வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

வாழ்வை அர்த்தப்படுத்தும் ‘வெற்றிக் கோடு’ - மோகன் குமாரின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை


சுய முன்னேற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏன் அத்தியாவசியமாகிறது? சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தைத் தேடிக் கொள்ளவும், உலகுக்குத் தன்னை நிரூபிக்கவும்தானா?  ‘இல்லை’ என்கிறார் மோகன் குமார்.  எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு, மாற்றங்களுக்குத் தயாராகி, சவால்களைச் சந்தித்து, நினைத்தும் பார்த்திராத சிகரங்களைத் தொட்டு, நாமே அமைக்கும் புதிய பாதையில் நம் வாழ்க்கைப் பயணம் சீராக ஓடத் தொடங்குவதில் கிடைக்கிற ஆனந்தத்துக்கும் திருப்திக்காவுமே என்கிறார் இந்நூலின் மூலமாக.

‘இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு?’
வீடு திரும்பல்’ வலைப்பூவின் முகப்பில் உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். இவரது இந்தக் கேள்வியே இலக்குகளை நோக்கிய வெற்றிக் கோட்டை இழுத்திருந்தாலும்,  ஒவ்வொரு படிக்கட்டிலும் உறுதியுடன் ஏறி உயரம் தொட்ட போது உணர்ந்த உண்மையை, சமூகத்திடமிருந்து தான் பெற்ற நல்லனவற்றை பிறருக்கு உதவுவதன் மூலம் சமூகத்துக்கே திருப்பித் தந்தபோது அடைந்த மன நிறைவை நெகிழ்வோடும் நெஞ்சம் நிமிர்த்தியும் நேர்மையுடன் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார், ஐந்தாண்டு சட்டப்படிப்பில் கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, அதன் பிறகு கம்பெனி செக்ரட்டரிஷிப் மற்றும் ICWA படிப்பை முடித்துவிட்டு சட்டம் மற்றும் செக்ரடேரியல் துறை நிர்வகிப்பாளராகப் பணிபுரியும் மோகன் குமார்:

நான் ஒன்றும் மிக உயர்ந்த நிலையை எட்டி விட வில்லை. ஆனால் ஒரு காலத்தில் எந்த பக்கம் செல்வது என்று குழம்பி, என்னுடைய வாழ்க்கையை எப்படி எடுத்து செல்வது என்று புரியாமல், பல்வேறு மன குழப்பங்களுக்கு ஆட்பட்டு வெளி வந்திருக்கிறேன். நான் அன்று இருந்த நிலையிலிருந்து ஒப்பிட்டுப்  பார்த்தால், மிக அதிக குழப்பங்கள் இடையே எதற்கும் உபயோகமில்லாதவன் போல் இருந்தவன், இன்று நான்கு பேர் மதிக்கும் அளவு வந்துள்ளது புரிகிறது. எவ்வளவு தவறுகள், முட்டாள் தனங்கள் செய்துள்ளேன் ! இவ்வளவும் செய்து விட்டு இன்று மீண்டு வர என்னால் முடியும் போது, அது எல்லாருக்கும் முடியும் என்பதால் தான் இந்த தொடர்.

இவரது வலைப்பூவில் வெளிவந்த போதே என்னை ஈர்த்த, பாராட்ட வைத்த தொடர். மேலும் சில அத்தியாயங்களை இணைத்துக் கொண்டு வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை முழுமையாக வாசிக்கையில் நான் உணர்ந்தது,  சொல்ல முற்படும் செய்தியை வாசகரிடம் மிக இலகுவாகக் கொண்டு சேர்த்து விடுகிறார் தன் எளிமையான, சுவாரஸ்யமான எழுத்து நடையினால். 

பல இடங்களில், போகிற போக்கில் சொல்லிச் செல்லுபவை வாழ்வியல் தந்துவங்களாக மிளிருகின்றன:

“பிறரை வெறுப்பதன் மூலம் நம்மை நாமே வெறுக்கிறோம்.”

“தன்னை நேசிக்காதவனால் மற்றவரை நேசிக்க முடியாது!”

“பிறர்   நம் மீது அன்பு செலுத்த வேண்டும் என நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?”

“கடந்த காலத் தவறுகளை எண்ணி வருந்துவது தவறா? நிச்சயம் தவறில்லை. அது ஒரு அளவோடு இருந்தால் !”  ஏனெனில்,  "கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது !" 

மொத்தம் பத்தொன்பது அத்தியாயங்கள். ஒரு சிறந்த ஆளுமையாக நாம் திகழ சந்தோஷமான மனநிலையும், ஆரோக்கியமான உடல் நிலையும் முக்கியம் என்பதை அழகாக அலசுகின்றன.  எடுத்துக் கொண்ட தலைப்பை தனது மற்றும் தெரிந்தவர் வாழ்க்கை அனுபவங்களுடன்,  பொருத்தமான மேற்கோள்களுடன், ஆங்காங்கே சின்னக் கதைகளுடன், கவிதைகளுடன், உலகின் பிறபாகங்களிலிருக்கும்  நடைமுறைகள் குறித்த தகவல்களுடன், நாம் அறிந்த திரைப்படங்களை உதாரணம் காட்டி என.. எங்கும் எதையும் திணிக்காமல் இயல்பாகச் சொல்லிச் சென்ற விதத்தில் அழுத்தமாகப் பதிந்து போகிறது மனதில், “வெற்றிக் கோடு”!

இலக்கை முடிவு செய்வது; தயக்கங்களை வெல்வது; விடா முயற்சியை ஊக்க மருந்தாகக் கொள்வது; தாழ்வு மனப்பான்மையையும் சுயவெறுப்பையும் கை விடுவது; பெரியவர்களை மதிப்பது; அனைவரிடமும் அன்பும் நட்பும் பாராட்டுவது; உடல்நலம் பேணுவது; பயம், அலட்சியம், ஈகோ இவற்றைத் தள்ளி வைப்பது; மற்றவரை மனதாரப் பாராட்டுவது; மனித மனங்களின் மோசமான மறுபக்கங்களான கோபம், பொறாமை ஆகியவற்றை அண்ட விடாதிருப்பது; உயிருக்குக் குழி பறிக்கும் தீய பழக்கங்களில் விழுந்திடாதிருப்பது; நேர மேலாண்மை, நமக்கென ஒரு ரோல் மாடல் வேண்டியதன் அவசியம்; இவற்றோடு வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ வேண்டும் என்பதையும், பிறருக்கு உதவுவதை நம் இயல்புகளில் ஒன்றாக மாற்றிக் கொள்வதால் வாழ்க்கை எப்படி பூர்ணத்துவம் பெறுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறது இந்நூல்.

த்தனையோ புத்தகங்களில் இந்த அடிப்படையான கருத்துகளை நாம் வாசித்திருக்கலாம். இவரே சொல்கிறார் தான் வாசித்து மனதில் ஏற்றிக் கொண்ட பல சிந்தனைகள்தாம், ஆனால் எப்படி அவற்றால் தான் பயனுற்றேன் என்பதையே சொல்ல விழைந்திருப்பதாய். அதனாலேயே அவை அறிவுரைகளாய் நில்லாது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளாய் நம்மை மனதார ஏற்றுக் கொள்ள வைக்கின்றன.

ஒரு சில இடங்களில் ஆங்கில மேற்கோள்களைத் தமிழ் படுத்தாமல் விட்டிருப்பது சிறிய குறை. ஆங்கிலம் அறியாத சாதாரண மனிதரும் முழுதாகப் புரிந்து பயனடைய வேண்டிய புத்தகமாயிற்றே.  கூடிய விரைவில் மறுபதிப்பை எதிர்பார்க்கலாம் என்பதால் அந்த சமயத்தில் இது சரி செய்யப்படுமென நம்புகிறேன்.

மொத்தத்தில், இருபது முதல் முப்பது வயதுக்குள்ளாக இருக்கும் இளைய தலைமுறை தம் வாழ்க்கையைச் சரியான சமயத்தில் செதுக்கிக் கொள்ள வேண்டுமென்கிற நோக்கத்துடன் ‘உயர்தலே வாழ்க்கை’ என உரக்கச் சொல்லுகிற இப்புத்தகம்,  ‘நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ என்கிற தேடலுடைய அனைத்து வயதினருக்கும் விடையாக அமைகிறது என்றால் அது மிகையன்று.

இலக்கை நிர்ணயிக்க இயலாமல் தத்தளிக்கும், தீய வழிகளில் மனதை அலைபாய விட்டுத் திசை திரும்பிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை நல்வழியில் செலுத்த உதவும் இப்புத்தகம் அனைத்துக் கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களின் நூலகத்தில் அவசியம் இடம்பெற வேண்டிய ஒன்று. “உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீங்கள் திரும்பிப் பார்க்கவும், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சில விஷயங்களைக் கற்றுத் தரவும் செய்யுமானால், இந்தப் புத்தகம் தன்னுடைய கடமையைச் செய்து விட்டது என்று அர்த்தம்” என்கிறார் நூலாசிரியர். தன் கடமையில் நூல் வென்றிருப்பதாக நான் உணர்ந்தது போல நீங்களும் உணரும் பட்சத்தில் மற்றவருக்குப் பரிந்துரைக்கவும், நீங்கள் நலம் நாடும் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் வாங்கிப் பரிசளிக்கவும் செய்வீர்கள் என நம்புகிறேன்.

திரு. சோம வள்ளியப்பன் அவர்களின் சிறப்பான மதிப்புரையுடன் அகவொளி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் வெற்றிக்கோடின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ‘வீடு திரும்பல்’ வலைப்பூவை ஆரம்பத்திலிருந்து வாசித்து வரும் வகையில் நண்பரின் எழுத்து புத்தகமாவது கூடுதல் மகிழ்ச்சி.

உயர்தலே வாழ்க்கை!

இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள் மோகன் குமார்:)!

*

வெற்றிக் கோடு
பக்கங்கள்: 104; விலை: ரூ. 80;
வெளியீடு: அகவொளி பதிப்பகம்;
கிடைக்கும் இடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
எண்: 390, அண்ணா சாலை, KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை - 15.
தபாலில் வாங்கிட:  aganazhigai@gmail.com

நாளை 31 ஆகஸ்ட் 2013 மாலை 5.30 மணிக்கு அகநாழிகை புத்தக உலகில் நடைபெறவிருக்கும் அறிமுக விழாவிலும்; 1 செப்டம்பர் 2013 சென்னை வடபழனி, 297 என்.எஸ். கே சாலையிலுள்ள சினி மியூசிஷியன்ஸ் ஆடிட்டோரியத்தில் நட்புகள் கூடும் சென்னை பதிவர் திருவிழாவில்.., மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவிலும் ரூ. 50-க்கு கிடைக்க ஏற்பாடாகியுள்ளது.
**

26 கருத்துகள்:

  1. அவரது வலைப்பூவில் கட்டுரைகள் வெளிவந்த போதே மிகவும் விரும்பிப் படித்த பகிர்வுகள்..... இப்போது புத்தகமாக வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி..... ஒன்றாம் தேதிக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சுடச்சுடப் பகிர்ந்து விட்டர்கள். நல்ல பகிர்வு. மோகன் குமாருக்கு 'எங்கள்' வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நல்லதொரு தகவல். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  4. தங்கள் விமர்சனத்தில் புத்தகம் வெற்றிக்கோட்டை தொட்டுவிட்டது.
    மோதிரக் கையால் குட்டு வாங்குவது என்பது இதுதானோ?!


    // நண்பரின் எழுத்து புத்தகமாவது கூடுதல் மகிழ்ச்சி.//

    நிச்சயமாக திரு.மோகன் குமார் அவர்களை அறிந்தவர்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சியான தருணமே!

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான விமர்சனம்... எனது இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கருத்துரையை படித்து முடிக்கும்போது அடைந்த ஆனந்தத்திற்கு எல்லை இல்லை... நான் வாழ்கிற வாழ்க்கை அர்த்தமுள்ள ஒன்று என தோன்றுகிறது

    நன்றி ராமலட்சுமி !

    பதிலளிநீக்கு
  7. இன்னும் பல சிகரங்களைத்தொட இனிய வாழ்த்துகள் மோகன்..

    அருமையான விமர்சனம் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. ‘இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு?’

    அருமையான விமர்சனப்பகிர்வுகள்..
    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  9. நல்ல பகிர்வு. மோகன் குமாருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. வெகு நல்ல எண்ணங்கள் ராமலக்ஷ்மியின் பதிவில்
    வருவதில் மிக மகிழ்ச்சி. திரு மோகன்குமார் வெகு அட்க்கமான நண்பர். இவர் புத்தகத்தின் கருத்துகள் அருமையாகத் தான் இருக்கும்.
    நன்றி ராமலக்ஷ்மி அருமையான அறிமுகத்துக்கு.

    பதிலளிநீக்கு
  11. நண்பர் மோகன் குமாரின் நூலறிமுகத்துக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வாசிக்கத் தூண்டும் சிறப்பான விமர்சனம். மோகன்குமாருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு நூலின் பார்வை அக்கா...
    மோகன் குமார் அண்ணாச்சி இன்னும் பல படைப்புக்கள் படைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல கருத்துக்களை அடங்கி புத்தக விமர்சனம் அருமை.. திரு. மோகன் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். புத்தகம் சிறப்பு பரிசாய் குறைந்த விலையில் பதிவர் சந்திபில் கிடைப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. @வெங்கட் நாகராஜ்,

    விழா சிறப்பாக சென்று கொண்டிருப்பதாக அறிகிறேன். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  15. @அமைதி அப்பா,

    /அறிந்தவர்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சியான தருணமே!/

    ஆம்:)! நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin