Tuesday, June 26, 2012

பள்ளி வாகனங்களும் குழந்தைகள் பாதுகாப்பும்

சென்ற வியாழன் மாலை. பெங்களூரில் நிகழ்ந்த சோகம். எல்கேஜி படிக்கும் நான்கு வயதுச் சிறுவன் ஃபைசலை வழக்கம் போல வீட்டு முன் இறக்கி விட வந்து நின்ற பள்ளி மினிபஸ்ஸை, இரண்டாவது தளத்திலிருந்த தன் வீட்டிலிருந்து தற்செயலாகக் கவனித்திருக்கிறார் பாபு. கண் இமைக்கும் நேரத்துக்குள் கதவின் வழியே வெளியே வீசப்பட்டு வந்து விழுந்த ஃபைசலின் மேல் ரிவர்ஸ் எடுத்த வண்டியின் சக்கரம். பதறியவர் இறங்கி ஓடி வருவதற்குள் ஓட்டுநர் பரத்சிங் பையனைத் தூக்கி வண்டிக்குள் போட்டு வேகமாய் பஸ்ஸைக் கிளப்பிச் சென்று விட்டார். அதிர்ந்து போன பாபுவும் பக்கத்து வீட்டுக்காரர்களும் பஸ்ஸைத் துரத்திச் சென்றிருக்கிறார்கள். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடியும் விட்டிருந்தார் பரத்சிங். உள்ளே இன்னும் பதினைந்து குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். பூட்டியிருந்த கதவை உடைத்து பாபுவும் பிறரும் குழந்தையை ஆட்டோவில் பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் பலன் இருக்கவில்லை:(.

சிறுவர்களை ஏற்றிச் செல்லும் எந்தப் பள்ளி வாகனத்திலும் கண்டிப்பாக உதவியாளர் இருக்க வேண்டும். அதை பள்ளி கடைப்பிடிக்கவில்லை. பஸ் நின்று கதவு திறக்கவும் இறங்குவதற்காக அதனருகில் சிறுவன் வந்து நின்றிருந்த போது டிரைவர் ரிவர்ஸ் எடுக்க ஆரம்பிக்க கதவு ஆட்டோமேடிக்காக மூடுகையில் சிறுவனை வெளியில் தள்ள அவன் சக்கரத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறான். மறுநாள் கைது செய்யப்பட்ட பரத் சிங் பார்த்தவர்கள் தன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்பதால் பையனை தூக்கிச் சென்றதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லதான் முயன்றதாகவும், பதட்டத்தில் வண்டி ஓட்ட முடியாமல் போகவே ஓரத்தில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். பெற்றோரின் சோகத்தையும், சக நண்பனின் கடைசி நொடிகளைக் கண் முன் காண நேர்ந்த பதினைந்து குழந்தைகளின் நிலைமையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

றுநாள் பள்ளி வாசலில் விடுமுறை எனும் அறிவிப்பை வைத்து விட்டு, பள்ளியின் தலைமை ஆசிரியைத் தலைமறைவாகி விட்டார். கட்டணங்களை வசூலிப்பதில் கறாராக இருக்கிற பள்ளிகள் தங்கள் வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய விதிகளை பெரும்பாலும் மறந்து விடுகின்றன. எத்தனை பேர் ஏற்றலாம், வாகன உதவியாளர், பத்து ஆண்டுகளுக்கும் குறைந்த வயதுள்ள வண்டி, இன்ஸூரன்ஸ் செய்யப்பட்டதா, திறமையான ஓட்டுநரா, குழந்தைகளின் முழுவிவரங்கள் அடங்கிய பட்டியல் எப்போதும் வண்டியில் இருக்கிறதா, பள்ளிப் பைகள் வைக்க இடம் உள்ளதா, உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர்கள் அனுமதியளிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெறப்பட்டதா என்பதில் எத்தனை பள்ளிகள் அக்கறை செலுத்துகின்றன? அதை கேட்டு அறியும் உரிமை பெற்றோருக்கு இருக்கிறது என்றாலும் கேட்டால் எத்தனை பள்ளிகள் பொறுப்பாகப் பதில் சொல்கின்றன?

உதவியாளர் இல்லாமல் ஓடுகிற வண்டியினுள் ஓடிச்சாடும் குழந்தைகள், முதலுதவிப் பெட்டி இல்லாதது, தீ விபத்துக்கான பாதுகாப்பு இல்லாதது.. இவை மட்டுமல்ல சிறுவரெனில் ஆறுபேர் வரை பயணிக்க அனுமதி கொண்ட ஆட்டோக்களில் பதினைந்து பேருக்கு மேல் செல்வதெல்லாம் சர்வ சாதாரணக் காட்சிகள் பெங்களூரில். சிலிண்டர் மேல் நாலு பேர், சீட்டில் நாலு பேர், ஒவ்வொருவர் மடியிலும் ஒருவராக நாலு பேர், ஓட்டுநர் இருக்கையில் ஒண்டிக் கொண்டு நாலு பேர். போகவும் அத்தனை பேரின் பைகள்.அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி வாகனங்கள் போதுமானதாக இருப்பதில்லை என்பதால் மினி வேன், ஆட்டோ போன்ற தனியார் வாகனங்களுக்குத் தாங்கள் தடை சொல்வதில்லை என்கின்றன பள்ளிகள். அனுப்புகிறார்கள் பெற்றோரும் வேறு வழியில்லை என. இருபத்தைந்து வருடங்களாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆட்டோ ஓட்டுவதாகச் சொல்லும் ஒரு பெரியவர் “கட்டணத்தைக் கூட்டிக் கொடுத்தால் நாங்கள் ஏன் அதிகம் பேரை ஏற்றப் போகிறோம்?” என எதிர்க் கேள்வி கேட்கிறார், இதுவரை எந்த அசம்பாவிதமும் தன் அனுபவத்தில் நிகழவில்லை எனக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு.
***
றியா வயதில் ஆபத்து எங்கு எதில் இருக்கிறது எனக் குழந்தைகள் புரிந்து நடப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. சுற்றியிருப்பவர் கவனமே முக்கியம். பள்ளிச் சுற்றுலாவில் நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்றை “எங்கேயும் எப்போதும்-தூறல்:3”_ல் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி சொல்ல நினைத்து மனச்சங்கடம் ஏற்படுமென சொல்லாமல் விட்ட சில நிகழ்வுகளை இப்போது பகிர்ந்திடத் தோன்றுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலே பெங்களூரில் நடந்தவை. மால் ஒன்றின் எஸ்கலேட்டரிலிருந்து சிறுவன் தவறி விழுந்து மறைந்த பின்னர் அங்கு பாதுகாப்புக்காக முதல் தளத்தில் வலை அமைத்தார்கள். மாடிகளின் தடுப்புச் சுவர்கள் மேலும் பாதுகாப்புக்குரியதாக ஆக்கப்பட்டதும் பிறகே.

பத்து குடும்பமாகப் படம் பார்க்கச் சென்ற இடத்தில் இரண்டு பெரியவர்கள் கண்காணிப்பில் இருபத்தைந்து குழந்தைகள் கீழே அழைத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. தூறல் பதிவில் சொன்னதே: எத்தனை குழந்தைகளுக்கு எத்தனை பேர் எனும் விகிதத்தை விட எத்தனை கவனமாகக் கண்காணிக்கிறோம் என்பதே முக்கியம். விழா நிகழ்வுகளில் குழந்தைகள் ஓரிடமாகச் சென்றுவிடுவார்கள். ஒருசிலரேனும் அவர்களைக் கவனிக்க நியமிக்கப்பட வேண்டும். போகிற வருகிறவர்களும் யார் குழந்தைகளானாலும் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருந்தால் தடுக்க வேண்டும்.

வீட்டிலும் குழந்தைகள் வளரும் வரை பல விஷயங்களில் கவனம் தேவை. தாழ்ந்த உயரத்தில் இருக்கும் மின்சார பாயிண்ட்களை மூடுவது, கூர்மையான பொருட்களைக் கண்ணில் படாமல் எட்டாத உயரத்தில் வைப்பது, குளியலறை தாழ்பாட்களை எட்டாத உயரத்தில் அமைப்பது போன்றன. இது அவர்கள் உள்ளே போய் பூட்டிக் கொள்ளும் அபாயத்தை மட்டுமின்றி அம்மாக்களை வைத்துப் பூட்டிவிடுவதையும் தவிர்க்கும். இப்படி அம்மாவைப் பூட்டிவிட்டுத் திறக்கத் தெரியாமல் குழந்தை அழுது மயங்கிவிழ, தாயின் கூக்குரல் கேட்டு வீட்டுக் கதவை உடைக்க சில மணி நேரங்கள் ஆகியிருக்கிறது எங்கள் குடியிருப்பில்.

நம்பிக்கையானவர் என எண்ணி ஆயாக்களிடம் விட்டுச் செல்லப்படும் குழந்தைகளின் பாடுகளும் பல நேரங்களில் பரிதாபமே. தூங்கும் குழந்தையை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுப்போன ஆயா திரும்பி வர மணிக்கணக்கில் ஆகிவிட குழந்தை விழித்து சன்னல் வழியே பார்த்தபடி அழுத அழுகையில் அத்தனை பேரும் ஆடிப்போய் விட்டோம். பிள்ளைகளை விட்டுச் செல்பவர்களின் கவனத்திற்கு: பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கண்டிப்பாக உங்கள் தொடர்பு எண் இருக்க வேண்டும்.

கீழ்வரும் இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து பெங்களூரில் நடந்தவை. மனம் வராது எழுதாமல் விட்டவை. பிறந்தநாள் விழா நடந்து முடிந்து, வீடு விருந்தினரால் நிரம்பியிருந்த வேளையில் குழந்தை பால்கனியிலிருந்து தவறிவிழுந்தது; கம்பிகள் அற்ற சன்னல் வழியாக வேடிக்கை காட்டியபடி கைக்குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தபோது நழுவிய கிண்ணத்தை பேலன்ஸ் செய்யப் போன நொடியில் குழந்தை எதிர்பாராமல் எம்பி வெளியே விழுந்தது. பில்டர்கள் செலவைக் குறைக்க குறைந்த உயரத்தில் பால்கனி கம்பிகளை அமைத்து விட்டதாகச் சொன்னார்கள். பாதுகாப்பு வசதி பெருகி விட்ட குடியிருப்புகளில் சன்னல்களுக்குக் கம்பி வைக்காது விடுவது இப்போது நாகரீகமாகவும் அழகாகவும் கருதப்படுவது சுட்டிக் காட்டப்பட்டது. எல்லா நேரமும் குழந்தை பின்னால் செல்ல முடியாது என்றால் வளரும் வரை பால்கனியை தற்காலிகமாக கம்பி வலையால் மூடிடுங்கள். சொந்த வீடானால் சன்னல்களுக்குக் கம்பி போடுங்கள். சில குடியிருப்புகளில் ஒரே மாதிரியான் வெளிப்புறத்தோற்றம் பாதிக்குமென தடை சொல்வார்கள். போராடி அனுமதி பெறுங்கள். அல்லது இரட்டிப்புக் கவனத்துடன் இருங்கள்.

ல்லா விபத்துகளும் கணப் பொழுதில் நிகழ்ந்து விடுகின்றன. பிறகு காரண காரியங்களை ஆராய்ந்து எந்தப் பிரயோசனமும் இல்லை என்பது வருத்தத்திலும் ஆத்திரத்திலும் வெளிப்படும் பேச்சாக இருந்தாலும், அலசலும் ஆய்வும் அடுத்து விபத்துகள் நேராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செய்தியாகிறது. ஆனால் அதுவும் நம் நாட்டில் தலைகீழ். எத்தனை முறை ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்தாயிற்று! சென்ற வெள்ளிக்கிழமை ஹரியானாவில் நான்கு வயதுக் குழந்தை மஹி. அடுத்த இரு தினங்களிலே மேற்கு வங்கத்தில் பதினாறு வயதுச் சிறுவன் ரெளசன். தொடரும் அக்கறையின்மை, வேதனை:(!
***
படம் நன்றி: இணையம்

42 comments:

 1. குழந்தை வளர்க்கும் ஒவ்வொருவருக்கும் உள்ளுக்குள் இருக்கும் பயத்தை எழுதி உள்ளீர்கள். பள்ளி குழந்தைகள் வாகனங்கள் பொறுத்தவரை சென்னை போலவே பெங்களூரும் உள்ளதை அறிந்து வருத்தமாக உள்ளது

  ReplyDelete
 2. இங்கே மும்பையிலும் நாலஞ்சு மாசத்துக்கு முன்னே ஒரு சிறுவன் போதிய பாதுகாப்பில்லாத ஸ்கூல் பஸ்ல பயணிக்கும்போது உயிரிழந்தான். பிஞ்சுகளுக்கு இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கறப்ப எழுத மனசு வர்றதில்லைதான். நடுங்குதுப்பா மனசும் விரல்களும்.

  அஜாக்கிரதையால் உயிர் விடும் குழந்தைகள் எத்தனை எத்தனையோ!!.

  ReplyDelete
 3. பதறவைக்கும் செய்தி
  படிப்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது
  பார்த்தவர்களையும்
  பாதிக்கப் பட்டவர்களையும்
  நினைக்க மனம் பதறுகிறது

  ReplyDelete
 4. ஒரு பள்ளிக்கான தகுதி சான்றில்லை அரசு வழங்குவதற்கும்
  நிறை அடிப்படை விஷயங்கள் பார்ப்பார்கள் அதில் பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனம்
  சரியானதாக பாதுகாப்புடையதாகவும் இருக்கிறதா என்று கவனிக்கப்டவேண்டும்
  தரமற்ற வாகனங்கள் இல்லாத சில பள்ளிகளில்பணம் கொடுத்து மறைக்கிறார்கள்
  இதுவே இந்த விபத்துக்களுக்கு காரணமாகிறது

  நம் சார்ந்த பெறோர்களும் இதை கவனிக்க வேண்டும்
  நல்ல பள்ளி நல்ல படிப்பு இதைமட்டும் பார்த்தல் தவறு
  நம் குழதைகள் ஏறிச்செல்லும் வாகனம் பாத்துகாப்பாக இருக்கிறாத என்றும் பார்க்கவேண்டும்
  அதில் குறை இருந்தால் அந்த பள்ளியில் முறை இடவேண்டும்

  நீங்கள் சொன்னதுபோல் ஒரு கணத்தில் விபத்துக்கள் நிகழ்ந்துவிடும்
  அதற்குமுன் நாம் தான் அதை தடுத்தல் வேண்டும்

  நல்ல பயனுள்ள பதிவு மேடம்

  ReplyDelete
 5. பாவத்தை செய்ய அச்சம் கொள்ளாத மனிதர்கள் உள்ளவரை எல்லா படு பாதக செயலும் தொய்வின்றி நிகழும் :(

  ReplyDelete
 6. எல்லா ஊரிலும் இதே நிலைதான். பள்ளிகள் பெற்றோர்களிடமிருந்து பணம் கறப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். போதிய அளவு பேருந்துகளை அவர்கள் இயக்குவதில்லை. அவர்கள் இயக்காத பட்சத்தில் தனியார் வண்டிகளை அமர்த்தினால், பள்ளிகள் வாசல் தாண்டும் வரை தான் எங்கள் பொறுப்பு அதற்குப் பின் உங்கள் பொறுப்பு என கை கழுவி விடுகிறார்கள். எத்தனை எத்தனை விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

  சோகம் தான்.

  ReplyDelete
 7. கம்பியில்லாத சன்னல்களா.... நாகரீகமா சிக்கனமா... மனம் கனத்துப் போகிறது இது போன்ற சம்பவங்களைப் படித்தால். மஹி சம்பவத்தில் கூட இரவு பதினோரு மணிக்கு மேல் வெளியில் விளையாட விட்டிருக்கிறார்கள் குழந்தையை. தெருவில் இந்த ஆழ்துளைக் கிணறு இருப்பதும் அவர்களுக்குத் தெரியாததல்ல. என்ன பொறுப்பு? கொடுமைதான். பார்க்கும் நமக்குதான் மனம் பதைக்கிறது.கனத்துப் போகிறது.

  ReplyDelete
 8. இதயத்தை உறைய வைத்துவிட்டது இந்தப்பதிவு..இக்கொடுமைகள் தீர வேண்டுமானால் அருகமைப்பள்ளி முறையை.வெளிநாடுகள் போல நாமும் கடைப்பிடிக்க வேண்டும்...இன்று பள்ளிக்குழந்தைகளுக்கு லைசென்ஸ் எடுக்க உரிய வயசு இல்லாமலே பெற்றோர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்கித்தந்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இதுவும் தடைசெய்யப்பட வேண்டும். கடந்த 12-6-2012 அன்று திருப்பூரில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி இரு சக்கர வாகனத்தில் வரும்போது நிலை தடுமாறி அரசுப்பேருந்தில் விழுந்து காலமாகிவிட்டார்..ஏற்கனவே கணவனை இழந்து, தன் மகளுக்காக வாழ்ந்து கொண்டிருந்த தாய் உள்ளம் பதறியது. ஒரே மகளுக்காக வாழ்ந்த தாய், மகளே இல்லை...இனி வாழ்ந்து என்ன பயன்? யாருக்காக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு நாள் கழித்து தற்கொலை செய்து கொண்டார்...அதற்குப்பிறகு காவல் துறை, பள்ளி மாணவ-மாணவிகள் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்ட தடை விதித்துள்ளது...எல்லாம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்..

  ReplyDelete
 9. ஒண்ணுமே எழுத முடியலைக்கா. ரெண்டு நாளா மஹியப் பத்தி நினைச்சு பதற்றமா இருந்துச்சு. இப்ப இந்தப் பதிவையும் படிச்சு.. என்னவோக்கா, மனசே வெறுத்த மாதிரி ஆகுது.

  //சக நண்பனின் கடைசி நொடிகளைக் கண் முன் காண நேர்ந்த பதினைந்து குழந்தைகளின் நிலைமையும்// என்ன கொடுமை...

  ReplyDelete
 10. பள்ளிக் குழந்தைகள் வாகனத்தைப் பொறுத்தவரை எல்லா ஊரிலும் ஒரே நிலைதான்...
  வசூலுக்கு வரிசைகட்டும் பள்ளிகள் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவதில்லை.

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 11. மனம் பதறுகிறது. இதை படிக்கும் பொழுதுதான் திவ்யாவின் பள்ளியின் அருமை புரிக்ரியது. குழந்தைகளை வீட்டில் விட வரும்பொழுது ஒரு ஆசிரியை வேனில் வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு உதவியாளர் வருகிறார். பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே வண்டியில் இருந்து குழந்தையை இறக்கி விடுகிறார்கள்.

  ReplyDelete
 12. இந்தியாவில் இவை என்றும் மாறாது, இது போல எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் பள்ளிகள் என்றும் மாறாது. திரும்ப ஒரு முறை நடக்கும் போது இது போல நாம் ஒரு பதிவு எழுதி மனக்குமுறலை வெளிப்படுத்திக்கொண்டு இருப்போம்.நாம் தான் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 13. நல்ல பயனுள்ள கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள். குழந்தைகளை வாகனங்களில் அனுப்புவதில் பெற்றோரும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

  ReplyDelete
 14. மிகவும் மனம் கனக்கிற ஒரு சோகமான நிகழ்வு. ஆட்டோவில் ஆட்டு மந்தை போல் அடைத்துக் கொண்டு ஓட்டுனர் மின்னல் வேகத்தில் பறக்கும் போது, நமது மனம் பதை பதைக்கிறது.. நேற்று சென்னையில் ஒரு பஸ் பாலத்திலிருந்து விழுந்து விட்டதை படிக்கும் போது, பாதுகாப்பு விஷயத்தில் நாம் ரெம்ப பின் தங்கி இருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது :(

  ReplyDelete
 15. பயன்மிக்க கட்டுரை.யோசிக்க வைக்கும் கட்டுரை

  ReplyDelete
 16. ஒவ்வொரு விபத்தும் ஒவ்வொரு மரணமும் நமக்கான பாடங்களைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் தான் அனுபவ பாடங்களைத் தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம் :(

  ReplyDelete
 17. மிகவும் வருத்தமாக இருக்கின்றது.:(

  ReplyDelete
 18. வேதனையான விஷயம்....என்னென்ன கனவு கண்டிருப்பார்கள் அக்குழந்தையின் பெற்றோர்கள் :(

  ReplyDelete
 19. மோகன் குமார் said...//பள்ளி குழந்தைகள் வாகனங்கள் பொறுத்தவரை சென்னை போலவே பெங்களூரும் உள்ளதை அறிந்து வருத்தமாக உள்ளது//

  நாடெங்குமே இப்படிதான் இருப்பது போல் தெரிகிறது.நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 20. @ அமைதிச்சாரல்,

  கருத்துக்கு நன்றி சாந்தி.

  ReplyDelete
 21. Ramani said...
  /பார்த்தவர்களையும்
  பாதிக்கப் பட்டவர்களையும்
  நினைக்க மனம் பதறுகிறது/

  உயிருக்கு உரிய மதிப்பு இல்லை.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 22. @ செய்தாலி,

  கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 23. @ வரலாற்று சுவடுகள்,

  கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 24. வெங்கட் நாகராஜ் said...

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 25. ஸ்ரீராம். said...
  /நாகரீகமா சிக்கனமா... /

  இரண்டும்தான்:(. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 26. ESWARAN.A said.....//அதற்குப்பிறகு காவல் துறை, பள்ளி மாணவ-மாணவிகள் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்ட தடை விதித்துள்ளது...எல்லாம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்..//

  வேதனை தரும் பகிர்வு. இந்த நிகழ்வுக்குப் பிறகு இங்கும் பிதுங்கி வழியும் பள்ளி ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதாகக் கேள்வி. எத்தனை நாட்களுக்கோ தெரியவில்லை.
  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 27. @ ஹுஸைனம்மா,

  கருத்துக்கு நன்றி. பதினைந்து குழந்தைகளும் நிகழ்வில் இருந்து மீண்டு வர பல நாட்கள் ஆகலாம்.

  ReplyDelete
 28. @ சே. குமார்,

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 29. எல் கே said...
  //ஒரு ஆசிரியை வேனில் வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு உதவியாளர் வருகிறார். பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே வண்டியில் இருந்து குழந்தையை இறக்கி விடுகிறார்கள்.//

  ஆறுதலாக உள்ளது. இங்கும் சில பள்ளிகளில் இந்த முறை நடை முறையில் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான பள்ளிகள் கடைப்பிடிப்பதில்லை என்பதற்கு சாலையில் காணும் பள்ளி வாகனங்களே சாட்சி. நன்றி எல் கே.

  ReplyDelete
 30. கிரி said...
  //நாம் தான் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும்.//

  உண்மைதான். நன்றி கிரி.

  ReplyDelete
 31. @ விச்சு,

  தங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 32. James Vasanth said...
  /பாதுகாப்பு விஷயத்தில் நாம் ரெம்ப பின் தங்கி இருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது :(/

  அது குறித்த அக்கறையின்மையும் தொடர்கிறது:(! கருத்துக்கு நன்றி ஜேம்ஸ்.

  ReplyDelete
 33. ஸாதிகா said...
  //பயன்மிக்க கட்டுரை.யோசிக்க வைக்கும் கட்டுரை//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 34. மதுமிதா said...
  / நாம்தான் அனுபவ பாடங்களைத் தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம் :(/

  சரியாகச் சொன்னீர்கள். நன்றி மதுமிதா.

  ReplyDelete
 35. @ மாதேவி,
  கருத்துக்கு நன்றி மாதேவி.

  ReplyDelete
 36. @ Nithi Clicks,

  கருத்துக்கு நன்றி நித்தி.

  ReplyDelete
 37. வாழ்க்கை பாடங்கள் கற்றுக் கொடுக்கிறது இருந்தும் அதை அலட்சியபடுத்தி இந்த மாதிரி நிகழ்வுகள் அவ் அவ்ப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

  வருந்ததக்க நிகழ்ச்சிகள் நடக்கும் போது விழிப்புணர்வு பெறாத மக்களை நினைத்து மனது கனத்து போகிறது.

  ReplyDelete
 38. கோமதி அரசு said...
  //வருந்ததக்க நிகழ்ச்சிகள் நடக்கும் போது விழிப்புணர்வு பெறாத மக்களை நினைத்து மனது கனத்து போகிறது.//

  அந்த ஆதங்கமே பதிவிடவும் காரணமாகிறது. நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 39. இன்னிக்கி தினமலர்ல ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை(http://www.dinamalar.com/News_detail.asp?Id=515560) படிச்ச போது உங்களோட இந்த பதிவுதான் நினைவுக்கு வந்தது. :(

  ReplyDelete
 40. @தக்குடு, கொடுமையான நிகழ்வு:((! அறிய வந்தேன் நானும். குழந்தை ஸ்ருதியின் பெற்றோருக்கு மன ஆறுதல் கிடைக்க பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 41. வணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
  இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_26.html

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin