Wednesday, December 9, 2015

மழைக்குப் பின்.. சுகாதாரம்.. சில குறிப்புகள்..

வெள்ள நீர் வடிந்தாலும் சென்னையின் பல பகுதிகளில் இன்னும் சாலைகள் சுத்தம் செய்யப்படாமல், குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும்,.மாசடைந்த சூழலில் மக்கள் பயந்துபடியே இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி தேவையான மருந்துகள் கிடைக்காமல், இன்னும் மின்சாரம் திரும்பாமல், BSNL, Airtel சரியாகாமல் எங்கும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் பலர் சிரமத்தில் இருக்கிறார்கள். இவ்வேளையில் மக்கள் தங்கள் உடல் நலத்தைக் காத்துக் கொள்ளவும், நீரினால் பரவக் கூடிய நோய்களைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட வேண்டும். சுகாதாரத்தில் காட்ட வேண்டிய அக்கறை பற்றி வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்தில் பகிரப் பட்ட குறிப்புகளைத் தமிழாக்கம் செய்து இங்கு அளித்திருக்கிறேன். இவற்றில் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து தரப்பட்டவை.
முதலில் மும்பையைச் சேர்ந்த  மருத்துவர் ஒருவர் பகிர்ந்ததைப் பார்க்கலாம்:
2005 ஆம் ஆண்டு இதே போன்றதொரு பேரிடரை மும்பை சந்தித்தது. முழு நகரமும் ஒரு பெரும் குளம் போல் ஆகி விட்டிருந்தது. அப்போது அடைத்துக் கொண்ட சாக்கடைகளில் மாட்டி இறந்து போன எலிகளால் பெரும்பாலான மக்கள் "Laptospirosis" எனும் உயிர்க்கொல்லி நோயால் தாக்கப் பட்டார்கள்.

ஆகையால் தேங்கிய வெள்ள நீர் வடியாத இடங்களில், அதற்குள் நடக்க வேண்டியிருக்கும் சூழலில், வெளி வந்தபின் கைகளையும் கால்களையும் சோப்பினால் கழுவ மறக்காதீர்கள். இந்த நோய்க்கான அறிகுறிகள்:

மூச்சிரைப்பு
தலைவலி
கால், கை வீக்கம்
நெஞ்சு வலி
தசை வலி
குளிர்
காய்ச்சல் (104-F வரை செல்லுதல்)
**

வனத்தில் கொள்ள வேண்டிய பிற குறிப்புகள்:

*  குளோரின் சேர்த்த, வடிகட்டிய, கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும். பத்து லிட்டர் தண்ணீருக்கு 4 சொட்டு “Medichlor" சேர்க்கவும். பாத்திரங்களை அலசி எடுக்க, காய்கறிகளைக் கழுவவும் Medichlor ஒரு வாளிக்கு 4 சொட்டுகள் விட்ட நீரைப் பயன்படுத்தவும்

* கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்துகிறவர்கள், நீர் கொதிக்க ஆரம்பித்ததில் இருந்து கண்டிப்பாகப் பத்து நிமிடங்களுக்குக் கொதிக்க விட வேண்டும்.

* எல்லா காய், பழங்களையும் உப்பு கலந்து நீரில் கழுவிய பிறகே உபயோகிக்கவும்.

* நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவும். உடல் சோர்வு அதிகரிப்பதை உணர்ந்தால் எலக்ட்ரால் போன்ற ORS (Oral Rehydration Solution) அருந்தவும்.


* வீட்டை விட்டு வெளியேற இயலாத சூழல்களில் கைவசமிருக்கும் உணவுப் பொருட்கள் பற்றாமல் போகும்போது,  ஒரு லிட்டர் கொதிக்க வைத்த நீரில் ஐந்தாறு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் உப்பும் சேர்த்து, குறிப்பிட்ட இடைவெளியில் அருந்தி வருவது உடல் டிஹைட்ரேட் ஆகமால் தடுக்க உதவும்.

* கூடுமானவரை அப்போதைக்கு சமைத்த, சூடான சாதம், பருப்பு, வேக வைத்த காய்கறிகள் போன்ற எளிய உணவை உட்கொள்ளவும். காய்ச்சி வெகுநேரமான பாலை பயன்படுத்துவது நல்லதல்ல. குளிர்சாதனப்பட்டியில் வைத்த உணவுகளையும், வெளியில் விற்கும் திறந்த உணவுகளைத் தவிர்க்கவும்.

* இயற்கையிலேயே பாதுக்காப்பான தோலுடன் வரும் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றைப் பயமில்லாமல் உண்ணலாம்.


* சுத்தமாக இருந்து கொள்ளுதல் அவசியம். தினசரி குளிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்திடலும் முக்கியம். மின் தடை, மோட்டரில் பிரச்சனை, நல்ல நீர் இல்லை போன்ற சூழலில் உடைகளையாவது மாற்றி விட வேண்டும். நீர்ப் பற்றாக்குறையின் போது கைகளைச் சுத்தம் செய்ய Hand sanitizer பயன்படுத்திடலாம்.

* கைகளைக் கழுவப் பயன்படுத்தும் நீரிலும் Medichlor சேர்ப்பது நல்லது.

* நோயாளிகளைக் கவனிப்பவர்கள் கையுறை அணிந்து கொள்வதும், ஒவ்வொரு முறையும் கையுறைகளை குப்பையில் சேர்த்திடுவதும் அவசியம்.

* நோயுற்றவர்களுக்கு உதவும் முன்னரும் பின்னரும் Hand sanitizer உபயோகிப்பதும் நல்லது.

* டாய்லட் உபயோகித்த பின் இரண்டு முறை நீரை ஃப்ளஷ் செய்வது நல்லது.

* டயரியா, வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் குளிர், கொப்பளங்கள், கண்ணில் நீர் பொங்குதல் போன்றன ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

* கதவு, சன்னல்கள் வழியாக ஈக்கள் வராமல் தடுக்க வழி செய்யவும்.

* டைபாய்டு தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

* வெள்ள காலங்களில் காலரா பரவாமல் வங்கதேசத்தில் கடைக்கப் பிடிக்கப்பட்ட, நல்ல உத்தியென  பரிந்துரைக்கப்பட்ட முறை இது: குடிநீரை வடிகட்ட பல மடிப்புகளாக்கி சேலையை அல்லது வேட்டியைப் பயன்படுத்தலாம்.

*குடிநீருக்கு வேறு வழியே இல்லை... எனும் சூழலுக்குத் தள்ளப்படும் போது மழை நீரைப் பிடித்துக் கொதிக்க வைத்து அருந்தலாம். இதைப் பலரும் செய்யவும் செய்திருக்கிறார்கள் கடந்த நாட்களில். அதற்கும் வழியற்ற வேளையில் வெள்ள நீரை 12,13 விசில்களுக்குக் குக்கரில் வைத்து எடுத்தால் பாக்ட்ரீயாக்கள் அழிந்து சுத்தமான நீராகி விடும் என்கிறார் ஒரு விஞ்ஞானி. இது எந்த அளவுக்கு சரியென எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் குறிப்பைப் பதிந்து வைக்கிறேன்.

 * நீர் தேங்கிய இடங்களில் பாக்ட்ரீயா பரவாமல் தடுக்க ப்ளீச்சிங் பவுடரைத் தூவ வேண்டும். இதைப் பல இடங்களில் செய்தும் வருகிறார்கள். பிளீச்சிங் பவுடரைத் தேடிச் சென்று வாங்க முடியாவிட்டால் உப்பைக் கரைத்து ஊற்றலாம்.

* கழிவு நீர்களும் கலந்து விட்டிருப்பதால் தேங்கிய நீருக்குள் செல்வதை, அதிக நேரம் நிற்பதைக் கூடுமான வரையில் தவிர்க்கவும்.

* அடுத்த பெரிய அச்சுறுத்தல்.. கொசுக்கள். தேங்கி நிற்கும் நீர்களில் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெயைக் கலப்பது லார்வாக்களை ஒழித்திட உதவும். பூஜைக்குப் பயன்படுத்தும் சிறிய வில்லைகளன்றி, சற்று பெரிய அளவிலான கற்பூர வில்லைகளை படுக்கைப் பக்கத்தில் வைப்பது கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கும்.

இங்கே சொல்லப்பட்ட, சொல்லப்படாத பல குறிப்புகளோடு தி இந்துவில் வெளியாக கட்டுரை ஒன்றின் இணைப்பும் உங்களுக்குப் பயனாகலாம்:

அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

***

படங்கள் நன்றி: இணையம்18 comments:

 1. தக்க தருணத்தில் பயனுள்ள பதிவு வாழ்த்துகள் சகோ.

  ReplyDelete
 2. அவசியமான குறிப்புகள் .
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 3. இன்றைய நிலையில் அவசியமான, உபயோகமான குறிப்புகள்.

  ReplyDelete
 4. அவசியமான குறிப்புகள்.... தமிழகத்தில் இருக்கும் பலருக்கும் பயன்படும் குறிப்புகள்.

  ReplyDelete
 5. எல்லோருக்கும் பயனுள்ளஂகுறிப்புகள்...நன்றி. இதைப் பகிர்ந்து கொள்கிறேன் அனுமதியுடன்.

  ReplyDelete
  Replies
  1. செய்யுங்கள். நன்றி.

   Delete
 6. மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
 7. மிகவும் பயனுள்ள குறிப்புகள். நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 8. அத்யாவசியமான குறிப்புகள் ராமலெக்ஷ்மி !

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin