செவ்வாய், 15 ஜனவரி, 2019

உழவர் திருநாள் வாழ்த்துகள்!

விளைச்சல் அமோகம்
#1

யற்கைக்கும் சூரியனுக்கும் உழவுக்கும் இன்னபிற உயிர்களுக்கும் நன்றி சொல்லி வழிபடும் பொங்கல் திருநாள் தமிழர்களைப் பொறுத்தவரை சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் ஒரு தேசிய விழாவாகவே இருந்து வருகிறது.
வாசலில் சுண்ணாம்புக் கோலங்கள் இட்டு, முற்றத்தில் மண் அடுப்புகளில் பானைகளை ஏற்றி அதிகாலையில் சர்க்கரைப் பொங்கலிட்டு சூரியனுக்குப் படைத்து வழிப்பட்ட காலங்களை நினைத்தபடி குக்கரில் பொங்கல் வைத்து தோட்டத்தில் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து இன்றைய பொங்கல் தினங்களைப் பாரம்பரியங்களின் தொடர்ச்சியாகக் கொண்டாடி வருகிறோம்.


சிறுவயது பொங்கல் நினைவுகளை 2011_ஆம் ஆண்டு தினமணிக் கதிரில் வெளியான ‘வயலோடு உறவாடி’ சிறுகதையில் விரிவாகப் பகிர்ந்திருந்தேன். முன்னர் வாசித்திராதவர்களுக்காக இங்கே இணைப்பு:
“ ‘நாட்கதிர்’ என்றொரு வழிபாடு இருந்தது. அறுவடையானதும் பசுமை மாறாத நெற்கதிர் கட்டு ஒன்று வயலில் இருந்து வீடு தேடி வரும் அருள் பாலிக்க. முற்றத்தில் கோலமிட்ட மணை ஒன்றில் அதை நேராக நிறுத்தி பொட்டு பூவெல்லாம் வைத்து சூடம் காட்டிக் கும்பிடுவார்கள்...”

மாட்டுப் பொங்கல் நினைவுகளை இரு சிறுபத்திகளாக அமீரகத் தமிழ்மன்ற ஆண்டு விழா மலரில் வெளியான ‘ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' கதையில் பகிர்ந்திருந்தேன்:
#2


“இரண்டும் அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரி வெள்ளை வெளேரேன முக்கால் அடிக்குத் திமிலும், ஒன்றரையடி உயரக் கூரிய கொம்புகளுமாகப் பார்ப்பவர்களை மிரட்டும். வளர்ந்த கன்றுகளாக வாங்கப்பட்டு இவராலேயே வளர்க்கப்பட்டவை என்பதால் இவரைத் தவிர எவருக்கும் அடங்காது. மாட்டுப் பொங்கலுக்கு வழக்கத்தை விட வைக்கோலைப் பந்தாகச் சுருட்டி நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, நெற்றியிலே பளீரெனத் திலகமிட்டு, கழுத்திலே மாலையில் கரும்புத் துண்டுகள், பனங்கிழங்குகளுடன் பண்ணையார் கொடுக்கும் பணமுடிப்பையும் மஞ்சள் துணியில் முடிந்து கட்டி ஊர் உலா கூட்டிச் செல்வார். ஊர் உலா என்பது நான்கைந்து தெருக்கள் வழியே கூட்டிச் சென்று மீண்டும் வீட்டுக் கொட்டகைக்கு அழைத்து வருவதுதான். ஒருவகையில் இது சிறிய அளவிலான ஜல்லிக்கட்டு போலதான். மாடு வளர்க்கும் எல்லா வீடுகளிலும் இந்த வழக்கம் இருந்தது. சூரிய அஸ்தமன நேரத்தில் இப்படி வீர உலா கிளம்புகையில் திருஷ்டி கழிக்க என புறவாசலின் முன் வைக்கோலைப் போட்டு தீமூட்டி அதை மாடுகளைத் தாண்டச் செய்வார்கள்.

#3

சோலையும் சொக்கனும் ‘ஹை ஜம்ப்’ செய்து அஞ்சாமல் தாண்டும் அழகைக் காணப் பாதுகாப்பாய் வீட்டுச் சுவர்களின் மேல் ஏறி நின்று காத்திருப்பார்கள் சிறுவர்கள். வாலிபப் பசங்களோ ஊரின் மற்ற அனைத்து மாடுகளின் கழுத்து முடிப்புகளையும் கைப்பற்றியக் களிப்புடனேயே திருப்தி அடைந்து விடுவார்கள். இந்த ஜோடியைப் பிடிப்பதாய் ‘பாவ்லா’ காட்டக் கூடப் பயந்து, சிறுவரைப் போல் மதில் மேல் ஏறி நின்றாலும் வெட்கக் கேடு எனப் பல்லிகளாய் சுவரோடு ஒட்டி நின்று வெறுமே வேடிக்கைதான் பார்ப்பார்கள். யாரும் கை வைக்கத் துணியாத பணமுடிப்பும் சுப்பையாவுக்கே கிடைத்தது. ஆனாலும் தான் அதை எடுத்துக் கொள்வது முறையல்ல எனச் சிறுவர்களை அழைத்துப் ‘புடிங்கடா பொங்கபடி’ எனக் கொடுத்து விடுவார்.”

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!
#4

உழவர்களின் வாழ்வு செழிக்கவும், இயற்கையின் கருணை பொழியவும் இந்நாளில் பிரார்த்திப்போம்.

#5


நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!
#6

****

7 கருத்துகள்:

  1. படங்கள், அனுபவம், எல்லாம் மிக அருமை.
    சோலையும், சொக்கனும் அழகு.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டு சிறுகதைகளும் மனதோடு உணர்வுப்பூர்வமாக பேசியது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகளை வாசித்துக் கருத்துகளை அங்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. அழகிய தொகுப்பு. பழைய பதிவுகளையும் சென்று பார்த்து வந்தேன். அப்புறமாய் மறுபடி படிக்கவேண்டும். அங்கு என் கமென்ஸ்ட் அதற்கு உங்கள் பதில் மட்டும் கண்டு வந்தேன்! (என்ன ஒரு சுயநலம்!)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin