செவ்வாய், 8 ஜனவரி, 2019

மணிப்புறா - பறவை பார்ப்போம் (பாகம்:36)

புறாக்களில் இரண்டு வகை. மணிப்புறாவும் மாடப்புறாவும். உருவத்தில் சிறியதாக இருக்கும் மணிப்புறா ஆங்கிலத்தில் "dove" என்றும், சற்றே பெரிய உருவத்தைக் கொண்ட மாடப்புறா "pigeon"  என்றும் அறியப்படுகின்றன. பெரிய கட்டிடங்கள், கோபுரங்கள், மசூதிகளில் வசிப்பதால் மாடப்புறா எனும் பெயர் வந்திருக்கக் கூடும்.

#1
ஆங்கிலப் பெயர்: Spotted dove
இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா பகுதிகளில் அதிகம் காணப்படுகிற மணிப்புறா, கூர்மையான கருப்பு நிற அலகுகளைக் கொண்டவை. கண்கள் செம்பழுப்பு நிறத்திலும் கால்கள் சிகப்பு நிறத்திலும் இருக்கும். மாடப்புறாவை விடச் சிறிதாக மெலிந்த உருவத்துடன், தவிட்டு நிறத்துடன், புள்ளிகள் கொண்ட கருநிறப் பின்கழுத்தைக் கொண்டிருக்கும்.  வாலின் முனை சதுர வடிவில் இருக்கும்.  30-33 செ.மீ நீளத்தில் சுமார் 160 கிராம் எடையில் இருக்கும். ஆயுட்காலம் 8 ஆண்டுகள் வரையிலும். ஆண், பெண் இரு பாலினப் பறவைகளும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவை.

#2

பொதுவாகப் புறாக்கள் கூட்டம் கூட்டமாக வசித்திடும் பறவை வகை என்றாலும்
மாடப்புறாக்கள் அளவுக்கு மணிப்புறாக்கள் பெரும் கூட்டமாக வசிப்பதில்லை. தோட்டங்களிலும் புன்செய் மற்றும் சதுப்பு நிலப் பகுதிகளில்  தனியாகவோ, இணையுடனோ அல்லது சிறு கூட்டமாகவோ மேய்ந்து கொண்டிருக்கும். நிலத்திலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும்.

#3

தானியங்களை உண்டு வாழும் பறவை என்றாலும் புல் விதைகள்,  பிற செடிகளின் விதைகள்,  நிலத்தில் விழுந்து கிடக்கும் பழங்கள் ஆகியவற்றையும் உண்டு வாழும்.  இறக்கைகள் கொண்ட சிறுபூச்சிகளையும் எப்போதேனும் உண்பதுண்டு.

#4


ணிப்புறாக்கள் தங்கள் பூர்வீகத்தைத் தாண்டி உலகின் பல பாகங்களிலும் பரவலாக வசிக்கத் தொடங்கின. அவற்றுள் மொரிஷியஸ்,ஹவாய், தென் கலிஃபோர்னியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் குறிப்பிடத் தக்கன. 1860_ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அறிமுகமான மணிப்புறாக்கள் பின்னாளில் அந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட புறாக்கள் காணாது போகும் வண்ணமாக அதிக அளவில் பெருகின. தற்போது மெல்போர்னின் வீதிகள், பூங்காக்கள் விளை நிலங்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் வெப்ப மண்டலக் காடுகள் உட்பட பல்வேறு பகுதிகளில் அதிக எண்ணிக்கைகளில் வசிக்கின்றன. உலகில் இவற்றின் மொத்த எண்ணிக்கை ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் அதிகரிப்பதோ அல்லது பெருமளவில் குறைவதோ வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

#5

மணிப்புறாக்கள் சீரான சிறகடிப்புடன் விருட்டென வேகமாக எழும்பிப் பறக்கக் கூடியவை. எப்போதேனும் சிறகுகளைக் கூராக உதறியும் பறக்கும். சத்தமாக சிறகடித்து செங்குத்தாக உயர எழும்பும் இவை, வாலின் முனையிலிருக்கும் வெள்ளை நிறம் தெரியும் படி அகலமாக வாலை விரித்து, வழுக்கியபடி மெதுவாகத் தரையிறங்கும்.

#6

வற்றின் இனப்பெருக்கக் காலம் இடத்திற்கிடம் வேறுபடும். மிதமான சீதோஷ்ணம் உள்ள இடங்களில் கோடையில் இனப்பெருக்கம் செய்யும். ஹவாயில் வருடம் முழுவதுமே இனப்பெருக்கக் காலமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலும். ஆண் புறா பெண் புறாவைச் சுற்றிச் சுற்றி வந்து தன் தொண்டை தரையில் தொடும்படி வணங்கி, தலையை மேலும் கீழும் அசைத்துக் கூவி ஆடும். உயரம் குறைந்த தாவரங்களில் சுள்ளிகளால் பொலபொலவென இருக்கும் கூடுகளைக் கட்டும். பெண்புறா பளபளப்பான இரண்டு முட்டைகளை இடும். ஆண் பெண் இரு பறவைகளுமே கூடு கட்டுவது, முட்டைகளை அடை காப்பது, குஞ்சுகளுக்கு உணவு அளிப்பது ஆகிய பணிகளில் ஈடுபடும். முட்டைகள் 13 முதல் 16 தினங்களில் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும். சிறகுகள் முளைத்திட மேலும் இருவாரங்கள் ஆகும். சில நேரங்களில் உடனடியாக பெற்றோர்கள் அடுத்து இருமுட்டைகள் இட்டு அடை காக்க ஆரம்பிக்கம். அதாவது ஒரே இனப் பெருக்கக் காலத்தில் இவை அடுத்தடுத்து  இரண்டு முறைகள் குஞ்சு பொரிக்கும்.

#7
மணிப்புறாக்கள் க்ரூக்ருக்-க்ரூக்ருக் என சன்னமாக ஒலியெழுப்பும். தொடர்ந்து ஒலியெழுப்புகையில் க்ரூ-க்ரூ-க்ரூ எனக் கூவும்.
**

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 45
தகவல்கள்: விக்கிப்பீடியா மற்றும் இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.
***

16 கருத்துகள்:

  1. படங்கள் அழகு. எத்தனை தகவல்கள்....

    தலைநகர் தில்லியில் நிறைய புறாக்கள் உண்டு. அவை எந்த வகையான புறாக்கள் எனப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. மணிப்புறாக்களை மிக அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். சுவாரஸ்யமான தகவல்கள். அழகிய படங்கள் - வழக்கம்போல.

    பதிலளிநீக்கு
  3. மணிப்புறா அழகாய் இருக்கிறது.

    மணிப்புறாவை என் வீட்டு ஜன்னல்வழியே படம் எடுத்து முன்பு பதிவு போட்டு இருக்கிறேன்.
    மகன் வீட்டில் இவை அடிக்கடி வந்து குஞ்சுபொரித்து செல்கிறது.
    இங்கும் கொஞ்சம் இருக்கிறது. ஒரு வீட்டில் வைத்து இருக்கும் மூங்கில் செடிக்குள் கூடு அமைத்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுக்குமாடிக் குடியிருப்பில் மாடப்புறாக்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். இங்கே மணிப்புறாக்கள் அதிகமாக உள்ளன. தங்கள் பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. தகவல்கள் அனைத்தும் மிக சிறப்பு ..

    படங்கள் எல்லாம் வெகு துல்லியம் அழகோ அழகு ...

    பதிலளிநீக்கு
  5. எங்கள் வீட்டில் கூடு கட்டி முட்டை இட்டது. மிக சந்தோஷமாக இருந்தது.‌ஏனெனில் சாத்திரப்படி தெய்வம் உலாவும் இடத்தில் தான் அவைகள் வாழும்.‌நேற்றைய ‌தினம் முட்டைகளை காகம் தூக்கி விட்டது. மனம் கஷ்டமாக உள்ளது.‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தமே. ஆனால் சூழலியலில் இது தவிர்க்க முடியாதது. தங்கள் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  6. இதை வீட்டில் வளர்க்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், செல்லப் பறவைகளாக இவற்றை வீட்டிலும் சிலர் வளர்க்கிறார்கள்.

      நீக்கு
  7. வீட்டில் அருகில் மரத்தில் இருக்கிறது. புறா வீட்டில் இருந்தால் உடல் நல குறைவு என்கிறார்களே. இருக்கலாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கூட்டமாக வசிக்கும் மாடப்புறாக்களின் கழிவுகளால் வீஸிங் பிரச்சனையுள்ளவர்களுக்குப் பாதிப்பு உண்டாகிறது. பால்கனி, சன்னல் மற்றும் கட்டிட சுவர்களில் அவை ஏற்படுத்தும் கழிவுகள் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதால் அவ்வாறு கூறுகிறார்கள்.

      மணிப்புறாக்கள் பெரும்பாலும் கட்டிடச் சுவர்களை அசுத்தம் செய்வதில்லை. தோட்டங்கள், மரங்களிலேயே அதிகம் வசிக்கின்றன.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin