வெள்ளி, 29 ஜூன், 2012

உறுதி ஊற்றெடுக்கும் காலம்


1. எப்போதோ வாய்க்கும் வரமல்ல மகிழ்ச்சி. புலரும் ஒவ்வொரு பொழுதும் மகிழ்ச்சிக்குரிய வரமே.

2. சில துளிகளேனும் நம் மீது சிந்திக் கொள்ளாமல் தெளிக்க இயலாது மற்றவர் மேல் மகிழ்ச்சி எனும் பன்னீரை!

3. நேசிக்க யாராவது இருப்பதும், செய்வதற்கு ஏதாவது இருப்பதும், நம்பிக்கையுடன் காத்திருக்க ஏதாவது இருப்பதும் மகிழ்ச்சிக்கான வித்துகள்!

4. வந்து சேர்ந்த இடத்தை விடவும் சிலநேரங்களில் பயணத்த பாதை பேரழகானதாய் இருக்கும். இலக்கை அடைய எடுத்த பாதையையும் மறவாது கொண்டாடி மகிழ்வோம்.

5. காத்திருப்பு வெற்று நம்பிக்கையன்று. இலக்கை அடைய உள்ளூர உறுதி ஊற்றெடுக்கும் காலம்.

6.ஒரு நல்ல புத்தகத்துடன் செலவிடும் ஒரு மணிநேரம், அன்றைய தினத்தை அற்புதமானதாக்கி விடும்.

7. எல்லா பிரார்த்தனைகளுக்கும் பதிலுண்டு, அது எப்படியானதாக இருக்க வேண்டும் என நாம் சொல்லாத வரையில்.

8. முதன்மையான திறமை நம்முள் இருக்கும் திறமைகளை அடையாளம் காண்பது.

9. ஆசைகள் கனவு காண்கின்றன. இலட்சியங்கள் சாதிக்கின்றன.

10. அனுமானங்களை விட கேட்டுத் தெளிவது சாலச் சிறந்தது.
*****

(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)




தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..
வாழ்க்கை என்பது எதிரொலி

அறிவின் கருவி

செவ்வாய், 26 ஜூன், 2012

பள்ளி வாகனங்களும் குழந்தைகள் பாதுகாப்பும்

சென்ற வியாழன் மாலை. பெங்களூரில் நிகழ்ந்த சோகம். எல்கேஜி படிக்கும் நான்கு வயதுச் சிறுவன் ஃபைசலை வழக்கம் போல வீட்டு முன் இறக்கி விட வந்து நின்ற பள்ளி மினிபஸ்ஸை, இரண்டாவது தளத்திலிருந்த தன் வீட்டிலிருந்து தற்செயலாகக் கவனித்திருக்கிறார் பாபு. கண் இமைக்கும் நேரத்துக்குள் கதவின் வழியே வெளியே வீசப்பட்டு வந்து விழுந்த ஃபைசலின் மேல் ரிவர்ஸ் எடுத்த வண்டியின் சக்கரம். பதறியவர் இறங்கி ஓடி வருவதற்குள் ஓட்டுநர் பரத்சிங் பையனைத் தூக்கி வண்டிக்குள் போட்டு வேகமாய் பஸ்ஸைக் கிளப்பிச் சென்று விட்டார். அதிர்ந்து போன பாபுவும் பக்கத்து வீட்டுக்காரர்களும் பஸ்ஸைத் துரத்திச் சென்றிருக்கிறார்கள். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடியும் விட்டிருந்தார் பரத்சிங். உள்ளே இன்னும் பதினைந்து குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். பூட்டியிருந்த கதவை உடைத்து பாபுவும் பிறரும் குழந்தையை ஆட்டோவில் பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் பலன் இருக்கவில்லை:(.

சிறுவர்களை ஏற்றிச் செல்லும் எந்தப் பள்ளி வாகனத்திலும் கண்டிப்பாக உதவியாளர் இருக்க வேண்டும். அதை பள்ளி கடைப்பிடிக்கவில்லை. பஸ் நின்று கதவு திறக்கவும் இறங்குவதற்காக அதனருகில் சிறுவன் வந்து நின்றிருந்த போது டிரைவர் ரிவர்ஸ் எடுக்க ஆரம்பிக்க கதவு ஆட்டோமேடிக்காக மூடுகையில் சிறுவனை வெளியில் தள்ள அவன் சக்கரத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறான். மறுநாள் கைது செய்யப்பட்ட பரத் சிங் பார்த்தவர்கள் தன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்பதால் பையனை தூக்கிச் சென்றதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லதான் முயன்றதாகவும், பதட்டத்தில் வண்டி ஓட்ட முடியாமல் போகவே ஓரத்தில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். பெற்றோரின் சோகத்தையும், சக நண்பனின் கடைசி நொடிகளைக் கண் முன் காண நேர்ந்த பதினைந்து குழந்தைகளின் நிலைமையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

றுநாள் பள்ளி வாசலில் விடுமுறை எனும் அறிவிப்பை வைத்து விட்டு, பள்ளியின் தலைமை ஆசிரியைத் தலைமறைவாகி விட்டார். கட்டணங்களை வசூலிப்பதில் கறாராக இருக்கிற பள்ளிகள் தங்கள் வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய விதிகளை பெரும்பாலும் மறந்து விடுகின்றன. எத்தனை பேர் ஏற்றலாம், வாகன உதவியாளர், பத்து ஆண்டுகளுக்கும் குறைந்த வயதுள்ள வண்டி, இன்ஸூரன்ஸ் செய்யப்பட்டதா, திறமையான ஓட்டுநரா, குழந்தைகளின் முழுவிவரங்கள் அடங்கிய பட்டியல் எப்போதும் வண்டியில் இருக்கிறதா, பள்ளிப் பைகள் வைக்க இடம் உள்ளதா, உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர்கள் அனுமதியளிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெறப்பட்டதா என்பதில் எத்தனை பள்ளிகள் அக்கறை செலுத்துகின்றன? அதை கேட்டு அறியும் உரிமை பெற்றோருக்கு இருக்கிறது என்றாலும் கேட்டால் எத்தனை பள்ளிகள் பொறுப்பாகப் பதில் சொல்கின்றன?

உதவியாளர் இல்லாமல் ஓடுகிற வண்டியினுள் ஓடிச்சாடும் குழந்தைகள், முதலுதவிப் பெட்டி இல்லாதது, தீ விபத்துக்கான பாதுகாப்பு இல்லாதது.. இவை மட்டுமல்ல சிறுவரெனில் ஆறுபேர் வரை பயணிக்க அனுமதி கொண்ட ஆட்டோக்களில் பதினைந்து பேருக்கு மேல் செல்வதெல்லாம் சர்வ சாதாரணக் காட்சிகள் பெங்களூரில். சிலிண்டர் மேல் நாலு பேர், சீட்டில் நாலு பேர், ஒவ்வொருவர் மடியிலும் ஒருவராக நாலு பேர், ஓட்டுநர் இருக்கையில் ஒண்டிக் கொண்டு நாலு பேர். போகவும் அத்தனை பேரின் பைகள்.



அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி வாகனங்கள் போதுமானதாக இருப்பதில்லை என்பதால் மினி வேன், ஆட்டோ போன்ற தனியார் வாகனங்களுக்குத் தாங்கள் தடை சொல்வதில்லை என்கின்றன பள்ளிகள். அனுப்புகிறார்கள் பெற்றோரும் வேறு வழியில்லை என. இருபத்தைந்து வருடங்களாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆட்டோ ஓட்டுவதாகச் சொல்லும் ஒரு பெரியவர் “கட்டணத்தைக் கூட்டிக் கொடுத்தால் நாங்கள் ஏன் அதிகம் பேரை ஏற்றப் போகிறோம்?” என எதிர்க் கேள்வி கேட்கிறார், இதுவரை எந்த அசம்பாவிதமும் தன் அனுபவத்தில் நிகழவில்லை எனக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு.
***
றியா வயதில் ஆபத்து எங்கு எதில் இருக்கிறது எனக் குழந்தைகள் புரிந்து நடப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. சுற்றியிருப்பவர் கவனமே முக்கியம். பள்ளிச் சுற்றுலாவில் நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்றை “எங்கேயும் எப்போதும்-தூறல்:3”_ல் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி சொல்ல நினைத்து மனச்சங்கடம் ஏற்படுமென சொல்லாமல் விட்ட சில நிகழ்வுகளை இப்போது பகிர்ந்திடத் தோன்றுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலே பெங்களூரில் நடந்தவை. மால் ஒன்றின் எஸ்கலேட்டரிலிருந்து சிறுவன் தவறி விழுந்து மறைந்த பின்னர் அங்கு பாதுகாப்புக்காக முதல் தளத்தில் வலை அமைத்தார்கள். மாடிகளின் தடுப்புச் சுவர்கள் மேலும் பாதுகாப்புக்குரியதாக ஆக்கப்பட்டதும் பிறகே.

பத்து குடும்பமாகப் படம் பார்க்கச் சென்ற இடத்தில் இரண்டு பெரியவர்கள் கண்காணிப்பில் இருபத்தைந்து குழந்தைகள் கீழே அழைத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. தூறல் பதிவில் சொன்னதே: எத்தனை குழந்தைகளுக்கு எத்தனை பேர் எனும் விகிதத்தை விட எத்தனை கவனமாகக் கண்காணிக்கிறோம் என்பதே முக்கியம். விழா நிகழ்வுகளில் குழந்தைகள் ஓரிடமாகச் சென்றுவிடுவார்கள். ஒருசிலரேனும் அவர்களைக் கவனிக்க நியமிக்கப்பட வேண்டும். போகிற வருகிறவர்களும் யார் குழந்தைகளானாலும் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருந்தால் தடுக்க வேண்டும்.

வீட்டிலும் குழந்தைகள் வளரும் வரை பல விஷயங்களில் கவனம் தேவை. தாழ்ந்த உயரத்தில் இருக்கும் மின்சார பாயிண்ட்களை மூடுவது, கூர்மையான பொருட்களைக் கண்ணில் படாமல் எட்டாத உயரத்தில் வைப்பது, குளியலறை தாழ்பாட்களை எட்டாத உயரத்தில் அமைப்பது போன்றன. இது அவர்கள் உள்ளே போய் பூட்டிக் கொள்ளும் அபாயத்தை மட்டுமின்றி அம்மாக்களை வைத்துப் பூட்டிவிடுவதையும் தவிர்க்கும். இப்படி அம்மாவைப் பூட்டிவிட்டுத் திறக்கத் தெரியாமல் குழந்தை அழுது மயங்கிவிழ, தாயின் கூக்குரல் கேட்டு வீட்டுக் கதவை உடைக்க சில மணி நேரங்கள் ஆகியிருக்கிறது எங்கள் குடியிருப்பில்.

நம்பிக்கையானவர் என எண்ணி ஆயாக்களிடம் விட்டுச் செல்லப்படும் குழந்தைகளின் பாடுகளும் பல நேரங்களில் பரிதாபமே. தூங்கும் குழந்தையை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுப்போன ஆயா திரும்பி வர மணிக்கணக்கில் ஆகிவிட குழந்தை விழித்து சன்னல் வழியே பார்த்தபடி அழுத அழுகையில் அத்தனை பேரும் ஆடிப்போய் விட்டோம். பிள்ளைகளை விட்டுச் செல்பவர்களின் கவனத்திற்கு: பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கண்டிப்பாக உங்கள் தொடர்பு எண் இருக்க வேண்டும்.

கீழ்வரும் இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து பெங்களூரில் நடந்தவை. மனம் வராது எழுதாமல் விட்டவை. பிறந்தநாள் விழா நடந்து முடிந்து, வீடு விருந்தினரால் நிரம்பியிருந்த வேளையில் குழந்தை பால்கனியிலிருந்து தவறிவிழுந்தது; கம்பிகள் அற்ற சன்னல் வழியாக வேடிக்கை காட்டியபடி கைக்குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தபோது நழுவிய கிண்ணத்தை பேலன்ஸ் செய்யப் போன நொடியில் குழந்தை எதிர்பாராமல் எம்பி வெளியே விழுந்தது. பில்டர்கள் செலவைக் குறைக்க குறைந்த உயரத்தில் பால்கனி கம்பிகளை அமைத்து விட்டதாகச் சொன்னார்கள். பாதுகாப்பு வசதி பெருகி விட்ட குடியிருப்புகளில் சன்னல்களுக்குக் கம்பி வைக்காது விடுவது இப்போது நாகரீகமாகவும் அழகாகவும் கருதப்படுவது சுட்டிக் காட்டப்பட்டது. எல்லா நேரமும் குழந்தை பின்னால் செல்ல முடியாது என்றால் வளரும் வரை பால்கனியை தற்காலிகமாக கம்பி வலையால் மூடிடுங்கள். சொந்த வீடானால் சன்னல்களுக்குக் கம்பி போடுங்கள். சில குடியிருப்புகளில் ஒரே மாதிரியான் வெளிப்புறத்தோற்றம் பாதிக்குமென தடை சொல்வார்கள். போராடி அனுமதி பெறுங்கள். அல்லது இரட்டிப்புக் கவனத்துடன் இருங்கள்.

ல்லா விபத்துகளும் கணப் பொழுதில் நிகழ்ந்து விடுகின்றன. பிறகு காரண காரியங்களை ஆராய்ந்து எந்தப் பிரயோசனமும் இல்லை என்பது வருத்தத்திலும் ஆத்திரத்திலும் வெளிப்படும் பேச்சாக இருந்தாலும், அலசலும் ஆய்வும் அடுத்து விபத்துகள் நேராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செய்தியாகிறது. ஆனால் அதுவும் நம் நாட்டில் தலைகீழ். எத்தனை முறை ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்தாயிற்று! சென்ற வெள்ளிக்கிழமை ஹரியானாவில் நான்கு வயதுக் குழந்தை மஹி. அடுத்த இரு தினங்களிலே மேற்கு வங்கத்தில் பதினாறு வயதுச் சிறுவன் ரெளசன். தொடரும் அக்கறையின்மை, வேதனை:(!
***
படம் நன்றி: இணையம்

வியாழன், 21 ஜூன், 2012

இருப்பு - நவீன விருட்சத்தில்..


ஓவியக் கண்காட்சிக் கூடத்தின்
ஒரு சுவரில்
பிள்ளையார் விதம் விதமான
கோணங்களில் அருள் பாலித்தார்.

தன்னலமற்று உலகை இரட்சிப்பதாகப்
பசுவைக் கொண்டாடும் படங்களால்
நிரம்பியிருந்தன இன்னொரு சுவர்.

போட்டிகள் நிறைந்த உலகின்
ஆக்ரோஷங்களை வெளிப்படுத்தின
சேவல் சண்டைக் காட்சிகள்.

கொல்கத்தா வீதிக் காட்சிகளால்
சோகம் அப்பி நின்றிருந்தது
சன்னல்கள் அற்ற இடதுசுவர்

உயிரைக் குழைத்திழைத்த
ஓவியங்களைப் பிரியும் துயர்
இலாபக் கணக்குகளால்
ஆற்றப் பட்டன

கையில் சுமந்திருந்த மோதகத்தைச்
சத்தமின்றி பிள்ளையாரின்
காலடித்தட்டில் வைத்து விட்டு
எதிர்சுவற்றுச் சந்தைக் காட்சியில்
சாலையில் உருண்டு கிடந்த
தக்காளியைச் சுவைக்கச் சென்றிருந்த
மூஞ்சுறு
சேவல்களுக்கு அஞ்சி
உத்திரத்தின் வழியே
திரும்பிக் கொண்டிருக்கையில்
வானத்துச் சூரியன்
மேற்கே சரிந்து விழ

விற்காத படங்களுடன்
வெளியேறினர் ஓவியர்.

இருண்ட காலிக் கூடத்தின்
சுவர்களெங்கும் ஓடிஓடித்
தேடிக் கொண்டேயிருந்தது
பிள்ளையாரை மூஞ்சுறு.
***

12 ஜூன் 2012, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

புதன், 20 ஜூன், 2012

சீர் கொண்டு வா - ஜூன் PiT

இன்றுதான் கடைசித் தேதி உங்கள் சீர் வந்து சேர.

ஜூன் போட்டித் தலைப்பு: சீர்/Uniformity

ஒரே ஒரு நாள்தானே உள்ளது என நினைத்தால் ஒரு நாள்தான். ‘இன்னும் 24 மணிநேரம் இருக்கே’ என நினைத்தால் நிமிடங்களும் நொடிகளும் துணைக்கு வரும்:)! கேமராவைக் கையிலெடுத்துக் கொண்டு பார்வையைச் சுழல விடுங்கள்.

எந்த மாதிரி ‘சீரான படங்களை’ எல்லாம் போட்டிக்கு அனுப்பலாமென நடுவர் சர்வேசன் ஒரு பட்டியலே தந்திருக்கிறார்:

//- பள்ளிச் சிறார்கள் பலர், 'சீரு'டையில்
- வேலைக்குச் செல்லும் மக்கள், 'சீரு'டையில்
- பார்க்கிங் ஸ்டாண்டில் 'சீரா'க நிறுத்தப்ப்ட்டிருக்கும், ஒரே நிற டாக்ஸி வண்டிகள், அரசுப் பேருந்துகள், etc..
- பலசரக்கு கடைகளில், சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மசாலா டப்பாக்கள்
- தள்ளு வண்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காய்கறி
- அலுவலக 'க்யூப்', நாற்காலிகள்/மேசைகள்
- வரிசையான சாலை மரங்கள்.
.//

இதெல்லாம் சில உதாரணங்களே. ஆனால் உங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்க அந்த வானமே எல்லை.

சீராய் சிலவற்றை நானும் அடுக்கியுள்ளேன் இங்கே உங்கள் பார்வைக்கு:

#1

# 2


#3


#4


#5


#6

#7
#8

#9

#10

#11

# 12

#13

#14

இதுவரை வந்திருக்கும் எண்பதுக்கும் அதிகமான படங்களைக் காண இங்கே செல்லுங்கள். நேரமிருக்கையில் கருத்துகளை வழங்கி உற்சாகம் கொடுங்கள்.
***

ஞாயிறு, 17 ஜூன், 2012

படபடக்கும் பட்டாம்பூச்சிகள் - அவுட்டோர் படப்பிடிப்பு

அவுட்டோர் ஷூட் போய் ரொம்ப நாளாச்சு’ என சென்ற மாதம் ஒரு ஞாயிறு மாலை கேமராப் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன் அருகிலிருந்த ரமண மகிரிஷி பூங்காவுக்கு. பூக்களைப் பிடிக்கலாமெனக் குஷியாகக் கூட வந்த கேமராவுக்குத் தெரியவில்லை அப்போது, அங்கே தனக்கொரு புதையல் காத்திருப்பதை.

# 1. The Common Jezebel (Delias eucharis)
பட்டாம் பூச்சிகளைப் படமாக்க வேண்டுமெனக் கொண்டிருந்த அதன் நீண்ட நாள் எண்ணம் எதிர்பாராமல் நிறைவேறியது:)! சரி, பட்டாம்பூச்சி என்றாலே படபடக்கதானே செய்யும்? அப்புறம் ஏன் அப்படியொரு தலைப்பு? சொல்லுகிறேன்.

அழகுச் சோலைக்குள் நான் நுழைந்ததோ மாலை நேரம். ஆனால் பட்டாம் பூச்சிகளைப் படம் பிடிக்க அதிகாலை நேரமே உகந்ததாம். புலர்ந்தும் புலராத பொழுதில் சோம்பல் முறித்தபடி மந்தகாசமாக இருக்குமாம். அந்த நேரத்தில் நுண்ணிய விவரங்களோடு அவற்றைப் படமாக்க ட்ரைபாட் வைத்து கூட எடுக்கலாமென்றால் எப்படி அசையாமல் இருக்குமென்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். அசைவற்று சிறகு பிரியாமல் செடியோடு செடியாக மறைந்து கிடப்பவற்றைக் கவனமாகத் தேடினாலே கண்ணுக்கு அகப்படும். பிறகு சூரியனின் கதிர் பரவ ஆரம்பிக்கையில் மெல்லத் தங்கள் சிறகுகளை விரித்துச் சூடேற்றிக் கொள்ளுமாம். இரவெல்லாம் காயப் போட்ட வயிற்றை ரொப்பிக் கொள்ளப் பூவிலே வெகுநேரம் தேன் உறிஞ்சியபடி போஸ் கொடுக்கும். அப்போ கேமராக்களுக்குக் கொண்டாட்டம். மற்ற நேரங்களில்...? கொஞ்சம் திண்டாட்டம்தான்:)!

இந்தத் தகவல் எல்லாம் படம் பிடித்து வந்த பிறகு, எடுத்த வண்ணத்துப் பூச்சிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை அறிந்து கொள்ள இணையத்தின் உதவியை நாடிய போது வந்து விழுந்தவை.

உலகில் மொத்தம் 20 ஆயிரம் வகைப் பட்டாம் பூச்சிகள் இருக்க, எனக்கு அன்று தரிசனமும் கரிசனமும் காட்டின மொத்தமே இருந்த மூன்று பூச்சிகள். மூன்றுமே மாலை ஐந்து மணி வெயிலில் மலருக்கு மலர் மகா சுறுசுறுப்பாகத் தாவித் தாவிப் பறந்து கொண்டே இருந்தன. துரத்தித் துரத்தி எல்லாம் எடுக்கவில்லை! அவை பாட்டுக்கு ஆனந்தமாக தேனுண்டு திளைக்க, பறந்த இடமெல்லாம் தொடர்ந்தோடி ஓடி எடுத்திருக்கிறேன்:)!

# 2 பூந்தேனில் மகிழ்ந்து..
ஸ்தம்பிக்க வைக்கும் அழகுத் தீட்டலாக அமைந்த வண்ணங்கள் இறைவன் பறவைகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவற்றுக்கு வழங்கிய வரம். பூக்களோடு பூக்களாக இருக்கும் போது எதிரிக்கு இவை பூவா பூச்சியா என எளிதில் இனம் காணவே முடியாதென்பது எத்தனை உண்மை பாருங்கள்!

# 3 பூவுக்குள் ஒளிந்திருக்கும்...

இவை எல்லாமே ஒன்று முதல் ஒன்றரையடி உயரத்தில் கம்பளமாக பூங்காவெங்கும் விரிந்து கிடந்த செடிகள்.

ஜெஸபெல் சாருக்கு (ஆம், இவங்க மேடத்துக்கு நிறம் இத்தனை அழுத்தமாக இருக்காதாம்) எப்பவுமே வெள்ளைப் பூக்களின் தேன்தான் பிடித்திருக்கிறது. மஞ்சள் பூக்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. அதற்கு நேர் மாறாக இருந்தார் கொஞ்சம் தள்ளி மஞ்சள் மலர் மேல் ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என உட்கார்ந்திருந்த மோனார்க் (ராசா). வெள்ளைப் பூக்கள் இவருக்கு அலர்ஜி. இதெல்லாம் அவதானித்ததில் அறிந்தவை.

#4 Monarch Butterfly (Danaus plexippus)
இவரை வைஸ்ராய் வண்ணத்துப் பூச்சிகளோடு குழப்பிக் கொள்பவர்கள் உண்டு. வைஸ்ராய்க்கு இருப்பது போல் அழுத்தமான பக்கவாட்டுக் கருப்புக் கோடுகள் இவருக்குக் கிடையாது. மேலும் இவருக்கு வெளிப்புறம் மிதமான வண்ணத்திலும், உட்பக்கம் அழுத்தமான ஆரஞ்சிலும் அமைந்திருக்கும்.‘அப்படியா? எங்கே பார்க்கலாம்’ எனத் தடதடவெனப் பக்கத்தில் போய் விடாதீர்கள். போனால் இப்படிதான் சர்ர்ர்ர்ர்ரெனப் பறந்து விடும்.

# 5 மெல்லத் திறக்குது சிறகு


வாங்க கொஞ்சம் பொறுமையாப் பின் தொடருவோம். விட்டுப் பிடிப்போம்.

# 6 தரிசனம்
இப்பத் தெரியுது பாருங்க, உள்பக்கத்தின் அழுத்தமான ஆரஞ்சு வண்ணம்.

இன்னும் கொஞ்சம் கரிசனம் வச்சு அதே பூவில் கிர்ர்ர்னு ஒரு வட்டமடிச்சு, அகல விரிச்சுது சிறகுகளை, அடடா! என்ன அழகு!

# 7 விரித்து வைத்தப் புத்தகம்
இவரோட Wing span மூன்றரையிலிருந்து நாலரை அங்குலம்.

இவரும் சரி, ஜெசபெலும் சரி ஒருசில நொடிகளாவது உட்கார்ந்திருந்தார்கள். தேனை ருசித்து இழுக்கையில் ஆடாமல் அசையாமல் இருந்தார்கள். ஆனா க்ரிம்சன் ரோஸ் அப்படியில்லை. என்னை ரொம்பவே ட்ரில் வாங்கிட்டாரு:(!

# 8 Crimson Rose(Atrophaneura hector) - Red bodied Swallowtails


# 10& 11 ட்ரில் மாஸ்டர்


எந்தப் பூவிலும் ஓரிரு நொடிக்குமேல் உட்காரவில்லை. தேனை உறிஞ்சும் போது என்னதான் பரவசமோ, இல்லே அவசரமோ சும்மா சிறகுகளைப் படபட படபடவென இப்படி அடித்துக் கொண்டே இருந்தார். அதனால் தெளிவாக இவரைப் பதிய முடியவில்லை. இவரின் போக்கு பிடிபட்டதும் ஷட்டர் ஸ்பீட் அதிகரித்து எடுக்க முயன்றேன். அதற்குள் உயரப் பறந்து மறைந்து விட்டார். போகட்டும், இன்னொரு முறை மாட்டாமலா போய் விடுவார்:)?

# 12 கைவிசிறி


விதம்விதமான வகைப் பட்டாம்பூச்சிகளைப் படமாக்க அவற்றிற்கென்றே உரிய பண்ணைகளுக்குச் செல்லலாம். பெங்களூரிலும் கூட உள்ளது. பனர்கட்டா தேசியப்பூங்காவையொட்டி ஆறு வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பட்டாம்பூச்சிப் பண்ணை. செல்லத் தோன்றும் வேளையில் “இப்போ சீசன் இல்லியே” என்பார்கள் யாராவது. அப்படியே தள்ளிப் போய்விட்டது. உங்களில் பலர் சென்றிருக்கவும் கூடும். இந்த வருடமாவது போக வேண்டும். அங்கே வருடத்தின் கடைசி மூன்று மாதங்கள் நிறைய பார்க்க முடியும் என்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது.

உலகின் எல்லாப் பாகங்களிலுமே குளிர்காலத்தில் பட்டாம்பூச்சிகள் காலை பத்து மணி வரையிலுமே மந்தகாசமாய்தான் இருக்கும் என்பதும் ஒரு காரணம். இயற்கையான சூழலில் அவை பராமரிக்கப்படும் aviary-யினுள் ட்ரைபாடையும் சில பண்ணைகள் அனுமதிப்பதுண்டு. எந்த மலரில் எந்தப் பின்னணியில் எந்தக் கோணத்தில் எந்த வகைப்பூச்சி வேண்டுமோ இந்த மெகா கூண்டுக்குள் வாய்ப்புகள் அதிகம்.

பூங்காவோ, வீட்டுத் தோட்டமோ, பண்ணையோ எங்கேயானாலும் சரி பொறுமை ரொம்ப அவசியம். சில பூச்சிகள் நமக்கு ஒத்துழைக்கும். சில க்ரிம்சன் போல நம் ஃப்ரேமுக்குள் அடங்க மாட்டேன்னு அடம் பிடிக்கும். ஒரு அரைமணி நேரம் அவதானித்தாலே நமக்குப் புரிந்து விடுகிறது ஒவ்வொரு வகையின் போக்கும் எப்படியானது என்பது. ரொம்ப அருகில் மேக்ரோ க்ளோஸ் அப் லென்சுகள் உபயோகித்து எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. யாராவது முயன்று வெற்றி பெற்றிருந்தால் சொல்லலாம். நான் 200mm உபயோகித்துதான் எடுத்தேன். பூச்சிகளின் உடற்கூறு (anatomy) தெளிவாய் தெரியற மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் எப்போதும்.

முடிவாகக் கவனிக்க வேண்டிய முக்கியமான இன்னொரு விஷயத்துக்கு வருவோம். எடுத்த பூச்சிகளை அடையாளம் காணுதல் (Identification)! இணையம் இருக்கையில் இதற்கு மலைக்க வேண்டியதே இல்லைதான். இதற்கென பல தளங்கள் இருந்தாலும் சரியா நாம எடுக்கிற பூச்சியை அடையாளம் காட்டுவதாய் இருப்பதில்லை அவை. பூச்சியின் உடலில் பிரதானமாக இருக்கிற வண்ணத்தில் ஆரம்பித்து எல்லா நிறங்களையும் வரிசைப்படுத்தி, butterfly என முடித்து கூகுள் ஆண்டவரிடம் படங்களைக் கேளுங்க. நாம ஆரஞ்சு என நினைப்பது அங்கே சிகப்பாகப் பதிவாகியிருக்கலாம். ஒத்த படம் கிடைக்கும் வரை மாற்றி மாற்றிப் போட்டுத் தேடுங்க. சட்டுன்னு பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் மாறுபட்டு இருக்கும் சில வகைகள். மொனார்க், வைஸ்ராய் அப்படிதான். அதனால் படத்தை மட்டும் பார்த்து விட்டுப் பொத்தாம் பொதுவாய் முடிவு செய்யாமல் கொஞ்சம் நம்ம விக்கி அக்கா (wikipedia) தரும் விவரங்களையும் வாசிச்சுப் பாருங்க.

சரி, மனம் கவர்ந்த படம் எதுவென நேரமிருப்பவர் சொல்லிச் செல்லலாமே:)!
***

பி.கு:
பட்டாம்பூச்சிகளைப் படமாக்கும் ஆசையை ஆசையாகவே வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதை நிறைவேற்றும் ஆர்வத்தையும் வேகத்தையும் இந்தப் பதிவு தரும் எனும் ஆசையுடன் இப்பதிவு PiT தளத்திலும்: http://photography-in-tamil.blogspot.in/2012/06/blog-post.html
***

வெள்ளி, 15 ஜூன், 2012

ஒரு முறையீடு - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் கவிதை - அதீதத்தில்..


நிகழ்ந்தது மாற்றம்--ஏழையானேன் நான்;
உன் அன்பு, சிலநாள் முன்வரை
பிரியமிகு என் இதயவாசல் முன் நீரூற்றாய்;
பொங்கிப் பிரவாகிக்க மட்டுமே தெரிந்ததாய்;
வேறெதைப் பற்றிய கவனமுமின்றி
என் தேவைக்காகவும் அன்றி,
தனக்கேயான அழகிய துள்ளலுடன்.

எவ்வளவு மகிழ்ச்சியான தருணங்கள் அவை நினைத்துப் பார்க்கிறேன்!
மேலிருந்து வழங்கப்பட்ட பேரின்பத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன்!
சலசலத்து, சுடர்விட்டு மினுமினுத்த உயிர்ப்பான அந்த நேசம்..
அந்தப் புனிதமான ஊற்று.. எங்கே இப்போது?
என்ன உள்ளது என்னிடம்? தைரியமாகச் சொல்லிவிடவா?
அசெளகரியமான.. ஒளிந்துகொண்ட ஒரு கிணறு.

அன்புக் கிணறு--ஆழமான கிணறு--
வற்றாத ஒன்று,--அப்படிதான் நம்புகிறேன்:
எது முக்கியம்?
அறியாமை இருளில் உறங்குகிறது
அமைதியில் தண்ணீர்.
-அப்படியான மாற்றம், பிரியம் நிறைந்த என் இதயவாசலின்
வெகு அருகாமையில் நிகழ்ந்து
ஏழையாக்கி விட்டது என்னை.
***

மூலம் ஆங்கிலத்தில்.. "A Complaint" by William Wordsworth

15 ஜூன் 2012 அதீதம் இதழுக்காக மொழிபெயர்த்தக் கவிதை.

செவ்வாய், 12 ஜூன், 2012

சிந்தை கவர்ந்த ‘பெங்களூர் சித்திரச் சந்தை’ 2012

# 1 காற்றில் எந்தன் கீதம்..
ஒரு தவத்தின் பலனாக ஒரு தியானத்தின் முடிவாக உருவாகும் ஒவ்வொரு ஓவியத்தின் பின்னும், தீட்டிய விரல்களின் உழைப்புடன் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும் இருப்பதை உணர வைத்தது பிரதி வருடம் ஜனவரி கடைசி ஞாயிறு பெங்களூர் குமர க்ருபா சாலையில் கோலாகலத் திருவிழாவாக நடக்கிற சித்திரச் சந்தை. 'எல்லோர்க்கும் கலை' (ART FOR ALL) எனும் கொள்கையுடன் பலவருடங்களாக இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி வருகிறது கர்நாடகாவின் சித்ரகலா பரிஷத்.

# 2 சித்ரகலா பரிஷத்காலை 9 மணிக்குக் கர்நாடக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு ஆரம்பமான கண்காட்சிக்கு நண்பகலில் சென்ற போது, வின்ட்சர் மேனர் பாலம் தாண்டி யு டர்ன் எடுக்கவே முடியாத அளவு பெரும் நெரிசல். ஊர்ந்து ஊர்ந்து ஒருவாறாக சாலையை நெருங்கவும் போலீஸ் படை சந்தை நடக்கும் சாலைக்குள் அன்றைக்கு ‘நோ என்ட்ரி’ என சொல்லி விட்டார்கள். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்த பின்னர்தான் தெரிந்தது முழுச்சாலையுமே அன்றைய கண்காட்சிக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது.சித்ரகலா பரிஷத் வளாகத்தின் உள்ளேயும் அதையொட்டிய பக்க சாலைகளிலும் கூட கிளைபரப்பியிருந்தன ஓவிய ஸ்டால்கள்.

# 3 ஆர்ட் காம்ப்ளெக்ஸ்
(வேறொரு சந்தர்ப்பத்தில் எடுத்த படம்.)

விருந்தாளிகளாக அழைக்கப்பட்டிருந்த நூற்றுப் பதினோரு புகழ்பெற்ற ஓவியர்கள் சித்ரகலா பரிஷத்தின் இந்த ஆர்ட் காம்ப்ளெக்ஸில் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்க மற்ற ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் சாலையோரங்களில் எண்கள் குறிக்கப்பட்டு ஸ்டால்கள் தந்திருந்தார்கள்.

ரூ.50 முதல் ரூ.50000 மேலாக எல்லா விலைகளிலும் கிடைக்கும்படி வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நடுவே ஒரு பாலமாக அமைந்து இச்சேவையை செய்து வருகிறது சித்ரகலா பரிஷத். ஆரம்பநிலை ஆர்வலர் முதல், இதில் கலந்து கொள்வதைப் பெருமிதமாகக் கருதி நாடெங்கிலும் இருந்து கூடும் பிரபல ஓவியர் வரை அனைவருக்கும் பாகுபாடின்றி அடுத்தடுத்து ஸ்டால்கள் பகிர்ந்து வழங்கப்பட்டிருந்தன.

‘சிறகுத்தூரிகைகளில் வண்ணம் தெறிக்கப் பறந்தபடி...’ வானம் வசப்படும் வலைப்பூவில் தமிழ்ப் பறவை என்ற பெயரில் தான் தீட்டும் வண்ணச் சித்திரங்களையும் பென்சில் கோட்டோவியங்களையும் பகிர்ந்து வரும் பரணிராஜனின் படங்களைப் பதிவிலே பாராட்டி வருவேன். சந்தை நடக்கும் 2 தினங்கள் முன் “நீங்கள் வருவீர்கள்தானே?” என என் பதிவொன்றில் பின்னூட்டம் இட்டுச் சென்று விட்டார், அடிக்கடி பெங்களூர் நிகழ்வுகளைப் பதிவாக்கும் நான் கண்டிப்பாக வருவேன் எனும் எண்ணத்தில். அவரது மின்னஞ்சலோ, அலைபேசி எண்ணோ தெரியாத நிலையில் ‘அங்கே போய்க் கண்டுபிடித்துக் கொள்ளலாம்’ என்றெண்ணிச் சென்றால், திகைத்தே போய் விட்டேன். 2000 ஸ்டால்களில் எங்கே என அவரைத் தேடுவது? தனது 10 ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருந்த அவருக்கும் முதன் முறை என்பதால், இப்படி ஒரு ஓவியக் கடலில் சங்கமிக்கப் போகிறோமென்று தெரிந்திருக்கவில்லை:)!

வாங்க, அந்தக் கடலில் நாமும் நீந்தி விட்டு வரலாம்.

#4 அலை அலையாய்க் கலை காண..
கேமராவைத் தூக்கிப் பிடித்து குத்து மதிப்பாக எடுத்தது. என் உயரத்துக்கு இவ்வளவுதான் கிடைத்தது:)!

நிறைய வெளிநாட்டவர்களைப் பார்க்க முடிந்தது.
#5 ரசனை

இவர் நின்று ரசித்த படங்கள் இவைதாம்:
#6 ராஜஸ்தானி ஓவியங்கள்

#7 கெளதம புத்தர்


#8 இயேசு நாதர்


பலராலும் விரும்பி வாங்கப்படுவதால் மட்டுமின்றி சிறந்த பயிற்சிக்கான பாடமாகவும் ரவிவர்மாவின் ஓவியங்கள் பெரும்பாலான ஆசிரியர்களால் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
#9 சித்திரம் பேசுதடி..
படைத்தவருக்கே அர்ப்பணிக்கும் ஈடுபாட்டுடன் தீட்டப்படுபவை மட்டுமே உயிர்ப்பானவை ஆகின்றன. கலையின் தேர்ச்சிக்கான ஒரு அங்கமாக இவற்றைக் கடந்து தமக்கென்றொரு பாணியை எல்லா ஓவியர்களும் உருவாக்கிக் கொள்கிறார்கள் விரைவில்.

#10 பூப்பூவாய்ப் பூத்திருக்கு..
மேலிரண்டு படங்களிலும் இருப்பவை தம்பி மனைவியின் கைவண்ணங்கள். சிறுவயதிலிருந்து தேர்ந்த ஆசிரியர் மூவரிடம் கற்ற கலையை ஆர்வத்துடன் தொடர்ந்து வருகிறார்.

#11 தோகை மயிலும் குழலூதும் பிள்ளையாரும்


#12 தாயும் சேயும்

என்னை மிகவும் ஈர்த்த படம் இது:
#13 ஆலயத்தில் ஆனை
வெயிலும் நிழலும் தூரிகையில் என்னமாய் விளையாடியிருக்கின்றன பாருங்களேன். (கையொப்பத்திலிருந்து ஓவியர் பெயரை ஊகிக்க முடியவில்லை.)

#14 மேலும் இவர் காட்சிப் படுத்தியிருந்த சித்திரங்கள்:
ஒளிப்பட நேர்த்தியுடன் வியக்க வைக்கும் ‘லைட்டிங்’ அனைத்திலுமே!

#15 Bull Fight
எந்நேரமும் கூட்டம் முண்டியடித்த ஸ்டால் இதுதான். அதிகமாக கேமராக்கள் க்ளிக்கிய படங்களும் இவையே. பிரபல ஓவியர் சேகர் பலாரியின் கைவண்ணங்கள். இவரது ஆன்லைன் கேலரி இங்கே. எத்தனை விதமான படங்கள் என்னென்ன விலையில் என நீங்களே பாருங்கள்.

#16 மிரட்டிய படம்


எங்கள் ஊரைச் சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் திரு மாரியப்பன். தத்ரூபமான இவரது ஓவியங்களையும் போட்டோ பிடிக்க பெரிய போட்டா போட்டிதான்:

#17 உயிரோவியங்கள் பல படங்களைக் காட்சிப் படுத்தியிருந்தாலும் பிரதானமாக வைத்திருந்த இந்த 3 ஓவியங்களும் மிக நல்ல விலைக்கு வாங்கப்பட்டிருந்தன. அவரிடம் பேசியதில், எந்த மாதிரி வரைய வேண்டும் எனக் கற்பனை செய்ததை ஒளிப்படமாக்கிப் பிறகு இப்படி உயிரோவியமாக்கியிருக்கிறார் எனப் புரிய வந்தது. முதல் படம் போலவே நீங்கள் ரசிக்கவெனத் தனித்தனியாக நான் காட்சிப்படுத்திய மற்ற இரண்டு:

#18 மார்கழி முற்றம்

#19 பேசும் பொற்சித்திரம்
வெள்ளிச் சலங்கைகள் அணிந்திடும் கலைமகள்

இப்படி சொந்தமாக முயற்சி எடுத்து வரையும் ஓவியங்கள் நல்ல வரவேற்பைப் பெருகின்றன. தாங்களாக இப்படி ஒளிப்படம் எடுத்து வரைவது சாலச் சிறந்தது. அல்லது விருப்பமான ஒளிப்படங்களை எடுத்தவரின் 'அனுமதி' வாங்கியும் செய்யலாம். இந்த இடத்தில் இந்திய காபிரைட் சட்டம் என்ன சொல்கிறதென்றும் பார்ப்போம். புகைப்படம், ஓவியம், சினிமா போன்றன வெளியான நாளிலிருந்து 60 வருடங்கள் முடிந்து விட்டால் அவை பொதுவுடைமை ஆகின்றன. (எழுத்துகள் எனில் எழுத்தாளரின் மறைவுக்குப் பின் அறுபது வருடங்கள் ஆக வேண்டும்.)

பலத்த போலீஸ் பாதுகாப்பும் இருந்தது.
#20 உஷார்


#21 போதும்...
“போதும் அத்தே படமெடுத்தது” என சொல்றான்னு மட்டும் நினைச்சிட வேண்டாம்:)!

சின்னதிலிருந்தே வாசம் பிடிப்பதில் மன்னன். வீட்டின் ஏதோ ஒரு அறையில் இருப்பவனுக்கு சமையற்கட்டில் தயாராகும் காஃபியின் வாசம் எட்டி விடும். ”யார் வந்திருக்கா வீட்டுக்கு?” என விசாரித்தபடியே வெளிப்படுவான். பாளையங்கோட்டை வீதிகளைக் கடக்கும் போது “வடை வாசம்” என்பான். திரும்பிப் பார்த்தால் அங்கே டீக்கடை இருக்கும். சூடான வடைகள் எண்ணெய் சட்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும். இங்கும் வரிசையாக வண்டிகளில் விற்கிற அனைத்தையும், நாங்கள் கூட்டத்தைப் பிளந்து எட்டிப்பார்த்துக் கண்டுபிடிக்கும் முன்னரே சரியாகச் சொல்லிவிட்டான்.

#22 கமகம..வறுத்த கடலை வாங்கச் சொல்லி ஒன்றொன்றாக சாப்பிட்டபடி வந்தவனைப் “போதுமே. வீட்டுக்குப் போய் சாப்பாடு சாப்பிட வேண்டாமா?” எனத் தம்பி சொல்லிக் கொண்டேயிருக்க, “இன்னும் ஒரே ஒரு கடலை. அதோட போதும்” என ஒவ்வொரு முறையும் இப்படிக் கையைக் காட்டி தன் அப்பாவைத் தாஜா செய்தபடி வந்தவனைப் அப்படியே திரும்பி போஸ் கொடுக்கச் சொல்லி எடுத்ததே படம் #21.

#23 எங்கயோ சோளம் அவிக்கறாங்களே...
[அதையும் வாங்கி ஒவ்வொரு முத்தாகக் கொறித்தபடியேதான் வீடு வந்து சேர்ந்தான்:)!]

வரும் வருடங்களில் விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம். எடுத்த ஏராளமான படங்களிலிருந்து தேர்வு செய்து பதிய நினைத்ததில் பகிர்வு நான்கு மாதங்கள் தள்ளிப்போக நேர்ந்து விட்டது. தாமதமானாலும் ஆர்வமுடையவர்களுக்குப் பயனாகும் சில தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

டிசம்பர் மூன்றாம் வாரத்தில் விண்ணப்பப்படிவம்(ரூ.100) கொடுக்க ஆரம்பிப்பார்கள். அநேகமாக மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஸ்டால் ஒதுக்கப்பட்டிருப்பதை ஓரிரு வாரம் முன்னதாகத் தெரிவித்து விடுகிறார்கள். ஸ்டால் கிடைக்காதவர்கள் முந்தைய நாளில் நேரில்வந்து காத்திருந்தால் ரத்தாகும் ஸ்டால்கள் கிடைக்கின்றன. இரண்டாயிரம் ஸ்டாலுக்கு பன்மடங்காக விண்ணப்பங்கள் குவிவதும் இடம் கிடைக்காதவர்கள் ஏமாற்றமும் வருத்தமும் அடைவதும் தவிர்க்க முடியாத காட்சியாக இருக்கிறது.

#24 மேலும் கீழும்..
மேலும் கீழுமாக நடந்து ஓவியங்களைப் பார்த்துச் செல்லுபவர்கள் கூட்டமே மாலை வரை அதிகமாய் இருக்கிறது. இரவு 7 மணிக்கு காட்சி முடிகிற ஒரு மணிநேரத்துக்கு முன்னிருந்துதான் வியாபாரமும் பேரமும் சூடு பிடிக்கிறதாம். சட்டமிட்டுக் கொண்டு செல்லுகிற படங்களை விட சட்டமிடாத படங்கள் வேகமாக விற்கின்றனவாம்.

ஓவியங்களை சந்தைப்படுத்த அவற்றை நேர்த்தியாகப் படமெடுத்துத் தருவதையே தொழிலாகக் கொண்டு இயங்கி வருகிறார்கள் சில புகைப்படக்காரர்கள். புகைப்படக் கலையின் பல பிரிவுகளில் இதுவும் ஒன்றென அறிய முடிந்தபோது தனி ஓவியங்களை அவற்றின் அழகு குறையாமல் படமாக்க நானும் பிரயத்தனப் பட்டிருக்கிறேன் இங்கு:)!

“இரண்டு வகைக் கலைஞர்களின் சங்கமாக இருந்தது சந்தை” எனப் புகைப்படப் பிரியர்கள் சிலரின் அன்றைய அனுபவங்களைப் பேட்டியெடுத்தும் வெளியிட்டிருந்தார்கள் மறுநாள் செய்தியாகப் பத்திரிகைகளில். 'நுண்ணிய விவரங்கள் வெளிப்படுமாறு படமாக்குவது ஒரு சவால் என்றால், தாம் தீட்டிய ஓவியங்கள் விரும்பி வாங்கப்படுகையில் ஓவியர்களின் முகத்தில் தெரிந்த பரவசத்தைப் படமாக்கியது பரம சந்தோஷம்’ எனச் சொல்லியிருந்தார் ஒருவர்.

சாலை முடிவில் (3D effect?) காட்சிக்கு இருந்த சுமார் பத்தடி உயரச் சித்திரமான இது, மீடியாக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்த ஓவியமும் ஆகும்.

#25 கண்ணால் பேசும் பெண்ணே..
ஓவியர் ஜெய்கணேஷின் கைவண்ணம்

இருபது வருடங்களாக பெங்களூரில் இருந்தாலும் இவ்வருடமே இது குறித்து அறிய வந்திருந்தேன். இனி வரும் ஆண்டுகளிலும் சென்று பார்க்கிற ஆவலைத் தந்திருக்கிறது சிந்தையைக் கவர்ந்த சித்திரச் சந்தை!
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin