புதன், 3 அக்டோபர், 2012

பயணம் (சிறுகதை) - உயிரோசையில்..


பிளாட்ஃபார்மை  நெருக்க நெருங்க அதிகரித்த இரயிலின் சத்தத்தில் தன்னிலைக்கு வந்தான் அருண். வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ‘சட்’டென ஆறடி உயரத்தில் ஆஜானுபாவமாகத் தெரிந்த ஒருவனின் முதுகை ஒட்டி நின்று கொண்டான். அவன் கூடவே எளிதாக ஏற முடிந்ததுடன் உடனடியாக உட்கார இருக்கையும் கிடைத்தது. தன் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டான்.  அடித்துப் பிடித்து ஏறி அரக்கப்பரக்க இருக்கை தேடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது ஒரு அற்பப் பெருமிதம் எழுந்தது. ஆனால் அதிக விநாடிகள் நிலைக்கவில்லை. மறுபடியும் குரங்கு மனம் அன்றைய தினம் நடந்தவற்றை அசை போட ஆரம்பித்து விட்டது.

வீடு சென்று சேர ஒரு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரமும் அதையே நினைத்துக் குமைவது நடந்த எதையும் மாற்றிவிடப் போவதில்லை என்பது தெரியாமலும் இல்லை.  இருந்தாலும் மனம் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலை பாய்ந்தது. சீராகப் போய்க் கொண்டிருந்தக் கூட்டுத் தொழிலில் இப்படியொரு பின்னடைவை அவன் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை நாளும் பார்ட்னர் ஆகாஷை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதாகதான் நம்பியிருந்தான். சென்ற வாரம் நடந்த ஒரு பார்ட்டியில் கூடத் தன் நண்பர்களிடம் ஆகாஷ் மேல் நூறுசதவிகிதம் நம்பிக்கை வைத்திருப்பதாகப் பீற்றிக் கொண்டானே. நடந்த கசப்பான நிகழ்வை விட ஆகாஷ் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொடிப்பொடியாகிப் போனதுதான் தாங்க முடியாததாக இருந்தது.

‘ஆகாஷால் எப்படி அப்படிப் பேச முடிந்தது?’ ஆத்திரத்தை விட ஆச்சரியமே மேலோங்கி நின்றது. தன் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தான். தொழில் என வந்து விட்டால் வாடிக்கையாளர்களுக்கு வாக்கு எனும் ஒன்றைக் கொடுத்தேதான் ஆக வேண்டியிருக்கிறது.  அரைகுறை நம்பிக்கையோடு அடித்துப்பேசி கொடுத்து விடுகிற வாக்குகளில் சில, சரியான நேரத்தில் நிறைவேற்ற முடியாமல் போவது எப்போதேனும் நிகழதான் செய்கிறது. ஆகாஷும்தான் அசட்டுத் துணிச்சலுடன் பலமுறை வாக்குக் கொடுத்திருக்கிறான். அப்போதெல்லாம் இருவரும் சேர்ந்து சமாளித்துதானே கம்பெனியின் மரியாதையைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்?

றுக்க முடியாது. அவன் சற்று ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்தான். இந்த கஸ்டமர் துரட்டுப் பிடித்தவன், வம்பு வளர்த்து ஆதாயம் பார்ப்பவன். சொன்ன நேரம் பிசகினால் தாம் தூம் என ஆகாசத்துக்கும் பூமிக்குமாய்க் குதிக்கிறவன். எல்லாம் தெரிந்தும் ஆர்டர் கைநழுவிப் போட்டிக்காரன் கைக்குப் போய்விடக்கூடாதென்றுதானே ஒப்புக் கொள்ள நேர்ந்தது? இப்போது வேறொரு கஸ்டமரின் வேலையைத் தள்ளிப்போட்டால்தான் இதை முடிப்பது சாத்தியம். நடந்தது நடந்து விட்டது. அட்வான்ஸ் வாங்கி விட்டார்கள். ஒருவரையொருவர் குற்றம் சாட்டி நிற்காமல் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைத்தானே பார்க்க வேண்டும்? வழிகளா இல்லை?

கஸ்டமரிடம் மன்னிப்புக் கேட்டு அட்வான்ஸை திருப்பித் தருவதாகச் சொல்லலாம். மறுத்தால் ஆர்டரில் கிடைக்கக் கூடிய இலாபத்தில் சமரசம் செய்ய முன் வரலாம். வேறொருவரிடம் செய்யக் கொடுத்து வாங்கி டெலிவர் செய்யலாம். மற்ற கஸ்டமர்களில் யாரேனும் தங்கள் வேலை தள்ளிப் போவதை ஒப்புக்கொள்வார்களானால் அந்த வேலையில் இருக்கும் பணியாளர்களை இதில் ஈடுபடுத்திடலாம். எக்ஸ்ட்ரா ஷிஃப்ட் இரட்டை சம்பளம் என அறிவித்து வேலையை முடிக்கப் பார்க்கலாம். அவர்கள் ஆர்டர் செய்தவை தயாராகும் வரை தற்காலிகமாக ஷோரூமில் இருக்கிற ஃபர்னிச்சர்களை வழங்கி சமாளிக்கக் கேட்டுக் கொள்ளலாம். இப்படி எத்தனையோ இருக்கின்றன. இதில் எதையுமே அலசவோ விவாதிக்கவோ தயாரில்லாதவன் போல் எடுத்த எடுப்பில் சரமாரியாக அவன் மேல் குற்றச்சாட்டுகளை ஆகாஷ் வீசியதில் வெறுத்தே போய் விட்டான்.

ஆகாஷ் அனலாய்க் கக்கிய வார்த்தைகள் கடந்த இரண்டு மணிநேரமாக மனதில் சுழன்று கொண்டே இருக்கின்றன: “போதும்பா. பிஸினஸுக்கு பிரச்சனைய மட்டுமே கொண்டு வர்ற ஒம்மாதிரி பார்ட்னரோடு காலந்தள்ளுனதெல்லாம் போதும். யாரைக் கேட்டுக்கிட்டு ஒத்துக்கிட்ட? என்ன தைரியத்துல ஒத்துக்கிட்ட? பாடுப்பட்டுப் பாத்துப் பாத்து வளத்த பிஸினஸை குழிதோண்டிப் புதைக்கறதுலயே குறியா இரு.”

 ‘யார்? நானா அவனா? பாவி. என்னக் கழட்டி விடச் சந்தர்ப்பம் பாத்துட்டே இருந்துருக்கான். இதப் புரிஞ்சுக்காத மடையனா இருந்துட்டனே. யோசிக்க யோசிக்கதான அவன் பேச்சுக்குப் பின்னாடியிருக்குற அர்த்தம் பிடிபடுது’

மொபைல் ஒலித்தது. ஆகாஷ்தான். அவன் குரலைக் கேட்க மட்டுமல்ல அவன் பெயர் மிளிர்வதைக் கூட பார்க்கப் பிடிக்காமல் அழைப்பைத் துண்டித்தான்.

‘பேசறதெல்லாம் பேசிட்டு என்னத்துக்கு ஃபோன் பண்ற? இன்னும் பேசி என் கோவத்தைக் கிளறதுக்கா? எல்லாம் எனக்குப் புரிஞ்சு போச்சு. ஒனக்கு என்னக் கழட்டி விடணும்ங்கிற நெனப்பு வந்துட்டு. நீ கூப்ட காரணத்துக்காக மொழிதெரியாத ஊருக்கு ஒங்கூடவே வந்து, முழி பிதுங்கித் தொழில் படிச்சு, என் ஆயுசுல அஞ்சு வருசத்தை இந்த பிஸினஸுக்கு மொதலாப் போட்டிருக்கேன். நம்ம உறவு நிலைக்கும்னு நினைச்சதுல வேணா நா முட்டாளா இருந்திருக்கலாம். ஆனா அசட்டுத்தனமா ஒங்கிட்ட அத்தனையையும் தூக்கிக் கொடுத்துட்டு விலகிப் போயிருவேன்னு மட்டும் நினைக்காதே...’

ஆகாஷ் வீசிய அமில வார்த்தைகள் மறந்துபோய், எப்படி அவனைக் கழற்றி விட்டுத் தான்  பிஸினஸை ஆக்கிரமிப்பது எனும் சிந்தனை வந்தது.

‘அவ்ளோ ஈஸியா விட்ற மாட்டேன் ஆகாஷ்...’ தன்னை அறியாமல் முஷ்டியை மடக்கி ஓங்கித் தொடையில் தட்டிக் கொண்டதில் பக்கத்தில் தூங்கி வழிந்து கொண்டிருந்த வயதான ஆசாமி திடுக்கிட்டு ஒரு கணம் நிமிர்ந்து, கண்ணைத் திறக்காமலே மறுபடி தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்.

ருணின் கவனம் அந்த ஆள் மீது திரும்பியது. அவரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.
எங்கே எப்போது என எதுவும் நினைவுக்கு வரவில்லை. தூங்கிக் கொண்டிருப்பவரிடம் பேச்சுக் கொடுத்துக் கேட்கவும் வழியில்லை. சுற்றுமுற்றும் பார்க்கையில் பலபேர் இதே போல் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்கள். சிலர் பக்கத்திலிருந்தவர்களின் மேல் ஒரேடியாய் சாய்ந்தோ அல்லது அவ்வப்போது ‘டொங்’ என மோதியபடியோ சுகமான உறக்கத்தில் இருந்தார்கள். அத்தனை நெருக்கடியான பயணத்தில் தூங்க முடிகிற அவர்களைப் பார்த்துப் பொறாமையாக இருந்தது. ‘கொடுத்து வச்சப் புண்ணியவானுங்க. எனக்கு வாய்ச்ச பார்ட்னரைப் போல யாருக்கும் இருந்திருக்காது. அதான் நல்லாக் குறட்டை விட்டு நிம்மதியா தூங்குறானுங்க!’ தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

அப்போது அருகிலிருந்த வயதான ஆசாமி தன் சட்டையின் முழுநீளக் கையை இரண்டு சுற்று மடித்து விட்டுக் கொண்டார். அவரது மணிகட்டின் உட்புறத்தில் பச்சை குத்தியிருந்த கரடி.. இவர் இவர்... கடவுளே.. இவன் கேசவனல்லவா?

கேசவன் விழித்து அவனை அடையாளம் கண்டு கொள்ளும் முன் அங்கிருந்து மாயமாகி விடத் துடித்தான் அருண். மறக்க விரும்பின கடந்த கால நினைவுகள் எல்லாம் மனதின் ஆழத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பின. இதயம் சத்தமாகத் துடிக்க ஆரம்பித்தது.

நகரக் கூட முடியாமல் ஏகக் கூட்டம். எழுந்து மற்றவரை விலக்கிக் கொண்டு செல்ல முயன்றால் அந்த சத்தத்திலேயே கேசவன் விழித்து விடக் கூடும் கேசவன்.  அடுத்த நிறுத்தம் வரும் வரை மூச்சுக் காட்டாமல் உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வளவு நேரமும் அலைக்கழித்தக் கொண்டிருந்த சுய இரக்கம், விரக்தி மனப்பான்மை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் இனம் புரியாத அச்சம் மனதிலே குடிகொண்டு விட்டது.

கேசவன் எப்படி இங்கே வந்தான்? யார் சொல்லியிருப்பார்கள் தான் இருக்குமிடத்தை? எப்போது சிறையிலிருந்து வெளி வந்தான்?

‘குப்’ என்று வியர்த்தது.

சின்ன வயதிலிருந்து உயிருக்கு உயிராகப் பழகிய நண்பன் அநியாயமாகக் குத்துப்பட்டு தன் மடியில் உயிர் விட நேர்ந்த சோகத்துக்குக் காரணமாய் இருந்தவன் இந்தக் கேசவன். ஒரு மத்தியான வேளையில் கலகலப்பாகப் பேசியபடி கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள் தெரியாத்தனமாகச் சாதிக் கலவரக் கூட்டத்தில் மாட்டிக் கொள்ள நீண்ட கத்தியை நண்பனின் வயிற்றில் பாய்ச்சிய இந்தப் பச்சை குத்தியக் கை எத்தனை வருடங்கள் எத்தனை இரவுகள் இவனைக் கனவுகளில் துரத்தியிருக்கிறது? அதே கை சுருக்கங்களுடன், ஆனால் ‘பளிச்’ என்று கரடி தெரிய அவனுக்கு மிக மிக அருகில், அவன் மடியைத் தொட்டுக் கொண்டு.

படபடப்பு அதிகமானது.

இள இரத்தம் அன்று. பட்டப்பகலில் நடந்த கொலையை நேரில் பார்த்த சாட்சியாகத் தைரியமாகக் கோர்ட் கூண்டில் ஏறி நின்று விட்டான்.  ஒருபாவமும் அறியாத நண்பனை இழந்த கோபம் மற்ற எதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை. ஆயுள் தண்டனை தீர்ப்பானது.  இவனைப் பார்த்து கேசவன் ஒரு முறை முறைத்தது அன்றைக்குக் கொஞ்சம் கூடக் கலக்கமாக இல்லை. இப்போது நினைக்கையில் வெலவெலத்தது.

பதினான்கு வருடங்கள்! அதற்குள்ளாகவா முடிந்து விட்டன? ஆம், சரியாக இதே மாதத்தில்தான் அவன் ‘உள்ளே’ போனான். அப்படியானால் மிகச் சமீபத்தில்தான் விடுதலையாகி இருக்க வேண்டும். முதல் வேலையாக இவனைத் தேடி இத்தனை மைல் தாண்டி வந்திருக்கிறான் என்றால் பழி வாங்கும் வெறியை விட வேறென்ன காரணமாக இருக்க முடியும்?

‘ஒனக்கேம்ல இந்த வேண்டாத வேல. நீ மட்டுந்தானா கொலயப் பாத்தே? சுத்தியிருந்த வேற எவனாது வாயத் தொறந்தானா பாத்தியா? கரடின்னு பட்டபேரு வச்சுகிட்டுக் கரடி மாறியே ஊருக்குள்ள திரிஞ்ச முரட்டுப்பய கேசவன். இன்னிக்கு இல்லாட்டா என்னிக்காவது ஒன்னப் போட்டுத் தள்ளாம விட மாட்டான். அடிச்சுச் சொல்றேன் எழுதி வச்சுக்கோ’ தீர்ப்பு வந்த அன்று மேலத் தெரு சுப்பையா மாமா சொன்னது காதில் ஒலிக்க முகம் வெளிறியது.

அடிதடி தொழிலின் உச்சக்கட்டத்துக்கு வர வேண்டிய இளமைப்பருவத்தைக் கம்பிகளுக்குப் பின்னால் கழிக்க வைத்த தன்னை எங்கேனும் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தால் சும்மா விடுவான் கேசவன் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் ‘ஒங்குடலை உருகி மாலையாப் போட்டுகிட்டுதான் மறுவேலை’ என என்னவோ சினிமா வில்லன் போலத் தேடி வருவான் என நினைக்கவே இல்லை.

ரயில் அடுத்த ஸ்டேஷனை அடையக் குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகும். அதற்குள் கண்ணைத் திறந்து தன்னைப் பார்த்து விட்டால்? பார்த்ததும் அடையாளம் தெரிந்து கொள்வானோ? ‘எப்படில இன்னமும் காலேஜுல பாத்த மாதிரி கொஞ்சங் கூட மாறாம அப்படியே ட்ரிம்மா இருக்க...?’ நரைக்கத் தொடங்கி விட்டத் தம் தலையைத் தடவியபடி தொப்பையும் தொந்தியுமாகி விட்ட நண்பர்கள் வயிற்றெரிச்சலோடு கேட்கையில் பெருமிதமாய் இருக்கும். இப்போது ஏன்தான் தொப்பை தொந்தி போடவில்லை என வருந்தினான். . ‘தலையாவது சொட்டை விழுந்தோ, நரைச்சோ தொலச்சிருக்கப்பிடாதா? உயிராவது மிஞ்சியிருக்குமே.’ தாறுமாறாக ஓடியது சிந்தனை. அடையாளம் தெரிந்த அடுத்த நொடியே கத்தியை உருகிக் குத்தி விட்டால்? அன்று நண்பன் துடித்தத் துடிப்புக் கண் முன் விரிய, கால்களும் கைகளும் நடுங்க ஆரம்பித்தன.

ஆகாஷுடன் நடந்த வாக்குவாதத்தில் ப்ரீஃப்கேஸை கூட எடுத்துக் கொள்ளாமல் நேரே ஸ்டேஷனுக்கு வந்து விட்டான். அது இருந்திருந்தாலாவது கத்தியைத் தடுக்கப் பயன்பட்டிருக்கும். நிராயுதபாணியாக இந்த ரவுடியிடமிருந்து எப்படித் தப்பிக்க?  ‘கிடுகிடு’வென நடுங்கிக் கொண்டிருப்பதை விட அந்த இடத்தை விட்டு நகருவது உசிதமெனப் பட்டது. அப்படியே கேசவன் விழித்துக் கொண்டாலும் நடுவே இருக்கும் கூட்டத்தைத் தாண்டி அத்தனை வேகமாய் தன்னை அடைந்து விட முடியாது. அதற்குள் ஸ்டேஷன் வந்து விடும். இறங்கி ஓடி விடலாம்.

கேசவன் பார்த்திடாதபடி வியர்த்து வழிந்த தன் முகத்தை எதிர்ப்பக்கமாகத் திருப்பிக் கொண்டு, கவனமாகக் கண்களாலேயே ஒவ்வொரு நபரிடமும் வழிவிடுமாறு கெஞ்சிக் கெஞ்சி கதவை நோக்கி முன்னேறலானான். குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் கூட்டத்துக்குள் புக முடியவில்லை. எப்படியோ கேசவனிடமிருந்து நாலைந்து வரிசைகளாவது தள்ளி வந்து விட்டதில் சின்ன நிம்மதி. கேசவனின் கண்கள் இன்னும் மூடிதான் இருந்தன. இருப்பினும் ஒரு மைக்ரோ நொடி போதுமே பார்வையில் பிடிபட. பாதுகாப்புக்காக முதுகைக் காட்டியபடி நின்று கொண்டான். ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாய்த் தோன்றியது.

டுத்த நிறுத்தம் வர கூட்டமே அவனைத் தள்ளிக் கொண்டு போய் வெளியே விட்டது. பிளாட்ஃபார்மில் கால் வைத்த விநாடி மீண்டும் புதிதாகப் பிறந்த மாதிரித் தோன்றியது. ஒருவேளை சன்னல் வழியே கேசவன் பார்த்து விட்டால்? தலை தெறிக்க ஓட வேண்டியதுதான். எதற்கும் உறுதி படுத்திக் கொள்ளலாம் எனக் கேசவன் உட்கார்ந்திருந்த இருக்கையை நோக்கிப் பார்வையை வீசினான். இருக்கை காலியாக இருந்தது.

முகம் வெளிறியது. மனதில் கிலி பரவியது. கதவைப் பார்த்தான். கேசவன் இறங்கிக் கொண்டிருந்தான். நேருக்கு நேர், பத்தடித் தொலைவில்.

ஓட எத்தனித்தவன் ‘சட்’டென நிதானித்தான். பயம் வியப்பாக மாறியது. கேசவனின் கண்கள் அப்போதும் மூடியே இருந்தன. ஒரு சிறுவன் கேசவனின் கைகளைப் பற்றி அழைத்து வந்து கொண்டிருந்தான்.  தாங்கிப் பிடித்துக் கீழே இறக்கியும் விட்டான்.

‘அப்போ.. அப்போ.. கேசவனுக்குப் பார்வை இல்லையா?’

திகைத்து நின்றிருக்கையில் சிறுவன் யாரிடமோ பிரபல கண்மருத்துவமனையின் பெயரைச் சொல்லி எப்படிப் போகவேண்டுமென விசாரித்தான்.

‘கேசவா! என்னைக் கொல்ல வரலியா நீ? ட்ரீட்மெண்ட்டுக்காகதான் வந்தியா? அரை மணியில் இப்படி மூட்டைப் புளிய என் வயத்துலக் கரைச்சுக் கதி கலங்க வச்சிட்டியே’

வந்த வண்டி நகரத் தொடங்கி விட்டது. ஓடிச் சென்று ஏறியிருக்கலாம். ஆனால் அடுத்த இரயிலில் போய்க் கொள்ளத் தீர்மானித்தான். ஆசுவாசமாக வேண்டியிருந்தது. கத்திக் குத்துக்குப் பயந்து பாதிவழியில் இறங்கிய படபடப்பு முழுதாக நீங்கி இருக்கவில்லை.

பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தான். மாரத்தானில் ஓடிய மாதிரி நெஞ்சாங்கூடு இன்னும் அடித்துக் கொண்டிருந்தது. அடித்த குளிர்ந்த காற்று சூழலுக்கு இதமாக இருந்தது. அடிவயிறு வரைக்கும் அதை இழுத்து நிரப்பி வெளியில் விட்டான். மயிரிழையில் தப்பிப் பிழைத்த உணர்வு. தூரத்தில் கேசவனும் சிறுவனும்  ஸ்டேஷனலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

மொபைல் அழைத்தது. ஆகாஷ். “ஹலோ” என்றான் தன்னிச்சையாக.

“மன்னிச்சுரு அருண். நா அப்படிப் பேசிருக்கக் கூடாது”

எதைப்பற்றிச் சொல்கிறான் என்பது புரியவே சில விநாடிகள் ஆகின.

ஓ.. அதுவா? காலையில் நடந்த சண்டை.

சிரிப்புதான் வந்தது.

சுதாகரித்து “அதை எப்பவோ மறந்துட்டனே” என்றான்.

ஆகாஷ் நெகிழ்ந்து போயிருக்க வேண்டும். “ஒங்கிட்ட ஏதோ ஒரு மூடுல அப்படிப் பேசிட்டனே தவிர அப்புறம் அதுக்காக எவ்ளோ வருத்தப்பட்டேன் தெரியுமா? ஒனக்கு ரொம்பப் பெரிய மனசு அருண். எதையும் மனசுல வச்சுக்காமப் பெருந்தன்மையா மன்னிக்கிறது அத்தனை ஈசி இல்ல. எனக்கு பார்ட்னரா.. ஃப்ரெண்டா.. வெல் விஷரா.. நீ அமையக் கொடுத்து வச்சிருக்கேன்.” ஆத்மார்த்தமாகவே சொல்கிறான் என்பது புரிந்தது.

இரயில் வந்து நிற்கவும்,  “நாளை பார்க்கலாம் ஆகாஷ்”  கனிவாகச் சொல்லிப் பேச்சை முடித்தான். ஏறி அமர்ந்தவன் மனதில் வாழ்வில் அதுவரை அனுபவித்திராத புதுவிதமான அமைதி குடி கொண்டிருந்தது.
***

1 அக்டோபர் 2012, உயிரோசையில்.., நன்றி உயிரோசை!

படம் நன்றி: CVR 

35 கருத்துகள்:

  1. கதை நன்று

    //கஸ்டமர் துரட்டுப் பிடித்தவன்//

    உங்க ஊர் பாஷையா? இந்த வார்த்தை கேள்வி பட்டதே இல்லை !

    பதிலளிநீக்கு
  2. மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் உண்மையிலேயே பெரிய மனது வேண்டும்தான்.

    அருமையான கதைக்கேற்ற அசத்தலான படம்.

    பதிலளிநீக்கு
  3. நல்லா. வித்தியாசமா இருக்குங்க ராமலக்ஷ்மி. கொஞ்ச நேரம் நானும் அந்த சண்டையை மறந்து போயிட்டேன். இரு கோடுகள் தத்துவம்தான்..வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. மன்னிக்கப் படுகிறவர்களே மன்னிக்கிறார்கள் என்று ஜெயகாந்தன் ஒரு சிறுகதையில் அருமையாகச் சொல்லியிருப்பார். மனித மனத்தின் சைகாலஜியைப் படம்பிடித்துக் காட்டிய அருமையான சிறுகதை. அசத்திட்டீங்க மேடம்.பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான கோணத்தில் அருமையான கதை.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. கதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. புதியதாய் ஒரு பிரச்னை வரும்போது, ஏற்கனவே உள்ள இன்னொரு பிரச்னை வீரியமிழந்து போகும் என்பது சரியே.

    அருமையான கதை. எங்கேர்ந்து இந்த மாதிரி கதைக் களம் பிடிக்கிறீங்க...

    பதிலளிநீக்கு
  8. அருமை. நான் சொல்ல நினைத்ததை டி என் இளங்கோவனும், ஹுஸைனம்மாவும் சொல்லி விட்டார்கள்! புதிய பிரச்னைபழய பிரச்னையை மறக்க வைப்பதோடு, ஷாக் ட்ரீட்மென்ட் மாதிரி அவனுள்ளிருக்கும் மனிதத்தை மீண்டு(ம்) மேலே வரச் செய்து விடுகிறது!

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை
    ராமலக்ஷி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல சிறுகதை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான கதை ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  12. நல்ல கதை!

    ரயிலில் ஏறும் டெக்னிக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி:-))))!

    பதிலளிநீக்கு
  13. நல்ல உயிரோட்டமுள்ள கதை பாராட்டுக்கள் ராமலஷ்மி.. சிறுகதைகளில் மறுபடி நாட்டம் வந்து விட்டதில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  14. @மோகன் குமார்,

    நன்றி மோகன் குமார். ஆம்:), ‘தொரட்டுப் பிடிச்ச’ என்போம், பேச்சு வழக்கில். சர்வ சாதாரணமாகப் பயன் படுத்தப்படுவது.

    பதிலளிநீக்கு
  15. @அமைதிச்சாரல்,

    நன்றி சாந்தி. படம் CVR எடுத்தது. பொருத்தமாக அமைந்து விட்டது:)!

    பதிலளிநீக்கு
  16. @ஹுஸைனம்மா,

    நன்றி ஹுஸைனம்மா. சின்ன பிரச்சனைக்குப் பக்கத்தில் பெரிய பிரச்சனை வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் ஒன்றுதானே:)!

    பதிலளிநீக்கு
  17. @ஷைலஜா,

    நீங்கள் தந்த ஊக்கத்தில் எழுதியவைதான் முந்தைய கதைகள். மீண்டும் இப்போது அவற்றின் பக்கம் திரும்பியிருக்கிறேன்:)! நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  18. அருமையான கதை.. உயிரோசையில் வந்தமைக்குப் பாராட்டுக்கள்:)

    பதிலளிநீக்கு
  19. அருமை தோழி உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் ரசிப்பிற்குரியவை தொடர்ந்து படிக்கிறேன் நிறைய எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  20. @கோவை மு சரளா,

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள ராம லட்சுமி,
    அற்புதமான சிறுகதை. அபூர்வமான தருணங்களின் படப்பிடிப்பு. ஏற்கெனவே உங்களின் பல சிறுகதைகளை தினமணிக்கதிரில் வாசித்திருக்கிறேன். நீங்களும் என்னை மாதிரியே சிறுகதைப் பிரியை என்று நினைக்கிறேன். நேரம் கிடைத்தால் என்னுடைய தளத்திற்கு வந்து பாருங்கள். நிறைய சிறுகதைகளை வலையேற்றி வைத்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்!
    www.silviamary.blogspot.com

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin