Saturday, December 12, 2015

அவசர காலத்தில்..

மாமழையில் சிக்கிக் கொண்டபோது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கற்க நேர்ந்த பாடங்களென வந்த ‘வாட்ஸ் அப்’ பகிர்வுகள் இன்னும் சில. மீண்டும் இப்படியொரு நிலை  வேண்டாவே வேண்டாம் என்றாலும் சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே. அதே போல உணர்ந்து கொள்ளவும் சில உண்மைகள்..

இன்வெர்டரிலிருந்து நேரடியாக மொபைலுக்கு சார்ஜ்:

மின் தடையின் காரணமாக மொபைலில் சார்ஜ் இல்லாமல் முற்றிலுமாக நான்கு நாட்களுக்கு வெளியுலகோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு மாட்டிக் கொண்டவர்கள் பலபேர். அவர்கள் நிலைமை என்னாயிற்றோ என உறவினர் நண்பர்களின் பதட்டம் ஒரு புறம்.
சிலர் கார்களில் சார்ஜ் செய்து கொண்டார்கள். இன்வர்ட்டர் இருந்தும், அதிலும் ஓரிரு நாளில் சார்ஜ் போய் விட்டதாகத் தெரிவித்தவர்கள் கவனிக்க வேண்டியது, இன்வெர்ட்டருக்கு பின் புறம் இன்வெர்ட்டர் ப்ளக் வீட்டுக்கு சப்ளை ஆகும் மின்சாரத்துக்கான ப்ளக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அதை நீக்கி விட்டு, அதிலே மொபைலை சார்ஜ் செய்யலாம். முழு வீட்டுக்கான மின்சாரத்தைத் தர முடியாவிட்டாலும் மொபைலை சார்ஜ் செய்யக் கூடிய அளவுக்கு இன்வெர்ட்டர் சப்போர்ட் செய்யும்.

படத்தில் இருப்பது போன்ற, கையால் இயக்கக் கூடிய டைனமோ மொபைல் சார்ஜர் (Dynamo Hand Crank USB Cell Phone Emergency Charger) ஒன்றை வீட்டில் வைத்திருப்பதும் நல்லது.


பக்கத்துக் கடைகள்:

சூப்பர் மார்க்கெட் கலாச்சாரத்தால் பக்கத்துக் கடைகள் ஒதுக்கப்படுவதும், எப்போதேனும் அவசரத் தேவைக்கு மட்டுமே நாடப்படுவதும் கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிற ஒன்று. இதற்கு நடுவே சமீபமாக பலசரக்கு, காய்கறிகள் வாங்க ஆன்லைன் ஷாப்பிங் வசதிகள். இருப்பினும் அவர்களுக்கென்றே அமைந்து விடுகிற வாடிக்கையாளர்களோடு போராடித் தொழிலைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் சிறு வியாபாரிகள்.

பேரிடரின் போது, வெள்ளம் சூழ்ந்து வண்டிகளை எடுக்க முடியாமல், மின் தடையால் தொடர்புகளும் அற்ற நிலையில் ஆபத்பாந்தவராய்க் கைகொடுத்தவர்கள் பக்கத்துக் கடையினரே என அறிய வந்தேன். ஓரிரு இடங்களில் வேறுவிதமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. (பால் விலை ஏறி, காய்கறி எல்லாம் கிலோ 125 ஆக விற்கப் பட்டதாக வந்து செய்திகள் போன்றவை.) ஆனால் பெரும்பாலான இடங்களில் பக்கத்துக் கடையினர் தங்கள் வாடிக்கையாளர்கள் சிரமப்படக் கூடாதென வெள்ளத்திலும் கடைகளைத் திறந்து வைத்து நேரம் காலம் பாரமல் விடாது சப்ளை செய்திருக்கிறார்கள். நீச்சலடித்து வீடு வீடாகப் பால் கொடுத்துச் சென்ற பெண்மணியைப் பற்றியும் அறிய வந்தேன்.

அந்நாளில் இருந்த வாடிக்கையாளர்-விற்பனையாளர் பந்தம் குறித்து முன்னர் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அந்த அளவுக்கு எதிர்பார்க்க முடியாதெனினும் தரமான பொருட்களை தருகிற பட்சத்தில் பக்கத்துக் கடைகளை, சிறு வியாபாரிகளை என்றைக்கும் ஆதரியுங்கள்!  இது போன்ற இடர்களில் மட்டுமல்ல, தனிப்பட்ட அவசரங்களுக்கும் வியாபார நோக்கம் தாண்டி உள்ளன்போடும் அக்கறையோடும் உதவ முன் வருபவர்கள் இவர்களே என்பதை உணர்ந்து கொண்டதாகவும், இவர்களிடமே இனி  எப்போதும் வாங்க வேண்டுமென முடிவெடுத்து விட்டதாகச் சொன்னார்கள் இச்சம்பவங்களை விவரித்தவர்கள்.

அதுவுமில்லாமல் எத்தனையோ சிறுவியாபாரிகள் இந்தப் பேரிடரில் தங்கள் உடைமைகளை இழந்து மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் மார்க்கெட், ஆன்லைன் ஷாப்பிங்  இவற்றைப் புறக்கணித்து இவர்களிடம் வாங்குவது அவர்கள் வாழ்க்கை உயர நம்மால் ஆன சிறு உதவியாக இருக்கும்.
**

26 comments:

 1. ரொம்பவும் பயனுள்ள பதிவு. நன்றி.

  ReplyDelete
 2. வியாபாரிகளைப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது நல்ல விஷயம். செல்ஃபோனை சார்ஜ் செய்ய சோலார் சார்ஜர் போல ஒன்று கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதிலும் மிக மெதுவாகத்தான் சார்ஜ் ஏறும் என்று சொன்னார்கள். இந்த டைனமோ சார்ஜர் பற்றிக் குறித்துக் கொண்டுள்ளேன். தேடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அமேசானில் கிடைக்கிற மாதிரித் தெரிகிறது. இதிலும் எவ்வளவு தூரம் வேகமாக சார்ஜ் ஏறுமெனத் தெரியாது. ஆனால் அவசரத்திற்குப் பேசுமளவுக்குக் கிடைக்கும் போலுள்ளது.

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. மிகவும் பயனுள்ள கருத்துகள் + தகவல்கள்... நன்றி...

  ReplyDelete
 4. மகவும் பயனுள்ள தகவல்கள். என்னைப்போல சிலர் மொபைலில் தான் நெட் யூஸ் பண்ணவேண்டிய சூழ்நிலை. ஆண்ட்ராய்டு போன்களில் சார்ஜ் வேகமாக இறங்கிவிடுகிறது. இந்த தகவல் ரொம்ப உபயோகமாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. அவசர காலத்திற்கு அவசியமான தகவல். நன்றி சகோதரி.

  ReplyDelete
 6. விளையாட்டுப் பொருள், கடிகாரத்தில் போடப்படும் சாதாரண AA பேட்டரியிலும் வயரை இணைத்து சார்ஜ் செய்யும் முறை பற்றி விளக்கம் காணப்பட்டது ஃபேஸ்புக்கில்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி ஹுஸைனம்மா. பல விதங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

   Delete
 7. நல்ல பதிவு....சிறு வியாபாரிகள் பல நேரங்களில் தேவதூதர்கள்....கஷ்டப்படும் குடும்பமெனில் கல்யாணத்திற்கே சமையலுக்கான முழு பொருட்களையும் அளித்துவிட்டு, பரவாயில்லே..மெதுவாக் கொடுங்க என்று பெருந்தன்மையாகச் சொல்பவர்கள்...நம்பிக்கை இருந்தது...வாழ்ந்து கெட்டவர்களை கைதூக்கி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. உண்மை. கருத்துக்கு நன்றி.

   Delete
 8. நானும் ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், ஏர்டெல் பி.எஸ்.என். எல்.இனைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் இவை கை கொடுக்கவில்லை.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. இணைப்பே இல்லையென்றால் இவையால் எந்தப் பயனும் இல்லைதான். நீங்கள் இந்த மழை நேரத்தில் அடைந்த சிரமங்கள் அறிந்து வருந்தினேன்.

   Delete
 9. இப்போதெல்லாம் பிக் பாஸ்கெட் ( பெரிய கூடை) மூலம் வீட்டுப் பொருட்கள் வாங்குவது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகிவிட்டது. என் வோட்டு எப்போதும் சிறு வியாபாரிகளுக்கே

  ReplyDelete
  Replies
  1. எனது ஓட்டும். நன்றி GMB sir.

   Delete
 10. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 11. தகவலுக்கு நன்றி சிறு வியாபாரிகளுக்கு ஆதரவு தருவது நலம்

  ReplyDelete
 12. மிகவும் பயனுள்ள பதிவு, வாழ்த்துகள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin