ஞாயிறு, 27 ஜூலை, 2014

ஆயிரம் தட்டான்களும் அயல்நாட்டு ஆவணப்படமான வெற்றிக் கதையும் - கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 3)

 பாகம் 1 இங்கே; பாகம் 2 இங்கே

#1
ராளமான ஏரிகளைக் கொண்ட பெங்களூரில் சொல்லிக் கொள்ளும்படியான பராமரிப்புடன் இருப்பவை வெகு சொற்பமே. இவற்றிலும் சீர் செய்யப்பட வேண்டிய பிரச்சனைகள் பல இருந்தாலும் ஓரளவு மக்கள் பயன்படுத்தும் நிலையில், பறவைகள் தேடி வரும் வகையில் உள்ளன. இவை போக கவனிப்பாரற்றுக் கிடக்கிற மற்ற பல ஏரிகளைப் போலவே மாசடைந்து, கிட்டத்தட்ட ஒரு குப்பைக் கிடங்கை ஒத்ததாகவே இருந்தது கைகொண்டனஹள்ளி ஏரியும் 2009 ஆண்டு வரையிலும்.

#2


# 3

#4

ஐந்து வருடங்களுக்கு முன்னர் அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் MAPSAS (Mahadevapura Parisara Samrakshane Mattu Abhivrudhi Samiti) என்றொரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு மாநகராட்சியை அணுகியிருக்கிறார்கள். மாநகராட்சியும் மக்களும் கைகோர்க்க மளமளவென வேலைகள் நடந்தன. ஏரி தூர்வாரப்பட்டது. சுற்றிலும் ஆயிரம் மரங்கள் நடப்பட்டு பராமரிப்பில் உள்ளன. வசிக்கும், வந்து போகும் பறவை வகைகளின் எண்ணிக்கை 37.

#5

#6

அரசுத் தரப்பு உதவி போகவும் ஆன செலவுகளுக்காகப் பணம் திரட்டி, ஓய்வு நேரங்களைச் செலவழித்து இதற்கெனப் பாடுபட்டவர்கள் பலநூறு பேர்கள். இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான பிரியா ராமசுப்பன் எனும் பெண்மணியே இந்த வெற்றிக் கதைக்கு வித்திட்டவராக இருந்திருக்கிறார். அந்தப் பகுதிக்கு இவர் குடிபோன வேளையில், உருப்படியாக எதாவது வாழ்க்கையில் செய்தாக வேண்டுமென்கிற துடிப்போடு இருந்தவரின் கண்ணில் பட்டிருக்கிறது கைகொண்டனஹள்ளி ஏரி. அதை சீரமைக்க ஏதேனும் செய்யலாமே என்ற எண்ணம் உடனே ஏற்பட்டாலும் அதற்கான உந்துதலைத் தந்தது ஒரு குறிப்பிட்ட அனுபவமே என்கிறார்.

ஒரு நாள் தன்னந்தனியாக ஏரியைச் சுற்றிப் பார்க்கலாம் எனப் போயிருக்கிறார். சுற்றி நடக்க சரியான பாதையில்லை. மாடுகள் சுகமாய் குளியல் போட்டுக் கொண்டிருக்க குறுகலான பாதையில்  ஏரியின் கடைக்கோடி வரைக்கும் சென்றவர் அங்கே மரங்கள் அடர்ந்த சோலை அருகே போனதும் ஸ்தம்பித்து நின்று விட்டாராம். ஆயிரக்கணக்கான தட்டான் பூச்சிகள். கருப்பும், ஆரஞ்சும், மஞ்சளுமான வண்ணங்கள் கண்ணெதிரே சிறகடித்துக் கொண்டிருந்திருக்கின்றன. அங்கே இயற்கையின் மடியில், மரங்களுக்கு மத்தியில், தட்டான்களும் அவரும் மட்டுமே. அந்த அற்புதத் தருணத்தில் உறுதி பூண்டிருக்கிறார் இந்த ஏரிக்கும் ஏதேனும் செய்தே தீர வேண்டுமென.

#7

வீட்டுக்குத் திரும்பியதுமே வரிசையாக அழைக்கத் தொடங்கி விட்டாராம் தெரிந்தவர்களை. அப்பகுதியில் பல காலமாய் வசிக்கும் ரமேஷ் சிவராம் துணையோடு மேலும் பலரை ஒருங்கிணைத்து மாநகராட்சியை அணுகிய போது அவர்கள் ஏற்கனவே தயாரித்திருத்துக் கிடப்பில் போட்டிருந்த ஆய்வு அறிக்கையைக் காட்டியிருக்கிறார்கள்.  சுற்றுச் சூழல் ஆர்வலர்களான திரு எல்லப்பா ரெட்டி, டாக்டர். ஹரிணி நாகேந்திரா, டாக்டர். சுப்பு சுப்ரமணியா ஆகியோரின் ஆலோசனைகளையும் பெற்று உழைத்ததின் பலனாக இன்று அடுத்த கட்ட சீரமைப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ஏரி.

#8

#9

# 10
ஏரியைச் சுற்றி ஒருபக்கம் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக இருக்க வேலிக்கு இன்னொரு பக்கம் குடிசைப் பகுதியும் காணப்படுகிறது.

#11

#12
ஏரிக்கு அருகே குடியிருந்தாலும் நல்ல குடிநீர் கிடைப்பது பிரச்சனைதானோ?

 பார்த்துக் கொண்டிருக்கையிலேயே சர்ரென வந்து நின்றது ஒரு வண்டி. கட்டிடம் இடித்த கற்களை அப்படியே  கொட்டி புழுதியைக் கிளப்பி விட்டுப் போகிறது. ஊருக்கு வெளியே கொண்டு போட வேண்டியதை இங்கே இறக்கி விட்டுப் பறக்கிறது.

#13

அங்கிருந்த மக்கள் எந்த எதிர்ப்பும் சொல்ல முடியாமல் வேடிக்கை பார்த்து நின்றிருந்தனர். ஒருவேளை கட்டிட வேலைக்காகக் தற்காலிகக் குடிசை போட்டுத் தங்கியிருப்பவர்களாகவும் இருக்கக் கூடும். வேலிக்கு வெளிப்பகுதியில் என்றாலும் இப்படிதான் முன்னர் ஏரிக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் குப்பைகளைக் கொட்டியிருப்பார்கள் என உணர முடிந்தது.

#14

இவற்றையெல்லாம் நிறுத்தி, சீரமைத்து இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்களாக சைக்கிள், ஜாகிங் ஆகியவற்றுக்குத் தனிப்பாதைகள், கழிப்பறை வசதி, சோலார் விளக்குகள் மற்றும் ஆம்ஃபி தியேட்டர் எனும் திட்டங்களோடு, கல்விச் சுற்றுலா, பள்ளிக் குழந்தைகளுக்கு பறவைகள், தாவரங்கள், ஊர்வன, நீந்துவன கவனிக்கக் கற்றுத் தருவது, பொது மக்களுக்கு மழைநீர் சேமிப்பு, தண்ணீர் சிக்கனம் போன்ற பல விஷயங்களைப் பற்றி வல்லுநர்கள் மூலமாக உரைகள் வழங்குவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

#15
இந்த வெற்றிக் கதை ஏற்படுத்திய விழிப்புணர்வு அலை, நாடு தாண்டிப் பரவ ஸ்வீடிஷ் பல்கலைக் கழகத்தின் முயற்சியால் உருவாகியிருக்கிறது “Kaikondarahalli Lake - The Uncommon Story of an Urban Commons” என்கிற ஆவணப் படம். ஸ்டாக்ஹோமின்  Resilience Centre-யைச் சேர்ந்த மரியா டேங்கோ எனும் பெண்மணி இங்குள்ள அமைப்பின் ஒத்துழைப்புடன் 5 நாட்கள் தங்கியிருந்து 26 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறார். பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் இடம் பெற்றிருக்கும் இப்படத்தின் எடிட் செய்யப்பட்ட 3 நிமிடப் படம் சர்வ தேசச் சுற்றுச் சூழல் கருத்தரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக.

#16

#17 Lantana Flowers


#18

[தகவல்கள்: இணையம் மற்றும் TOI_ல் பல்வேறு சமயங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில்..]
***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

பெங்களூர் ஏரிகள்

18 கருத்துகள்:

 1. ப்ரியா ராமசுப்பன் மலைக்க வைக்கிறார்.
  தட்டான் பூச்சி எப்படியிருக்கும்னு தேடணும்.
  அழகான படங்கள்.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் எல்லாம் அருமை.
  பிரியா ராமசுப்பன் அவர்களுக்கும் அவரை கவர்ந்த ஆயிரம் தட்டான்களுக்கும் நன்றி அதனால் நடக்கும் கைக்கொண்டனஹள்ளி ஏரி சீராமைப்பு மகிழ்ச்சி.
  மரங்களும் வந்து இளைப்பாறும் பறவைகளும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

  பதிலளிநீக்கு
 3. முய்ன்றால் முடியாதது இல்லை என நிரூபித்திருக்கும் ப்ரியா ராமசுப்பன் மற்றும் அவரது சக உழைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  படங்கள் அழகு!

  பதிலளிநீக்கு
 4. ப்ரியா ராமசுப்பன் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

  10, 11 ஆம் எண்ணுள்ள புகைப்படங்கள் 'என் அண்ணன்' திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளை நினைவு படுத்துகின்றன.

  'அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி... அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி.. பொன்னான உலெகென்று பெயருமிட்டால்...'

  சுய விழிப்புணர்வே இல்லாமல் குப்பை கொட்டும் மக்கள் கோபம் தருகிறார்கள். பணம் ஒன்றே குறி என்று மணல் திருடி ஆற்றைக் கற்பழிப்பவர்களும் இவர் போன்றவர்களே.

  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 5. வெற்றிக்கதை தன்னம்பிக்கை தருகிறது.!

  பதிலளிநீக்கு
 6. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு ப்ரியா ராமசுப்பன் அவர்கள் ஒரு முன்னுதாரணம். படங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 7. சுத்தமான ஏரியைப் பார்க்கும் இன்பம் வேறெங்கும் கிடையாது. ஒரு பக்கம் மாளிகை. ஒரு பக்கம் குடிசை. நடுவில் குப்பை கொட்டும் லாரி. இவ்வளைவையும் அழகாகச் சமாளித்து வெற்றிக் கொடி நாட்டும் பிரியா அவர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். உலகக் கவனத்தை ஈற்றிருக்கிறது என்றால் நன்மைதானே.. அருமையான தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. தட்டான் பூச்சி இங்கயும் சில இடங்களில் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 8. @அப்பாதுரை,

  நன்றி. தட்டான் பூச்சிகள் சாதாரணமாகவே காணக் கிடைக்குமே. ஆனால் மஞ்சளும் கருப்புமாய் எப்படியிருக்குமென நானும் தேட நினைத்திருக்கையில் (இணையத்தில்தான்) இது கண்ணில் பட்டது: https://picasaweb.google.com/111715139948564514448/201407#6032514432911368290
  [இம்மாத PiT போட்டிக்கு வந்திருந்த படம்].

  பதிலளிநீக்கு
 9. @ஸ்ரீராம்.,

  நன்றி ஸ்ரீராம். அந்தப் பாடலையே குறிப்பிட நினைத்தேன். குடிசைகள் ஓலையில் இல்லாததால் செய்யவில்லை.

  ஏரியின் மறுமுனையில் நான் நின்றிருந்த போது வேலிக்கு அந்தப் பக்கம் பார்த்த காட்சி. ஆம். எல்லா மக்களும் மனம் வைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. @வல்லிசிம்ஹன்,

  நன்றி வல்லிம்மா. தட்டான் பூச்சிகள் பெங்களூரில் ஆங்காங்கே தென்படுவதுண்டு.

  பதிலளிநீக்கு
 11. படங்கள் அனைத்தும் அருமை குறிப்பாக 15 & 16

  கோவையிலும் இது போல ஏரிகளை புனரமைக்கிறார்கள் பொது மக்கள் சமூக அமைப்புகள் உதவியுடன்.

  பதிலளிநீக்கு
 12. @கிரி,

  நல்ல செய்தி. அரசை நம்பி இருக்காமல் மக்களும் அமைப்புகளும் இப்படிக் கைகோர்ப்பது நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். நன்றி கிரி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin