செவ்வாய், 11 நவம்பர், 2008

ஈழம்:வேள்வித் தீயில் புகையும் கேள்விகள்

தூயாவின் அழைப்புக்காக...
அவர் தொடுத்த கேள்விகளுக்குப் பதிலாக...
இக்கவிதை தன்னுள் பல கேள்விகளை அடக்கிக் கொண்டு...






எம் மொழி பேசுவதால்
எமக்கு மட்டுமா சகோதரர்
உம் மண்ணில் பிறந்ததால்
உமக்கும் அன்றோ சகோதரர்?
***

மொழியால் நமக்குள் பந்தம்
வாழ்ந்து வரும் வழியால்
அவரும் ஒருவகையில்
உமக்கு சொந்தமன்றோ?
***

ஒரே பூமியின் புத்திரர்
ஒரே நாட்டினில் வாசம்
ஒரே காற்றினை சுவாசம்
ஒருவொருக்கொருவர் ஏன்
வைத்திடலாகாது நேசம்?

"உடன் பிறந்தவர்களைப் போலே-இவ்
வுலகினில் மனிதரெல் லோரும்"
பரந்த மனதுடன் பாரதி சொன்னார்
இன்னும் கேட்டார் அன்றே அவர்
"இடம் பெரிதுண்டு வையகத்தில்-இதில்
ஏனுக்குச் சண்டைகள் செய்வீர்?"
இதயமும் பெரிதாக இருந்து விட்டால்
உதயமாகிடாதோ உடன் ஒரு தீர்வு?
***

முப்பது ஆண்டுக்கும் மேலாக
முடிவின்றி போகின்ற யுத்தத்தில்
அப்பாவி மக்கள் ஆயிரமாயிரம் பேர்
கொட்டிய குருதிக்கும் விட்டிட்ட உயிருக்கும்
ஏது பதிலுண்டு உம்மிடம்?

ஆறறிவைத் தந்தான் ஆண்டவன் நமக்கு
அடுத்தவர் உயிரைப் பறிப்பதற்கல்ல
கொடிய காட்டு விலங்குகளா மக்கள்
கண்டபடி சுட்டுத் தள்ள?

பெளத்தம் வாழும் மண்ணில்
இரத்தம் ஆறாகப் பெருகுவது
எத்தனை அபத்தம் என
உணர்வதெப்போ?
மனிதர்கள் மனிதர்களாய்
இருப்பதெப்போ?

மற்ற எல்லாம் எல்லாம்
புறந்தள்ளி விட்டு
மனிதாபிமானம் மட்டும் மட்டும்
மனதினில் இருத்திக் கொண்டு
பிரச்சனையைத் தீர்த்திட
பிரமாணம் எடுப்பதெப்போ?
***

'பேச்சினில் வந்திடுமா தீர்வு எம்
மூச்சினை விட்டால்தான் வாழ்வு'
எனும் அன்பரே
ஆழ்மன வடுக்கள் ஆறாதுதான்
வீழ்ந்திட்ட மலர்களும் வாராதுதான்
சேதங்களால் மனம் மருகுகிறதுதான்
வேதனை எமக்கும் புரிகிறதுதான்
'இன்று யாம் மடிந்தாலும்
நாளை எம் சந்ததிக்காக'- இதுவே
தாரக மந்திரமாய் இருக்கிறதுதான்.

நேற்று மடிந்தோரும்
இன்று மாள்வோருமாய்
நாழிகையோடு நாட்களும்
மாதங்களோடு வருடங்களும்
கரைந்து கொண்டேயிருக்க
'நாளை'யைக் காண
நாட்டினிலே யாரிருப்பார்?
***

சற்றுத் தள்ளி இருங்கள் என்றரசு
வேண்டிட நினைப்பது சரியல்ல
சுற்றியிருக்கும் நாடுகள் யாவற்றிற்கும்
உண்டிங்கு கடமை உண்டிங்கு உரிமை
தயங்காமல் தட்டிக் கேட்டிடத்தான்
சூறாவளியாய் வந்த சுனாமியின் போது
மற்றவர் உதவியைப் பெற்றிட்ட நீவிர்
ஏனென்று கேட்போர் எவரையுமின்று
எளிதாய் ஒதுக்கிட இயலாது உணர்வீர்
இயற்கையின் சீற்றம் ஒன்றுதான்
மனிதர்களை இணைத்திட வல்லதா?
முயற்சியால் மாற்றம் கொண்டு வந்து
இனியாவது அமைதி கண்டிடல் நல்லதா?
***

யுத்தம் நிறுத்திடுங்கள் சத்தம் ஓயட்டுமே
அமைதி காணுங்கள் அன்பு நிலவட்டுமே
தீர்வு காணுங்கள் அறம் தழைக்கட்டுமே
மனம் வையுங்கள் பார் புகழட்டுமே!
*** *** ***





[வேள்வித் தீயில் புகைகின்ற கேள்விகளில் எவருக்குரியது எது என அவரவர் அறிவார். உள்ளத்தின் ஆதங்கத்தை உள்ளபடி உரைத்துள்ளேன் அமைதிக்கான பிரார்த்தனையாய். மாற்றுக் கருத்துடையோர் மன்னிப்பாராக...]

54 கருத்துகள்:

  1. ரொம்ப தெளிவான கவிதை! இன்றைய நிலையில் மிகத் தேவையானதும் கூட!

    பதிலளிநீக்கு
  2. //மற்றவர் உதவியைப் பெற்றிட்ட நீவிர்
    ஏனென்று கேட்போர் எவரையுமின்று
    எளிதாய் ஒதுக்கிட இயலாது உணர்வீர்
    இயற்கையின் சீற்றம் ஒன்றுதான்
    மனிதர்களை இணைத்திட வல்லதா?///


    சரியாக சொல்லியிருக்கீங்க அக்கா!

    துன்பம் வந்த பொழுது,மக்கள் துயரம் அடைந்த பொழுது அக்கம்பக்கத்து நாடுகள் தானாகவே வந்து உதவி செய்வதை வரவேற்றவர்கள்
    இந்த சூழலிலும் கண்டிப்பாக அண்டை நாட்டின் ஆலோசனையினை ஏற்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. பொருந்தச் சொல்லியிருக்கிறீர்கள்!!

    //'நாளை'யைக் காண
    நாட்டினிலே யாரிருப்பார்?//

    ???

    பதிலளிநீக்கு
  4. //யுத்தம் நிறுத்திடுங்கள் சத்தம் ஓயட்டுமே
    அமைதி காணுங்கள் அன்பு நிலவட்டுமே
    தீர்வு காணுங்கள் அறம் தழைக்கட்டுமே
    மனம் வையுங்கள் பார் புகழட்டுமே//

    இதுதான் அனைவரது ஆசையும்கூட!!

    பதிலளிநீக்கு
  5. சரியாக சொல்லியிருக்கீங்க அக்கா!

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு வரியும் மிக மிக மிக அற்புதமாய் செதுக்கியிருக்கீங்க.

    simply superb!

    படிக்கும் போதே ஒரு உணர்வைத் தருது. fantastic.

    ///இயற்கையின் சீற்றம் ஒன்றுதான்
    மனிதர்களை இணைத்திட வல்லதா?///

    உலகெங்கிலும், மிக வேதனையான உண்மை இது.

    Hats off!

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை சகோதரி.
    மிகத் தெளிவான, ஆழமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  8. //நேற்று மடிந்தோரும்
    இன்று மாள்வோருமாய்
    நாழிகையோடு நாட்களும்
    மாதங்களோடு வருடங்களும்
    கரைந்து கொண்டேயிருக்க
    'நாளை'யைக் காண
    நாட்டினிலே யாரிருப்பார்?//

    அருமையான வரிகள். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  9. அர்த்தம் கொண்ட வார்த்தைகளின் ஆழம் பிரமிக்கவைக்கிறது. மனதைகனக்கவைக்கும் கவிதை

    பதிலளிநீக்கு
  10. மிக அழகாக கூறியுள்ளீர்கள்.

    /*ஒரே பூமியின் புத்திரர்
    ஒரே நாட்டினில் வாசம்
    ஒரே காற்றினை சுவாசம்
    ஒருவொருக்கொருவர் ஏன்
    வைத்திடலாகாது நேசம்?*/
    அருமை.

    /*இயற்கையின் சீற்றம் ஒன்றுதான்
    மனிதர்களை இணைத்திட வல்லதா?
    முயற்சியால் மாற்றம் கொண்டு வந்து
    இனியாவது அமைதி கண்டிடல் நல்லதா*/
    உண்மை.
    ஈழத்தில் விரைவில் அமைதி நிலவ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. /ஆறறிவைத் தந்தான் ஆண்டவன் நமக்கு
    அடுத்தவர் உயிரைப் பறிப்பதற்கல்ல/

    ஒவ்வொருக்கும்
    உறைக்க வேண்டும்
    உணரவும் வேண்டும்


    /உள்ளத்தின் ஆதங்கத்தை உள்ளபடி உரைத்துள்ளேன் அமைதிக்கான பிரார்த்தனையாய்./

    கடவுளின்
    காதுகளுக்கு
    மட்டுமல்ல
    மனிதரின்
    மனங்களும் இந்த
    பிரார்த்தனை
    வீழ்ந்து
    விடியல் ஒன்று
    விடியட்டும்


    /மாற்றுக் கருத்துடையோர் மன்னிப்பாராக.../

    வேதனையை தீர்ப்பதில்
    வேறு கருத்து இருக்காது
    பற்றி எரிவதைக்கண்டு
    பதைக்கும் உள்ளங்களுக்கு

    பதிலளிநீக்கு
  12. தமிழ் பிரியன் said...

    //ரொம்ப தெளிவான கவிதை! இன்றைய நிலையில் மிகத் தேவையானதும் கூட! //

    தெளிவான ஒரு பின்னூட்டத்தைத் தந்து நான் எழுதியது சரியா என்கிற ஐயத்தில் இருந்த என்னைத் தெளிய வைத்ததற்கு நன்றி தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  13. ஆயில்யன் said...
    ////மற்றவர் உதவியைப் பெற்றிட்ட நீவிர்
    ஏனென்று கேட்போர் எவரையுமின்று
    எளிதாய் ஒதுக்கிட இயலாது உணர்வீர்
    இயற்கையின் சீற்றம் ஒன்றுதான்
    மனிதர்களை இணைத்திட வல்லதா?//

    சரியாக சொல்லியிருக்கீங்க அக்கா!////

    நன்றி ஆயில்யன்.

    //துன்பம் வந்த பொழுது,மக்கள் துயரம் அடைந்த பொழுது அக்கம்பக்கத்து நாடுகள் தானாகவே வந்து உதவி செய்வதை வரவேற்றவர்கள்
    இந்த சூழலிலும் கண்டிப்பாக அண்டை நாட்டின் ஆலோசனையினை ஏற்க வேண்டும்!//

    இப்போது நீங்கள் இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  14. /மற்றவர் உதவியைப் பெற்றிட்ட நீவிர்
    ஏனென்று கேட்போர் எவரையுமின்று
    எளிதாய் ஒதுக்கிட இயலாது உணர்வீர்
    இயற்கையின் சீற்றம் ஒன்றுதான்
    மனிதர்களை இணைத்திட வல்லதா?//

    மிக அருமையா சொல்லியிருக்கீங்க.

    யுத்தத்தின் பாதிப்பு அதிகமாக ஏற்படுவது வடக்கில்தான். விலைவாசி ஏற்றம், அன்றாட வாழ்க்க்கை பாதித்தல் ஆகியவை தெற்கை விட வடக்கில் மிக மிக மிக அதிகம்.

    நீங்களே சொல்லியிருப்பது போல் அமைதியைத்தான் அனைவரும் வேண்டுகின்றோம்.

    அழகான நாடு, சிங்கப்பூரைவிட பன்மடங்கு உயர்ந்திருக்க வேண்டிய நாடு இப்போது இருக்கும் நிலை மனதை வருத்துகிறது.

    அமைதிக்காக பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  15. சந்தனமுல்லை said...
    ////பொருந்தச் சொல்லியிருக்கிறீர்கள்!!

    //'நாளை'யைக் காண
    நாட்டினிலே யாரிருப்பார்?//

    ??? ////

    ஆண்களும், பெண்களும், வயோதிகரும் கூடவே சின்னஞ்சிறு மலர்களின் உயிர்களும் மண்ணிலே உதிர்வதைப் பார்க்கையில் இந்தக் கேள்வி தோன்றுவதை உங்களுக்கும் தடுக்க இயலவில்லை
    அல்லவா:( ?

    பதிலளிநீக்கு
  16. சந்தனமுல்லை said...
    ////யுத்தம் நிறுத்திடுங்கள் சத்தம் ஓயட்டுமே
    அமைதி காணுங்கள் அன்பு நிலவட்டுமே
    தீர்வு காணுங்கள் அறம் தழைக்கட்டுமே
    மனம் வையுங்கள் பார் புகழட்டுமே//

    இதுதான் அனைவரது ஆசையும்கூட!! ////

    ஆமாம் முல்லை, அந்த ஆசை நிறைவேறப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  17. கடையம் ஆனந்த் said...

    //சரியாக சொல்லியிருக்கீங்க அக்கா!//

    கருத்துக்கு மிக்க நன்றி ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  18. SurveySan said...

    //ஒவ்வொரு வரியும் மிக மிக மிக அற்புதமாய் செதுக்கியிருக்கீங்க.

    simply superb!

    படிக்கும் போதே ஒரு உணர்வைத் தருது. fantastic.//

    நன்றி சர்வேசன்.

    ///இயற்கையின் சீற்றம் ஒன்றுதான்
    மனிதர்களை இணைத்திட வல்லதா?//

    உலகெங்கிலும், மிக வேதனையான உண்மை இது. ///

    உண்மைதான் இந்தியாவிலும் பாருங்கள் அந்த சமயம் சாதி மத இன வேறுபாடு எல்லாம் மறந்து எல்லா இதயங்களும் எப்படி இணைந்திருந்தன. இப்போது சுனாமியை 'மற்றும் ஒரு வரலாற்று வேதனை' என்ற அளவில் குறிப்பெழுதி மறந்து விட்டு குண்டு வைக்கக் கிளம்பி விட்டனர் :(( !

    //Hats off!//

    நன்றி. தூயாவின் அழைப்புக்காக எழுத நினைத்து நினைத்து அவரது தனித்தனிக் கேள்விகளுக்கு எப்படி பதில் தருவது என்ற சிந்தனையிலேயே அதைத் தள்ளிப் போட்டு வந்த என்னை, உங்கள் 'லகுடபாண்டிகள்' http://surveysan.blogspot.com/2008/11/blog-post.html பதிவே ஒரே மூச்சில் இக்கவிதையை எழுத வைத்தது என்பதை இங்கு கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். அதற்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. எம்.ரிஷான் ஷெரீப் said...
    //அருமையான கவிதை சகோதரி.
    மிகத் தெளிவான, ஆழமான வரிகள்.//

    உங்களது இந்த ஆணித்தரமான கருத்து நான் எழுதியது சரிதான் என்கிற தைரியத்தை எனக்குத் தருகிறது. மிக்க நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  20. கிரி said...
    ////நேற்று மடிந்தோரும்
    இன்று மாள்வோருமாய்
    நாழிகையோடு நாட்களும்
    மாதங்களோடு வருடங்களும்
    கரைந்து கொண்டேயிருக்க
    'நாளை'யைக் காண
    நாட்டினிலே யாரிருப்பார்?//

    அருமையான வரிகள். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புவோம்.////

    ஆமாம் நல்லது நடக்கும். நம்புவோம்.
    நம்பிக்கைதான் வாழ்க்கை.

    கருத்துக்கும் கொடுத்த நம்பிக்கைக்கும் மிக்க நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  21. ஷைலஜா said...
    //அர்த்தம் கொண்ட வார்த்தைகளின் ஆழம் பிரமிக்கவைக்கிறது. மனதைகனக்கவைக்கும் கவிதை//

    கருத்துக்கு மிக்க நன்றி ஷைலஜா. மனதைக் கனக்க வைக்கும் நிகழ்வுகளின் வெளிப்பாடும் அவ்வாறே அமைந்து விடுகிறது இல்லையா?

    பதிலளிநீக்கு
  22. இன்றைய் சூழலுக்கு தகுந்த நல்ல தமிழ் கவிதை, பொருள் பொதிந்த நடையில்.

    பதிலளிநீக்கு
  23. அமுதா said...
    //மிக அழகாக கூறியுள்ளீர்கள்.

    /*ஒரே பூமியின் புத்திரர்
    ஒரே நாட்டினில் வாசம்
    ஒரே காற்றினை சுவாசம்
    ஒருவொருக்கொருவர் ஏன்
    வைத்திடலாகாது நேசம்?*/
    அருமை.//

    நன்றி. இது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் எவருக்கும் பொருந்தக் கூடியதாயிற்றே அமுதா.
    "உடன் பிறந்தவர்களைப் போலே-இவ்
    வுலகினில் மனிதரெல் லோரும்"
    எல்லோரும் இப்படி நினைத்திட்டால் உலகின் எந்த எல்லையிலும் மோதல் இருக்காதல்லவா?

    //ஈழத்தில் விரைவில் அமைதி நிலவ வேண்டும்.//

    ஆமாம் எல்லோரும் அதற்காகப் பிரார்த்திப்போம். கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. திகழ்மிளிர் said...
    //ஆறறிவைத் தந்தான் ஆண்டவன் நமக்கு
    அடுத்தவர் உயிரைப் பறிப்பதற்கல்ல/

    ஒவ்வொருக்கும்
    உறைக்க வேண்டும்
    உணரவும் வேண்டும்//

    உணர்ந்தாக வேண்டிய கட்டத்தில் இப்போது.

    ///உள்ளத்தின் ஆதங்கத்தை உள்ளபடி உரைத்துள்ளேன் அமைதிக்கான பிரார்த்தனையாய்./

    கடவுளின்
    காதுகளுக்கு
    மட்டுமல்ல
    மனிதரின்
    மனங்களும் இந்த
    பிரார்த்தனை
    வீழ்ந்து
    விடியல் ஒன்று
    விடியட்டும்//

    சரியாகச் சொன்னீர்கள். கடவுளின் கருணையால் மனிதர்களின் மனங்களிலும் கருணை நிரம்பட்டும். விரைவில் விடியட்டும்.

    ////மாற்றுக் கருத்துடையோர் மன்னிப்பாராக.../

    வேதனையை தீர்ப்பதில்
    வேறு கருத்து இருக்காது
    பற்றி எரிவதைக்கண்டு
    பதைக்கும் உள்ளங்களுக்கு//

    அவ்வாறே நம்புகிறேன் திகழ்மிளிர்.
    வருகைக்கும் ஆணித்தரமான கருத்துக்களை அழுத்தமாக உரைத்தமைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. புதுகைத் தென்றல் said...
    //யுத்தத்தின் பாதிப்பு அதிகமாக ஏற்படுவது வடக்கில்தான். விலைவாசி ஏற்றம், அன்றாட வாழ்க்க்கை பாதித்தல் ஆகியவை தெற்கை விட வடக்கில் மிக மிக மிக அதிகம்.//

    சிலகாலம் இலங்கையில் வாழ்ந்தபடியால் அங்குள்ள நிலவரம் சரியாகத் தெரிந்திருக்கிறது உங்களுக்கு.

    //நீங்களே சொல்லியிருப்பது போல் அமைதியைத்தான் அனைவரும் வேண்டுகின்றோம்.//

    உண்மை.

    //அழகான நாடு, சிங்கப்பூரைவிட பன்மடங்கு உயர்ந்திருக்க வேண்டிய நாடு இப்போது இருக்கும் நிலை மனதை வருத்துகிறது.//

    சரியாகச் சொன்னீர்கள். இலங்கையின் இயற்கை எழிலுக்கும் ஈடேது.

    //அமைதிக்காக பிரார்த்திப்போம்.//

    பிரார்த்தனையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  26. அமிர்தவர்ஷினி அம்மா said...
    //இன்றைய் சூழலுக்கு தகுந்த நல்ல தமிழ் கவிதை, பொருள் பொதிந்த நடையில்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.

    பதிலளிநீக்கு
  27. /*எம் மொழி பேசுவதால்
    எமக்கு மட்டுமா சகோதரர்
    உம் மண்ணில் பிறந்ததால்
    உமக்கும் அன்றோ சகோதரர்?*/

    உண்மை தான். நல்லா தெளிவா சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  28. Truth said...
    //*எம் மொழி பேசுவதால்
    எமக்கு மட்டுமா சகோதரர்
    உம் மண்ணில் பிறந்ததால்
    உமக்கும் அன்றோ சகோதரர்?*/

    உண்மை தான். நல்லா தெளிவா சொல்லியிருக்கீங்க.//

    கருத்துக்கு நன்றி ட்ரூத்.

    பதிலளிநீக்கு
  29. பெளத்தம் வாழும் மண்ணில்
    இரத்தம் ஆறாகப் பெருகுவது
    எத்தனை அபத்தம் என
    உணர்வதெப்போ?
    மனிதர்கள் மனிதர்களாய்
    இருப்பதெப்போ?

    இதெற்கெல்லாம் பதில்
    கிடைக்க எத்தனை காலம் ஆகுமோ?

    பதிலளிநீக்கு
  30. இந்தத் துயர் தருணத்திற்கேற்ற ஆழமான கவிதை. எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை, உங்களுக்கு இலகுவில் வரும் கவிதை வரிகளில் சொல்லி இருக்கும் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  31. அழகான கவிதை.பின்னூட்டம் வரை எல்லோரும் முகம் காட்டியே கருத்து சொன்னது உங்கள் கவிதையின் வெற்றியைக் காட்டுகிறது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. நல்ல கவிதை.
    மதம் பிடித்தால் பவுத்தம் கூட கொல்லும் போல.

    பதிலளிநீக்கு
  33. இன்னொருமுறை ஒரு நல்ல ஆழமான கவிதை தந்து இருக்கீங்க! வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

    *****பெளத்தம் வாழும் மண்ணில்
    இரத்தம் ஆறாகப் பெருகுவது
    எத்தனை அபத்தம் என
    உணர்வதெப்போ? மனிதர்கள் மனிதர்களாய் இருப்பதெப்போ?*****

    புத்தர் பாதையில் போறவங்க ஏன் இப்படி இருக்காங்க என்று எனக்கு எப்போவுமே உறுத்தும் ங்க!

    புத்தரையும் அவர் கொள்கைகளையும் இவர்களைவிட வேற யாரும் அவமானப்படுத்த முடியாது! :-(

    பதிலளிநீக்கு
  34. //எம் மொழி பேசுவதால்
    எமக்கு மட்டுமா சகோதரர்
    உம் மண்ணில் பிறந்ததால்
    உமக்கும் அன்றோ சகோதரர்?//

    //ஒரே பூமியின் புத்திரர்
    ஒரே நாட்டினில் வாசம்
    ஒரே காற்றினை சுவாசம்
    ஒருவொருக்கொருவர் ஏன்
    வைத்திடலாகாது நேசம்?//

    அருமையான, பொருள் பொதிந்த, தற்போது தேவையான சிந்தனையை அழகாகச் செதுக்கியிருக்கிறீர்கள். விரைவில் அமைதி நிலவ என்னுடைய பிரார்த்தனைகளும்...

    பதிலளிநீக்கு
  35. ஜீவன் said...
    //இதெற்கெல்லாம் பதில்
    கிடைக்க எத்தனை காலம் ஆகுமோ?//

    ஆமாம் ஜீவன். அதற்கெல்லாம் 'காலம்' ஒன்றுதான் பதில் சொல்ல முடியும். நம்பிக்கையோடு காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  36. No words can really say that how this poem touched my heart!
    Every word, every letter in this poem has so many answers for the people who have forgotten that they don't have rights to destroy a race in their (Our) country!!
    I wish every Sinhalese could understand this poem...
    Great work!
    I wish I could translate this poem (I know that I can't bring the same feelings and the same fire of your words!) and read that to every Sinhalese person I know!

    Love you Akka!

    -Mathu Krishna (A representative of the endangered species in Sri lanka!)

    பதிலளிநீக்கு
  37. "பெளத்தம் வாழும் மண்ணில்
    இரத்தம் ஆறாகப் பெருகுவது
    எத்தனை அபத்தம் என
    உணர்வதெப்போ?"

    அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை சகோதரி. மண்ணாசையின் முன் மனிதம் எம்மாத்திரம்? கையறு நிலையில் காத்திருக்கிறோம். உங்கள் பின்னூட்டத்தின் வழியாக வந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  38. அனுஜன்யா said...
    //இந்தத் துயர் தருணத்திற்கேற்ற ஆழமான கவிதை. //

    இந்தத் துயர் தீரவேண்டும் என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடே இக்கவிதை.

    //எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை, உங்களுக்கு இலகுவில் வரும் கவிதை வரிகளில் சொல்லி இருக்கும் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். //

    உண்மைதான் அனுஜன்யா, இப்பதிவு பெரும்பாலரின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே வந்திருக்கும் பின்னூட்டங்கள் உணர்த்துகிறது. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. ராஜ நடராஜன் said...
    //அழகான கவிதை.//

    நன்றி.

    //பின்னூட்டம் வரை எல்லோரும் முகம் காட்டியே கருத்து சொன்னது உங்கள் கவிதையின் வெற்றியைக் காட்டுகிறது.//

    ஆமாம் அத்தனை பேரும் அமைதிக்கான பிரார்த்தனையில் கலந்து கொண்டதாகவே கருதுகிறேன்.

    முகம் காட்டாமலும் ஒருவர் 'முதலில் இலங்கையின் சூழலைச் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்' என நீண்ட பின்னூட்டமிட்டிருந்தார். தெரிந்து கொண்டேன். சொன்னதில் சிலவை சரியே ஆனாலும் அனானி கருத்தாக வந்த படியால் மட்டுறுத்தி விட்டேன். அதற்காக மட்டுமின்றி முடிவில்லா விவாதத்தைத் தவிர்க்கவும்தான். இந்த இடத்தில் முகம் காட்டாத அந்த அனானிக்கு நான் சொல்ல விரும்புவதை சொல்லிக் கொள்ளட்டுமா ராஜ நடராஜன்?

    இப்பதிவு எவர் செயலையும் நியாயப் படுத்தவில்லை. எல்லாப் பக்க தவறுகளையும் சுட்டிக் காட்டி அமைதிக்கான வேண்டுகோளாக பிரார்த்தனையாகவே வைக்கப் பட்டிருக்கிறது.

    //வாழ்த்துக்கள்.//

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜ நடராஜன்.

    பதிலளிநீக்கு
  40. குடுகுடுப்பை said...
    //நல்ல கவிதை.//

    முதல் வருகைக்கு நன்றி.

    //மதம் பிடித்தால் பவுத்தம் கூட கொல்லும் போல.//

    என்ன வேதனையான முரண்பாடு.

    பதிலளிநீக்கு
  41. //வருண் said...
    //இன்னொருமுறை ஒரு நல்ல ஆழமான கவிதை தந்து இருக்கீங்க! வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!//

    வாருங்கள் வருண். மிக்க நன்றி.

    //*****பெளத்தம் வாழும் மண்ணில்
    இரத்தம் ஆறாகப் பெருகுவது
    எத்தனை அபத்தம் என
    உணர்வதெப்போ? மனிதர்கள் மனிதர்களாய் இருப்பதெப்போ?*****

    புத்தர் பாதையில் போறவங்க ஏன் இப்படி இருக்காங்க என்று எனக்கு எப்போவுமே உறுத்தும் ங்க!//

    முரண்பாடுகளின் மொத்த உருவமாய்..:(

    //புத்தரையும் அவர் கொள்கைகளையும் இவர்களைவிட வேற யாரும் அவமானப்படுத்த முடியாது! :-( //

    சரியென்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  42. கவிநயா said...
    //அருமையான, பொருள் பொதிந்த, தற்போது தேவையான சிந்தனையை அழகாகச் செதுக்கியிருக்கிறீர்கள்.//

    கருத்துக்கு மிக்க நன்றி கவிநயா.

    //விரைவில் அமைதி நிலவ என்னுடைய பிரார்த்தனைகளும்... //

    நன்றி. அனைவரின் பிரார்த்தனையும் அதுவாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  43. MathuKrishna said..
    //No words can really say that how this poem touched my heart!
    Every word, every letter in this poem has so many answers for the people who have forgotten that they don't have rights to destroy a race in their (Our) country!!//

    நன்றி. நான் சொல்ல வந்ததை மிகச் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள்.

    //I wish I could translate this poem (I know that I can't bring the same feelings and the same fire of your words!) //

    உங்கள் விருப்பம் போல செய்யுங்கள். இந்தச் சின்ன வயதில் உங்கள் துடிப்பான பொறுப்புணர்வு ஆச்சரியத்தைத் தருகிறது. அமைதிக்கான முயற்சியாக அது அமைய வாழ்த்துக்கள். ஆனால் ஒரு கை ஓசையாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தீர்வுக்கான முயற்சி இரண்டு பக்கத்திலிருந்தும் வர வேண்டும். தீர்வு எந்த வகையில் அமைய வேண்டும் என்பதெல்லாம் நம் கையில் இல்லை. ஆனாலும் தீர்வு எடுக்க சம்பந்தப் பட்டவர்கள் மனம் வைக்க வேண்டும் என்பதே எல்லோரது பிரார்த்தனையாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  44. தமிழ்நதி said...
    //"பெளத்தம் வாழும் மண்ணில்
    இரத்தம் ஆறாகப் பெருகுவது
    எத்தனை அபத்தம் என
    உணர்வதெப்போ?"

    அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை சகோதரி. மண்ணாசையின் முன் மனிதம் எம்மாத்திரம்? கையறு நிலையில் காத்திருக்கிறோம்.//

    காத்திருப்பு வீண் போகாது. மனிதம் தழைக்கும். நம்பிக்கையோடு பிரார்த்திப்போம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தமிழ்நதி.

    பதிலளிநீக்கு
  45. ஆழமான அர்த்தம் பொதிந்த வரிகள். இதுக்கெல்லாம் யார் காரணம், ஏன் இப்படி நடக்கிறது, இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்கும். தொடரும் கேள்விகளை, படரும் கவிதையாய் வடித்த விதம் அழகு. அமைதி நிலவட்டும், அன்பு செழிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  46. சதங்கா (Sathanga) said...
    //ஆழமான அர்த்தம் பொதிந்த வரிகள். இதுக்கெல்லாம் யார் காரணம், ஏன் இப்படி நடக்கிறது, இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்கும். தொடரும் கேள்விகளை, படரும் கவிதையாய் வடித்த விதம் அழகு.//

    கருத்துக்கு நன்றி சதங்கா. தொடரும் கேள்விகள் எல்லோரையும் துரத்துகிறது. விரைந்து விடை கிடைத்து விடியட்டும்.

    //அமைதி நிலவட்டும், அன்பு செழிக்கட்டும்.//

    அதற்காகப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  47. நீளமான கவிதையாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சோர்வின்றி படிக்கும்படி எழுதி விடுகின்றீர்கள். இன்றைக்கு மிகவும் அவசியமான கவிதை இது :(

    பதிலளிநீக்கு
  48. பாத்துப் பாத்து வார்த்தைகளை கோத்துக் கோத்து தொடுத்த முத்துச்சரம்!
    கண்ணீர் சொட்டும் சரம்!
    படித்துப் படித்து ரசித்தேன் பல தரம்!
    சமூகப் பிரக்ஞையோடு எழுதும் கவிதை நல்ல தரம்!
    இது இறைவன் உனக்களித்த வரம்!!!

    பதிலளிநீக்கு
  49. அருமையான கவிதை ராமலக்ஷ்மி..மனதைச் சுடும் துளைக்கும் கருத்துகள்..எண்ணவேகம்..

    பதிலளிநீக்கு
  50. புதுகை.அப்துல்லா said...
    //நீளமான கவிதையாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சோர்வின்றி படிக்கும்படி எழுதி விடுகின்றீர்கள்.//

    சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வித்தை எனக்கு கை வராத ஒன்றாகத்தான் இருக்கிறது:(. நல்லவேளை சோர்வின்றி படிக்க முடிகிறது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்:)!

    //இன்றைக்கு மிகவும் அவசியமான கவிதை இது :(//

    நன்றி அப்துல்லா!

    பதிலளிநீக்கு
  51. நானானி said...
    //கண்ணீர் சொட்டும் சரம்!
    படித்துப் படித்து ரசித்தேன் பல தரம்!
    சமூகப் பிரக்ஞையோடு எழுதும் கவிதை நல்ல தரம்!
    இது இறைவன் உனக்களித்த வரம்!!!//

    ஈழத் தமிழர் துயர் விரைவில் துடைக்கப் பட வேண்டும். அவர் விழிகளில் கண்ணீர் இனி விழாதிருக்க வேண்டும். கவிதை வேண்டுவது அதைத்தான். நாம் யாவரும் விரும்புவதும் அதைத்தான்.

    மிக்க நன்றி நானானி.

    பதிலளிநீக்கு
  52. பாச மலர் said...
    //அருமையான கவிதை ராமலக்ஷ்மி..மனதைச் சுடும் துளைக்கும் கருத்துகள்..எண்ணவேகம்..//

    வாருங்கள் பாசமலர். ”என்று புலரும் பொழுது” என இதே ஆதங்கத்துடனான தங்கள் இன்றைய கவிதையைக் கண்டேன். விடியல் விரைவில் வரும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  53. ஒவ்வொரு வரியும், வார்த்தையும் முத்துக்கள்!!

    மிக அழகான உள்ளம் உங்களது. பளிங்கு போல் பளிச்சிடுகிறது.

    I salute ur views :clap:

    பதிலளிநீக்கு
  54. @ ஷக்திப்ரபா,

    பல விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குப் பிறகு இப்போது இலங்கையில் போர் நிறுத்தப் பட்டு விட்டது. அகதிகள் ஆனவர் அவரவர் வாழ்ந்த இடங்களுக்குத் திரும்பச் சென்று வாழ்க்கையை ஆரம்பிக்க ஆவன செய்யப் படுவதாகவும் செய்திகள் வந்தபடி உள்ளன. இனியாவது அவர்கள் வாழ்வு அமைதியாக இருக்க நம் பிரார்த்தனைகள்.

    கருத்துக்கு நன்றி ஷக்தி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin