ஞாயிறு, 25 நவம்பர், 2018

திருக்கார்த்திகை தீபங்களும்.. பண்டிகை நினைவுகளும்..

#1
ஓம் அருணாச்சலேஸ்வராய நமக!

வ்வொரு பண்டிகைக்குப் பின்னும் புராணக் கதைகளும், காரணங்களும்  கால காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார வழக்கங்களும், மரபுகளும் உள்ளன. முந்தைய தலைமுறையினரை போல அவற்றை மிகச் சரியாக இன்று நாம் பின்பற்ற முடிவதில்லைதான். ஆனாலும் ஒவ்வொருவரும் அவரவர் வாழும் இடங்களில் முடிந்தவரை சிலவற்றையாவது பின் பற்றி வருவது ஆறுதலான ஒன்றே.

#a
ஒரு திருகார்த்திகை அன்று.. 
வீட்டு ‘மணவட’ முன்பு..
ல்லாப் பண்டிகைகளும் சிறுவயது நினைவுகள் இல்லாமல் கடந்து போவதில்லை. திருக்கார்த்திகைக்கு ஓரிரு நாட்கள் இருக்கும் போதே
பெரிய மர அலமாரிகள் மற்றும் பாத்திர அறையிலிருக்கும் மரப்பெட்டிகளிலிருந்து  அத்தனை விளக்குகளும் வெளியே எடுக்கப்பட்டுத் துலக்கப்படும். வீட்டிலிருக்கும் அத்தனை அறைகளிலும் சுண்ணாம்புக் கோலங்கள் இடப்படும். முதலில் சாக்பீஸ் கொண்டு வரைந்த பின்னர் சுண்ணாம்புக் கலவையில் சிறு வெள்ளைத் துணியைப் பந்து போலச் சுருட்டிச் சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு அதை நடுவிரல் வழியாக வரைந்த கோலத்தின் மேல் பிழிந்தபடியே கோலங்களை  இடுவார்கள்.  அனைத்து நிலைக்கதவுகள் மற்றும் சன்னல் கதவுகளிலும் கரைத்த அரிசி மாவில் கையினை முக்கியெடுத்து “நான்.. நீ..” யெனப் போட்டி போட்டுக் கொண்டு அச்சு வைப்பார்கள்.  சன்னல் கதவுகளையும் சேர்க்கும் போது 50_க்கும் மேலிருக்கும் அச்சு வைக்க வேண்டிய கதவுகள்.  [பிறந்து வளர்ந்த அந்த வீட்டின் நினைவுகள் இங்கே: “திண்ணை நினைவுகள்”] அரிசி மாவு வழிந்து அழகு சேர்க்கும் அந்தக்  கை அச்சுகளின் நடுவே மற்றொருவர் சந்தனம் குங்குமம் வைத்தபடியே வருவார்கள்.

இரண்டு பெரிய மாவிளக்குகள் நடுவே குங்குமத் திலகத்துடன் ஏற்றப்படும். அத்தனை வெள்ளி, பித்தளை, வெண்கல விளக்குகள் மற்றும் கைப்பிடி வைத்த அலுமினிய தட்டுகளில் (tray) சுமார் நூறு சிறு விளக்குள் ஏற்றப்படும்.  அடியில் வட்ட வடிவத் தட்டும் மேலே கிண்ணம் போன்ற அமைப்புமாகச் செய்யப்படும் கொழுக்கட்டை விளக்குகளும் இதில் இடம் பெறும். மாலை ஐந்தரை ஆறுமணி அளவில் எல்லோருமாக மளமளவென எல்லா விளக்குகளையும் பட்டாலையில் (பட்டாசாலை) ஏற்றி முடிக்கவும் கார்த்திகைப் பொரி உருண்டைகள், கொழுக்கட்டைகளைப் பிரசாதமாகப் படைத்துத் தீப ஆராதனை நடக்கும். அதன் பிறகு அத்தனை விளக்குகளும் வீட்டு முற்றம் திண்ணை பிற அறைகள் என எல்லா இடங்களிலும் சுண்ணாம்புக் கோலங்களின் மேல் அலங்காரமாகச் வைக்கப்பட்டுச் சுடர் விட்டு ஒளிரும். கொழுக்கட்டை விளக்குகள் நெய்த் தீபமிடப்பட்டு வெளி வாசல் நடைகளின் இருபக்கமும் வைக்கப்படும். நெய்த் தீபங்கள் முழுதாக அணையக் காத்திருந்து அவற்றைப் பிற வீட்டுச் சிறுவர் சிறுமிகள் ஆசையோடு உண்ண எடுத்துக் கொள்வார்கள்.

இரவு ஏழரை மணி போல எங்கள் வீட்டு வாசலில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். அதை வேடிக்கைப் பார்க்கப் பலரும் கூடுவார்கள். தெரு முனையில் இருக்கும் சிவன் கோவிலிலும் சொக்கப்பனை வைப்பார்கள். தீபாவளிக்கு வாங்கிய வெடிகளில் மத்தாப்பு, புஸ்வாணம், தரைச் சக்கரம் ஆகியவற்றில் அவரவர் பங்கில் ஒரு பகுதியைக் கார்த்திகைகென்றே பதுக்கி வைத்திருந்து கொளுத்தி மகிழ்ந்திடுவோம்.

இன்று வரையிலும் ஒவ்வொரு கார்த்திகை மாதத்திலும் எல்லா நாட்களிலும் வெளிவாசலில் விளக்கு வைப்பதையும், திருக்கார்த்திகை அன்று அனைத்து விளக்குகளையும் ஏற்றிப் பூஜை செய்த பின் ஒவ்வொரு அறையிலும் வைப்பதையும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வருடம் 22_ஆம் தேதி மாலையே கார்த்திகை நட்சத்திரம் பிறந்த விட்ட படியால், 22,23 இரு தேதிகளிலுமே ஒருநாள் கொழுக்கட்டை, ஒருநாள் பொரி உருண்டைகள் என பூஜை செய்து விளக்குகள் ஏற்றியாயிற்று:

#2

#3
என் அக்கா ராமலக்ஷ்மி, பெரியம்மாவின் பெண் கோலங்கள் இடுவதில் கை தேர்ந்தவர். இன்றும் கார்த்திகை, பொங்கல் பண்டிகைகளின் போது அந்நாளில் அவர் இட்ட கோலங்கள் கண்களுக்குள் வந்து போகும். இந்த வருடம் என் வீட்டுக் கோலத்தில் அவர் வர்ணம் தீட்டி அலங்கரித்து எனக்குப் பரிசளித்த விளக்குகள் (படங்கள் 4,5_லும் ) இடம் பெற்றதில் தனி மகிழ்ச்சி. சிறந்த ஓவியர், கைவினைக் கலைஞருமான அவரது படைப்புகளையும் வேலைப்பாடுகளை முடியும் போது தனிப்பதிவாகப் பகிருகிறேன்.

மீப வருடங்களாக, கார்த்திகை மாதத்தில் ஏற்றும் விளக்குகளை ஒரு அறையில் மினி ஸ்டுடியோ செட் செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது படங்களெடுத்து தொகுப்பாகப் பகிர்ந்து வருகிறேன். (அவற்றுக்கான இணைப்பு பதிவின் இறுதியில்..). மேலிருக்கும் கொலாஜ் படங்கள் மொபைலில் (OnePlus 6T) எடுத்தவை. படம் 1 மற்றும் கீழ் வருவன வழக்கம் போல dslr பயன்படுத்தி எடுத்தவை.

#4
பரணி தீபங்கள்

#5
ஆதி விநாயகரும் அருட்பெரும் ஜோதிகளும்

#6
குபேர தீபங்கள்

#7
அன்ன விளக்குகள்

#8
பொரி உருண்டைகள்

#9
தீபத் திருநாளாகிய தீபாவளியின் போது 
ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம் ஒன்றும்:


#10
திருக்கார்த்திகை வாழ்த்துகள்!


ந்த வருடம் அனைவரது இல்லங்களிலும் ஏற்றப்பட்ட ஒளி தீபங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களின் துயர் தீர்ப்பதாக இருக்கப் பிரார்த்திப்போம்!
***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
திருக்கார்த்திகை: https://tamilamudam.blogspot.com/2013/11/blog-post_17.html
திருக்கார்த்திகை வாழ்த்துகள்! : https://tamilamudam.blogspot.com/2014/12/blog-post.html
அருட்பெருஞ்சோதி https://tamilamudam.blogspot.com/2015/11/blog-post_29.html

16 கருத்துகள்:

  1. மணவட என்றால் திண்ணையோ...

    உங்க அக்கா பெயரும் ராமலக்ஷ்மியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணமேடை என்பதே மருவி மணவட எனப்பட்டது. திண்ணைப் பதிவில் இந்த மணவட பற்றி விரிவாக உள்ளது:).

      ஆம். அவர் மற்றும் சித்தப்பா பெண்ணுக்கும் இதே பெயர், ஆச்சி(பாட்டி)யின் பெயர்.

      நீக்கு
  2. ஆ.... ஒன் ப்ளஸ் 6T வாங்கிட்டிங்களா? ஸூப்பர்.

    படங்கள் அழகு. நீங்கள் சொல்லி இருக்கும் அளவு பெரிய அளவில் கார்த்திகை நாங்கள் கொண்டாடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த மொபைல் வாங்கினாலும் இரண்டு வருடங்களே நன்றாக உள்ளன. ஒன் ப்ளஸ் 3 பேசிக் கொண்டிருக்கும் போது தானாகவே ஏரோப்ளேன் மோடுக்குப் போக ஆரம்பித்து விட்டது. ஒன் ப்ளஸ் இனி வேண்டாமென நினைத்திருக்கையில் 6 நன்றாக இருப்பதாகப் பலரும் சொல்ல, 6T வாங்கி விட்டேன்:).

      ஆம், சிலருக்கு வழக்கமில்லை எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. நெல்லை அவர்கள் வீட்டில் திருக்கார்த்திகைக்கு போடப்பட்ட கோலத்தைப் படமெடுத்து எங்கள் பிளாக் வாட்ஸாப் குழுமத்தில் பகிர்ந்திருந்தார். அற்புதமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை எப்போதேனும் எங்கள் ப்ளாகில் பகிரலாமே. எல்லோரும் காண வாய்ப்புக் கிடைக்குமே.

      நீக்கு
  4. காலை வணக்கம்.

    பண்டிகை நினைவுகள்..... மறக்க முடியாதவை.

    படங்கள் அனைத்தும் அழகு.

    கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. கார்த்திகை நினைவுகள் மிக அருமை. பெட்டிக்குள் இருக்கும்
    எல்லா விளக்குகளையும் எடுத்து விளக்கு ஏற்றுவோம்.
    இப்போது அவ்வளவும் ஏற்ற ஆள் இல்லை , விளக்குகள் முதல் நாள் எவ்வளவு ஏற்றுகிறமோ மறுநாள் அதில் பாதி விளக்கை ஏற்ற சொல்வார்கள் அம்மா. மூன்று நாள் நிறைய விளக்குகள் வைப்போம்.
    அந்த மாதம் முழுவதும் இரண்டு விளக்குகள் உண்டு, மார்கழி காலையில் வைப்போம் தை பொங்கல் வரை.
    வெண்கல விளக்கு பெரிது வைத்துக் கொண்டு மற்ற பித்தளை , வெண்கல விளக்குகளை கோவிலுக்கு கொடுத்து விட்டேன் உற்சவர் செய்ய.

    படங்கள் எல்லாம் மிக அழகு. சின்ன வயது ராமலக்ஷ்மி அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், முன்போல செய்யவும் விளக்குகளைப் பாதுகாத்துப் பராமரிக்கவும் முடியவில்லைதான். விளக்குகளைக் கோவிலுக்குக் கொடுத்தது நல்ல செயல். மார்கழியில் விளக்கு வைக்கும் வழக்கம் இல்லை. கருத்துக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin