புதன், 19 ஏப்ரல், 2017

இரட்டைவால் குருவி (Black Drongo)

#1

சிறு பாடும் பறவையான இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவியானது, கிளை அல்லது கொம்பினைப் பற்றிக் கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய passerine பறவையினஞ் சார்ந்தது. சிட்டுக்குருவியை விடச் சற்றே பெரிதான இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் Black Drongo எனப்படும். இதன் உயிரியல் பெயர் 'Dicrurus macrocercus'.

திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என்கிறார்கள்.
ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பறவை தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென்மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும், கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது. 

இப்பறவையின் உடல் பளபளப்பான கருப்பு நிறத்திலும் வால் பகுதி நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். வாலின் நீளம் ஏறத்தாழ 11 அங்குலம் வரையில் இருக்கும். கண்கள் சிகப்பாகவும், கால்கள் ஆழ்ந்த சாம்பல் வண்ணத்திலும் இருக்கும். பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்த வயல் வெளிகளிலும் அடர்த்தியற்ற காடுகளிலும் வசிக்கும். பயமற்ற  இப்பறவைகள் தனது கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்  பெரிய, காகம் போன்ற பறவைகளைத் தாக்கும் வல்லமை பெற்றது. இதனாலேயே ஒரு காலத்தில் கிங் க்ரோ - King Crow (ராஜ காகம்) என்றும் இவை அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது. 

சிறகுகளை வலிமையாக அடித்தபடி அதிவேகமாகப் பறந்து பறக்கிற பூச்சிகளை இரையாக்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை. சிறு கால்களால் முட்புதர்கள், உயர்ந்த கிளைகள், மின்சாரக் கம்பிகளை நன்கு பற்றிக் கொள்ளக் கூடியவை. மேயும் கால்நடைகளின் மேலும் அமர்ந்து கொண்டு இரை தேடும். பல வித ஒலிகளை எழுப்பும் வல்லமை பெற்றிருப்பினும் பொதுவாக எழுப்பும் ட்டீ-ஹ்ஹீ எனும் சத்தம் வல்லூறுவின் சத்தத்தை ஒத்திருக்கும்.

#2


இரட்டைவால் குருவிகள் பொழுது புலரும் போதே சுறுசுறுப்பாகி விடுவதோடு மற்ற பறவைகளை விடவும் தாமதமாகவே உறங்கச் செல்லும். வெட்டுக் கிளிகள், சில்வண்டுகள், கறையான்கள், குளவிகள், எறும்புகள், தேனீக்கள், விட்டில் பூச்சிகள், தும்பிகளை விரும்பி உண்ணும். மரக்கிளைகளை ஒட்டிப் பறந்து பூச்சிகளைத் தொந்திரவு செய்து விரட்டிப் பிடிக்கும். 

தென்னிந்தியாவில் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும், மற்ற இடங்களில் ஆகஸ்ட் வரையிலுமாக முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்தக் காலத்தில் ஆண், பெண் பறவைகள் அதிகாலையில் இணைந்து பாடியபடி இருக்கும். இருபறவைகளும் சேர்ந்தே கிண்ண வடிவிலான கூட்டினை பெரிய இலைகள் கொண்ட பலா போன்ற மரத்தின் கிளைகளில் ஒரு வார காலத்தில் கட்டி முடிக்கும். ஓரங்குல நீளமும் முக்கால் அங்குல அகலமுமாக  2-4 முட்டைகள் வரை இடும். முட்டைகள் வெள்ளை, வெளிறிய மஞ்சள், மற்றும் இளஞ்சிகப்பு நிறத்தில் சிறு சிகப்பு புள்ளிகளைக் கொண்டிருக்கும். இருக்கும். இருபாலினப் பறவைகளும் அடை காக்கும். 14-15 தினங்களில் குஞ்சுகள் வெளி வரும். மூன்று வாரங்களுக்குப் பிறகே வாலில் பிளவு தோன்றும். ஒரு மாத காலம் வரை பெற்றோர்கள் உணவளித்து, குஞ்சுகளைப் பராமரிக்கும். ஆனால் அதற்குப் பிறகும் குஞ்சுகள் உணவுக்காக பெற்றோரைக் கெஞ்சும். பெரும்பாலும் பெரிய பறவைகள் குஞ்சுகள் தாமாகப் பிழைக்க வேண்டி, கண்டு கொள்ளாமல் இருந்து விடும், அல்லது விரட்டி விடும். மேலும் குஞ்சுகளின் சிறகுகள் வலுப்பெறவும் பறக்கும் திறன் பெருகவும் பெரிய பறவைகள் இலைகளை மேலிருந்து போட்டு, குஞ்சுகளை நடுவானில் அவற்றை பிடிக்கச் சொல்லி விளையாட்டுக் காட்டும். இளம் பறவைகள் இரண்டு வருடங்களில் இனப் பெருக்கத்துக்குத் தயாராகி விடும்.

***
இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்

படங்கள், என் வீட்டுத் தோட்டத்தில்..(பாகம் 14 )
பறவை பார்ப்போம் (பாகம் 12)

***

10 கருத்துகள்:

 1. சுறுசுறுப்பான அழகான பறவை ...

  பதிலளிநீக்கு
 2. அழகான பறவை! சமீபத்தில் கூட பார்க்க நேர்ந்தது. புகைப்படம் எடுப்பதற்குள் பறந்துவிட்டது!!! நல்ல தகவல்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். சின்ன சத்தம் கேட்டாலோ அல்லது நமது அசைவு தெரிய வந்தாலோ உடனே பறந்து விடுகின்றன.

   நன்றி.

   நீக்கு
 3. அழகான பறவை கோவில்களுக்கு போகும் பாதையில் நீங்கள் சொல்வது போல் ஆட்டின் மேல், மாட்டின் மேல் எல்லாம் பயணிக்கிறதை பார்த்து படம் எடுத்து இருக்கிறேன். பூச்சிகளை மின்சாரகம்பிகளில் அமர்ந்து பிடித்து உண்பதையும் படம் எடுத்தேன். வயல்வெளியில் பறவைகளை துரத்திக் கொண்டு பறக்கிறதை பார்ப்பது மனது மகிழ்ச்சியாக இருக்கும்.

  தகவல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin