்கிருக்கட்டும்.

நான் தனித்து இருந்து இருக்கிறேன் ஆனால் என்றைக்கும்
தனிமைப் பட்டதில்லை.
எனது தாகத்தைத் திருப்திப் படுத்தியிருக்கிறேன்
எனது சுயத்தின் கிணற்றில்,
அந்த திராட்சைப் பழரசம் நன்றாக இருந்தது,
நான் இதுவரையிலும் அருந்தியதில் சிறப்பானது,
இன்றிரவு 
உட்கார்ந்து
வெறித்துக் கொண்டிருக்கிறேன் இருட்டை.
இறுதியில் இப்போது நான் புரிந்து கொண்டேன்
இருட்டை 
வெளிச்சத்தை
இரண்டுக்கும் இடையேயான 
அத்தனையையும்.

புத்திக்கும் இதயத்திற்கும்
அமைதி வந்து சேருகிறது
நாம் எப்போது இவற்றை
ஏற்றுக் கொள்கிறோமோ:
இந்த விசித்திரமான வாழ்க்கையில்
பிறந்து விட்டுள்ள நாம்
ஒப்புக் கொள்ள வேண்டும்
சூதாட்டத்தில் வீணடித்த நம் 
நாட்களை
மேலும் சற்று திருப்தி அடையலாம்
அத்தனையையும் விட்டு விடுவதில்
கிடைக்கிற மகிழ்ச்சியில்.

எனக்காக அழாதீர்கள்.
எனக்காகத் துயரப்படாதீர்கள்.

வாசியுங்கள்
நான் என்ன எழுதியுள்ளேன் என்பதை
பிறகு
மறந்து விடுங்கள்
அத்தனையையும்.

உங்கள் சுயத்தின்
கிணற்றிலிருந்து அருந்துங்கள்
பிறகு தொடங்குங்கள்
மறுபடியும்.

*

மூலம்:
'Mind and Heart' By Charles Bukowski
**


சார்லஸ் புக்கோவ்ஸ்கி  (1920 – 1994):

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

இவரது கவிதைகள் மழுங்கலானவை என்றொரு கூற்று உண்டு. அன்றைய காலக் கட்டத்தில் கவிஞர்கள் ஒலிநயத்துடனான கவிதைகளை இயற்றுவதையே வழமையாகக் கொண்டிருந்தனர். உருவகங்களுடனும், மறை பொருட்களுடனும் எழுதுவதில் முனைப்பு காட்டி வந்தனர். சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதைகளோ உரைநடை வடிவைக் கொண்டிருந்தன. ஆரவாரமான அவரது படைப்புகள் கவித்துவமற்றவை என்று ஒரு சிலர் வாதிட, மற்ற சிலர் அதே படைப்புகளை உணர்ச்சி வேகமுடையவை எனக் கொண்டாடுகிறார்கள். 

சார்லஸ் புக்கோவ்ஸ்கி இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போர் ஆகியவற்றைத் தன் வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவர் படைப்புகளில் பரவலாக வெளிப்படும் அவநம்பிக்கை, கசப்புணர்வு ஆகியவற்றுக்கு இந்தக் காலக்கட்டங்களே காரண கர்த்தாவாகக் கைகாட்டப் படுகின்றது. 
**

13 நவம்பர் 2022, சொல்வனம் இதழ்: 282 வெளியீடு:
நன்றி சொல்வனம்!
***






12 கருத்துகள்:

  1. கவிதை அருமை.  ரஷ்யர் போல பெயர் கொண்ட இந்தக் கவிஞர் பற்றி அவரின் இன்னொரு கவிதையுடன் ஏற்கெனவே சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
  2. ஒன்றை இழந்த பின்னர் தான் அதன் உண்மையான மதிப்பு புரிகிறது.

    மரணத்துடன் போராடுகையில் பொருட்கள் மதிப்பிழந்து, அன்பிற்காக மனம் ஏங்குவதை அறிவும், உணர்வும் இணையும் அற்புதமாக தருணமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

    உண்மைதான். இழப்புகளுக்குப் பின்னரே இதயமும் (உணர்வுகளும்) , அறிவும் ஒன்றிணைந்து, எது மதிப்புமிக்கது எனும் உண்மை புலப்படுகிறது.

    பெரும்பாலும் அப்போது செய்யத் தவறி விட்டோமே, அல்லது இன்னும் கூட கொஞ்சம் செய்திருக்கலாமோ? எனும் ஏக்கமாகவே அவை அலைக்கழிக்கின்றது.

    நல்லதொரு படிப்பினையை நினைவூட்டும் கவிதையைப் பொருள் சிதைவுறாது தமிழில் வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கவிதை மிக மிக அருமை. ஆசிரியரின் கதை மிகவும் சோகமாக இருந்திருக்கிறது. அதை வாசித்த போது மனம் ரொம்ப வருந்தியது. உரைநடை என்று சொல்லப்பட்டாலும் அதில் உணர்ச்சிக் குவியல் என்றுக் கொண்டாடும் கட்சியில் நான்!

    தலைப்பில் சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை என்பதில் இந்தக் கி யை ஹிந்திப்படுத்தி தமிழில் என்றால் சார்லஸ் புக்கோவ்ஸ் ன் கவிதை என்பதும் பொருத்தமாக இருக்கோ என்றும் டக்குன்னு தோன்றியது.

    பெயர் ரஷ்யப்பெயர் போல இருக்கிறதே

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கவிதையின் தலைப்பு அழகு! கவிதை வரிகளில் சோகம் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  5. கவிதை அருமை.
    கவிஞர் வாழ்க்கை வரலாறு முன்பு படித்து இருக்கிறேன் உங்கள் தளத்தில்.
    புத்திக்கும் , இதயத்திற்கும் அமைதி வந்து சேர்ந்தால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. ஆம். கவிஞரின் கவிதைகளுடன் அவர் பற்றியக் குறிப்பை முன்னரும் பலமுறை பகிர்ந்து இருக்கிறேன்.

      நீக்கு
  6. நல்லதோர் கவிதை. மொழிபெயர்ப்பு அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin