சூழலியல் கவிதைகளில் ஒரு பசுமைப்பயணம் - 04
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு
துயர் உறுத்தும்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"
(சிலப்பதிகாரம்- காடுகாண் காதை)
செழிப்பு, தன் நிலையிலிருந்து திரிந்து பாலைவனமாக மாறுகிறதென்றால் யார் காரணமாக முடியும்?
சூழலியல் என்கிற பதத்தின் அரிச்சுவடியும் அறியாத ஆள்கிறவர்கள், அதிகார வட்டங்கள், பொதுவெளி மக்கள் எல்லாரும்தான்.
மரங்களை, செடிகளை, கொடிகளை வெறுமனே கிளைகளாக, இலைகளாக, வேர்களாக மட்டுமே பார்ப்பவர்கள் ஒரு வகையென்றால், எல்லாவற்றிலும் பொருளீட்டுகிற உத்தி அறிந்தவர்கள் இன்னொரு வகை.
வெறும் பெயர்களாக,அல்லாமல் இயற்கையின் அழகுக்கொடையை எல்லாக் காலத்திலும் இலக்கியப் பிரதிகளே அதிகமாக அடையாளப்படுத்தி உள்ளன. நூற்றுக்கணக்கான பூக்கள்,ஆயிரக்கணக்கான செடிகள் என அத்தனையும் இலக்கியங்களின் வழியேதான் அறிகிறோம்.
கவிஞர்களின் செல்லமாகவும் , காவியமாகவும் செடிகள் அழகு சேர்க்கின்றன. இல்லங்களில் பணப்பெருக்கத்திற்கும் செடிகள் பேருதவி செய்வதாக நம்பப்படுகிறது.
கவிதை இயற்கையின் பெருஞ்செல்வத்தை நமக்கு அடையாளப்படுத்துகின்றன. வனமாக விரிந்து படர்ந்திருக்கிற செடிகளின் உலகத்தை கவிஞர் ராமலக்ஷ்மி வாழ்த்துக் குரலாக நமக்குத் தருகிறார்.
ஒரு குரல் சுற்றிச் சுற்றி வருகிறது. அது எதற்கான குரல்? யாரைத் தேடும் குரல்? அல்லது யாருக்கான குரல்? முதல் விதையை ஊன்றி வனத்தின் முதல் செடியை உருவாக்கிய குரலா? செடி வளர்ந்து முதல் மரமாக உயர்ந்த்தைக் கூறும் குரலா? இப்படி யோசிக்கையில் ஒரு வாழ்த்தோடு வந்திருப்பதாக கவிஞர் கூறுகிறார். அது யாருக்கானது? இன்னும் ஒரு செடியைக் கூட பிடுங்கியெறியாத, ஒரு இலையைக் கூட வேடிக்கையாக கிள்ளி எறியாத, யாருடைய செடியாக இருந்தால் என்னவென்று தாகம் தீர்க்க மெனக்கெடுகிற ஒரு இணைக் கரங்களுக்காக இந்த வாழ்த்தைச் சுமந்து வந்திருக்கலாம்.. கவிதையின் வனத்திற்குள் நுழைந்து ,கானக உயிர்களைத் தரிசிப்போம்:
வனத்தில் திரிந்த வாழ்த்துக் குரல்
*************
கானகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது
எவருக்கும் உரித்தானதற்ற குரல்
நதியினில் குளித்துப் பாறைச் சூட்டில் உலர்ந்து
மரக்கிளைகளில் ஊஞ்சலாடி
மலர்களில் உறங்கி மழையினில் நனைந்து
எல்லோர்க்கும் பொதுவான
வாழ்த்தினைச் சுமந்து
வனங்களை நோக்கி
நகரங்கள் நகர நகர வீழ்கின்றன மரங்கள்
கட்டிடக் காடுகளுக்கு இடம் கொடுக்கவும்
சாமான்களாகி வீடுகளை அலங்கரிக்கவும்
வாழ்த்தற்ற காற்றை
சுவாசிக்கப் பிடியாமல்
சீற்றத்துடன் இயற்கை எட்டி உதைக்க
உருண்டு கொண்டிருக்கிறது
உலகம் எதையும் உணராமல்
காய்ந்த நதிப்பரப்புகளின்
வெடிப்புகளிலிருந்து
விம்மலாக வெளியேறுகிறது
நெறித்துப் புதைக்கப்பட்ட குரல்
வீடிழந்த பறவைகள்
உறவிழந்த விலங்குகள்
ஈரமிழந்த மீன்கள்
எண்ணற்ற ஜீவராசிகள்
விருட்சங்களுக்கு உரித்தானதாக
***
_ ராமலக்ஷ்மி
( இலைகள் பழுக்காத உலகம்)
நகரங்களின் பெருக்கத்தால் அழியும் பசுமையை உணர்த்தும் இக்கவிதை வாழ்த்தற்ற காற்று என்ற சொல்லால் எச்சரிக்கவும் செய்கிறது. வாழ்த்தற்ற காற்று சபித்தலாக மாறும். சபித்தலைச் சுமக்கும் மானுடம் பாலையைத்தான் எதிர்கொள்ளும்.
கவிதை எச்சரிக்கும். கவிதை உணர்த்தும்.
கவிதை ஒரு நாள் வனம் காக்கும் பேரியக்க ஆயுதமாகவும் மாறும்.
****
நன்றி க. அம்சப்ரியா!
***
சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குஅம்சபிரியாவின் பசுமைப்பயணத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
நன்றி கோமதிம்மா.
நீக்குநல்லதொரு கவிதை. பசுமை பயணத்தில் உங்கள் கவிதையும்... பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு