வெள்ளி, 8 செப்டம்பர், 2023

கரும்பருந்து ( Black kite ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்: Black Kite; உயிரியல் பெயர்: Milvus migrans;
வேறு பெயர்: ஊர்ப்பருந்து

கரும்பருந்து, நடுத்தர அளவிலான, அக்சிபிட்ரிடே (Accipitridae) எனப்படும் பாறு குடும்பத்தைச் சேர்ந்த, கொன்றுண்ணிப் பறவை (bird of prey).  பாறு குடும்ப வகையில் அதிகமான தொகையில் வாழும் பறவைகளாக அறியப்பட்டாலும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் அவற்றின் எண்ணிக்கையில் சரிவும், ஏற்ற இறக்கமும் இருந்துள்ளன. தற்போது உலக அளவில் சுமார் 60 இலட்சம் கரும்பருந்துகள் வாழ்வதாகக் கணக்கிடப் பட்டுள்ளன. 

இவை மிதவெப்ப மற்றும் அதிவெப்பப் நிலப்பகுதிகளில் பரவலாக வாழ்கின்றன. குறிப்பாக யுரேசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டங்களில் காணலாம். ஐரோப்பாவில் இவற்றின் எண்ணிக்கை குறைவாகவும், தென் ஆசியாவில் அதிகமாகவும் உள்ளது. மிதவெப்பப் பகுதிகளில் வாழ்பவை வலசை செல்பவையாகவும் அதிவெப்பப் பகுதிகளில் ஓரிடமாக வசிப்பவையாகவும் உள்ளன. 

பறக்கும் பொழுது இதன் சிறகுகளின் விரிந்த கோணமும், பிளவுபட்ட வாலும் கழுகு மற்றும் வேறு வகைப் பருந்து போன்றவற்றிடமிருந்து இதனை  வேறுபடுத்திக்காட்டும்.  தனது குஞ்சுகளுக்காக கோழிக் குஞ்சுகளைப் பிடித்துச் செல்லும். இறைச்சிக் கடைகள், மீன் பிடிக்கும் மற்றும் விற்கும் இடங்களில் வட்டமிட்டபடி இருக்கும். 

எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் வயலில் டிராக்டர் வைத்து உழும் போது நிலத்திலிருந்து வெளிப்படும் புழுக்களை உடனே பிடித்து உண்ண டிராக்டர் பின்னாலேயே புறாக்கள் பறந்தபடி இருக்கும். அதே நேரம் பத்து முதல் இருபது பருந்துகளாவது எங்கிருந்தோ வந்து வட்டமிட்டபடி இருக்கும். அவை உண்பதற்கு ஏற்றபடி உழுத மண்ணில் என்ன கிடைக்குமோ? கூடில்லாத நத்தையாக (ஸ்லக்) இருக்கலாம். ஏனெனில் அளவில் பெரிதான செம்போத்து பறவைகள் எங்கள் தோட்டத்தில் பெரும்பாலும் நத்தைகளையேத் தேடி உண்ணும்.

#2

கருப்பு அலகு, மஞ்சள் கால்கள், கரிய நகங்கள்

கரும்பருந்து தவிட்டு நிறம் கொண்டது. கழுத்தும் முகமும் சற்றே வெளிறி இருக்கும்.  அலகு வளைந்து கருப்பாகவும், கால்கள் மஞ்சள் நிறத்திலும், கூரிய நகங்கள் கரிய நிறத்திலும் இருக்கும். இறக்கை நீட்டம் 150 செ.மீ (ஐந்தடி) வரையிலும் இருக்கும். சுமார் 735 கிராம் எடையுடையது. ஆண், பெண் இரண்டு பாலினங்களும் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை ஆயினும் பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட அளவில் சற்று பெரிதாகவும் அதிக மூர்க்கமாகவும் இருக்கும். இது எல்லாக் கொன்றுண்ணிப் பறவைகளுக்கும் பொருந்தும். முதலில் தனித்துவமான கீறிச்சிடும் ஒலி எழுப்பி, பின்னர் தொடர்ச்சியாக உரத்த சிணுங்கலாக வேகவேகமாகச் சத்தமிடும்.

#3

இறக்கை நீட்டம் (ஐந்தடி) மற்றும் பிளவு பட்ட வால்..
(இந்தப் படம் மட்டும் 12 வருடங்களுக்கு முன்,
அடுக்குமாடிக் குடியிருப்பின் 
ஐந்தாவது மாடியிலிருந்து எடுத்தது.)

இந்தியாவில் கரும்பருந்துகளின் இனப்பெருக்கக் காலம் குளிர்காலமான ஜனவரி - பிப்ரவரியில் தொடங்கி, மழைக்காலத்துக்கு முன்னர் குஞ்சுகள் பறக்கத் தயாராகும் வகையில் அமையும். மரக் கிளைகளில் குச்சிகளால் கூடு அமைக்கும். அதே கூடுகளை அடுத்தடுத்த வருடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளும். கூடு கட்டுவது, முட்டைகளை அடைகாப்பது, குஞ்சுகளுக்கு உணவு அளித்துப் பராமரிப்பது போன்ற வேலைகளை ஆண், பெண் இரு பாலினப் பறவைகளும் சேர்ந்தே செய்யும். ஐரோப்பாவில் இப்பறவைகள் கோடை காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. 

#4

ஒரு நேரத்தில் இரண்டு முதல் மூன்று முட்டைகள் வரை இடும். குஞ்சுகள் பொரிந்து வெளிவர 30 முதல் 34 நாட்கள் ஆகும். இந்தியாவில் குஞ்சுகள் சுமார் 2 மாத காலம் வரை கூட்டில் வசிக்கின்றன. ஐரோப்பாவில் பெற்றோர்கள் வலசை செல்லும் அவசரத்தில் இருப்பதால் குஞ்சுகளை விரைவிலேயே கூட்டை விட்டு வெளியேறத் தயாராக்கி விடுகின்றன. 

#5


பெற்றோர் குஞ்சுகளை நெருங்கும் எதிரிகளை முரட்டுத்தனமாகத் தாக்கும். மனிதர்கள் கூட்டை நெருங்கினாலும் எதற்கென அடையாளம் கண்டு கரணமடித்துத் தாக்கி விரட்டியடிக்கும். பொதுவாகக் குஞ்சுகள் 17-19 நாட்களில் நிற்கத் தொடங்கி 27-31 நாட்களில் இறக்கைகளை அடிக்க ஆரம்பித்து 50 நாட்களில் கூட்டை விட்டு அடுத்த கிளைகளுக்குச் செல்லத் தொடங்கி விடும். வளர்ந்து இரண்டு வயதான பிறகு இனப்பெருக்கத்திற்குத் தயாராகி விடும். 

#6


பிற உயிரினங்களை கொன்றுண்ணும் கரும்பருந்துகளையும் வேட்டையாடி உண்ண உள்ளன அதனினும் பெரிய பறவைகளாக யுரேசிய கழுகு-ஆந்தை (புபோ புபோ). சிறியனவற்றை மட்டுமின்றி பெரிய பருந்துகளையும் தாக்கி உணவாக்கிக் கொள்ளும்.

*

விக்கிப்பீடியா ஆங்கிலத் தளம் உட்பட இணையத்திலிருந்து சேகரித்து, நான் தமிழாக்கம் செய்த தகவல்கள்.

**

மூன்றாவது படம் தவிர்த்து மற்றன..,
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (178)

பறவை பார்ப்போம் - பாகம்: (105)

***


6 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.  பருந்துகள், கழுகுகள் பற்றி சிறுவயதில் இருந்த பக்தி வளரவளர அது பற்றி படித்ததும் சற்று பயமாக மாறியது.  இப்போது கூட பெரிய உயிரினங்களைத் தூக்கிச் செல்லும் கழுகுகள் பற்றிய காணொளிகள் காணும்போது சில்லிடும்!

    பதிலளிநீக்கு
  2. கரும்பருந்து பற்றி நிறைய விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
    படங்கள் எல்லாம் அருமை. பல வருடங்களுக்கு முன் எடுத்த பருந்து படமும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. இறக்கை நீட்டம் பற்றி எழுதுகையில் முன்னர் எடுத்த படம் நினைவுக்கு வர, ஃப்ளிக்கரில் இருந்து தேடியெடுத்து பகிர்ந்து கொண்டேன் :).

      நீக்கு
  3. கரும்பருந்து - பற்றிய விவரங்கள் சுவாரசியம்.

    படங்கள் அட்டகாசம். அதுவும் 12 வருடங்களுக்கு முன் எடுத்த பறக்கும் பருந்து படம் செம ஷாட். தெளிவா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்தாவது மாடியில் இருந்து எடுத்தபடியால் சற்று நெருக்கமாக எடுக்கும் வாய்ப்புக் கிட்டியது. நன்றி கீதா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin