Wednesday, December 23, 2015

ஒரு காலத்தில்.. - கேப்ரியல் ஒகாரா


கனே, ஒரு காலத்தில்
அவர்கள் மனதாரச் சிரித்தார்கள்
கண்களால் புன்னகைத்தார்கள்
ஆனால் இப்பொழுதோ
சிரிப்பதாய்ப் பற்களை மட்டுமே காட்டுகிறார்கள்
பனிக் கட்டியைப் போல் உறைந்த அவர்களது கண்கள்
என் நிழலுக்கு அப்பால் எதையோ தேடுகின்றன.

தங்கள் இதயத்தால் அவர்கள் கைகளைக் குலுக்கிய
காலம் ஒன்று இருந்தது
அது மறைந்து விட்டது.
மகனே, இப்பொழுது  இதயங்களே இல்லாமல்
கைகளைக் குலுக்குகிறார்கள்
அவர்களின் இடது கைகளோ தேடுகின்றன
காலியான எனது சட்டைப் பைகளை.

அவர்கள் சொல்வார்கள்
‘உங்கள் வீடு போல உணருங்கள்’,
‘மீண்டும் வாருங்கள்’ என.
அவ்வாறே  நானும் மீண்டும் செல்வேன்
வீடு போல உணருவேன்
ஒரு முறை, இரு முறை,
ஆனால் வருவதில்லை மூன்றாவது முறை.
கதவுகள் எனை நோக்கி
அறைந்து சாத்தப்படுவதையே பார்க்கிறேன்.

மகனே, நிறைய கற்றுக் கொண்டேன்.
முக்கியமாக  ஆடைகளைப் போல
நிறைய முகங்களை அணியக் கற்றுக் கொண்டேன்:
வீட்டுக்கு ஒருமுகம், அலுவலகத்துக்கு ஒரு முகம்,
தெருவில் ஒரு முகம்,
விருந்தோம்ப ஒரு முகம், விருந்தாளியாக ஒரு முகம்
அத்தனைக்கும் ஒத்துப்போக
நிரந்தமாக ஒரு நிழற்படப் புன்னகை.

மேலும் கற்றுக் கொண்டேன்
சிரிப்பதாகப் பற்களைக் காட்டவும்
இதயத்தைத் தொலைத்து கைகளைக் குலுக்கவும்;
’விடுதலை பெறுகிறேன்’ என நினைத்தபடி
‘விடை பெறுகிறேன்’ என சொல்லவும்;
மகிழ்ச்சி கிஞ்சித்தும் இல்லாமல்
‘சந்தித்ததில் மகிழ்ச்சி’ என சொல்லவும்;
அலுப்படைந்த பின்னர்
‘அளவளாவியதில் ஆனந்தம்’ என சொல்லவும்.

ஆனால் நம்பு, மகனே.
ஒரு காலத்தில் உன்னைப் போல் இருக்கையில்
எப்படி இருந்தேனோ
அப்படி இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.
முடக்கிப்போடும் இக்குணங்களைக்
களையவே விரும்புகிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, எப்படிச் சிரிப்பது என
நான் மீண்டும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
ஏனெனில், இப்பொழுது
சிரிப்பென்ற பெயரில் நான் பற்களைக் காட்டுவது
பாம்பின் நச்சுப் பற்களாகவே கண்ணாடியில் தெரிகின்றது!

ஆகவே கற்பிப்பாய், மகனே
எப்படிச் சிரிப்பதென, காண்பிப்பாய் எப்படியென
ஒரு காலத்தில் உன்னைப் போல் இருக்கையில்
எப்படிச் சிரித்தேன், எப்படிப் புன்னகைத்தேன் என.
***

மூலம்: "ONCE UPON A TIME"
By Gabriel Okara
நைஜீரியக் கவிஞரும் நாவலாசிரியருமான கேப்ரியல் ஒகாரா 1921 ஆம் ஆண்டு 21 ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் புமோடி என்ற இடத்தில் பிறந்தவர். தானாகவே தன் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டவர். பள்ளிப்படிப்பு முடித்தபின் புத்தகங்களைத் தைக்கும் பணியில் இருந்தவர், விரைவில் நாடகங்களையும் வானொலிக்காக நிகழ்ச்சிகளையும் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார். 1953_ல் இவர் எழுதிய “The Call of the River Nun” எனும் கவிதை நைஜீரியக் கலை விழாவில் விருது பெற்றிருக்கிறது. 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகே இவர் பரவலாக அறியப்பட்டிருக்கிறார். அத்துடன் பல்வேறு மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்ப்பாகி வெளிவரவும் செய்துள்ளன. இவரது கவிதைகளிலும் நாவல்களிலும் ஆப்ரிக்கர்களின் சிந்தனை, மதம், கற்பனை, நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியன ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். 1960-களில் இவர் பொதுத்துறையில் பணியாற்றி வந்திருக்கிறார். 1970-களில் State Publishing House (in Port Harcourt) பதிப்பகத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்திருக்கிறார்.
**

படங்கள்: இணையம்

12 comments:

 1. அருமையான கவிதை சகோதரி. அருமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். நான் இவரது சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். மிகக் காத்திரமான எழுத்தாளர். மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. பல மொழிகளில் இருந்து நல்ல படைப்புகளைத் தேர்வு செய்து தொடர்ந்து தமிழில் தந்து கொண்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

   நன்றி ரிஷான். மேலும் இவரது படைப்புகளைத் தமிழாக்கம் செய்ய முயன்றிடுகிறேன்.

   Delete
 2. மொழிபெயர்ப்பு அருமை சகோதரியாரே
  அருமை

  ReplyDelete
 3. யோசித்துப் பார்க்கும்போது பொய்முகங்களை அணிவதில் யாருக்கும் விலக்கேயில்லை என்று தோன்றுகிறது. நல்ல காரணங்களாகவும், போலித்தனமாகவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது ஒவ்வொருவர் வாழ்விலும் அடிக்கடி வரும் நிகழ்வு என்றே தோன்றுகிறது.

  அருமை.

  ReplyDelete
  Replies
  1. உண்மை. நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. நிஜம் பேசும் மிக மிக அற்புதமான கவிதை
  அருமையான மொழிமாற்றம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அருமையான மொழியாக்கம். ஆடை போல் முகங்கள், பாம்பின நச்சுப் பற்கள் - கனமானவை. இவரைப் படித்ததில்ல - உங்கள் மொழியாக்கம் படிக்கத் தூண்டுகிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. அருமையான மொழியாக்கம் அக்கா...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin