வியாழன், 7 ஜூன், 2012

அகஸ்டஸின் ‘டீக்கடைச்சூரியன்': மானுட வாழ்வின் மறுபக்கங்கள் - வடக்கு வாசலில்..

இப்படிதான் இருக்க வேண்டும் கவிதை என யாரும் அதை ஒரு வரையறைக்குள் கொண்டு வர இயலாது. கவிதைக்கொரு விதிசெய்வது காற்றைக் கையில் பிடிக்க முயலுவது போல என்பார்கள். பிடிக்க முடிந்து விட்டால் அது காற்று அல்ல. கோட்பாட்டுக்கு உட்பட்டு எழுதினால் அது கவிதை அல்ல. கவிதை குறித்து பலருக்கும் பலவிதமான கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் கூறிய கருத்து மனதுக்கு இசைவானதாக இருக்கிறது: “சக்திமிகு உணர்வுகளின் தங்குதடையற்ற வெளிப்பாடே கவிதை”. அப்படியான கவிதைகள் தாமே தமது வேகத்தை வடிவத்தை நீளத்தை நிர்மாணித்து நதியைப் போல் பாய்ந்து வாசகனின் மனமெனும் கடலோடு சங்கமித்து வெற்றி கண்டு விடுகின்றன. அப்படிப் பல்வேறு இதழ்களின் மூலமாக வாசகர் மனங்களைத் தொட்ட, இருபத்தியெட்டு வருடங்களாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கும் கவிஞர் அகஸ்டஸின் இருபத்தைந்து கவிதைகள் அடங்கிய தொகுப்பே ‘டீக்கடைச் சூரியன்’.

முதல் ஆச்சரியமே பின் அட்டைதான். நூலுக்குள் வரவேற்கும் விதமாக, நூலாசிரியர் படத்துடன் அவர் பற்றிய குறிப்புகளோ, படைப்பைப் பற்றிய பாராட்டுகளோ இடம்பெறும் முற்றத்தில் ஒரு கவிதை.., கவனமாக இழைக்கப்பட்ட கவிப்பேழையைத் திறக்க நம் கையில் கிடைத்தத் தங்கச்சாவியாக:
“இடுப்புவரை அலையாடி
விளையாடிக் கிடப்பது
கடல்தானென்றால்
கைகளால் விலக்கிக்
கால்களால் முன்னேறி
வெளிவந்து விடலாம்தான்

கடலல்ல
கருங்கற்பாறை
இடுப்புக்குக்கீழே இறுகிக்கிடக்க
யோசித்தபடியே டீ குடித்து
பீடிப்புகையை முகத்தில் ஊதுகின்ற
சிற்பியையே
வெறித்துக்கொண்டிருந்தது
தலையிலிருந்து
இடுப்புவரை
செதுக்கவிடப்பட்ட சிலை.
”

‘சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’ எனும் அதன் தலைப்பைப் பரபரப்பாகப் புத்தகத்தைப் புரட்டியே அறிய வருகிறோம். ஆதிகாலந்தொட்டு இன்று வரையிலும் தொடரும் அவலமாக அமைந்த ஒரு சூழலை இதை விடச் சிறப்பாக மனதில் உளி கொண்டுப் பதிக்க எவராலேனும் முடியுமா என்றே தோன்றியது.

மனித வாழ்வின் தீராக் காதலாய் அடங்கா வெறியாய் அணை போட இயலா உணர்வாய் இருப்பவற்றுள் முக்கியமானது புகழ் மீதான ஆசை. சிலைகள் புகழின் அடையாளங்கள். வாழ்ந்ததின் மிச்சமாக விட்டுச் செல்ல எண்ணுபவற்றின் உச்சக்கட்ட ஆசையாக இருக்கிறது பலபேருக்கு:
“அயராத பேச்சொலியில்
அடங்காத கரவொலியில்
தூக்கம் கலைந்து
அனைத்தும் ஒரு சிலைக்கென்றறிந்து
அச்சிலையின் வாழ்வைக் கனவாக்கி
கட்டியணைத்துக் கிடந்த
கற்பிண்டங்களைத் தட்டிவிலக்கி
மலையிலிருந்து நழுவி
சிற்பியிடம் சென்று நின்றது ஒரு கல்”.

“முதல் சிலையை
தானேதான்
செதுக்கிக் கொள்ளவேண்டும்
சிற்பி செதுக்கி வருவதில்லை
சிலைகளுக்குப் பெயரும் புகழும்
”
எனத் தொடங்கி வளரும் ‘சிலைகள் வளரும் காலம்’ முச்சந்தியின் முழுச் சிலையொன்றில் முடிகிறது.

சிலைகளைப் படிமங்களாகக் கொண்டு வாழ்வைச் சித்தரிக்கும் இன்னுமொரு கவிதையாக ‘சிலைகள் நகரும் நேரம்’ பேசுகிறது பெருநகரம் ஒன்றின் பசியை:
“கீழே
சிறு மணலைக்கூட
உருட்டிக் கல்லாக்கி
உளிகொண்டு செதுக்கி
ஒரு சிலையாக்கிவிடும் பசியுடன்
வாழ்ந்து கொண்டிருந்தது
ஒரு பெரும் நகரம்
”

யுத்தங்கள் நிறைந்த பூமி இது. வலியோனும் வலியோனும் மோதிக் கொள்ளும் யுத்தங்களை விடவும் எளியோனைத் தன் பலத்தினால் அடக்கியோ நசுக்கியோ வெற்றி பெற்றதாகக் கொக்கரிக்கும் மடையர்களும் கொடூரர்களுமே யுத்தக் குறிப்புகளை அதிகமாக ஆக்ரமித்துக் கிடக்கிறார்கள். கவிஞரின் ‘மகா யுத்தம்’ அதைக் கண் முன்னே கொண்டு வருகிறது. சிலைகளைப் போலவே இன்னொரு படிமமாகப் பலகவிதைகளில் தோன்றுகிற நத்தை இக்கவிதையில்:
”சிற்றுடல் இழுத்து வாழ்வதன்றி
வேறேதும் புரியாதிருந்தும்
ஏதோவொன்று தன்மீது
பளிச்சென்று எச்சில் துப்பக்
காத்திருப்பதாய்ப் பயந்து
பயம் பயமென
உடலைக் குறுக்கியதில்
செயலற்றவனின் ஓட்டைச்சுற்றி
கேலியும் கிண்டலும்
முட்புதர்களும் கல்செடிகளும்
”

வெலவெலத்த நத்தை தன் மேல் படர்ந்த நிழலை யாதென்று அறியாது திகைத்திருந்த வேளையில்,
“ஆடாது அசையாது
தூக்கி நிறுத்திய காலால்
பாத நிழலை
நிழற்சிலையென படர்த்திக்
காத்து நின்ற கோபம்
தலைக்குள்ளெரிய
சிறு நத்தையோட்டையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த யானை
சிறுநகர்வு கண்டதும்
வெறியும் வெற்றியுமாய்ப் பிளிறி
நிலத்தோடு அறைந்து மூடியது
அந்தச் சிறு உலகத்தை
”.

விதிக்கப்பட்ட நாள் வரையிலும் பிழைத்துக் கிடக்க வேண்டிய பூமியில் வலியோரைச் சமாளித்துத் தொடர வேண்டியிருக்கிற வாழ்க்கைப்பயணத்தையும் நத்தையின் மூலமாகவே உணர்ந்துகிறது ‘யுத்த முயற்சி’.

காலைத் தேநீரில் ஊதியூதி அந்தச் சூரியனையே குடிக்கிற கவிஞர் எப்படி மலை இறங்குகிறார் பாருங்கள் ‘டீக்கடைச் சூரியன்’ கவிதையில்,
“அருவியில் நீர் அள்ளாமல்
காலியாய்த் திரும்பும்
குடத்துக்குள்
சிரிக்கும் காற்றின் சிரிப்பைக்
கேட்டபடியே
”.

நறுக்கெனச் சுருக்கமாகச் சொல்லி நகரும் கவிதைகளுக்கு நடுவே சில நீளமான கவிதைகளும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் சொன்னது போலக் கவிதையின் நீளத்தைக் கவிஞனின் உணர்வுகளும் அதன் வேகமுமே தீர்மானித்திருக்கிறது. தனக்காகப் படைக்கிற கவிதைகளில் வாசகருக்கு அயர்வைத் தருமோ போன்ற எண்ணங்கள் கவிஞனுக்கு ஏற்படுவதில்லை.

“ஆதியில் வார்த்தை
ஆண்டவனிடம் இருந்தது
அவன் அதை மனிதனில் விதைக்க
முளைத்தது நாக்கு
”
எனத் தொடங்குகிற முதல் கவிதை ‘வார்த்தைப்பாடு’ம், கடைசிக் கவிதை ‘அஞ்சலி’யும் அப்படியானவை. பல்வேறு பரிமாணங்களில் பாடுபொருளை அடர்த்தியாகக் காட்டியபடி கூட்டிச் செல்லுவதில் இரண்டு கவிதைகளுமே தனித்து நிற்கின்றன.

வார்த்தைப் பாட்டில்,
“வாழ்வைச்
சட்டையைப் போல மடித்துக்
கரையில் வைத்துவிட்டு
ஆதிவார்த்தையின்
மாய மெளனம் கேட்கத்
தத்தம் கடவுள்களின் கடலில்
வார்த்தைப் பெருநீச்சலிடுகின்றனர்
சிலர்
”.

அஞ்சலியில்,
“ஆயிரமாயிரமாய்
விளக்குகள் எரிந்து கொண்டிருக்க
உன்போன்று மெழுகுவர்த்திகளும்
தேவையற்று எரிந்துகொண்டிருக்க
நீஅணைந்தபோது
உன் குழந்தைகளைச்
சுற்றிமட்டும் இருள் சூழ்ந்தது.
”

ஆழமான உணர்வுகளை அழுத்தமாகப் பதித்துக் காலத்தால் பேசப்படும் நல்ல கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர்.
***

விலை ரூ:50; பக்கங்கள்: 71; வெளியீடு: நிலாப் பதிப்பகம்;
விற்பனை உரிமை: வடக்கு வாசல் பதிப்பகம்
[5A/11032,Galli No.9, Sat Nagar, Karol Baug, New Delhi-110005.
vadakkuvaasal@gmail.com ; Ph: 011-25815476,65858656]
*****

ஜூன் 2012 வடக்குவாசலில்:

நன்றி வடக்குவாசல்!

வியாழன், 31 மே, 2012

கோடை விடுமுறையும் குழந்தைகளும்..

கோடை என்றாலே மின் தடையும் அக்னி நட்சத்திரமும் அனல் வெயிலுமே மனதில் வந்து மருள வைக்க, குழந்தைகளுக்கோ அதுவே மான் குட்டிகளாகத் துள்ளித் திரியக் கிடைத்த சுகமான பருவகாலமாக இருக்கிறது.

பள்ளி நாட்களில் பரபரப்பாக புத்தக மூட்டைகளுடன் கிளம்பிச் சென்று மாலையில் வாடிவதங்கிய மலர்களாகத் திரும்பும் அரும்புகளின் முகங்களில் இந்த இரண்டு மாத விடுமுறைதான் எத்தனை குளிர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டு வருகின்றன!!!

#1 பூவொன்று கண்டேன்..



#2 இரட்டைச் சடை நிலவுகள்


#3 கூல்.../ CoooooooooooooL


தொலைக்காட்சியிலும் கணினியிலும் தொலைந்து போயிடாமல் ஒன்று கூடி ஓடியாடி மகிழும் குழந்தைகளின் சத்தம் குயில்களின் கூவலாக ஒவ்வொரு குடியிருப்பிலிருந்தும் ஒலித்தபடி இருக்கிறது. எந்தப் பக்கம் எப்போது சூரியன் கடையை விரிப்பார் எனத் தெரிந்து வைத்து அதற்கேற்ப கட்டிடங்களுக்கு நடுவே நிழலான இடமாகப் பார்த்து அடிக்கடி ஜாகையை மாற்றியும் கொள்கிறார்கள்.

#4 ஆடுவோமே..


சின்ன சின்னக் குழுக்களாக தென்படும் இவர்கள் சிலநேரங்களில் கட்டிடத்தின் அகன்ற படிக்கட்டுகளில் மொத்தமாக முப்பது நாற்பது பேராகக் கொலுப்பொம்மைகளைப் போல் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். வாட்டர் பாட்டில்கள், பந்துகள், மட்டைகள், பொம்மைகள் போன்றனவும் இறைந்து கிடக்கப் போவார் வருவோருக்கு ஒரு ஒற்றையடிப் பாதை விட்டிருப்பார்கள்:)!

நம்ம காலமும் நினைவுக்கு வருகிறது. கூட்டுக் குடும்பமாக இதே போல நாளெல்லாம் ஆட்டம் போட்ட விடுமுறை நாட்கள். கேரம், சைனீஸ் செக்கர்ஸ், தாயம், சதுரங்கம், மோனோபொலி, ட்ரேட், ஹாக்கி, கில்லி(அண்ணன்களுக்கு நிகரா ஆடுவோமே), ஷட்டில், கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, கலர் கலர் வாட் கலர்.. இன்னும் இருக்கு இப்படி நிறைய:)!
[பெயர் மறந்து விட்டது. பலகை எங்கும் சிறிய ஆணிகளால் அரைவட்டத்தில் அமைந்த குழிகள் பாயின்டுகளுடன் காத்திருக்கும். ஓரத்திலிருக்கும் பாதை வழியே கோலிக் குண்டை பலமாகச் சுண்டி விட்டு குழிகளில் விழ வைக்க வேண்டும். அதிக பாயிண்ட் தரும் குழிகளில் விழ வைப்பதில் இருக்கிறது சாமர்த்தியம். படம்: தந்தை எடுத்தது.]


#5 வல்லவனுக்கு..


கூட்டுக் குடும்ப வழக்கங்கள் மறைந்து விட்ட இந்நாளில் குடியிருப்புகள் ஓரளவு குழந்தைகளுக்கு அந்தச் சூழலை நல்கித் தாமாகவே விட்டுக் கொடுத்தல், பகிருதல் போன்ற நல்ல பழக்கங்களைக் கற்றிட வழிவகுக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

இதோ முடிகிறது கோடை விடுமுறை. சர் சர்ரென வந்து நிற்கிற பள்ளி வேன்கள் அள்ளிக் கொண்டு போய் விடும் குழந்தைகளை. இனி ஆளற்ற நீச்சல் குளத்தில் தனியாக நீந்திக் கொண்டிருக்கும் சூரியன். பூங்காவின் பேரமைதி ஏற்படுத்துகிற வெறுமையில் நடுங்கிக் காற்றிடம் கெஞ்சக் கூடும் ஊஞ்சல்கள் கொஞ்சம் ஆட்டிவிடச் சொல்லி. குழந்தைகளின் பெருங்கூச்சலுக்குத் தொடக்கத்தில் பதறிப் படபடத்த புறாக்கள் இப்போது எங்கே அவர்கள் எனக் குழப்பத்துடன் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வரக் கூடும்.

பயணங்கள், விருந்தினர் வருகை, ருசித்து ரசித்துச் சாப்பாடு, நல்ல ஆட்டம், நல்ல தூக்கம் எல்லாம் தந்த நீண்ட விடுமுறைக்கு இன்னும் முழுதாக ஓராண்டு காத்திருக்க வேண்டுமே என்றொரு ஒரு மெல்லிய சோகத்துடனே ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டு. ஆனாலும் புதிய வகுப்பறை, புதிய புத்தகங்கள், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் எனப் பொங்கும் உற்சாகத்துடன் விரைவில் சூழலுடன் பொருந்திப் போய் விடுவார்கள் குழந்தைகள்! வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமைய ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்துவோம்!

#6 சாதிக்கப் பிறந்தவள்

***

திங்கள், 28 மே, 2012

குங்குமம் தோழியில்.. - புதிய அத்தியாயம்

மார்ச் மாதத்திலிருந்து மகளிருடன் நட்பு பாராட்ட மலர்ந்து வருகிற குங்குமம் தோழியின் ஜூன் இதழில், களிப்பூக்களின் ஒரு பூவாக என் ‘புதிய அத்தியாயம்’ கவிதை!

நன்றி குங்குமம் தோழி!
***

சனி, 26 மே, 2012

கேமரா குடித்த கொல்லிமலைத் தேநீர்... - ஐயப்பன் கிருஷ்ணன் படங்களுடன் கல்கியில் நேர்காணல்

3 ஜூன் 2012 கல்கி இதழின் ஃபோட்டோ கேலரியில்..



மறக்க முடியாத நாமக்கல் சிறுவன்


நன்றி கல்கி!
வாழ்த்துகள் ஐயப்பன் கிருஷ்ணன்!

மேலும் இவரது படங்களை கண்டு ரசிக்க இங்கே செல்லுங்கள்: http://www.flickr.com/photos/iyappan/
***

புதன், 23 மே, 2012

பத்து பிரம்மக் கமலங்கள் - அபூர்வமாய்ப் பூத்த அதிசய மலர்கள்

#1 ‘பிரம்மக் கமலம்’
ஆண்டுக்கொரு முறை இரவில் மட்டுமே பூக்கிற, பூத்ததும் ஒருசில மணிகளில் மூடிக் கொண்டு விடுகிற அதிசய மலர்களான பிரம்மக் கமலங்கள் அபூர்வமாகவே ஒரு செடியில் பல மொட்டுகள் விட்டு விரிந்து மலரும். அப்படியான அதிசயம் சென்ற ஞாயிறு, அமாவாசையும் சூரியக் கிரகணமும் சேர்ந்த நாளின் நள்ளிரவில் எங்கள் வீட்டுக்கு கீழ்தளத்தில் வசிப்பவர்கள் வீட்டில் நிகழ்ந்தது.

பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் இம்மலரின் தாவரயியல் பெயர் Epiphyllum oxypetalum. இமய மலை, வடக்கு பர்மா மற்றும் தென்மேற்கு சைனாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இமய மலைப் பிரதேசங்களில் சுமார் 4500 மீட்டர் உயரத்தில் காணக் கிடைக்கின்றன.

உத்தர்காண்டின் மாநில மலராக இருப்பதுடன், 1982 ஆம் ஆண்டு இந்திய தபால் துறையால் ‘ஹிமாலயன் மலர்கள்’ வரிசையில் தபால்தலையாகவும் வெளியிடப் பட்டிருக்கிறது பிரம்மக் கமலம்.
#2 தெய்வீக மலராகக் கொண்டாடப் படும் இவை மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. வளைந்த தடிமனான இதன் தண்டுகள் வெட்டுக் காயங்களுக்கு மருந்தாகிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் தடைபடுகிற cerebral ischemia மற்றும் பக்கவாதத்தைக் குணமாக்கவும் பயனாகிறது.திபெத்தியர் இதை மூலிகையாகக் கருதுகிறார்கள்.

சிலருக்கு வளர்க்க ஆரம்பித்து இரண்டு, மூன்று ஆண்டுகளிலே பூப்பது உண்டு. தோழி லதா இந்தச் செடியை ஐந்து ஆண்டுகளாகப் பராமரித்து வளர்த்து வருகிறார். முதன் முறையாக சென்ற வருடம் ஒரே ஒரு மலர் பூத்த போது அந்த இரவிலும் குடியிருப்பிலிருந்த பலரும் கூடி இரசித்துச் சென்றனர். இந்த ஆண்டோ பத்து மொட்டுகள் விடவும் அவரது பரவசத்துக்கு அளவேயில்லை.
#3

முதலில் சிறிதாக இருக்கும் மொட்டுகள் பூக்கவிருக்கும் நாளில் இப்படிப் பெரிதாகி விடுகின்றன.
#4

இரவு ஒன்பது மணி அளவில் இப்படிப் பாதியாக மலர்ந்து, பின் நள்ளிரவை நெருங்கும் சமயத்தில் முற்றிலுமாக முகிழ்ந்து மிக இரம்மியமான மணத்தையும் எழுப்பியன.
#5 இரவில் வேறு விளக்கு வெளிச்சம் இல்லாத சூழலில் ஃப்ளாஷ் உபயோகித்தே படங்களை எடுக்க வேண்டியதாயிற்று.

#6 பூத்த பத்து மலர்களையும் பூரிப்புடனும் பார்த்து ரசிக்கிறார் லதா.அபூர்வமாய் மலருவதால் மட்டுமின்றி, பூக்கும் வேளையில் அதன் அருகிலிருப்பவர்கள் ஆசிர்வதிக்கப்படுவதாகவும் அதிர்ஷ்டம் ஏற்படுமென்றும் ஒரு நம்பிக்கை பரவலாக இருந்து வருவதால் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்துவது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது நாடெங்கிலுமே. விரும்பியவர்கள் இரசித்து படமெடுத்துச் சென்றபின் செடியில் வாடவிட வேண்டாமென அவற்றைக் கொய்து பூஜைக்கு வைத்து விட்டார் லதா.

இதே நாளில் பெங்களூரின் வேறு சில இடங்களிலும் பிரம்மக் கமலங்கள் பூத்த விவரம் பின்னர் அறிய வந்த போது அமாவாசைக்கும் இதற்கும் தொடர்புண்டோ எனும் எண்ணம் ஏற்பட்டது. தெரிந்தவர் சொல்லலாம். இளவேனிற் காலத்திலேயே பூக்கும் என அறியப்பட்டாலும் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பூக்கிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அபூர்வ நிகழ்வின் அழகிய தருணங்களைக் காண அழைத்த தோழிக்கு நன்றி. அவற்றை உங்களுடன் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி:)!
***

திங்கள், 21 மே, 2012

தூறல்: 5 - கல்கி சிறுகதைப் போட்டி; IRCTC

கல்கி 2012 சிறுகதைப் போட்டி அறிவிப்பைத் தவறவிட்டவர் வசதிக்காக இங்கே:கடைசித் தேதி 15 ஜூன் 2012. ஒவ்வொரு வாரமும் கல்கியில் வெளியாகிக் கொண்டிருக்கிற அறிவிப்புடன் இருக்கும் கூப்பனை நிரப்பிக் கதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும் எனும் புதிய விதிமுறையைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
***


IRCTC-யில் தத்கல் பயணச்சீட்டுக்களுக்கு முன்பதிவு செய்யும் நேரத்தை இப்போது 24 மணிநேரமாக்கி விட்டது அனைவரும் அறிந்ததே. அவசரப் பயணங்களுக்கு அதிகாலை 8 மணிக்கு தயாராகக் கணினி முன் காத்திருந்து மடமடவெனப் படிவத்தை நிரப்பி நிமிரும் முன் மின்னல் வேகத்தில் வேறு யாரேனும் வாங்கி விட்டிருக்க ஏமாந்த அனுபவம் உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். கை கொடுக்க வந்திருக்கிறது ஐஆர்சிடிசியின் புதிய வசதியான மேஜிக் ஆட்டோ ஃபில். தத்கலுக்கு மட்டுமின்றி எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டுமானாலும் உபயோகமாகும். இணைய குழுமத்தில் உதயன் பகிர்ந்திருந்த தகவலைப் பார்த்து அறிய வந்தேன். உங்களுக்கும் பயனாகலாம்.

மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இப்பக்கத்தில் காணப்படும் படிவத்தை ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் செய்வது போன்றே பெயர், வயது உள்ளிட்ட விபரங்களையும் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே நிரப்பி தயார் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்தபின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும். அதை அப்படியே டிராக் செய்து, புக் மார்க் டூல் பாரில் நிறுத்தி விடுங்கள். முன்பதிவு செய்யும் போது விவரங்கள் நிரப்பும் பக்கம் வருகையில் டூல் பாரில் நிறுத்திய மேஜிக் ஆட்டோ ஃபில்-ஐ க்ளிக் செய்தால், பயணிகளின் விவரப் பட்டியல் ஒரு நொடியில் நிரம்பி விடும். தெளிவாகத் தெரிந்து கொள்ள யூட்யூபில் வீடியோ டெமோவும் தந்திருக்கிறார்கள்.
***

பெங்களூரின் கோடை வெப்பத்தைத் தணிக்கும் விதமாக சாரலைக் கொண்டு வந்து சேர்த்தார் மும்பையிலிருந்து வந்திருந்த (அமைதிச் சாரல்) சாந்தி மாரியப்பன். கடந்தவார இறுதியில் அவர் இங்கிருந்த நான்கு நாட்களும் மழையால் பூமி குளிர்ந்தது. சந்திப்பால் எங்கள் மனமும்:)! சென்ற திங்கட்கிழமை மாலை சொன்ன நேரத்தை விடச் சற்று தாமதமாகவே செல்ல முடிந்தது என்னால். அதுவரையிலும் மூன்றாம் ஆண்டைத் தொடங்கும் வல்லமை இதழின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள் நிறுவனர் அண்ணா கண்ணனும், துணை ஆசிரியரான சாந்தியும். எனது ‘புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்’ பதிவுக்காக வல்லமையாளர் விருது கிடைத்ததை ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான பரிசும் அன்று வழங்கப்பட்டது. நன்றி வல்லமை:)! சந்திப்பில் ஐயப்பன் கிருஷ்ணன், வா. மணிகண்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

***
எங்கள் ப்ளாகில் பாஹே அவர்கள் 'கதைக்குத் தலைப்பு'ப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்குமே பரிசு என அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வென்றவர்களை. “அடடா இப்படி நடக்குமெனத் தெரியாமப் போச்சே. இனி சொன்னால் பரிசு உண்டா?” கெஞ்சாத குறையாக ஆதங்கப்பட்டார்கள் கலந்து கொள்ளாத நண்பர் சிலர்:)! நல்ல பரிசைத் தவறவிட்டிருக்கிறார்கள்.மனைவியின் மறைவுக்குப் பிறகு அவரது பெயரையும் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு விட்ட திரு பாலசுப்ரமணியம் ஹேமலதா(பாஹே) எழுதிய தத்துவத் துளிகளால் நிறைந்தது இந்நூல். வாழ்வியல் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியும், மானுடரின் மனப்போக்குகளை அலசித் தன் கோணத்தில் விடைகளைத் தந்தும் நிறைய சிந்திக்க வைக்கிறார். முதிர்ந்த அனுபவம் தெளிந்த வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டுவதாக அமைந்திருக்கும் பின் அட்டையும், தத்துவச்சாரலில் நனையும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுமாக அட்டைப்படம் ஒரு அழகிய செய்தியைச் சொல்கிறது. பரிசுக்கு நன்றி 'எங்கள் ப்ளாக்'!

புத்தகத்திலிருந்து ஒரு துளி:

எவரெஸ்டை எட்டுவதிலா இருக்கிறது வெற்றி?
***

படத்துளி:
“இப்ப நல்லாத் தெரியுதுப்பா!”

***

வியாழன், 17 மே, 2012

பிரெஞ்சுக் கவிதைகள்: இரகசியம்; அதிசயம்; மணியொலி - அதீதத்தில்..

இரகசியம்

ஒலிக்காத மணி
உயிரற்ற பறவைகள்
ஒன்பது மணிக்கெல்லாம்
உறங்கிவிடுபவரைக் கொண்ட
வீட்டினுள்

பூமி சுற்றாமல் தன்னைத் தானே பிடித்திருக்க
யாரோ பெருமூச்சு விட்டதாக நீங்கள் சொல்லலாம்

மரங்கள் புன்னகைப்பது போல் தோன்றின
ஒவ்வொரு இலை நுனியினின்றும் நீர் சொட்டியது
மேகமொன்று இரவைக் கடந்து சென்றது

கதவின் முன்னே பாடிக் கொண்டிருக்கிறான்
ஒரு மனிதன்

திறக்கிறது ஜன்னல் சத்தமின்றி.
***




அதிசயம்

தலை தொங்கிக் கிடக்க
கண் இமைகள் சுருண்டிருக்க
உதடுகள் மெளனம் காக்க
ஒளிர்ந்தன விளக்குகள்

எதுவுமில்லை அங்கே
மறந்து போன பெயரைத் தவிர

ஒருவேளை கதவு திறந்தாலும்
நுழையும் துணிவில்லை
அங்குதான் அத்தனையும் நடப்பதால்

அவர்கள் பேச
நான் கேட்க வேண்டும்

என் விதி
அந்த அறையிலேதான்
பணயம் வைக்கப்பட்டுள்ளது.
***


மணியொலி

எல்லா விளக்குகளும் அணைந்தன
காற்று பாடிக் கொண்டே கடந்தது
மரங்கள் நடுங்கின
மிருகங்கள் மரித்தன
எவரும் விட்டு வைக்கப்படவில்லை

பார்
நட்சத்திரங்கள் மின்னுவதை நிறுத்தி விட்டன
பூமி கூடச் சுழலவில்லை

ஒரு தலை மெல்ல அசைய
கேசம் இரவைத் துப்புரவு செய்ய
காணாது போன ஊசிக்கோபுரத்திலிருந்து
ஒலிக்கின்றது
நள்ளிரவில் மணி.
***

மூலம் பிரெஞ்சு மொழியில்: PIERRE REVERDY(1889-1960)
ஆங்கில மொழியாக்கம்: Kenneth Rexroth

அதீதம் இதழுக்காக மொழிபெயர்த்த கவிதைகள்:
‘SECRET’ http://www.atheetham.com/atheetham/?p=328 [31 March 2012]
‘MIRACLE’ http://www.atheetham.com/atheetham/?p=331 [31 March 2012]
‘A RINGING BELL’ http://www.atheetham.com/?p=637 [2 May 2012]

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin