Sunday, March 17, 2013

பெண் மகவைக் கொண்டாடும் “ங்கா” - தேனம்மை லெஷ்மணனின் கவிதைக் குழந்தைகள் - ஒரு பார்வை


“ங்..கா..”

குழந்தையின் முதல் மழலைச் சொல்.

ஒவ்வொரு குழந்தையும் முதன் முறை இதை உச்சரிக்கையில் குடும்பமே குதூகலிக்கிறது. அந்தக் குதூகலம் குழந்தையையும் தொற்றிக் கொள்ள ‘படீர் படீர்’ எனக் காலைப் படுக்கையில் ஓங்கி அடித்துக் கால் தண்டையோ கொலுசோ ’ஜல் ஜல்’ எனப் பக்கவாத்தியம் வாசிக்க, பொக்கை வாய் மலரச் சிரித்து, கண்கள் மினுங்க இன்னும் சத்தமாய் ‘ங்கா.. ங்கா’ எனத் தொடரும் போது அன்னைக்கும்,  அனைவருக்கும் உலகமே மறந்து போகிறது. சம்பந்தி வீட்டாருக்கிடையே இருக்கும் மனக் கசப்புகள் கூட அந்த மழலைச் சொல்லில் மறைந்து போகிறதென்கிறார் தலைப்புக் கவிதையில் கவிஞர். உண்மைதான். அதுவும் எங்கள் ஊர்ப் பக்கத்தில் குழந்தை ‘ங்கா’ சொல்ல ஆரம்பித்ததும் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, மாமா, சித்தப்பா, அக்கா, அண்ணா என ஆளாளுக்கு மாற்றி மாற்றி அதைச் சூழ்ந்து கொண்டு “இங்குங்கு பேசணுமா..? ஆக்காக்கு பேசணுமா..?’ எனக் கொஞ்சியபடியே இருப்பார்கள். அந்த அழகான முதல் மழலைச் சொல்லையே தொகுப்புக்குப் பெயராக்கிய இரசனையிலும் பாராட்டைப் பெறுகிறார் கவிஞர்.

ஆராதனா என்ற குழந்தைக் கவிதையும் தேனம்மை லெஷ்மணனின் கவிதைக் குழந்தைகளும்” என்ற அறிமுகத்துடன் ஆரம்பமாகிற தொகுப்பில் 59 குறுங்கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அத்தனையும் தேன். ஒவ்வொரு கவிதையுடனும் குழந்தை ஆராதனாவின் அழகான வண்ண ஒளிப் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆணோ பெண்ணோ ஒவ்வொரு குழந்தையும் கடவுள் தருகிற பரிசு. படித்தவரோ பாமரரோ இன்னும் பலபேரிடத்தில் பிறப்பது ஆண் மகவாகவே இருக்க வேண்டுமென்கிற விருப்பம் இருந்து வருவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெண் மகவைக் கொண்டாடும் விதமாக இடம் பெற்றிருக்கும் விதம் விதமான படங்களும் அழகழகான கவிதைகளும் மனதுக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதாக உள்ளன.

அமுதூறும் அக்கவிதைகளிலிருந்து ஒரு சிலவற்றை உங்களுடன் பகிருகிறேன்.

*  
கூடுகளில் உணவுக்காய்
வாய்திறக்கும்
குருவிகளைப் போல
தூங்குகிறாள் மகள்..
வாயில் அமிர்தம் வழிந்த
வாசனையோடு.

*
ன் சுவாசம்
நெஞ்சுரச
மேல் கிடக்கிறாய்..

உன் வாசமா
அது என் சுவாசமா..


*
ள்ளி செல்ல நீ அழுவாயோ என
நான் கண் கசிந்தது பார்த்து
என் கண் துடைத்துச் செல்கிறாய்
வாய் பொத்திச் சிரிக்கிறது
காம்பவுண்டுக் கதவு.


*
தாத்தா பாட்டி அப்பா அண்ணன்
யாரிடம் இருந்தாலும்
அடிக்கொருதரம் தேடும்
உன் கண்கள் என்னையும்
என் கண்கள் உன்னையும்..


*
ள்ளி வண்டி வந்ததும்
ஓடிச் சென்று
வாலசைத்து
வழியனுப்பித்
திரும்புகிறது
தினம் மகளோடு
பழமுண்ணும்
அணிலொன்று..


*
பேரன்புக்காரியிடம்
செல்லப் பொம்மைகளாகிறார்கள்
அம்மாக்களும் அப்பாக்களும்
தாத்தாக்களும் பாட்டிகளும்.


*
கீ கொடுத்தால் கத்தித் தீர்க்கும்
பொம்மைகள் நடுவில்
கீ கொடுத்தபடி கத்தும் நீ


*
நீயாய் பாடுவாய்
பாடச் சொன்னால்
வாய் மூடிக் கொள்வாய்..
வாய் மூடச் சொன்னால்
பாடுவாயா..

*
கொஞ்சம் மெள்ளமாகச் சிரி
என் மன அணையில்
தேக்கத் தேக்க
வழிந்து
கொண்டேயிருக்கிறது
உன் அலைச் சிரிப்பு.


பெண்களுக்கு மட்டுமே கிடைத்த வரம், தாய்மை. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் இருவருக்குமே பங்கு இருக்கிறது என்றாலும் தாய்க்கு என்றுமே உயரிடம்தான். கருவில் சுமந்த குழந்தையை எப்படி ஒவ்வொரு கணமும் மனதிலும் சுமக்கிறாள் தாய் என்பதை அழகுற உணர்த்தித் தாய்மையையும் போற்றியிருக்கிறார் கவிஞர். கவிதைகள் இருபாலினக் குழந்தைகளுக்கும் பொருந்துமென்றாலும் ஆராதனாவின் ஒளிபடங்களாலும் குறிப்பிட்ட சில கவிதைகளாலும் பெண் மகவையும், தாய்மையையும் கொண்டாடியிருக்கும் விதத்தில் தனிச்சிறப்புப் பெறுகிறது தொகுப்பு.

வாசித்து மகிழ மட்டுமின்றி பிறருக்குப் பரிசாக வழங்க உகந்த வகையில் வழவழப்பான பக்கங்களுடன் வடிவமைத்திருக்கிறார் ISR Ventures, செல்வகுமார். வளைகாப்பு,  குழந்தை பெயர் சூட்டு விழா போன்ற வைபவங்களுக்குச் செல்லும் போதோ அல்லது இதுபோன்ற விழாக்களில் வருகிறவர்களுக்குப் பரிசளிக்கவோ ஏற்ற நூல். முன்பக்க அட்டையில் ஆராதனா ‘ங்கா’ என நமை நோக்கி அழைப்பது போலிருக்க, பின் பக்க அட்டை சொல்கிறது:

‘ங்கா...
எந்த மொழியிலும் இல்லாத வார்த்தை!
எல்லா மொழியினருக்கும் புரிந்த வார்த்தை!’

என் பார்வையில்,

ஒன்றி இரசிக்க வைக்கும் கவிதைகளுடன்..
மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களுடன்..
ங்கா!
ங்கா
பக்கங்கள்: 60; விலை: ரூ. 50
புத்தகமாக்கம்: திரு. தாமோதர் சந்துரு
கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை.
தொலைபேசி எண்கள் : 9940446650

தேனம்மையின் ‘சாதனை அரசிகள்’ நூல் குறித்து சென்ற வருட மகளிர் தினத்தில் நான் எழுதிய விமர்சனம் இங்கே.  இலங்கையில் செயல்படும் தடாகம் கலை இலக்கிய வட்டம் இவ்விரண்டு நூல்களுக்காகவும், மேடைப்பேச்சு, எழுத்து என தேனம்மையின் பல்வேறு செயல்பாடுகளுக்காகவும் லங்காதீபம் (கவியருவி) விருதை சமீபத்தில் இவருக்கு அறிவித்திருக்கிறது. மகளிர் தின மாதத்தில் தேனம்மை லெஷ்மணன் மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துவோம்! வாழ்த்துகள் தேனம்மை:)!
***

17 மார்ச் 2013, அதீதம் இணைய இதழிலும்..

23 comments:

 1. ”ங்கா” பற்றி வெகு அழகான விமர்சனம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  நூலாசிரியர் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம்... அவருக்கும், பதிவாகிப் சிறப்பித்தமைக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. இன்னும் பல சிகரங்களை எட்ட இனிய வாழ்த்துகள் தேனக்கா..

  ReplyDelete
 4. ங்கா அருமையான தொகுப்புதான் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. அருமையான தலைப்பு; அதே போல் பதிவும்.....

  ReplyDelete
 6. அழகான விமர்சனம்.பாராட்டுக்கள்.தேனக்காவின் இந்த இரண்டு புத்தகங்களும் வாசிக்க மிக ஆவல்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. நன்றி ராமலெக்ஷ்மி. மிக அருமையான விமர்சனம். சற்றேறக் குறைய மறையும் ஞாபகமாகி விட்டது கவிதைத் தொகுதி.. அவ்வப்போது எனக்கு நானே நினைவூட்டிக் கொள்வேன். இதை நீங்கள் விமர்சனம் செய்ததும் மிகுந்த சந்தோஷமேற்பட்டு விட்டது. :)

  ReplyDelete
 8. நன்றி கோபால் சார்

  நன்றி தனபாலன்

  நன்றி சாரல்

  நன்றி மலர் பாலன்

  நன்றி வாசுதேவன் திருமூர்த்தி

  நன்றி ஆசியா

  மிக்க நன்றி ராமலெக்ஷ்மி.. சிரத்தையோடு செய்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 9. அழகிய கவிதைகள். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 10. தேனம்மைக்கு வாழ்த்துக்கள். அவர் மேலும் மேலும் பல் விருதுகள் பாராட்டுக்கள் பெற வாழ்த்துகிறேன்.
  தேனம்மையின் கவிதைகளை அழகாய் விமர்சனம் செய்து விட்டீர்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 11. நல்வாழ்த்துகள் தேனம்மை.

  இனிதாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 12. @அமைதிச்சாரல்,

  தொடரட்டும் அவர் சாதனைகள்! நன்றி சாந்தி.

  ReplyDelete
 13. @Vasudevan Tirumurti,

  மிக்க நன்றி திவா சார்!

  ReplyDelete
 14. @Asiya Omar,

  அவசியம் வாங்கிடுங்கள். நன்றி ஆசியா:)!

  ReplyDelete
 15. @Thenammai Lakshmanan,

  பகிர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. வாசித்ததுமே செய்ய நினைத்து, தாமதமாகி விட்டது. நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 16. தலைப்பும் கவிதைகளும் குட்டிப் பாப்பாவைப் போலவே மிக அழகு! தேனம்மைக்கும் ராமலக்ஷ்மிக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 17. மிக அருமையான விமர்சனம் , பகிர்வுக்கு நன்றி
  தேனக்காவுக்கு வாழ்த்துக்கள்
  அதை அழகுற இங்கு பகிர்நத உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin