வெள்ளி, 21 நவம்பர், 2008

இரத்த பாசம் (பாகம் 2)

நாட்டின் வருங்காலம் யார் கையிலோ அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகளை உருளச் செய்பவர் யார்?

மாணவர்கள் திசை திரும்பித் தீயவழி நடக்கக் காரணமாயிருப்பவர் யார்?

இவரைப் போன்றவர்கள் திருந்துவார்களா..

பெற்றவர்களின் கனவுகளை அறிவார்களா..

வளர்த்தவர்களின் வலியினை உணர்வார்களா..

கேள்விகள் உந்தித் தள்ள, 1990-ல் எழுதிய இக்கதையைப் பதிவிட்டுள்ளேன்.

பாகம் 1
இங்கே.

பாகம் 2 தொடர்கிறது..





ங்க கெளம்பிட்டே” ஆச்சரியமாய் கேட்டான் மாரி.

“ஆளெடுக்க டவுணுலருந்து லாரி வந்திருக்காம். போயிட்டு பொழுது சாய வந்துருவேன். கணிசமா கூலி கெடைக்கும். நா சொன்னதைச் சொல்லி வாத்தியார் வீட்ல மறக்காம கேட்டு வாருமய்யா”

அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவசரமாய் லாரியைப் பிடிக்க ஓடும் மனைவியைப் பார்த்து மனம் கலங்கிப் போயிற்று மாரிக்கு. உடம்புக்கு முடியாமல் கிடந்தவள் மகனுக்கு ஒரு தேவை என்று வந்ததும் சோர்வை உதறி விட்டு, கணவனின் சுமையைக் குறைக்க ஓடுகிறாள். ‘போகாதே’ என்று சொல்ல அவன் மனம் துடிக்கத்தான் செய்தது. ஆனால் அப்போதைய தேவை அப்படிச் சொல்ல விடாமல் அவனை வாளாவிருக்க வைத்து விட்டது. அவனை நினைத்து அவனுக்கே அவமானமாய் இருந்தது.

’சே, என்ன சென்மம் நான். ராசாத்தி போல அவள வச்சுக் காப்பாத்தத்தான் வக்கில்லாத போச்சு. ஒடம்புக்கு ஆகாத நெலமெல ஓடுதவளத் தடுக்கக் கூடத் தோணாது என் நாக்குக்குமில்ல கேடு வந்து போச்சு’ என்று நொந்து கொண்டான்.

அப்படி அவளை வாத்தியார் வீட்டில் அடகு வைத்துப் பணம் வாங்கி மகனுக்கு அனுப்ப வேண்டுமா என்று யோசித்தான். ‘இப்பதைக்கு அனுப்ப ஏலாதுன்னு ரெண்டு வரி எழுதிப் போட்டுட்டா என்ன’ என்றும் தோன்றியது. மகனின் முகம் மனதுக்குள் வந்து போக அந்த எண்ணம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது.

இருவருமே தாங்கள் மகன் மேல் கொண்டிருக்கும் பாசம் எத்துணை ஆழமானது, வலிமையானது என்பதை உணர்ந்திருந்தார்கள். அவனுக்காக எந்தக் கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருந்தார்கள் என்றாலும் கூட அதற்காக மாரி படும் கஷ்டத்தைச் சகிக்க முடியாமல் தாயி பரிதவிக்க, அவளைப் பார்த்து இவன் பரிதாபப் பட என இயலாமையில்தான் அவர்கள் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

ரவு பதினொன்றரை மணி போல மாரி விறகுக் கடை வேலையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் கண்ணுச்சாமி டீக்கடையை அடைத்துக் கொண்டிருந்தார்.

“ஏலே மாரி, நில்லுப்பா. நானும் வாரேன்” என்று பேச்சுத் துணைக்கு அவனை நிறுத்தி வைத்தவர் கடையைப் பூட்டிய பின் சைக்கிளை உருட்டித் தள்ளியவாறு மாரியுடன் நடக்கத் தொடங்கினார்.

“காலம்பற அவசரத்தில ஏதோ கத்திப் புட்டேன், வுடு அத. என்ன... மறுபடி காசு கேட்டுருக்கானா உம் மவன்?”

யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்திருந்தவன் போல மடமடவென்று அவரிடம் சொல்லத் தொடங்கினான் மாரி “ஆமா அண்ணாச்சி, பீசு கட்ட அவசரமா முன்னூறு வேணுமாம். எம் பொஞ்சாதி நாளேலர்ந்து வாத்தியாரு வூட்டுக்கு வேல பாக்கப் போறா. அவுகளும் மொதல்ல சந்தோசமா வரட்டும்னாக. அப்பால முன் பணம் கேட்டனா? மூஞ்சில அறஞ்சாக்ல முடியாதுன்னுட்டாக”

“ம்.. அப்புறம்” என்றார் கண்ணுச்சாமி சுவாரஸ்யமாக.

“அப்பால என்னா! காலுல வுழாத கொறதான். படிப்புக்காகத்தான கேக்குறேன். மனசு வைக்கப் படதா? ‘வைத்தியம் புள்ள சீக்கு வாத்தியாம் புள்ள மக்கு’ன்னு சும்மாவா சொன்னாக பெரியவுக. அவுக மவன் பத்து தாண்டாத ஊரச் சுத்திட்டு வாரான். சரி, ஊராம் புள்ளயாச்சும் படிச்சு பெரிசா வரட்டுமேங்கிற பெரிய மனசு இல்லயே!”

‘அதுச...ரி’ மனதுக்குள் கேலியாக நினைத்துக் கொண்ட கண்ணுச்சாமி, “கடைசில குடுத்தாரா இல்லையா?” என்று கேட்டார்.

“குடுத்தாரு குடுத்தாரு. ஆனப் பசிக்குச் சோளப் பொறிய போட்டாக்குல அம்பது ரூவா குடுத்தாரு. பொறவு வெறகுக் கடை ஐயாட்ட கெஞ்சிக் கூத்தாடி அவரு ஏச்சு பேச்செல்லாம் கேட்டுக்கிட்டு அம்பது ரூவா வாங்குனேன். தாயி வேற இன்னைக்கு கூலிக்குப் போச்சு. அதுல என்னத்த பெரிசா வரும்.. பத்தோ பதினஞ்சோ!

“ஹூம்.. ஒம்பாடும் சிரமந்தான்”

‘அட அண்ணாச்சி இரக்கப் படுதாகளே, இவுககிட்ட கொஞ்சம் கேட்டுப் பாப்போமா?” என்ற நப்பாசையின் கூடவே ‘இவருட்ட புதுசா என்னத்த வாங்கிக் கட்ட வேண்டி வருமோ’ என்ற ஐயமும் எழ குழப்பத்துடன் நடந்தான் மாரி.

அந்தக் குறுகிய சந்தின் வழி நெடுக மாடுகள் குறுக்கும் நெடுக்குமாய் படுத்துக் கவலையின்றி அசை போட்டுக் கொண்டிருக்க, இவர்கள் வளைந்து நெளிந்தும் தாண்டிக் குதித்தும் நடக்க வேண்டியதாயிற்று.

“குறுக்கு வழியேன்னு வந்தா இதே ரோதனயாப் போச்சு” முணுமுணுத்தபடி சில இடங்களில் கண்ணுச்சாமி சைக்கிளைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டார்.

குடிசைகள் இருளில் மூழ்கிக் கிடக்க, வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்தவர்கள் ‘சளப்’ எனக் கன்னம் கை காலோடு சேர்த்துக் கொசுவை அடித்துக் கொண்டும் விரட்டிக் கொண்டும் இருந்தார்கள்.

“எப்படித்தான் இந்த மாதிரி எடத்தில காலந்தள்ளுறீங்களோப்பா” என்றார் கண்ணுச்சாமி.

மாரிக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. இன்னும் ஒரு பர்லாங் நடந்தால் குடிசை வந்து விடும். அதற்குள் அவரிடம் கேட்டு விட வேண்டும் என்ற தீவிர சிந்தனையுடன் நடந்தான்.

ன்னலே திடீர்னு வாயடச்சுப் போயிட்டே?”

பேச்சுத் துணைக்குக் கூட்டி வந்தவன் பேசாமல் வருகிறானே என்று பொழுது போகாத கண்ணுச்சாமி மறுபடி அவன் வாயைக் கிளறினார்.

“ரோசனதான். மிச்சப் பணத்த எப்படிப் பொரட்டன்னுட்டு”

“நா இப்படிச் சொல்லுதனேன்னு சங்கடப் படாத மாரி. அப்படி உம் மவனுக்கு என்னதான் செலவுன்னு எனக்குப் புரியல. அடுத்த ஊருல இருக்கானே எம் மச்சினன். பணக் கஷ்டப் படுதவருதான். உம் மவனப் போல ஒபகாரச் சம்பளத்திலதான் படிக்கான் அவரு புள்ள. ஒங்க பொறப்பு இல்லயே அப்புறம் எப்படின்னு பாக்காத. மாநில அளவுல ராங்கு வாங்குனதல கெடச்சுதப்பா, நாங்கொண்ணும் பொழப்புக்காக ஒத்தத்தொரப் போல பொறப்பு சர்டிபிகேட்ட மாத்திக் குடுக்கிற மனுஷா இல்லப்பா” வீம்பாகச் சொன்னவர் “எம் மருமவன் தன் செலவு போக மிச்சம் பண்ணி வீட்டுக்கும் கூட அனுப்புதானாம் அப்பப்ப” என்று முடித்தார்.

கண்ணுச்சாமியின் கடைசி வாக்கியம், பரிதாபமான தன் நிலையைக் கேட்டு மனமிரங்கி இவராவது உதவ முன் வர மாட்டாரா என்ற மாரியின் கடைசி எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப் போட “அப்ப என் மவன் பொய் சொல்லுதாங்குறீக..” என்றான் மாரி காட்டமாக.

“எனக்கென்னவோ அவன் ஒங்களை நல்லா ஏமாத்துறான்னுதான் படுது. வர்ற பணத்துல அழகா பரிச்சைக்குப் பணங்கட்டி சாப்பாடு பொஸ்த செலவு எல்லாஞ் சமாளிக்க முடியும். இவன் என்ன ஷோக்கு பண்ணதுக்கு ஒங்களப் புழிஞ்செடுக்கானோ..”

“என்னாத்துக்கு கேட்டாதான் என்ன? செலவுக்குத் திண்டாடத மன நெறவா இருந்தாத்தானே படிப்புல கவனம் போகும், அவன் நல்லா படிச்சு வரணும்ங்கிறதுக்காகத்தானே நாங்களும் இந்தப் பாடு படுதோம்.”

“சரி இப்பவே இப்படி ஒங்கள ஏய்க்கிறானே. நாளைக்கி படிச்சு முடிச்சு பெரிய ஆளானப்புறம் ஒங்களத் திரும்பிப் பாப்பான்னா நினைக்கறே. நீங்க நாயாப் பேயாப் படுத பாடெல்லாம் வெழலுக்கு இறச்சத் தண்ணியாத்தான் போப்போவுது போ.”

“அடப் போங்க அண்ணாச்சி. அவன் பின்னால எங்களக் காப்பாத்தணும்னா இம்புட்டும் செய்யறோம்? இத்தன வருசமும் அவனா எங்களுக்குச் சோறு போட்டான்? வாழலயா நாங்க? உசிரு போகந்தன்னியும் எங்க வயித்துப்பாட்டை எப்படியோ கழிச்சிக்க எங்களுக்குத் தெரியும். அவனாவது எங்களைப் போல கஸ்டப் படாத பின்னால நல்ல படியா வாழ்ந்தா சரிதான்” படபடவென்று பேசியவன் தன் குடிசை நெருங்கி விடவே “நா வாரேன்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்து விட்டான்.

“தானாவும் புரிஞ்சுக்காது. சொன்னாலும் வெளங்கிக்காது. ஹூம் இதெல்லாம் தேறாத ஜென்மங்க” சைக்கிளில் ஏறி பெடலை மிதித்த கண்ணுச்சாமியின் முணுமுணுப்பு காதில் விழ, ஆத்திரமாக வந்தாலும் ஏதும் பேச இயலாதவனாய் குடிசைக்குள் நுழைந்தான் மாரி.

ண்ணுச்சாமி சொன்ன வாக்கில் யோசித்துப் பார்க்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. முதலில் சற்று குழப்பமாக உணர்ந்தாலும் ‘எம் மவன எனக்குத் தெரியாதாக்கும்’ என்கிற எண்ணம் மேலிட சமாதானம் அடைந்தான்.

இருட்டுக்கு கண் பழக, மூலையில் தாயி சுருண்டு கிடப்பது தெரிந்தது.

”இப்படித்தான் வந்து வுழுவேன்னு தெரியும். ஏதாச்சும் தின்னியா இல்லயா? என் வயித்துப் பாடாவது போற வர்ற வூட்டுல அவுக குடுக்கற மிச்ச மிஞ்சாடியில கழிஞ்சுடுது. ஒனக்கு அதுவுமில்ல” என்றபடி வேட்டியில் செருகியிருந்த தீப்பட்டியை எடுத்து தீக்குச்சி ஒன்றைக் கிழித்தான். அதைக் கையில் பிடித்தபடி சிம்னியைத் தேடி எடுத்து பற்ற வைத்தான்.

தாயிடடிருந்து ஒரு சலனமும் இல்லாது போக அவள் அருகில் அமர்ந்து “ஏ புள்ள தாயீ, உன்னத்தானே..” என்று உலுக்கவும், பதறி விழித்த தாயி மலங்க மலங்க முழித்தாள்.

“என்னா முழிக்கறே? தின்னியா நீ”

“கா..காசு கெடச்சுதா?”

“அட நா கேட்டதுக்கு பதிலச் சொல்லு. ஏதாச்சும் ஆக்கி வயித்துக்குப் போட்டியா?”

“ஆங்...ஆமா அதான் ஆசுபத்திரில குடுத்தாகளே”

“என்ன ஆசுபத்திரியா? என்ன ஒளருதே?” குழப்பமாகக் கேட்டவன் “என்ன செய்யுது ஒனக்கு? கிணத்துக்குள்ளார இருந்து பேசறாப்ல பேசறியே?”

அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

தாயி அதை சட்டை செய்யாமல் “எவ்ளோ கெடச்சுது” என்றாள் மறுபடியும்.

“வுட மாட்டியே, வாத்தியாரு வீட்ல அம்பது. அப்பால வெறகுக் கடயில ஒரு அம்பது தேறுச்சு” என்றான் அயர்வுடன்.

“இந்தாய்யா இதையுஞ் சேத்து நாள தபாலுக்கு மொதல்ல அனுப்பீருக. மிச்சத்தை எப்படியாச்சும் பொரட்டி சீக்கிரமா அனுப்புதோம்னு ஆர விட்டாவது ரெண்டு வரி எழுதிப் போட்ருக” மெலிந்த குரலில் பேசியவள் தட்டுத் தடுமாறி சேலை முடிப்பில் இருந்த கசங்கிய பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கையில் திணித்தாள்.

“ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு..இம்புட்டுப் பணம் ஏது புள்ள” கூவினான் மாரி.

”சொன்ன பிற்பாடு என்னய ஏசிப்பிடாதீக. உச்சி நேரந்தன்னியும் வயல்ல நின்னுட்டு அரை நா கூலி மட்டும் வாங்குனனா..! அந்தானிக்கு அப்படியே டவுணு ஆசுபத்திரி போய் ரத்தங் குடுத்தேன். அவுகதான் சாப்பாடுங் குடுத்து இப்படிக் கணிசமா கையில தந்தாக. எல்லாம் அந்தப் புண்ணியவதி முக்கு வீட்டு கருப்பாயி சொன்ன ரோசனதான்” திணறித் திணறி பேசியவள் மீண்டும் சுருண்டு விழுந்தாள்.

“ரோசன கொடுத்தவளப் பாம்பு புடுங்க. புண்ணியவதியாம்ல வருது நல்லா வாயில. பாவிமவளே ஒடம்பு கெடக்க கெடயில நெசமாலும் ரத்தத்தை வித்தா பணங் கொண்டாந்தே”
நெஞ்சு பதற அவளை வாரி எடுத்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான்.

“தாயீ இப்பத்தான் அந்த டீக்கட பயட்ட வீம்பாப் பேசிட்டு வந்தேன். ஆனா எனக்காக இல்லாங்காட்டியும் ஒனக்காகவாவது ஆண்டவங் கருணயில நம்ம மவன் படிச்சு ஊரு கண்ணு படுதாக்ல ஒசந்து நம்மளயும் கூட்டி வச்சுக்கோணும். அவனாச்சும் ஒன்ன ராணி கணக்கா வச்சுக் காப்பாத்தோணும்”

ஆற்ற மாட்டாமல் குலுங்கிக் குலுங்கி அழுதான் மாரி.

(முற்றும்)

[1990 ஜனவரி மாத ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகையில் வெளியானது][இங்கு வலையேற்றிய பின் டிசம்பர் 12, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.]

44 கருத்துகள்:

  1. கண்களில் நீர் கோர்த்து விட்டதுக்கா... என் சென்னை வாழ்வு நினைவுக்கு வந்து விட்டது. அந்த வருடம் வீட்டில் இருந்து இடையில் வெறும் 300 ரூபாய் மட்டுமே வாங்கி இருந்தேன்.. மற்றவை எல்லாம் உதவித் தொகையிலேயே சமாளித்த காலமது.

    பதிலளிநீக்கு
  2. ஜீவன் said...
    //மனம் கனத்த நிறைவு!//

    நன்றி ஜீவன். இவர்களைப் போன்றவர்களின் கனவுகள் நனவாகட்டும்.

    பதிலளிநீக்கு
  3. முடிவை நெருங்கும் பொழுது கண்களில் நீர். பெற்றோர் படும் சிரமம் உணர்ந்தவர்கள் வீண் விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். ஒரு வீட்டில் உடல் உழைப்பு பணயம் என்றால், இன்னொரு வீட்டில் உழைப்பில் கிடைத்த பொருளை பணயம் வைத்திருப்பார்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக. உணர்ந்து வாழும் பிள்ளைகள் உயர்வார்கள். குறுக்கே வரும் எந்த சீர்கேட்டிலும் குலையாத மன உறுதி அவர்களுக்கு வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் பிரியன் said...
    //கண்களில் நீர் கோர்த்து விட்டதுக்கா... என் சென்னை வாழ்வு நினைவுக்கு வந்து விட்டது. அந்த வருடம் வீட்டில் இருந்து இடையில் வெறும் 300 ரூபாய் மட்டுமே வாங்கி இருந்தேன்.. மற்றவை எல்லாம் உதவித் தொகையிலேயே சமாளித்த காலமது.//

    புரிகிறது தமிழ் பிரியன். அத்தனை கஷ்டங்களுக்கிடையே படித்து வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு வெற்றிகரமாக கரையேறி விட்டீர்கள். பெற்றவர்களுக்கு உங்கள் கடமையைச் சரிவர செய்து விட்டதை நினைக்கையில் பெருமிதமாக இன்று உணருகிறீர்கள்தானே! உங்களோடு நாங்களும்தான்.

    பதிலளிநீக்கு
  5. நாமக்கல் சிபி said...
    //:(

    மனசு கனத்துப் போச்சுங்க!//

    முதல் வருகைக்கும் கதையோடு ஒன்றியமைக்கும் நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  6. அமுதா said...
    //முடிவை நெருங்கும் பொழுது கண்களில் நீர். பெற்றோர் படும் சிரமம் உணர்ந்தவர்கள் வீண் விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள்.//

    உண்மைதான் அமுதா.

    //ஒரு வீட்டில் உடல் உழைப்பு பணயம் என்றால், இன்னொரு வீட்டில் உழைப்பில் கிடைத்த பொருளை பணயம் வைத்திருப்பார்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக.//

    மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    //உணர்ந்து வாழும் பிள்ளைகள் உயர்வார்கள். குறுக்கே வரும் எந்த சீர்கேட்டிலும் குலையாத மன உறுதி அவர்களுக்கு வேண்டும்.//

    அது மட்டும் இருந்து விட்டால் பெற்றவர்களுக்கு வேறென்ன வேண்டும். நல்ல மாணவ சமுதாயம் நாம் கண்டால் நாடும் நலம் பெறும்.

    ஆழமான கருத்துக்களுக்கு நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  7. இதை படித்தாலே போதும், நாட்டில் பாதி பிரச்சனை தீர்ந்திடும்.

    வாழ்த்துக்கள். நல்ல இருக்கு!

    பதிலளிநீக்கு
  8. மனம் கனத்துதான் போகிறது..உண்மைகள் மிகவும் சுடுகின்றன..

    பதிலளிநீக்கு
  9. Truth said...
    //இதை படித்தாலே போதும், நாட்டில் பாதி பிரச்சனை தீர்ந்திடும்.//

    பிரச்சனைகள் வேரோடு களையப் படும் காலம் வரணும் ட்ரூத்.

    //வாழ்த்துக்கள். நல்ல இருக்கு!//

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  10. பாச மலர் said...
    //மனம் கனத்துதான் போகிறது..உண்மைகள் மிகவும் சுடுகின்றன..//

    உண்மைதான் பாசமலர். கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சந்தனமுல்லை said...
    //:-(//

    பாசமலர் சொன்ன மாதிரி உண்மைகள் சுடுகின்றனவே.

    வருத்தம் தரும் முடிவானாலும் மாரியின் அந்தக் கனவில்தான் எவ்வளவு நம்பிக்கை பிணைந்திருக்கிறது. அது வீணாகப் போகாதிருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  12. இந்தத் தாய் தந்தையர்களின் கனவும், உழைப்பும் வீண் போகக்கூடாது.
    கண்ணுச்சாமி சொன்னது போல ஏதும் நடக்கக்கூடாது.

    இதுவே என் ப்ரார்த்தனை (இதை ஒரு கதையாக நினைக்க எனக்கு மனம் வரவில்லை)

    நெஞ்சை அறுக்கும் முடிவு.
    HATS OF TO YOU RAAM MADAM

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப டச்சிங்கா இருக்கு.

    என்னுடைய கருத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கஷ்டம் தெரியாமல் வளர்க்காமல் தங்கள் நிலை கூறி வளர்ப்பதே அவர்கள் பின்னாளில் சிறப்பாக இருக்க வழி வகுக்கும் என்பது என் எண்ணம். பலர் இவர்களை போல தன்னை போல கஷ்டப்படக்கூடாது என்று கஷ்டம் தெரியாமல் வளர்த்து விடுகிறார்கள். பிள்ளைகளும் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை உணராமலே வளர்ந்து விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. அமிர்தவர்ஷினி அம்மா said...
    //இந்தத் தாய் தந்தையர்களின் கனவும், உழைப்பும் வீண் போகக்கூடாது.
    கண்ணுச்சாமி சொன்னது போல ஏதும் நடக்கக்கூடாது.

    இதுவே என் ப்ரார்த்தனை (இதை ஒரு கதையாக நினைக்க எனக்கு மனம் வரவில்லை)//

    நல்லது அப்படியெனில் நம் பிரார்த்தனை “’எந்த’த் தாய் தந்தையர்களின் கனவும், உழைப்பும் வீண் போகக் கூடாது” என்றே வைத்துக் கொள்வோம். சரிதானே அமிர்தவர்ஷினி அம்மா?

    //நெஞ்சை அறுக்கும் முடிவு.
    HATS OFF TO YOU RAAM MADAM//

    கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கிரி said...
    //என்னுடைய கருத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கஷ்டம் தெரியாமல் வளர்க்காமல் தங்கள் நிலை கூறி வளர்ப்பதே அவர்கள் பின்னாளில் சிறப்பாக இருக்க வழி வகுக்கும் என்பது என் எண்ணம்.//

    ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள். இதைத்தான் முதல் பாகத்தின் முன்னுரையில் ’பெற்றோரின் கஷ்டங்களைப் பற்றிய புரிதல் இருந்தால்தான் பொறுப்புணர்வு வரும்’ எனக் குறிப்பிட்டிருந்தேன்.

    //பலர் இவர்களை போல தன்னை போல கஷ்டப்படக்கூடாது என்று கஷ்டம் தெரியாமல் வளர்த்து விடுகிறார்கள். பிள்ளைகளும் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை உணராமலே வளர்ந்து விடுகிறார்கள்.//

    உண்மைதான் கிரி. அப்படி வளர்ப்பது பிள்ளைகளின் எதிர்காலத்துக்குதான் கேடு என்கிற புரிதல் பெற்றோருக்கும் வரவேண்டும்..மாரி தாயி போன்றவர்கள் பெரும்பாலும் அந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் அற்றவர்களாக இருப்பது சோகம்தான் என்றால் படித்த பலரும் கூட இதை உணராதிருக்கிறார்களே.

    நல்ல கருத்துக்களுக்கு நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  16. என்ன சொல்றதுன்னு தெரியல. மனசைத் தொட்ட கதை; கண்களைத் தொட்ட கண்ணீர். நல்லதே நடக்கும் என நம்புவோம். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  17. பெற்றோரின் மன அழுத்தம்,ஆசை,குழந்தைகளைப் பற்றிய அவர்களின் கனவுகள் அதற்கான முயற்சிகள்,தியாகங்கள் அத்தனையையும் 23 வயதிலே உணர்ச்சி பூர்வமாகக் கண்டுகொண்ட ஒன்று போதும், உங்களது எழுத்து, வெறும் பொழுது போக்குக்காக எழுதப்பட்டவை அல்ல என்று ,புரிந்து கொள்ள.
    தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்

    பதிலளிநீக்கு
  18. நிறைய சிந்தனைகளை விதைத்து முடித்த கதை. நடப்பை அருமையாக வெளிப்படுத்தியதும் அற்புதம். நிகழ்வின் வரிகள் ...

    //‘அதுச...ரி’ மனதுக்குள் கேலியாக நினைத்துக் கொண்ட கண்ணுச்சாமி, “கடைசில குடுத்தாரா இல்லையா?” என்று கேட்டார்.

    ‘அட அண்ணாச்சி இரக்கப் படுதாகளே, இவுககிட்ட கொஞ்சம் கேட்டுப் பாப்போமா?” என்ற நப்பாசையின் கூடவே ‘இவருட்ட புதுசா என்னத்த வாங்கிக் கட்ட வேண்டி வருமோ’ என்ற ஐயமும் எழ குழப்பத்துடன் நடந்தான் மாரி.

    //

    கிண்டல் பண்ணும் ஒரு கூட்டமும், அதையும் வெள்ளந்தியாய் நினைத்து உதவி கேட்க நினைக்கும் மக்களும். அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. என்னோட 'ஏசிரூமும் காரும்' கதை போல் முடிந்துவிடுமோ என்று பயந்தேன். நல்லவேளை! மாரி-தாயின் கனவு மெய்படவேண்டும். மகன் பராமரிப்பில் சுகமே வாழவேண்டும்.
    அமெரிக்கா செல்லும் போது விமானப் பயணத்தில் கூட வந்த, கிராமீய மணத்தோடு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாத வெள்ளந்தியான பெற்றோர்...செக்கிங்கிங்கின் போது
    அவர்கள் கேட்பது புரியாது எங்களை உதவிக்கழைத்தபோது தேவையானதை செய்து கொடுத்து, பின் லக்கேஜ் வரும்போது ட்ராலியில் வைக்க உதவிய போது மனம், இனம் தெரியாத மகிழ்ச்சியடைந்தது. இக்கதையில் வருவது போல் பிள்ளைகள் கஷ்டப்பட்டுப் படித்து வெளிநாடு சென்று தம் பெற்றோர்களையும் உடன் அழைத்துக்கொள்ளும் பாங்கு சந்தோஷப்பட வேண்டிய ஒன்றன்றோ!!!

    பதிலளிநீக்கு
  20. சதங்கா (Sathanga) said...
    //yes mam. i will have my attendance first. will read and comment later.//

    மெதுவா வாசிங்க எனச் சொல்லயிருந்தேன். அதற்குள் படித்து கருத்தும் கூறி விட்டீர்கள்:)!

    பதிலளிநீக்கு
  21. கவிநயா said...
    //என்ன சொல்றதுன்னு தெரியல. மனசைத் தொட்ட கதை; கண்களைத் தொட்ட கண்ணீர். நல்லதே நடக்கும் என நம்புவோம்.//

    ஆமாம் கவிநயா, அவ்வாறே நம்புவோம்.

    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    மனம் நெகிழ்ந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  22. goma said...
    //பெற்றோரின் மன அழுத்தம்,ஆசை,குழந்தைகளைப் பற்றிய அவர்களின் கனவுகள் அதற்கான முயற்சிகள்,தியாகங்கள் அத்தனையையும் 23 வயதிலே உணர்ச்சி பூர்வமாகக் கண்டுகொண்ட ஒன்று போதும், உங்களது எழுத்து, வெறும் பொழுது போக்குக்காக எழுதப்பட்டவை அல்ல என்று ,புரிந்து கொள்ள.//

    ஆத்மார்த்தமான உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. ஆரம்ப வரிகளிலே இந்தக் கதையின் சாரம்சத்தையும் அழகுற விளக்கி விட்டிருக்கிறீர்கள்.

    //தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்//

    தொடரும் உங்கள் ஆசியுடன்.

    பதிலளிநீக்கு
  23. சதங்கா (Sathanga) said...
    //நிறைய சிந்தனைகளை விதைத்து முடித்த கதை. நடப்பை அருமையாக வெளிப்படுத்தியதும் அற்புதம்.//

    உண்மைதான் சதங்கா. இதில் அன்று விதைக்கப் பட்ட சிந்தனைகள் இன்றைய நடப்பிலும் பல கேள்விகளை எழுப்புவதாகவே இருக்கிறது.

    //கிண்டல் பண்ணும் ஒரு கூட்டமும், அதையும் வெள்ளந்தியாய் நினைத்து உதவி கேட்க நினைக்கும் மக்களும். அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.//

    நிகழ்வின் வரிகளை ரசித்து எடுத்துக் காட்டியிருப்பது உங்களது வழக்கமான அப்சர்வேஷனைக் காட்டுகிறது. கருத்துக்கும் ரசிப்புக்கும் நன்றி சதங்கா.

    பதிலளிநீக்கு
  24. நானானி said...
    //என்னோட 'ஏசிரூமும் காரும்' கதை போல் முடிந்துவிடுமோ என்று பயந்தேன். நல்லவேளை!மாரி-தாயின் கனவு மெய்படவேண்டும். மகன் பராமரிப்பில் சுகமே வாழவேண்டும்.//

    அவ்வாறே ஆக வாழ்த்துவோம். உங்கள் உருக்கமான ‘ஏசிரூமும் காரும்’ கதையில் பெற்றோரின் கனவு மெய்ப்படும் வேளையில் அவர்களை நல்ல படியாக பராமரிக்க வேண்டுமென்கிற மகனின் கனவு மெய்ப்படாமல் போய் விடுவது வேதனை. அது போன்ற வேதனையை அனுபவித்தவர்கள் பலர். அதைத் தங்கள் வலைப்பூவிலே விவரித்தோரும் உள்ளனர்.

    //அமெரிக்கா செல்லும் போது விமானப் பயணத்தில் கூட வந்த, கிராமீய மணத்தோடு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாத வெள்ளந்தியான பெற்றோர்...செக்கிங்கிங்கின் போது
    அவர்கள் கேட்பது புரியாது எங்களை உதவிக்கழைத்தபோது தேவையானதை செய்து கொடுத்து, பின் லக்கேஜ் வரும்போது ட்ராலியில் வைக்க உதவிய போது மனம், இனம் தெரியாத மகிழ்ச்சியடைந்தது.//

    அவர்களுக்காக நீங்கள் செய்த உதவியே உங்கள் மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

    //இக்கதையில் வருவது போல் பிள்ளைகள் கஷ்டப்பட்டுப் படித்து வெளிநாடு சென்று தம் பெற்றோர்களையும் உடன் அழைத்துக்கொள்ளும் பாங்கு சந்தோஷப்பட வேண்டிய ஒன்றன்றோ!!!//

    நிச்சயமாக.

    கதையில் ஒன்றி பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அருமையான கதை மேடம்.. அதுவும் இந்த நேரத்தில் "அந்த" மாணவர்கள் படிக்க வேண்டிய கதை இது.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  26. நல்ல கதை, கிரியை வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. வெண்பூ said...
    //அருமையான கதை மேடம்.. அதுவும் இந்த நேரத்தில் "அந்த" மாணவர்கள் படிக்க வேண்டிய கதை இது.. பாராட்டுக்கள்..//

    நன்றி வெண்பூ. ”அந்த” மாணவர்கள்தான் இந்த நேரத்தில் இக்கதையை வெளியிடும் எண்ணத்தை ஏற்படுத்தினார்கள் என்றாலும் எந்த மாணவருக்கும் இதில் சேதி இருக்கிறது, எடுத்துக் கொள்ளட்டும் அதை மாணவ சமுதாயம்.

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  28. கபீஷ் said...
    //நல்ல கதை, கிரியை வழிமொழிகிறேன்.//

    வருகைக்கும் கிரியின் சிறந்த கருத்துக்களை வழிமொழிந்தமைக்கும் மிக்க நன்றி கபீஷ்.

    பதிலளிநீக்கு
  29. பிரமாதமான வட்டார நடை. நெஞ்சுக்குள் இருக்கும் ஏதோவொன்று பிளந்து மேலெழுந்து, தொண்டையில் சிக்கிக்கொண்டதுபோல் இருக்கிறது. கதையை நீங்கள் முடித்த விதம் - hats off. பெரிய நீதி, அறிவுரை இல்லை. திணிக்கப்பட்ட உச்சம் இல்லை. யதார்த்தம். ஆனால் எத்தனை ஆழம். படித்த எல்லோருக்கும், அவர்கள் பார்த்தது ஒரு நிஜ மனிதர்கள் போன்ற தோற்றம். இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் .... என்ன செய்வீர்களோ தெரியாது, நீங்க மேலும் எழுதுறீங்க. சொல்லிபுட்டேன்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  30. அனுஜன்யா said...
    //பிரமாதமான வட்டார நடை. நெஞ்சுக்குள் இருக்கும் ஏதோவொன்று பிளந்து மேலெழுந்து, தொண்டையில் சிக்கிக்கொண்டதுபோல் இருக்கிறது. கதையை நீங்கள் முடித்த விதம் - hats off. பெரிய நீதி, அறிவுரை இல்லை. திணிக்கப்பட்ட உச்சம் இல்லை. யதார்த்தம்.//

    ரசித்து அளித்திருக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி அனுஜன்யா. பெரும்பாலான என் பதிவுகள் நீதி அறிவுரையாகவே முடிவது என்னால் தவிர்க்க முடியாமல் போகிற ஒன்று. விதிவிலக்காய் அமைந்த இக்கதையைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு விட்டிருக்கிறீர்கள்:)!

    //ஆனால் எத்தனை ஆழம். படித்த எல்லோருக்கும், அவர்கள் பார்த்தது ஒரு நிஜ மனிதர்கள் போன்ற தோற்றம்.//

    இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களை சின்ன வயதிலே சந்தித்திருக்கிறேன். அவர்கள் பேச்சு வழக்கை உன்னிப்பாகக் கவனித்ததே கை கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன்.

    //இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் .... என்ன செய்வீர்களோ தெரியாது, நீங்க மேலும் எழுதுறீங்க. சொல்லிபுட்டேன்.//

    ஊக்கம் தரும் மிரட்டல்:)! நிச்சயம் செய்வேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. முடிவு இதயத்தைக் கனமாக்கியது. தாயின் தியாகத்துக்கு அளவேது.. ? கதையின் ஆரம்பத்திலிருந்து தாயை ஒரு நோயாளியாகக் காட்டியிருப்பதால் முடிவில் அவரது இரத்ததானம், கதைக்கே ஒரு கண்ணியத்தையும் ஒரு அதிர்ச்சியையும் சேர்க்கிறது. அருமையான கதை சகோதரி.. என்றும் மனதில் நிற்கும்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  32. எம்.ரிஷான் ஷெரீப் said...
    //முடிவு இதயத்தைக் கனமாக்கியது. தாயின் தியாகத்துக்கு அளவேது.. ?//

    உண்மைதான் ரிஷான். உலகில் அளவிட முடியாதது தாயின் பாசம்தான்.

    //கதையின் ஆரம்பத்திலிருந்து தாயை ஒரு நோயாளியாகக் காட்டியிருப்பதால் முடிவில் அவரது இரத்ததானம், கதைக்கே ஒரு கண்ணியத்தையும் ஒரு அதிர்ச்சியையும் சேர்க்கிறது.//

    நூலிழையாக தாயியின் உடல் நலக் குறைவு ஆரம்பத்திலிருந்து கதை நெடுக காட்டப் பட்டிருந்த்தை சரியாகப் பிடித்து விட்டீர்கள்.

    //அருமையான கதை சகோதரி.. என்றும் மனதில் நிற்கும்.
    தொடர்ந்து எழுதுங்கள்.//

    அவ்வாறே செய்கிறேன். தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. அருமையான கதை நடைக்கு முதலில்பாராட்டுக்கள்...அது இல்லையென்றால் படிப்பவர்களை இழுக்கமுடியாது களத்திற்கு.

    இயல்பான கதை ஓட்டம்..பாசம் என்றும் பழசாகாது. நீர் நெருப்பு காற்று போல அது மனிதவாழ்வோடு வருவது.

    அதுவும் வட்டாரமொழிநடையில் அமைந்திருப்பதால் கதா பாத்திரங்கள் கண்முன் நின்று பேசுவதாய் பிரமை. இது எழுதிய உங்களுக்கு வெற்றி ராமலஷ்மி! நேரில் ஆரவாரமற்ற அமைதியான் பெண்ணாய் தெரியும் உங்களிடம் இப்படி ஒரு எழுத்து வேகம் இருப்பது பெருமையாய் இருக்கிறது! மேலும் வளர்ந்து தமிழ் எழுத்துலகிற்கு உங்கள் பணியினை அளித்து சிறக்க வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  34. ஷைலஜா said...
    //பாசம் என்றும் பழசாகாது. நீர் நெருப்பு காற்று போல அது மனிதவாழ்வோடு வருவது.//

    அழகுறச் சொல்லி விட்டீர்கள்.

    //அதுவும் வட்டாரமொழிநடையில் அமைந்திருப்பதால் கதா பாத்திரங்கள் கண்முன் நின்று பேசுவதாய் பிரமை.//

    சிறு வயதில் எங்கள் ஊரில் என் கண் முன் நடமாடிய மனிதர்கள் சிலரின் பேச்சு வழக்கே அது.

    //நேரில் ஆரவாரமற்ற அமைதியான் பெண்ணாய் தெரியும் உங்களிடம் இப்படி ஒரு எழுத்து வேகம் இருப்பது பெருமையாய் இருக்கிறது!//

    நன்றி ஷைலஜா! எனக்கும் உங்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அருமையாய் அமைந்த அந்தப் பதிவர் சந்திப்பை முனைப்புடன் முடித்து வைத்த பதிவருக்கும் நம் நன்றிகள்:)! சரிதானே:)?

    தங்கள் விரிவான கருத்துக்களுக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் மிக மிக நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  35. அருமையான நடை ,இயல்பான வார்த்தைப் பிரயோகங்கள்....
    பாராட்டுக்கள்....

    இதே தாய்,தந்தை எனக்கும் கிடைத்திருக்கிறார்கள் கொஞ்சம் வித்தியாசம் நடுத்தரக்குடும்பம்

    வாழ்க்கை முறை மாறினாலும் வலியும்,வேதனையும் ஒன்றுதானே....

    பதிலளிநீக்கு
  36. இந்த வறுமை கூடப் பெரிதில்லை ராம்லக்ஷ்மி. இந்தப் பெற்றோர்களின் அறியாமை,அதை மீறிய அவர்களின் பாசம்.

    இதைக் கதையென்றூ எடுத்து கொள்ள முடியவில்ல்லை. மனசு உருகிவிட்டது.

    அந்த மகன் இவர்களை ஏமாற்றாமல் இருக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  37. தங்கராசா ஜீவராஜ் said...
    //அருமையான நடை ,இயல்பான வார்த்தைப் பிரயோகங்கள்....
    பாராட்டுக்கள்....//

    தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    //இதே தாய்,தந்தை எனக்கும் கிடைத்திருக்கிறார்கள் கொஞ்சம் வித்தியாசம் நடுத்தரக்குடும்பம்//

    எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவரானாலும் இந்த பாசம் இந்த தியாகம் இவையெல்லாம் பொதுவானவைதானே.

    //வாழ்க்கை முறை மாறினாலும் வலியும்,வேதனையும் ஒன்றுதானே....//

    சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தங்கராசா ஜீவராஜ்.

    பதிலளிநீக்கு
  38. வல்லிசிம்ஹன் said...
    //இந்த வறுமை கூடப் பெரிதில்லை ராம்லக்ஷ்மி. இந்தப் பெற்றோர்களின் அறியாமை,அதை மீறிய அவர்களின் பாசம்.//

    ஆமாம் வல்லிம்மா. நீங்கள் பாகம் ஒன்றில் சொன்னது போல எல்லா பெற்றோரும் அந்த ‘அம்மை அப்பனின்’ மறுவடிவே!

    //இதைக் கதையென்றூ எடுத்து கொள்ள முடியவில்ல்லை. மனசு உருகிவிட்டது.//

    ஏனெனில் நிஜ வாழ்விலும் நாம் இப்படி எத்தனை பேரைப் பார்க்கிறோம்!

    //அந்த மகன் இவர்களை ஏமாற்றாமல் இருக்கட்டும்..//

    அந்த நம்பிக்கையில்தான் இந்த பெற்ற மனங்கள் மட்டுமின்றி எல்லா பெற்ற மனங்களும் வாழ்ந்து வருகின்றன. நம்புவோம் நாமும்.

    பதிலளிநீக்கு
  39. பல பெற்றோர் தங்களை படிக்க வைக்க எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பது புரிந்தாலே மாணவர்களின் கவனம் வேறு எதிலும் சிதறாது. ஆனால் இந்த கஷ்டங்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு தெரிகிறதே தவிர புரிவதில்லை.

    பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்தக் கதை இப்போது மட்டுமல்ல... இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னாலும் பொருத்தமாகிவிடக்கூடாது என்பதே என் கவலை,

    பதிலளிநீக்கு
  40. சரண் said...

    // பல பெற்றோர் தங்களை படிக்க வைக்க எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பது புரிந்தாலே மாணவர்களின் கவனம் வேறு எதிலும் சிதறாது. ஆனால் இந்த கஷ்டங்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு தெரிகிறதே தவிர புரிவதில்லை.//

    உண்மைதான் சரண்.

    //பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்தக் கதை இப்போது மட்டுமல்ல... இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னாலும் பொருத்தமாகிவிடக்கூடாது என்பதே என் கவலை,//

    அப்படி ஆகக் கூடாதென்பதே என் பிரார்த்தனையும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin