Sunday, November 25, 2012

செல்லம் செல்லம் செல்லமே..

நாய் வளர்ப்பவர்களுக்கு பெங்களூர் குடியிருப்புகளில் வாடகைக்கு வீடு கிடையாது. அது குறித்துக் கடைசியில்..

பூனை, நாய்ப் பிரியர்களா நீங்கள்? உங்களுக்காக முதலில் சில படங்கள்!

#1 பொம்மையைப் போல்..


#2 பூந்தோட்டக் காவல்காரி

#3 கண்கள் எங்கே?
 சீப்பை எடுத்து வாரி விடலாம் போலில்லை?

#4 அம்மா என்றால் அன்பு
‘மெதுவாக் குடிங்க பசங்களா! யாரும் வந்தா பாத்திடுறேன் ஒரு கை..’


#5 சோதனை
‘ஒரு பூச்சி பொட்டு அண்ட விட மாட்டேன்..’


#6 பால பாடம்
‘என்னம்மா பாக்குறே.. எனக்கும் காமியேன்..’
#7 TANGO
இதுக்கே பயந்தா எப்படி?

#8 Close up
இவரு முகத்திலிருந்து அரையடி தொலைவில் பாயின்ட் அன்ட் ஷூட் பிடித்து எடுத்த படம். வளர்க்கிற சிறுவன் ‘எங்க டேங்கோ எதுவும் பண்ணாது. நானும் கெட்டியாப் பிடிச்சிக்கறேன்.’ எனக் கொடுத்தான் தைரியம்:)!

#9 ரொம்பச் சமர்த்து


#10 குட்டித் தூக்கம்

#11 புலிப் பார்வை


***

[இனி வரும் படங்கள் முன்னர் பகிர்ந்தவை என்றாலும் சில தகவல்களுக்காக மீண்டும் இங்கே.]

விலை கொடுத்துப் பிராணிகளை வாங்கி வளர்ப்பதை மட்டுமே வழக்கமாகக் கொள்ளாமல், பூங்காக்களிலும் பொது இடங்களிலும் கைவிடப்பட்டுத் தவிக்கும் குட்டிகளை தத்து எடுக்கத் தொடர்ந்து கேட்டுக் கொள்கிறது பெங்களூர் மாநகராட்சி.


செவி சாய்ப்பவர் சிலரே.

பெங்களூர் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று வீதிகளில் பெருகி விட்ட நாய்களால் ஏற்படும் தொந்திரவு. பொதுமக்கள் நடமாடவே அஞ்சுகிற சூழல் நிலவுகிறது.அதிகாலையில் உடற்பயிற்சிக்காக வீட்டிலிருந்து நடந்தே பூங்காவுக்கு கிளம்புகிறவர்கள் இப்போது நாய்களுக்கு பயந்து வண்டிகளிலேயே செல்கிறார்கள்.

இறைச்சிக் கடை மீதங்களைச் சாப்பிட்டுப் பழகியதில், வனவிலங்குகளைப் போல் குழந்தைகளை அடித்துத் தூக்கிச் சென்ற சம்பவங்கள் சிலவும் கடந்த வருடங்களில் நடந்துள்ளன:( ! யாரேனும் நாய்க்கடிக்கு ஆளாகும் செய்திகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

பெங்களூரின் வேறொரு பகுதியில் வசிக்கும் தோழி பகிர்ந்து கொண்டது: கருணையின் பேரில் அவற்றைக் கொல்ல விரும்பாமல், அதே நேரம் பொதுமக்களை அவை ஏதும் செய்திடாதிருக்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவற்றைப் பிடித்து ஊசிகள் போட்டு விடுகிறார்களாம். எந்தத் தேதியில் ஊசிபோடப்பட்டது எனும் விவரமும் கழுத்துப்பட்டையில் சேர்த்து விடுகிறார்கள். ஆக்ரோஷம் குறைந்து அரை மயக்க நிலையில் நாள் முழுவதும் கிடைக்கிற இடங்களில் படுத்துத் தூங்கியேப் பொழுதைக் கழிக்கின்றனவாம்.


உணவு தேடும் சக்தியைக் கூட இழந்து விட்ட அவற்றுக்குப் பிராணிகள் நல சங்கம் மூலமாக இரவு தவறாமல் உணவு வழங்கப்படுகின்றது, வாகனங்களில் வந்து பகுதிவாரியாகச் சாப்பாடை வைத்துச் சென்று விடுகிறார்கள் என்றார். ‘கொடுமைதான்’ என்றேன். ‘கொன்று போடுவதை விட இது பரவாயில்லை’என்பதே அவர் கருத்து.

உண்மைதான். நாய்கள் பிடிக்கப்படுவதை நேரில் பார்த்திருக்கிறீர்களா? பிராணி வதை குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாத காலம் அது. அது தவறென்ற சிந்தனையே இருக்கவில்லை சமூகத்தில். ஐந்தாம் வகுப்பில் இருந்தேன் அப்போது. பள்ளியில் மதிய உணவு வேளையின்போது நாய்கள் மரத்தடிகளில் அமர்ந்து சாப்பிடும் மாணவியரைச் சுற்றி சுற்றி வரும். சிலர் தாமாக இட்லிகளையும் உணவையும் மணலில் தூக்கிப் போடுவார்கள். ‘என்ன ஒரு இரக்கம்’ என எண்ணும் முன்னரே ‘வீட்டுக்குத் திருப்பி எடுத்துப் போனா யாரு பூசை வாங்கறது.’ என்பார்கள். சிலபேர் அருகே வரும் நாய்களுக்குப் பயந்து எழுந்து கொள்ள அவை டிபன் பாக்ஸிலிருப்பதை நேரடியாக ருசித்துச் சாப்பிட்டுச் சென்று விடும்.

அப்படி அடிக்கடி நாய்க்கு மதிய உணவை விட்டுக் கொடுக்க நேர்ந்த வசந்தி  தன் அம்மாவிடம் சொல்ல, அவர் பள்ளி தலைமையாசிரியையிடம் முறையிட, நாய் வண்டிகள் வர ஆரம்பித்தன. முனிசிபல் வண்டி. உணவு வேளையில்தான் நாய்கள் நடமாட்டம் அதிகம் என்பதால் சரியாக அந்த நேரத்தில் வரவழைக்கப்பட்டன.  நீண்ட கம்பின் முனையில் வட்டமாக ஒரு இரும்புக்கம்பி இருக்கும். பயந்து ஓடும் நாய்களைத்  துரத்தித் துரத்தி அவற்றின் கழுத்துகளில் சுருக்கிட அவை ஓலமிட்டு அலறும். பார்த்த யாருக்கும் நான்கு நாட்களுக்குச் சாப்பாடு உள்ளே செல்லாது.  ‘என் அம்மா கொடுத்த புகாரினால்தானே இத்தனையும்’ வசந்தி முகம் சிவக்க மணிக்கணக்கில் தேம்பித் தேம்பி அழுதாள் அன்று.

இன்றைய பிராணி நல சங்கள், மிருக வதைச் சட்டங்கள் ஆறுதலைத் தந்தாலும் முழுமையான நம்பிக்கை தருவனவாக இல்லை என்பதே உண்மை.

இவை ஒருபுறமிருக்க,  இப்போது பெரிய குடியிருப்புகளில் நாய் வளர்ப்பதற்குத் தடை வர ஆரம்பித்துள்ளது.  குரைப்புச் சத்தம் வயதானவர்களுக்குத் தொந்திரவு போன்ற காரணங்கள் பலகாலமாக இருந்து வந்தாலும் முக்கிய காரணமாகச் சுட்டப்படுவது லிஃப்ட் மற்றும் பொது இடங்களில் அவை அசுத்தப்படுத்தி விடுவது. முறையாக அவற்றைப் பழக்கத் தவறியதற்காக வளர்ப்பவர்களுக்கு இனி அபராதம் என அறிவித்திருக்கிறது நிர்வாகம். அதுமட்டுமின்றி இப்போது வளர்ப்பவர்கள் மட்டுமே தொடர்ந்து செல்லங்களை வைத்துக் கொள்ள அனுமதி.  புதிதாக வாங்கக் கூடாது. குட்டிகள் வந்தால் யாருக்கேனும் கொடுத்து விட வேண்டும். நாய் வளர்ப்பவருக்கு வாடகைக்கு வீடு கிடையாது. எங்கே செல்லும் அவை?
***


46 comments:

 1. அழகிய படங்களுடன் காவல்காரர்கள்.

  நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் வளர்ப்பதற்குத் தடை. சில குடியிருப்புகள் அனுமதிக்கின்றன.

  இங்கும் தெருவில் செல்வதை பிடித்துக்கொல்ல தடை. நல்ல விடையம்தான். நாம்தான் பயந்து செல்லவேண்டியுள்ளது என்பது உண்மையே.
  நம்நாட்டில் உணவு கொடுப்பதாகத் தெரியவில்லை.

  ReplyDelete
 2. நம்ம பக்கம் வீட்டுக்குக் குறைஞ்சது ரெண்டு பூனை. நாய்களும் நிறையவே உண்டு.

  வெளியே நாய் வாக் கொண்டு போகும்போது கையோடு ப்ளாஸ்டிக் பை * ஸ்கூப் கொண்டு போகணும். நாய் கழிவுகளை எடுத்து அங்கங்கே இருக்கும் குப்பைத் தொட்டிகளில் போடுவது நாயாளர் கடமை. பீச்சுக்குப்போனாலும் இப்படித்தான். எல்லா இடத்திலும் எச்சரிக்கை போர்டு.

  தெருநாய் பிரச்சனை அறவே இல்லை. வளர்ப்பு நாயாக இருந்தாலும் யாரையாவது கடிச்சுருச்சுன்னா..... அம்பேல். உடனே நாயை அப்புறப்படுத்தி 'மேலே' அனுப்பிருவாங்க.

  அப்புறக் ராத்திரி 10 மணிக்குப்பின் நாய்கள் குரைக்கத் தடை!!!!!

  ஆனாலும் இந்தியாவில் தெருநாய்கள் பெரிய சல்லியம்தான்:(

  ReplyDelete
 3. அருமையான புகைப்படங்கள்
  பயனுள்ள தகவல்கள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. பெங்களூரில் ஒரு அலுவலகத்தில் பக்கத்தில் இருந்த பார்க்கில் நோய்வாய்ப்பட்ட நாய்களை கூண்டில் அடைத்துவைத்திருந்தார்கள்...

  கொஞ்சநேரம் அந்த அலுவலக்த்தில் இருந்தபோதே அதன் குரைப்புச்சத்தம் மனதைக் கஷ்ட்டப்படுத்தியது..

  அங்கே காலை முதல் இரவுவரை அலுவல் பார்ப்பவர் கதி நினைக்கவே பாவமாக இருந்தது..

  ReplyDelete
 5. பெங்களூரில் தெருவுக்கு தெரு ஒரு டஜன் நாய் குறையாம இருக்கும்.. அதிகாலை & அர்த்த ராத்திரியில் ஆபிஸிலிருந்து வீடு திரும்பும் பயந்தசுபாவமுள்ளவர்கள் படும் பாடு பரிதாபம்! :(

  ReplyDelete
 6. தில்லியில் தெரு நாய்கள் ரொம்பவே அதிகம் தான். சமீபத்தில் ”சிவனே” என்று பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பர் ஒருவரை நாய் கடித்து விட்டது. ஒருவேளை அதோட இடமோ என்று எனக்கு ஒரு சந்தேகம்...

  சிறப்பான படங்கள்.

  ReplyDelete
 7. வீட்டு விலங்குகள் காட்டும் பாசம் தனிதான் ஆனால் அதை அடுத்தவரை தொந்தரவு கொடுக்காமல் வளர்க்க வேண்டும்(அனுபவம்)

  ReplyDelete
 8. நாய்களையும் நாய்த்தொல்லைகளையும் நன்கு படமாக்கி மனதில் பதிய வைத்துள்ளீர்கள்.

  பயமாகத்தான் உள்ளது.

  எல்லா இடங்களிலும் கொசுத்தொல்லை போலவே இந்த நாய்த் தொல்லைகளும் பரவியுள்ளன என்பதே உண்மை.

  ReplyDelete
 9. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நாய்த்தொல்லை கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்

  ReplyDelete
 10. காவல்காரனின் உஷாரான பார்வையே அழகுதான்.வெளிநாடுகளில் இருக்கும் நாயார் எல்லாம் அதிஷ்டசாலிகள்தான் !

  ReplyDelete
 11. கண்ணைக் கவர்ந்தன செல்லங்களின் படங்கள். குட்டித் தூக்கம் அழகு! நாய் பிடி படுவதைப் பார்த்துப் பதைத்த, அழுத சம்பவம் என் சிறுவயதிலும் உண்டு!

  ReplyDelete
 12. அருமையான தகவல்களுடன் அட்டகாசமான படங்கள்...

  நன்றி...

  ReplyDelete
 13. வீட்டில் வளர்க்கப்படும் நாய்/பூனைகள் neuter செய்யப்பட வேண்டும். அது பிராணிகளுக்கு நல்லது, நமக்கும் நல்லது.

  வாடகைக்கு இடம் கிடைக்காது என்பது முழுதும் சரி/முழுதும் தவறு என ஏற்க முடியவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல் பிராணிகள் அசுத்தம் செய்து பிறருக்கு தொல்லை வரலாம். இதில் தவறு பிராணியினது அல்ல - மனிதருடைய தவறு. பிராணிகள் இருந்தால் வாடகை ஆயிரமோ இரண்டாயிரமோ அதிகமாக வசூலிக்கலாம்.

  துளசி சொல்லியிருப்பது போல சுத்தம் செய்ய பை,ஸ்ப்ரே போன்றவை கூடவே எடுத்துச் செல்ல வேண்டும். நமக்கு நாய்/பூனை வளர்க்க ஆசையிருந்தால் அதற்காக அடுத்தவர்களைத் தொல்லைப் படுத்துதல் சரியல்ல.

  இந்தியாவில் பொது இடங்களில் நாய் (ஏனோ பூனைகளை விட நாய் அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது) தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருநாய்களைப் பிடித்து எளிமையான முறையில் துன்புறுத்தாமல் அவற்றை அப்புறப்படுத்துவதே நல்லது. (சிட்டுக்குருவி சாகுதேனு புலம்புற ஜனங்க இதை எங்கே கேக்கப் போறாங்க.. உடனே ஜீவ காருண்யம்னு பொத்துக்கிட்டு வந்துரும் :)

  ReplyDelete
 14. பத்துமணிக்கு நாய் குரைக்கத் தடையா? அதை எப்படி அமல் படுத்துறீங்க துளசி கோபால்?

  ReplyDelete
 15. முதல் படம் பிரமாதம்.

  ReplyDelete
 16. பூனைகள் இங்கே அதிகம்.
  ஐய்யா வந்தார் என்றால் எலியார் இருக்கிறார் என்று அர்த்தம்.அதுவும் குட்டிப் பூனை ஒரு தட்டாம்பூச்சியைத் துரத்தும் அழகு தனி:)
  படங்களிலும் பூனையார் வெற்றி பெறுகிறார்:) அவர் முறைத்தால் வேறெந்த பூச்சிபொட்டும் உள்ளே வரமுடியுமா என்ன.:)

  ReplyDelete
 17. மாலை 6 மணிக்கு ராச்சாப்பாடு. ஏழரைக்கு பெட் டைம்ன்னு குழந்தைகளை படுக்கையில் தள்ளிவிடுவதால் நாய்ச்செல்லங்களும் இதுக்குப் பழக்கப்பட்டுப் போயிருதுங்க போல. பசங்க அடங்குனா இதுகளும் அடங்கும். ஆனாலும் பத்துமணிக்குமேல் இதுகள் குரைப்பதற்கு காரணம் இந்தப்பூனைகள்தான். இதெல்லாம் அவுத்துவிட்ட கிராக்கிகள். இதுகள் நடமாடுவதோடு நாயார் கண்ணில் படுவதுபோல் வேலிதாண்டுதல் எல்லாம் செய்யும். கடைசியில் பழி ஓரிடம் பாவம் ஓரிடம்தான், போங்க.

  ReplyDelete
 18. வீட்ல ஒரு நாய் வளர்க்கலாமான்னு நச்சரிக்கும் மகளிடமிருந்து இந்த இடுகையை ஒளிச்சு வைக்கணும். இதுல இருக்கற படங்களை அவள் பார்த்தால் போச்சு :-)))))))

  ரெட்டை ஜடை போட்டு விடலாம் போலிருக்கும் முதல் மூன்று படங்கள் ஜூப்பரு.

  எங்கள் இப்போதைய பகுதியில் நாய்த்தொல்லை இல்லைதான். ஆனா முந்தி இருந்த பகுதியில் எக்கச்சக்கம். தெருவுக்குப் பத்துப் பதினஞ்சு நாய்கள் குறைஞ்ச பட்சம் இருக்கும். காலையில் விடிஞ்சும் விடியாத அந்த அரையிருளில் ஸ்கூல் பஸ்ஸைப் பிடிக்கப் போகும்போது பசங்களுக்குத்துணையா நாமும் போயே ஆகணும்.

  ReplyDelete
 19. படங்கள் பிரமாதம். பல்லையும், கண்ணையும் பார்த்தாலே பயமா இருக்கு...தைரியசாலி தான் நீங்க....:)

  எங்கள் குடியிருப்பிலும் நாய் வளர்க்க தடை.
  தெருநாய்களின் தொல்லை எல்லா இடத்திலும் உண்டு தான் போல...:(

  ReplyDelete
 20. ஏற்கனவே நாய் என்றால் பயம், அருவெறுப்பு எல்லாம் உண்டு. சில வருடங்களாக தெருநாய்கள் பெருகி, சில சிறுவர்களைக் கடித்துக் குதறிய சம்பவங்கள் பார்த்ததிலிருந்து இன்னும் அதிகமாகிவிட்டது. அதுவும், இரண்டு வருடங்களுக்கு முன், ஒன்றரை அல்லது இரண்டு வயது சிறுவன் ரேபிஸ் தாக்கி, இறுதி நாட்களில் இருக்கும் நிலையில் மதுரை மருத்துவமனையில் “கம்பிகளைப்” பிடித்தபடி துவண்டு போய் இருக்க, அவன் தாய்/பாட்டி கம்பிக்கு இந்தப் பக்கம் இருந்து கதற - இந்தப் படத்தை குமுதத்தில் பார்த்தபின்... இன்றும் நாயைப் பார்த்தால் இதுதான் நினைவுக்கு வரும்.

  ReplyDelete
 21. @மாதேவி,

  கருத்துக்கும் தகவல் பகிர்வுக்கும் நன்றி மாதேவி.

  ReplyDelete
 22. @மாதேவி,

  கருத்துக்கும் தகவல் பகிர்வுக்கும் நன்றி மாதேவி.

  ReplyDelete
 23. @துளசி கோபால்,

  தகவல் பகிர்வுக்கு நன்றி.

  சுத்தம் செய்வது தமது பொறுப்பு என பெரும்பாலான நாயாளர்கள் எண்ணுவதேயில்லை. வெளியிடங்களில் எப்படியோ குடியிருப்புகளுக்குள் சட்டங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளன.

  தெரு நாய் பிரச்சனை தீர்வு காண வேண்டிய ஒன்று. உயிரைக் கையில் பிடித்துதான் நடமாட வேண்டியுள்ளதாகத் தக்கடு சொல்லியிருப்பது போலவே என் தோழியும் தெரிவித்தார்.

  ReplyDelete
 24. @Ramani,

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 25. @இராஜராஜேஸ்வரி,

  பகிர்வுக்கு நன்றி. அப்பாதுரை இது குறித்து சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது.

  ReplyDelete
 26. @தக்குடு,

  உண்மைதான். வனவிலங்குகளுக்கு நடுவே மாட்டிக் கொண்ட மாதிரிதான்:(!

  வருகைக்கு நன்றி தக்குடு.

  ReplyDelete
 27. @வெங்கட் நாகராஜ்,

  பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். நாய்க் கடி செய்திகள் பெங்களூரிலும் அதிகமே. சென்ற வாரம் கூட ஒரு ஐந்து வயதுச் சிறுவனுக்கு நேர்ந்தது:(.

  ReplyDelete
 28. @ezhil,

  உண்மை. நன்றி எழில்.

  ReplyDelete
 29. @Lakshmi,

  கருத்துக்கு நன்றி லஷ்மிம்மா.

  ReplyDelete
 30. @ஸ்ரீராம்.,

  அந்த நாட்களில் பிடிக்கிற முறை பார்க்க அதிர்ச்சியானது.

  கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 31. @அப்பாதுரை,

  ஆம். வளர்ப்பவர்கள் பொறுப்புடன் நடந்தால் இந்தத் தடைக்கு அவசியம் இருக்காது.

  தெருநாய் பிரச்சனையை அரசு இன்னும் தீவிரமாக அணுக வேண்டும். குழந்தைகளைத் தூக்கிச் சென்ற சம்பவங்கள் கொடூரம்.

  /துன்புறுத்தாமல்/ அரைமயக்க நிலையில் அலைய விடுவது என்னவோ முடித்து விடுவதை விட மோசமாகதான் தெரிகிறது எனக்கு.

  சிட்டுக்குருவிகளுக்காக ஒரு பெரிய இயக்கமே உள்ளது இங்கு, தெரியுமா? கூடு அமைக்கக் குருவிகளை ஈர்க்கும் வகையிலான கூண்டுகளை இலவசமாகப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.ஊர்க்குருவி அதிகம் வராவிட்டாலும் ஓரளவு பலன் கிடைக்கிறது:). scaly breasted munia வகைக் குருவிகள் அதிகரித்துள்ளன.

  கருத்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 32. @வல்லிசிம்ஹன்,

  தாயும் சேய்களுமாய் இருக்கும் பூனைக் குடும்பத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம்:). கருத்துக்கு நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 33. @அமைதிச்சாரல்,

  வளர்க்கும் ஆசைக்குத் தலையை ஆட்டி வைத்தால் பாதி பொறுப்பு நம்மிடம் வந்து சேருமே:)! தங்கை மகள் இப்போது நச்சரித்துக் கொண்டிருக்கிறாள்.

  இப்போதைய பகுதியில் தொல்லை இல்லாதது அறிந்து மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி சாந்தி.

  ReplyDelete
 34. @கோவை2தில்லி,

  நீங்க வேற. வளர்க்கிற சிறுவன் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதாலும், கம்பிக்கு இந்தப்பக்கம் நின்ற தைரியத்திலும் எடுத்தவை:)!

  நன்றி ஆதி.

  ReplyDelete
 35. @ஹுஸைனம்மா,

  எனக்கும் பயம் உண்டு. வளர்ப்பவர் வீட்டுக்குச் செல்லுகையில் ‘ஒன்றும் செய்யாது’ என சொன்னாலும் கட்டிப் போட்ட பிறகுதான் காலை உள்ளே வைப்பேன்.

  விரும்பி வளர்ப்பவர்கள் பொறுப்போடு நடந்தால் தடைக்கு அவசியம் இருக்காது.

  நீங்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன இங்கும்:(.

  பகிர்வுக்கு நன்றி ஹூஸைனம்மா.

  ReplyDelete
 36. கிராமத்தில் தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாய் அவசியம். மற்றபடி, நகரத்தில் அது தேவையற்றது என்பதே என் கருத்து.

  படங்கள் நாய் வளர்க்கும் ஆசையைத் தூண்டுவதை இங்கு சொல்லியே தீரவேண்டும்.

  ReplyDelete
 37. @அமைதி அப்பா,

  நகரத்திலும் தனி வீடுகளுக்கு அவசியமே. குடியிருப்புகளில் அவற்றைதான் வளர்ப்பவர்கள் காவல் காக்க வேண்டியுள்ளது:)!

  நன்றி அமைதி அப்பா. நலம்தானே?

  ReplyDelete
 38. மூன்று நாயும் அருமை. எனக்குத் தான் நாய் வளர்க்க முடியலையே என்ற பெரும் குறை. ஊருக்கு சென்றாலும் வளர்க்க முடியாது.. சென்னையில் இருக்கும் போது.

  எங்கள் ஊரிலும் வளர்க்க சிரமம்.. என்னவென்றால் எங்காவது ஊருக்கு இரண்டு நாள் மூன்று நாள் செல்வது என்றால் இவற்றிக்கு சாப்பாடு பிரச்சனை. இதற்காகவே தற்போது வளர்க்க முடியாமல் உள்ளது. என்னுடைய கடைசி காலத்திலாவது நாய் வளர்க்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். 10 வருடமா முன்பு 3 நாய்கள் இருந்தன தற்போது ஒன்று கூட இல்லை என்பது கஷ்டமாக உள்ளது.

  படங்கள் அனைத்தும் அருமை. நாட்டு நாய் குட்டி போல இருக்கு!..செம.

  சிங்கபூரிலும் நாய் வளர்க்க கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. நாய் பொது இடங்களில் அசிங்கம் செய்தால் அதை நாம் தான் சுத்தப்படுத்த வேண்டும்.. இது போல கட்டுப்பாடுகள் பெங்களூரில் வருவது ஆச்சர்யம் அளிக்கிறது. சென்னையில் இதெல்லாம் இந்த அளவு சாத்தியம் இல்லை. சென்னை இது போல விசயங்களில் மிகவும் பின் தங்கியே உள்ளது.

  ReplyDelete
 39. @கிரி,

  சட்டம், கட்டுப்பாடு என வந்தால்தான் வளர்ப்பவர்களும் பயந்து பொறுப்போடு இருக்கிறார்கள்.

  ஊரில் நாய்கள் வளர்த்தது குறித்து உங்கள் பதிவுகளில் வாசித்த நினைவிருக்கிறது.

  நன்றி கிரி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin