செவ்வாய், 18 ஏப்ரல், 2017

இவனும் அவனும் - சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை

னிதர்களை, அவர்களது பல்வேறு குணாதிசயங்களை, மேன்மையான கீழ்மையான எண்ணங்ளை, புரிந்து கொள்ள முடியாத  மனச் சிக்கல்களை, கனவுகள் - நம்பிக்கைகள் - ஏமாற்றங்களை, சமூக அவலங்களை தீர்க்கமாகச் சொல்லிச் செல்கிறார் தன் எழுத்தெங்கிலும் கதாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம். 
1950ஆம் ஆண்டு முதல் 1980 வரையிலுமாக பல பத்திரிகைகளில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கதைகளின் தொகுப்பே “இவனும் அவனும்”.
சென்ற ஆண்டு தன் 84_வது வயதில் காலமாகி விட்ட கதாசிரியர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்த தன் மனைவியின் மேலுள்ள அன்பினாலும் மரியாதையினாலும் அவரது பெயரைத் தன் பெயர் முன்னே இணைத்துக் கொண்டவர்.சுபாஷ் சந்திரன், பெரும்பண்ணையூரான், பாலசுப்பிரமணியம், ஹேமலதா பாலசுப்பிரமணியம் ஆகிய பெயர்களில் பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கிறார். மருத்துவத் துறையில் உயர் அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றிருந்தவர். மேலும் இவர் கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்தில் உடன் வாழ்ந்தவர் என்றும், இவரது மனைவியும் எழுத்தாளர் கு.ப.ராவின் மனைவியும் நெருங்கிய தோழிகள் என்றும், பல எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுடனான தொடர்பே இவரையும் படைப்பாளியாக மாற்றியது என்றும் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் கர்ணன், தனது முன்னுரையில். இந்தத் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்தவரும் இவரே எனத் தெரிகிறது.

இன்றைக்கும் இருக்கிறார்கள் கனவுகளை மட்டுமே ஜெயிக்க விடுகிற, அதற்கான எந்த உழைப்பையும் கொடுக்க விரும்பாத இளைஞர்கள். ஓர் நாள் முழுவதும் உடனிருப்பதாக கடவுளே வந்து அருள் பாலித்தாலும் எப்படி சமூகத்தையும், பார்க்கிற அனைத்தையும் இவர்கள் குறை சொல்லித் திரிவார்கள் என்பதை விவரிக்கிறது தலைப்புச் சிறுகதை. அவர்களின் விரோதி அவர்களேதான் என்கிறார். 

புரட்சி பண்ண முடிவெடுக்கும் ‘செம்மறியாடுகள்’ எஜமான விசுவாசத்துடன் இறுதியில் மனித மந்தைகளைப் போலவே நீள் பயணத்தைத் தொடருவது; இரு துருவங்களாகவே இருந்து வரும் பாட்டாளிகளும் முதலாளித்துவமும்.., ஆஸ்திகப் பெருங்கூட்டமும்..; நேரத்துக்கு வேலைக்குச் செல்ல பதட்டத்துடன் நிமிஷங்களை.. விநாடிகளை.. கடந்தவர் நம்மில் ஏற்படுத்தும் பாரம்; தூய தமிழில் பேசி திருடர்களைத் தெறிக்க ஓடவிடும் தமிழய்யா, அந்தக் கதைக்கு ஆங்கிலத் தலைப்பை வைத்திருக்கும் கதாசிரியரின் சாமர்த்தியம்; சாமானிய மனிதர்கள் நடிகர்களைப் பற்றி மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் பிம்பம்; உடனிருப்பவர்களை உதாசீனம் செய்து விட்டு எதைத் தேடுகிறோமென்றே தெரியாமல் எங்கெங்கோ மனதை விடுகிற மனிதர்களைக் காட்டும் ‘எனக்குப் பிடிச்சப் பூ’; போலி கெளரவத்தைப் பொடிப்பொடியாக்கிய நாளின் அனுபவத்தைச் சொல்லும் ‘நாலணா’..! 

அன்றாட மனிதர்களின் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களும், சமூக அவலங்களும், விதியாலும் தங்கள் சொத்தத் தெரிவுகளாலும் செலுத்தப்படும் மக்களும், குடும்பங்களும் ஆக இவரது கதைக் களங்கள். கதையோட்டத்துடன் பின்னிப் பிணைந்த நகைச்சுவை, நையாண்டி, ஆங்காங்கே அப்போதைய நாட்டு நடப்பு. எப்போதோ எழுதப்பட்ட ‘அனுதாபம்’ கதையின் அப்பாவிக் கதாபாத்திரம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவைக் கற்பனையில் கொண்டு வருகிறது.

சிற்றன்னையால் காட்டுக்குச் செல்லுகையில் சீதையை அழைத்துச் சென்றதிலிருந்து, ஒரு சலவைத் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு மீண்டும் காட்டுக்குச் சீதையை அனுப்பி வரையிலும் இராமன் செய்ததெல்லாம் சரிதானா என்கிற விவாதங்கள் இன்றளவிலும் இருந்து வருகிறது. இவரது ‘யுக தர்மம்’ சீதை செய்தது சரிதானா என விவாதிக்க வைக்கும். சில கதைகளில் பெண்களைப் பற்றிய சித்தரிப்பு, மொத்தப் பார்வையில் ஆசிரியர் பெண்களைப் புத்திசாலிகளாகவோ, மனவலிமை மிக்கவர்களாகவோ காட்டவில்லை என்பதைக் குறிப்பாகக் கவனிக்க வைக்கிறது. இருப்பினும் ஆண், பெண் பேதமின்றி;மனிதர்களின் ஆசாபாசாங்கள், பலகீனங்கள், பொய்மைகள், தவறுகள், சஞ்சலங்கள், உணர்ந்து மீளுதல் என உளவியலைத் தொட்டுச் செல்லுபவையாகக் கதைகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நெருடலைக் கடந்து செல்லலாம்.

“ஹேமாஞ்சலி” எனும் கவிதைத் தொகுப்பு, ”தூறல்” எனும் கட்டுரைத் தொகுப்புக்கு அடுத்ததாக இது ஆசிரியரின் மூன்றாவது நூல்.
*

'இவனும் அவனும்'
திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம்
‘மணி வாசகர்’ பதிப்பகம்,
பதிப்பாண்டு: ஜூன், 2015
பக்கங்கள்: 176, விலை: ரூ.90/- 
கிடைக்குமிடம்: மணிவாசகர் நூலகம் (044 - 24357832)
**


***



13 கருத்துகள்:

  1. நானும் இதை படித்து பகிர்ந்து கொண்டேன். ஸ்ரீராம் அப்பா அவர்களின் புத்தகம் .

    அருமையான விமர்சனம் .

    திண்ணை இளைய இதழில் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நன்றி ராமலக்ஷ்மி. முக்கியமான ஒரு குறையை ஒரு வரியில் கடந்து விட்டீர்கள். திண்ணை லிங்க் ஏனோ எனக்குத் திறக்க மாட்டேன் என்கிறது. பின்னர் வந்து முயற்சிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது ஸ்ரீராம். திண்ணை லிங்க் எனக்கு வேலை செய்கிறதே.. http://puthu.thinnai.com/?p=34722 மீண்டும் முயன்று பாருங்கள்.

      நீக்கு
  4. அருமையாக நூல் அறிமுகம்
    செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல விமர்சனம். நண்பர் ஸ்ரீராமின் அப்பா அவர்களின் புத்தகம். தூறல்கள் புத்தகம் ஸ்ரீராமால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வாசித்தோம்..இப்போது இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin