புதன், 19 நவம்பர், 2008

இரத்த பாசம் (பாகம் 1)

சமீபத்திய சட்டக் கல்லூரி சம்பவம் நமது சமுதாய அமைப்பின் சீர்கேடு மட்டுமல்ல நாட்டின் சாபக்கேடும் கூட.

பாசத்தைக் கொட்டி வளர்த்து..
இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து..
கனவுகளைக் கண்களில் ஏந்தி..
நினைப்பை நெஞ்சில் தாங்கித்தான்..
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறார்கள். இது எந்தத் தட்டு மக்களுக்கும் பொருந்தும். இந்தப் புரிதல் இருந்தால் பொறுப்புணர்வும் கூடவே வரும் மாணவருக்கு. ஆனால் இவர்களை திசை திருப்பும் தீயசக்தியாக அல்லவா இருக்கிறது சமுதாயம்?

தங்கள் சுயநலத்துக்காக மாணவர்களை சாதி மதம் கட்சியின் பெயரில் பகடைக் காய்களாய் உருட்டிக் கொண்டிருக்கும் சமுதாயத்துக்கு என்று வரும் புத்தி என்கிற வேதனை எழ இக் கதையைப் பதிவிடும் எண்ணம் தோன்றியது.

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட கதையாகையால் அந்தக் காலக் கட்டத்தை மனதில் கொண்டு வாசித்தால் ‘லாஜிக்’ இடிக்காது. அப்படியே இடித்தாலும் இக்கதையில் காணப்படும் உணர்வுகள் இன்றளவும் உயிர்ப்பானவை. உண்மையானவை.

இனி கதை...



"லே மாரி!” என்ற குரலுடன் தொடர்ச்சியான சைக்கிள் மணியோசையும் கேட்க ‘யாரோ கூப்புடுதாக்ல இருக்கு. என்னான்னு பாருமய்யா” தாயி கணவனை உலுக்கினாள். தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வெளியில் வந்தான் மாரி.

“அடடே! டீக்கடை அண்ணாச்சிங்களா? வாங்க வாங்க”

“ஆமா, விடிஞ்சும் விடியாம மூணு மணிக்கெல்லாம் ஒங்கூட்டுல விருந்து சாப்பிடத்தான் கெளம்பி வந்திருக்கனாக்கும்” சலித்தபடி கையிலிருந்த உள்நாட்டு உறையை நீட்டினார் கண்ணுச்சாமி.

என்னமோ மகனையே பார்ப்பது போல மாரி முகம் மலர அதை வாங்கிக் கொண்டான்.

“நெதமும் எங்க வூட்டைத் தாண்டித்தான் போற வார. நின்னு ‘கடிதாசி வந்திருக்கா’ன்னு கேட்க என்ன கொள்ளை பிடிச்சிருக்கோ” என்று சைக்கிளைத் திருப்பினவரை வழி மறிப்பது போல நின்று கொண்டு “அண்ணாச்சி நல்லாருப்பீக. அப்படியே இதக் கொஞ்சம் வாசிச்சுக் காட்டீர மாட்டீங்களா” கெஞ்சினான் மாரி.

“அடங்கொப்புறானே, எடத்தக் குடுத்தா மடத்த புடுங்கறான் பாரு! காலங்காத்தால ஒன்னோட பெரிய ரோதனயால்ல போச்சு. கடையத் திறக்க நேரமாவுது மாரி. இந்தா.. இந்நேரம் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பஸ்ஸைப் புடிக்கிற சனங்கல்லாம் வர ஆரம்பிச்சிருப்பாங்க. பொழப்பக் கெடுக்காதப்பா. வேற யாருட்டயாச்சும் கேட்டுக்க”

தன்னை விலக்கி விட்டு சைக்கிளில் விரைந்தவரை ஒரு கணம் வெறித்துப் பார்த்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தான் மாரி.

ன்னாத்துக்கு இந்தாக் கோவமா ஏசுதாரு?” மெலிந்த குரலில் வினவிய தாயி மெதுவாக எழுந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.

”ஆமா, அட்ரசு இல்லாத குடிசேல இருந்துக்கிட்டு அடுத்தவன் வூட்டு மூலமா கடிதாசி வாங்குறோம்ல! கொண்டு தாரவன் நாலு கொடை குடுத்தா அதையும் வாங்கிக் கட்டிக்கத்தான் வேணும்”

“என்ன எம்புள்ள கதிருட்டேருந்து கடிதாசியா” பூரித்துப் போய் கேட்டாள்.

“பாரேன், நேத்து ராவையிலேருந்து பேசக் கூட திராணியில்லன்னு மொடங்கிக் கிடந்தவ, புள்ள கடிதாசி போட்டிருக்கான்னதும் என்னமா கூவுற” கிண்டலாகச் சிரித்தபடி அவள் அருகே அமர்ந்து கடித உறையைப் பிரிக்கப் போனான்.

“இந்தாய்யா, போனவாட்டி போல எக்குத் தப்பா கிழிச்சு வைக்கப் போறீக.பேசாத ஆருட்ட படிக்கத் தரப் போறீகளோ அவுகளே பிரிக்கட்டும்னு வுடும்” தாயி பதறி எச்சரித்தாள்.

”அதுஞ்சரிதான், இந்தக் கோட்டிக்கார பயமவனும் ஏந்தான் நீல ஒறையில எழுதறானோ. கேட்டாக்க கார்டு போட்டா கவுரவக் கொறச்சலுங்கறான். என்னமோ போ..!” என்றபடி கடிதத்தை வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டு எழுந்தான்.

”சரி தாயீ நா கெளம்புதேன். அப்புறம் மாடுங்க கத்த ஆரம்பிச்சிரும். இன்னிக்கு சோறு ஒண்ணும் ஆக்காதே. பழசு கெடக்குல்லா. படுத்து நல்லா தூங்கி முழி”

துண்டை தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு கிளம்பியவனை “ஏன்யா காசு ஏதும் கேட்டு எழுதியிருக்க மாட்டானுல்ல” தாயியின் பரிதவிப்பான கேள்வி தடுத்து நிறுத்தியது.

“போ புள்ள. போன மாசந்தான ஐநூறு ரூவா அனுப்பிச்சோம். திரும்பயும் கேட்டு எழுத அத்தன வெவரங் கெட்டவனா? ‘அனுப்பிச்சது வந்து சேந்தது ரொம்ப சந்தோசம்’னு எழுதியிருப்பான்”

“என்னமோய்யா. விக்கக் கூட வூட்ல பொட்டுச் சாமான் கெடயாது. இருந்த ஒண்ணு ரெண்டு அண்டா குண்டானையும் வித்து அனுப்பியாச்சு”.

“அட, மனசப் போட்டு ஒழப்பிக்காத. நா வருசையா எல்லா வூட்டுலேயும் தொழுவெல்லாஞ் சுத்தம் பண்ணிட்டு, மாடுங்களக் குளுப்பாட்ட வாய்க்காலுக்குப் பத்திட்டுப் போறதுக்கு முன்னால, ஒரு ஆறு மணி வாக்கில இங்கன வந்து விசயத்த சொல்லிப்புட்டுப் போறன். அதுக்குள்ள ஆரும் அம்புடாமயா போயிருவாக வாசிச்சு சொல்ல”

மனைவியின் அருகில் வந்து அவள் தோளைத் தட்டி “நா கதவ சாத்திட்டுப் போறன். கொஞ்ச நேரம் நிம்மதியா தலயச் சாயி” ஆதுரத்துடன் சொல்லி விட்டு வெளியேறினான் மாரி.

வன் மூடிச் சென்ற கதவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் தாயி.

‘கடவுளே இது காசு கேட்டு வந்த கடிதாசியா இருக்கப் படாதே. இந்த மனசனும் நாயாத்தான் அலக்கழியுதாரு. ஊரச் சுத்தி கடனு. எல்லா வூட்டுலயும் முன் பணம் வாங்கிட்டாரு. இனிம ஆருட்டன்னு போயி கேக்க முடியும்’

கணவனை நினைத்து இப்படிக் கலங்கிய உள்ளம் மறுகணமே மகனை நினைத்து மருகத் தொடங்கியது.

‘அவனுந்தான் என்ன செய்வான்? பெரிய எஞ்சனீரு படிப்பு படிக்கான். ஆவாதா பின்ன செலவு? ஆத்தா அப்பன்னு இந்த ரெண்டு உசுரும் கிடக்குந்தன்னியும் இங்கனதான கேக்கும் புள்ள’

எண்ண ஓட்டங்களுக்கிடையே உறங்கிப் போனவள் “ஏ தாயக்கா” என்ற ராக்காயியின் கூப்பாட்டைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.

”எம்மா நேரமா கூப்புடுதேன். கதவயே தெறக்கல. என்னமோ ஏதோன்னு உள்ளார வந்தேன். ஒடம்புக்கு என்னா?”

“ஒரே அசதி, கையுங் காலும் கழண்டுரும் போலல்லா இருக்கு”

“ப்போ, சரி அப்ப நா கெளம்புதேன். நயினார் கொளத்துக்கு அந்தாண்ட வயல்ல அறுப்புக்கு ஆளு கூப்புட்டு லாரி இட்டாந்திருக்காக. இன்னும் அரை மணில கெளம்பிரும். எல்லாரும் போறம். ஆஞ்சு ஓஞ்சு கெடக்கிற நீயி அங்கன வந்த என்னாத்த கிழிக்கப் போற? பேசாத வூட்லதான் வுழுந்து கெட”

’உனக்கென்ன கொடுத்து வச்ச மவராசி. ஒன்னப் போல தெம்பா இருந்தாக்க எம் புருசனை இந்தப் பாடு பட வுடுவனா என்ன’ முணுமுணுத்தபடி மீண்டும் படுக்கப் போனவள் மாரி வருவதைப் பார்த்ததும் ஒற்றைக் கையை ஊன்றி அமர்ந்தாள். அவன் முகத்தைப் பார்த்தே அவளுக்குப் புரிந்து போயிற்று.

“எவ்ளோ வேணுமாம்?”

“முன்னூறு, அதும் அவசரமா வேணுமாம். பரிச்சைக்குக் கட்டணுமாம்”

கவலை தோய்ந்த முகத்துடன் அவள் அருகில் அமர்ந்தான் மாரி.

பாவம் அவனும்தான் என்ன செய்வான். ஓய்வா ஒழிச்சலா? நாள் முழுக்க உழைக்கத்தான் செய்கிறான். ஏழெட்டு வீடுகளில் மாடு கவனிக்கிறான். அதிகாலையில் கிளம்பிப் போனால் தொழுவை சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி தண்ணீர் வைத்து, பால் கறப்பவர் கறக்கின்ற வேளையில் சாணங்களை வரட்டி தட்டி காயப் போட்டு, பின் மேய்ச்சலுக்கு மாடுகளைப் பற்றிச் சென்றால் பொழுது சாயத்தான் திரும்ப முடிகிறது. அதன் பிறகும் கூட முடிகிற போது விறகுக் கடையில் மரம் உடைக்கிற வேலை என எது கிடைத்தாலும் விட்டு வைப்பதில்லை.

தன்னால் ஒரு வேலையில் நிரந்தரமாக இருந்து கணவனுக்கு உதவ முடியவில்லையே என்று தாயிக்குத் தாங்க முடியாத ஆற்றாமையாக இருந்தது. அவள் உடல் நிலை அப்படி. பத்து நாள் வயல் கூலிக்குப் போனால் பத்து நாள் விழுந்து கிடப்பாள். மாரி வேலை பார்க்கும் வீடுகளிலிருந்து நெல் அவிக்க, அரிசி புடைக்க என்று அடிக்கடி அழைப்பு வரும். கணவன் அவர்களிடம் வாங்கியிருக்கும் முன் பணத்தை மனதில் கொண்டு உடம்புக்கு முடியா விட்டாலும் போய் செய்து விட்டு வருவாள்.

போனமுறை வாத்தியார் வீட்டம்மா கூடக் கேட்டாள் ”ஏண்டி தாயீ, எங்க வீட்ல நெரந்தரமா வீட்டு வேலைக்கு இரேன்னு நானும் நாலு மாசமா கேக்கறேன். இந்தா அந்தான்னு மழுப்பிட்டே போறியே. பட்டணம் போல் இப்ப இங்கியும்லா வேலைக்கு ஆளு கிடைக்கறது குதிரக் கொம்பாப் போச்சு. எல்லாம் வீட்டோட இருந்து பீடி சுத்தறதுல சுகங் கண்டுட்டுதுகள்”

இப்படி அந்த அம்மாள் அலுத்துக் கொண்ட போது ”ஏம்மா நெரந்தரமா வாரேன்னு ஒத்துக்கிட்டா சொன்ன வாக்கு பொரளாம நெதம் வரணும். இந்தப் பாவி மவளுக்குதான் பாதி நாள் படுக்கையில போகுதே. வேணா என்னால முடியறப்பல்லாம் வந்து ஒங்களுக்கு ஒத்தாசையா இருக்கேன்” என்றாள் சமாதானமாக.

“ஆமா நீ எப்போ வருவே என்னிக்கு வர மாட்டேன்னு தெரியாத பாத்திரந் துணியெல்லாம் நாறப் போடவா? பாக்க நல்லா திராட்டிக்கமாதான் தெரியுத. முடியல முடியலன்னு ஒனக்கு சும்ம ஒரு மனப் பிராந்திதான்” சுளுவாகச் சொல்லி விட்டாள் அந்த அம்மாள். ஆனாலும் தாயிக்கு அவள் மேல் ஆத்திரம் வரவில்லை. மாதச் சம்பளம் வரக் கூடிய வேலைக்குப் போகும் வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று தன்னைத்தான் நொந்து கொண்டாள்.

’ஹூம் இன்னிய பாட்ட மொதல்ல பாப்போம்’ துரத்திய நினைவுகளைத் துடைத்து உதறினாள்.

ருட்டியாச்சும் கேட்டுப் பாத்தீகளா?” வரப் போகும் பதிலைத் தெரிந்தே கேட்டாள்.

“ஆருட்டன்னு போய் நிக்க? கேட்டோம்னாக்க ‘ஒபகாரச் சம்பளத்தில படிக்கிற பயலுக்கு அப்படி என்ன அடங்காத செலவு’ன்னு மூஞ்சில அடிச்சாப்ல கேக்கறானுக. நம்ம பொறப்ப வச்சு ஏதோ இந்த மட்டும் படிக்க எடம் கிடைச்சுதேன்னு நாம சந்தோசப் பட்டா அதுவே பாதி பயலுவளுக்கு வயித்தெரிச்சலா இருக்கு”

தாயி பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாய் இருந்தாள் சில கணம். பிறகு சுவரைப் பிடித்தபடி எழுந்தவள் நிற்க முடியாமல் தடுமாறினாள். கண்ணை மூடி நின்று ஒருவாறாகத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மெல்ல நடந்து பானையில் இருந்த ஒரு குத்துப் பழஞ்சோற்றையும் பிழிந்தெடுத்து தட்டில் போட்டு சிறிது உப்பும் போட்டு மாரியிடம் நீட்டினாள்.

“ஒனக்கு”

“ஒழைக்கிற மனுசன்.. நீரு சாப்பிடுமய்யா”

”நல்லாருக்கே கத. உக்காரு புள்ள. ரெண்டு பேருமா திம்போம். ஹூம் வயத்துப் பாடு கழியறதே மலைப்பா இருக்கேல என்னன்னுதான் இவன படிக்க வய்க்கப் போறமோ”

“மர வச்சவன் தண்ணீ ஊத்தாதயா போயிருவான். எல்லாக் கஸ்டமும் அவன் படிச்சு முடிக்கந்தன்னிதானே. அதுவர நம்மால முடிஞ்சத ராசாக்கு செய்வோம். வாத்தியார் வூட்டம்மாட்ட சொல்லிப் புடுமய்யா நாளேலருந்து அவுககிட்ட வூட்டு வேலைக்கு சேந்திடறேன்னு. இதச் சொல்லியே முன் பணமும் கேட்டுப் பாரும்”

கனவோடு கணக்குப் போட்டபடி ஒரு கை சோற்றையும் வாயில் போட்டு சாப்பிட்டதாகப் பெயர் பண்ணி விட்டு எழுந்தாள் தாயி. கையையும் முகத்தையும் அலம்பிக் கொண்டு புதிதாக உயிர் வந்தவள் போலத் தெம்புடன் வெளியில் கிளம்ப ஆயத்தமானாள்.

“எங்க கெளம்பிட்டே” ஆச்சரியமாய் கேட்டான் மாரி.

(தொடரும்..)


பாகம்: 2
  • 1990 ஜனவரி மாத ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகையில் வெளியானது]

  • இங்கு வலையேற்றிய பின் டிசம்பர் 12, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.

38 கருத்துகள்:

  1. மீ த பர்ஸ்டு. அட்டெண்டென்ஸ் போட்டுக்கோங்க. வந்து பதிவப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தெள்ளத்தெளிவான எழுத்து நடை.

    வட்டாரப் பேச்சு மொழியில்.

    ரொம்ப நல்லா போறச்ச கதையில தொடரும் போட்டுட்டீங்களே.

    பாகம் 2 எப்போ போடுவீங்க.

    பதிலளிநீக்கு
  3. அருமையான சிறுகதை சகோதரி. லாஜிக் எதுவும் இடிக்கவில்லை. தாயியைப் போல, மாரியைப் போல இதே சூழ்நிலையில் வாழும் அனேகர் இன்றும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. புதுகைத் தென்றல் said...
    //மீ த பர்ஸ்டு. அட்டெண்டென்ஸ் போட்டுக்கோங்க. வந்து பதிவப் படிக்கிறேன்.//

    ஆமா நீங்கதான் முதல். வருகையைப் பதிந்தாயிற்று:)!
    மெதுவாகப் படிங்க!

    பதிலளிநீக்கு
  5. அமிர்தவர்ஷினி அம்மா said...
    //தெள்ளத்தெளிவான எழுத்து நடை.

    வட்டாரப் பேச்சு மொழியில்.//

    தங்கள் ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. இக்கதை நண்பர் வட்டத்தில் வெளிவந்த போது வட்டார வழக்கிற்காகவே பெரிது சிலாகிக்கப் பட்டது:).

    //ரொம்ப நல்லா போறச்ச கதையில தொடரும் போட்டுட்டீங்களே.

    பாகம் 2 எப்போ போடுவீங்க.//

    சீக்கிரமே போடுகிறேன். நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.

    பதிலளிநீக்கு
  6. எம்.ரிஷான் ஷெரீப் said...
    //அருமையான சிறுகதை சகோதரி. லாஜிக் எதுவும் இடிக்கவில்லை.//

    நன்றி ரிஷான். லாஜிக் என சொல்ல வந்தது இந்த மொபைல் உலகில் கடிதம் எழுதுவது மற்றும் அவர்கள் பெறும் கூலி [அடுத்த பாகத்தில் வரும்] சம்பந்தப் பட்டவை.

    //தாயியைப் போல, மாரியைப் போல இதே சூழ்நிலையில் வாழும் அனேகர் இன்றும் இருக்கிறார்கள். //

    உண்மைதான். நடைமுறை வாழ்விலே இன்றைக்கும் பல மாரிகள் தாயிக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் இல்லையா? பொருளாதார ரீதியாக இத்தனை சிரமங்கள் இல்லாத பெற்றோராக இருந்தாலும் கூட இந்தக் கதையில் காணும் உணர்வுகள் எல்லா பெற்றோருக்குமே பொருந்தக் கூடியதுதான்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான வட்டார மொழியில் கதை படித்து படித்து மொழிகளை சொல்லிப்பார்க்கிறேன் :))

    பதிலளிநீக்கு
  8. அழகான நடையில், நல்ல வட்டார மொழி வழக்கு! அடுத்த பகுதியில் மீட் பண்றோம்!

    பதிலளிநீக்கு
  9. ஆயில்யன் said...
    //அருமையான வட்டார மொழியில் கதை//

    நன்றி ஆயில்யன்.

    // படித்து படித்து மொழிகளை சொல்லிப்பார்க்கிறேன் :))//

    அப்படியா, சொல்லிப் பாருங்க பாருங்க :))!

    பதிலளிநீக்கு
  10. தமிழ் பிரியன் said...
    //அழகான நடையில், நல்ல வட்டார மொழி வழக்கு!//

    நன்றி.

    //அடுத்த பகுதியில் மீட் பண்றோம்!//

    அப்படியே ஆகட்டும் தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  11. ஊருப்பக்கம் பேசுற
    தமிழ்! அருமை!


    //“இந்தாய்யா, போனவாட்டி போல எக்குத் தப்பா கிழிச்சு வைக்கப் போறீக.பேசாத ஆருட்ட படிக்கத் தரப் போறீகளோ அவுகளே பிரிக்கட்டும்னு வுடும்” தாயி பதறி எச்சரித்தாள்.//

    இயல்பா எழுதி இருக்கீங்க! அருமை அம்மா!

    நான் முதல்ல இன்லேன்ட் லெட்டர பிரிக்கிரப்போ தப்பாதான்
    பிரிச்சேன்,,,

    பதிலளிநீக்கு
  12. என்னல...பாதில வுட்டுப் போட்ட..தாயி-மாரி மவன் நல்லபடியா படிச்சு முடிக்கோணூமேன்னு மனசு ஆத்தாத்துப் போவுது. வெரசா அடுத்தத எழுதுல, என்ன?

    பதிலளிநீக்கு
  13. வட்டாரமொழி வளம் கதையினை சிறப்பாக்கி இருக்கிறது, இரண்டாம்பாகமும் படித்துவிட்டு விவரமாய் கருத்து சொல்றேன் ராம்லஷ்மி!

    பதிலளிநீக்கு
  14. நல்ல அழகா வந்திருக்கு வட்டார வழக்கு...

    பதிலளிநீக்கு
  15. ஜீவன் said...
    //ஊருப்பக்கம் பேசுற
    தமிழ்! அருமை!//

    நன்றி ஜீவன்.

    //
    //“இந்தாய்யா, போனவாட்டி போல எக்குத் தப்பா கிழிச்சு வைக்கப் போறீக.பேசாத ஆருட்ட படிக்கத் தரப் போறீகளோ அவுகளே பிரிக்கட்டும்னு வுடும்” தாயி பதறி எச்சரித்தாள்.//

    இயல்பா எழுதி இருக்கீங்க! அருமை அம்மா!

    நான் முதல்ல இன்லேன்ட் லெட்டர பிரிக்கிரப்போ தப்பாதான்
    பிரிச்சேன்,,,////

    அப்படியா விஷயம்:)? இப்படித் தப்பா பிரிக்கையில லெட்டரு puzzle மாதிரி ஆயிடும்! எங்க வீட்லயும் நடந்திருக்கு. [ஆனா நான் அப்படி பிரிக்கலேப்பா].

    பதிலளிநீக்கு
  16. நானானி said...
    //என்னல...பாதில வுட்டுப் போட்ட..தாயி-மாரி மவன் நல்லபடியா படிச்சு முடிக்கோணூமேன்னு மனசு ஆத்தாத்துப் போவுது. வெரசா அடுத்தத எழுதுல, என்ன?//

    வாங்க வாங்க நம்மூரு வட்டார வழக்கில வெளுத்துக் கட்றீகளே:)! வெரசான்னா, எவ்ளோ வெரசா..ஊம்ம், வெள்ளி? அது வுட்டா திங்க கெழம, சேரியா?

    பதிலளிநீக்கு
  17. ஷைலஜா said...
    //வட்டாரமொழி வளம் கதையினை சிறப்பாக்கி இருக்கிறது,//

    நன்றி ஷைலஜா.

    //இரண்டாம்பாகமும் படித்துவிட்டு விவரமாய் கருத்து சொல்றேன் ராம்லஷ்மி!//

    நல்லது. தங்கள் மேலான கருத்துக்குக் காத்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
  18. பாச மலர் said...
    //நல்ல அழகா வந்திருக்கு வட்டார வழக்கு...//

    பாராட்டுக்கு நன்றி பாச மலர்.

    பதிலளிநீக்கு
  19. ஒண்ணும் சொல்றதுகில்ல!

    ராமலக்ஷ்மி நல்ல திறமை உங்க கிட்ட இருக்கு.. உங்களுக்கு வரும் பாராட்டு பின்னூட்டங்களுக்கு முற்றிலும் தகுதியானவர் தான் நீங்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. /*பாசத்தைக் கொட்டி வளர்த்து..
    இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து..
    கனவுகளைக் கண்களில் ஏந்தி..
    நினைப்பை நெஞ்சில் தாங்கித்தான்..
    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறார்கள். இந்தப் புரிதல் இருந்தால் பொறுப்புணர்வும் கூடவே வரும் மாணவருக்கு. */
    உண்மை.

    மிக அழகாக வட்டாரப் பேச்சு மொழியில் எழுதி உள்ளீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை...

    பதிலளிநீக்கு
  21. கலக்கிட்டீங்க போங்க. அடுத்த பாகம் எப்போ?

    "அவன் மூடிச் சென்ற கதவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் மாரி"

    தாயி தானே? மாரினு இருக்கு.

    பதிலளிநீக்கு
  22. மிக அழகாக இயல்பான மொழியில், நடையில், கலக்கியிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
  23. அருமையா அப்படியே நீரோட்டமாட்டம் போகுது நடை.


    வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  24. அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்! நல்லா போயிட்டிருந்தது..சீரியல்-ல போடற மாதிரி கட் சொல்லிட்டீங்க :-)
    அதுவும் அந்த பேச்சு வழக்கு..ரொம்ப இயல்பா இருக்கு! ஆனா 19 வருஷத்துக்கு முன்னே-ன்னு..இதுமாதிரி இன்னும் எத்தனை படைப்புகளை வச்சிருக்கீங்க, எங்களுக்கு வெளிவிடாம? :-))

    அப்புறம், உங்க முன்னுரை மணிமகுடம்..ரொம்ப பேசிக்கிட்டே போறேனோ..அப்போ சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணுங்க!!

    பதிலளிநீக்கு
  25. வட்டார வழக்கு மொழியில் சிட்டாய் பயணிக்குது கதை.

    //”அதுஞ்சரிதான், இந்தக் கோட்டிக்கார பயமவனும் ஏந்தான் நீல ஒறையில எழுதறானோ. கேட்டாக்க கார்டு போட்டா கவுரவக் கொறச்சலுங்கறான். என்னமோ போ..!” என்றபடி கடிதத்தை வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டு எழுந்தான்.
    //

    அருமையான அப்ஸர்வேஷன். அதை அப்படியே எழுத்திலும் கொண்டுவந்தது க்ரேட். தொடர்ந்து கலக்குங்க :)))

    பதிலளிநீக்கு
  26. வட்டார மொழி இலகுவாய் வருகிறது. மிக யதார்த்தமான உரையாடல். பிரமாதம். சீக்கிரம், அதாங்க, வெரசா அடுத்த பாகம் எழுதுங்கள். அது சரி, இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லையா? இவ்வளவு திறமை வைத்துக்கொண்டு நிறைய எழுதாவிட்டால் அதுவும் குற்றம்தான். தெரியமா?

    மிரட்டலுடன் அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  27. 1990ல் எழுதிய எழுத்தே இப்படி முத்துபோல் ஜொலிக்கிறதே,இந்த பதினெட்டு ஆண்டுகளில் உங்கள் படைப்புகள் வைரங்களாய் டால் அடிப்பதில் ஆச்சரியம் இல்லை .வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. கிரி said...
    //ஒண்ணும் சொல்றதுகில்ல!

    ராமலக்ஷ்மி நல்ல திறமை உங்க கிட்ட இருக்கு.. உங்களுக்கு வரும் பாராட்டு பின்னூட்டங்களுக்கு முற்றிலும் தகுதியானவர் தான் நீங்கள்.//

    ஒண்ணும் சொல்றதுகில்லன்னு சொல்லிட்டு நிறைய சொல்லிட்டீங்களே கிரி:)!

    //வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அமுதா said...

    //*பாசத்தைக் கொட்டி வளர்த்து..
    இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து..
    கனவுகளைக் கண்களில் ஏந்தி..
    நினைப்பை நெஞ்சில் தாங்கித்தான்..
    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறார்கள். இந்தப் புரிதல் இருந்தால் பொறுப்புணர்வும் கூடவே வரும் மாணவருக்கு. */

    உண்மை.//

    உண்மைதான் இல்லையா அமுதா. ஆனால் அவர்களுக்கு நல்ல வழித்தடம் அமைக்க வேண்டிய சமுதாயமே தடம் புரள வழி வகுப்பதுதான் வேதனை.

    //மிக அழகாக வட்டாரப் பேச்சு மொழியில் எழுதி உள்ளீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை...//

    உங்கள் ரசிப்புக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. Truth said...
    //கலக்கிட்டீங்க போங்க. அடுத்த பாகம் எப்போ?//

    நன்றி ட்ரூத். கூடிய விரைவில் போடுகிறேன் அடுத்த பாகத்தை. பலரும் கேட்டு விட்டார்கள்.

    //"அவன் மூடிச் சென்ற கதவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் மாரி"

    தாயி தானே? மாரினு இருக்கு.//

    அட ஆமாம், அவசரத்தில் கவனக்குறைவில் நேர்ந்த தவறு. அக்கறையுடன் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. உடனேயே திருத்தி விட்டேன் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  31. கவிநயா said...
    //மிக அழகாக இயல்பான மொழியில், நடையில், கலக்கியிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து...//

    பாராட்டுக்கு நன்றி கவிநயா. உங்கள் ஆவலை விரைவில் பூர்த்தி செய்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  32. துளசி கோபால் said...
    //அருமையா அப்படியே நீரோட்டமாட்டம் போகுது நடை.//

    அப்போ முதல் பாகத்துக்கு ஃபுல் மார்க்குன்னு சொல்லுங்க:). ஏன் அடுத்த பாகத்துக்கென்ன என்கிறீர்களா? முடிவு உங்களுக்கு பிடிக்கிறதா பார்ப்போம்:(.

    //வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.//

    மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  33. சந்தனமுல்லை said...
    //அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்! நல்லா போயிட்டிருந்தது..சீரியல்-ல போடற மாதிரி கட் சொல்லிட்டீங்க
    :-)//

    நல்லவேளை, கட் சொன்னது மட்டும்தானே சீரியல் மாதிரி:)!

    //அதுவும் அந்த பேச்சு வழக்கு..ரொம்ப இயல்பா இருக்கு!//

    நன்றி முல்லை.


    //ஆனா 19 வருஷத்துக்கு முன்னே-ன்னு..இதுமாதிரி இன்னும் எத்தனை படைப்புகளை வச்சிருக்கீங்க, எங்களுக்கு வெளிவிடாம? :-))//

    அதிகமில்லை. இன்னும் சில. அவையும் வந்திடும் உங்கள் பார்வைக்கு.

    //அப்புறம், உங்க முன்னுரை மணிமகுடம்..ரொம்ப பேசிக்கிட்டே போறேனோ..//

    ஹி ஹி என்ன நீங்க. இப்படியெல்லாம் பேசினா பிடிக்காம போகுமா..:)?

    //அப்போ சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணுங்க!!//

    செய்திடறேன். நன்றி:)!

    பதிலளிநீக்கு
  34. சதங்கா (Sathanga) said...
    //வட்டார வழக்கு மொழியில் சிட்டாய் பயணிக்குது கதை.//

    பாராட்டுக்கு நன்றி சதங்கா.

    ////”அதுஞ்சரிதான், இந்தக் கோட்டிக்கார பயமவனும் ஏந்தான் நீல ஒறையில எழுதறானோ. கேட்டாக்க கார்டு போட்டா கவுரவக் கொறச்சலுங்கறான். என்னமோ போ..!” என்றபடி கடிதத்தை வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டு எழுந்தான்.
    //

    அருமையான அப்ஸர்வேஷன். அதை அப்படியே எழுத்திலும் கொண்டுவந்தது க்ரேட். தொடர்ந்து கலக்குங்க :)))////

    நன்றி. இன்னொரு விஷயத்தையும் அப்சர்வ் செய்தீர்களா ‘கோட்டிக்காரப்பய’ என்பது தன்னைத்தான் குறிக்கிறது என்பது தெரியவில்லை மாரிக்கு, பாவம்.

    பதிலளிநீக்கு
  35. அனுஜன்யா said...
    //வட்டார மொழி இலகுவாய் வருகிறது. மிக யதார்த்தமான உரையாடல். பிரமாதம்.//

    ரசித்துப் பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றி அனுஜன்யா.

    //சீக்கிரம், அதாங்க, வெரசா அடுத்த பாகம் எழுதுங்கள்.//

    ஆகா, எங்கூரு பாஷ ஒங்களயும் தொத்திக்கிச்சா..? போட்டுருதேன் வெரசா..:)!

    //அது சரி, இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லையா? இவ்வளவு திறமை வைத்துக்கொண்டு நிறைய எழுதாவிட்டால் அதுவும் குற்றம்தான். தெரியமா?//

    உண்மைதான் அதிகம் எழுதுவதில்லை. இது போல இப்போது எழுத வருமா என்பது கூட சற்று சந்தேகமாய் இருக்கிறது. உங்கள் அன்பு மிரட்டலுக்காகவே கண்டிப்பாக முயற்சிக்கிறேன் அனுஜன்யா.

    பதிலளிநீக்கு
  36. goma said...
    //1990ல் எழுதிய எழுத்தே இப்படி முத்துபோல் ஜொலிக்கிறதே,இந்த பதினெட்டு ஆண்டுகளில் உங்கள் படைப்புகள் வைரங்களாய் டால் அடிப்பதில் ஆச்சரியம் இல்லை .வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி கோமா. இந்த முத்தை அந்த தொன்னூறிலேயே வாசித்தவரல்லவா நீங்கள். வாழ்த்துக்களாய் உங்கள் ஆசிகள் என்றும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  37. இரத்த பாசம், ஏவ்வளவு ரத்தத்ஹைஇ உறிஞ்சப் போகிறதோ தெரியவில்லையே.
    அருமையான நாட்டு வழக்கில் அம்மையையும் அப்பனையும் நிறுத்திவிட்டீர்கள். பையன் நல்லாப் படிச்சு வரட்டும் அம்மா.

    பதிலளிநீக்கு
  38. வல்லிசிம்ஹன் said...
    //இரத்த பாசம், ஏவ்வளவு ரத்தத்ஹைஇ உறிஞ்சப் போகிறதோ தெரியவில்லையே.//

    ஆச்சரியமா இருக்கு வல்லிம்மா. பாகம் இரண்டைப் பதிவிடும் முன்னரே சரியாக ஊகித்து விட்டிருக்கிறீர்கள். வியர்வையா சிந்தும் ரத்தம் ஒரு புறமிருக்க நிஜமாகவே தாயியின் ரத்தம் உறிஞ்சத்தான் பட்டது:(!


    //அருமையான நாட்டு வழக்கில் அம்மையையும் அப்பனையும் நிறுத்திவிட்டீர்கள்.//

    ’அம்மை அப்பன்’ ஆம் அந்த எம் பெருமானும் தேவியும்தான் எல்லோருக்கும் பெற்றோராய் வாய்க்கிறார்கள்.

    //பையன் நல்லாப் படிச்சு வரட்டும் அம்மா.//

    வாழ்த்துவோம் அம்மா, ரிஷான் சொன்ன மாதிரி இது போன்ற பல மாரி தாயிக்கள் இன்றளவும் உள்ளனர். அவர்களின் கனவு நனவாக வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin