Tuesday, July 24, 2018

பூச்சி பிடிப்பான் (Green bee-eater) - பறவை பார்ப்போம் (பாகம் 26)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 31)
பூச்சி பிடிப்பான் என அறியப்படும் Green bee-eater பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழும் குடும்பத்தைச் சேர்ந்த, மரக்கிளைகளைப் பற்றி அமரும் பாஸரைன் வகைப் பறவை.

#1
ஆங்கிலப் பெயர்: Green bee-eater

பிற பூச்சி பிடிப்பான்களைப் போல பச்சை நிறப் பூச்சிப் பிடிப்பான்களும் பளீர் வண்ணத்தில், மெல்லிய உருவத்தைக் கொண்டிருக்கும். சுமார் 9 அங்குல நீள உடலும் கூடுதலாக 2 அங்குல நீளமுடைய வால்களையும் கொண்டவை. இரு பாலினங்களுக்கிடையே வித்தியாசம் காண முடியாத படி, ஒரே மாதியாகத் தோற்றமளிக்கும். இறகுகள் முழுக்கவும் கண்ணைக் கவரும் பச்சை நிறத்தில் ஆங்காங்கே நீலத் தீட்டலுடன் இருக்கும். கன்னம், தொண்டைப் பகுதிகள் நீல நிறத்தில் இருக்கும். அழுத்தமான கருப்புக் கோடு கண்ணுக்கும் முன்னும் பின்னுமாக ஓடும். கருவிழிகள் சிகப்பாகவும், அலகு கருப்பாகவும், கால்கள் ஆழ் சாம்பல் வண்ணத்திலும் இருக்கும். மூன்று விரல்கள் அடிப்பாகத்தில் சேரும் வகையான இதன் கால்கள் சற்றே பலகீனமானவையே.

#2
உயிரியல் பெயர்Merops orientalis

இவற்றின் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் ஜூன் வரையிலும். மற்ற பூச்சி பிடிப்பான்களைப் போலன்றி பச்சைநிறப் பூச்சி பிடிப்பான்கள்  மணல் வெளியில் சுரங்கம் தோண்டி தனிமையில் கூடமைக்கும்.

#3

வேறு பெயர்கள்:  Little green bee-eater
பெற்றோருக்கு முந்தைய பருவத்தில் பிறந்த பறவைகள் உதவியாளர்களாகத் துணையிருக்கும். செங்குத்தான மணல் வெளியில் உட்புறமாக சுமார் ஐந்தடிக்கு நீளும் சுரங்கத்தின் முடிவில் வெற்றுத் தரையில் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். முட்டைகள் கோள வடிவில் பளபளப்பான வெள்ளை நிறத்தில் இருக்கும். இரு பாலினப் பறவைகளும் முட்டைகளை மாற்றி மாற்றி அடை காக்கும். சுமார் 14 நாட்களில் வெளிவரும் குஞ்சுகள் 3 முதல் 4 வாரங்களில் பறக்கத் தயாராகும். அந்தப் பருவத்தில் அவற்றின் எடை சற்று குறைந்து விட்டிருக்கும்.

#4

காலை வேளைகளில் சற்று மந்தமாகவே இருக்கும்.  சூரியன் உதித்து சில மணிகள் ஆன பின்னரும், கிளைகள் அல்லது கம்பிகள் மேல் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு அலகுகளைத் தம் பின்புறத்தில் பொதிந்து கொண்டு சொகுசாக நிற்கும். பெரும்பாலும் மணலில் புரண்டும் சிலநேரங்களில் நீரிலும் குளிக்கும்.

இப்பறவைகளின் பிரதானமான உணவு பூச்சிகளே என்பதால் பெரும்பாலும்  புல்வெளிகள், புதர்கள் மற்றும் வனங்களில் குறிப்பாக நீர்நிலைகளிலிருந்து சற்று தள்ளியே காணப்படும். தேனிக்கள், குளவிகள், வண்டுகள், எறும்புகளை உண்டு வாழும். பெரும்பாலும் இரைகளை காற்றுவெளியில் தாவிப் பிடித்து உண்ணும். இரைகளை விழுங்கும் முன் அவற்றிலிருக்கும் கொடுக்குகளையும், கடினமான புறக்கூடுகளையும் அகற்றி விடும். உட்கார்ந்த இடத்திலிருந்து குறுக்கு நெடுக்காக ( zig-zag ) ஆகப் பறந்து இரைகளைப் பிடித்து மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பி வந்தமர்ந்து உண்ணும். காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை மற்றும் மாலை நான்கு மணி அளவில் இவற்றின் இந்த வழக்கத்தைப் பார்க்க முடியும்.

#5

வலசை செல்லாமல் ஓரிடத்தில் வாழும் பறவைகளாயினும் அவ்வப்போது மழைக்காலங்களில் இடம் மாறிச் செல்லக் கூடியவை. இடம் மாறும் இவற்றின் போக்கு புரியாத புதிரும் கூட. மழைக்காலத்தில் காய்ந்த நிலம் நோக்கியும் குளிர் காலத்தில் வெம்மைப் பருவத்தில் இருக்கும் நிலம் நோக்கியும் செல்வதாகத் தெரிகிறது. ஆப்ரிக்காவின் சஹாரா பகுதியிலிருந்து செனகல் வரையில், காம்பியாவிலிருந்து எத்தியோப்பியா, நைல் பள்ளத்தாக்கு, அரேபியாவின் மேற்குப் பகுதி மற்றும் ஆசியாவில் இந்தியாம் வியட்நாம் வரை பரவலாகக் காணக் கிடைக்கிறது. பெரும்பாலும் சமவெளிகளில் வாழும் பறவைகள் என்றாலும், இமாலயத்தில் 5000 முதல் 6000 அடி உயரத்திலும் காணப்படுகின்றன.

தகவல்கள்: விக்கிப்பீடியாவிலிருந்து தமிழாக்கம் செய்தவை.

***


14 comments:

 1. Beautiful captures and good information.
  Rainbow bee-eater, the only bee-eater species found in Australia, is a migratory bird. Unfortunately it does not visit our state as it too cold for it.

  ReplyDelete
  Replies
  1. இணையத்தில் கிடைத்தத் தகவலில் அடிப்படையில் வலசை செல்வதில்லை எனக் குறிப்பிட்டுள்ளேன்.நீங்கள் சொல்வது போல வலசை செல்லும் வகைகளும் உள்ளன போலும்.

   எங்கள் தோட்டத்திற்கு இவை அடிக்கடி வருகை தருகின்றன.

   கூடுதல் தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி விஜயாலயன்:).

   Delete
 2. படங்களும் தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete
 3. என்னே அழகு...!

  தகவல்கள் அருமை...

  ReplyDelete
 4. துல்லியமான படங்கள். குறிப்பாக இரண்டாவது படம். சுவாரஸ்யமான விவரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம். சுமார் நான்கைந்து நிமிடங்கள் ஒரே இடத்தில் பறவை நின்றிருந்த போது வரிசையாக எடுக்க முடிந்தது:).

   Delete
 5. இந்த பூச்சி பிடிப்பானை முதன் முதல் எடுத்த படம் கங்கை கொண்ட சோழபுரம் போனபோது.
  நானும் பறவைகள் பதிவில் போட்டு இருக்கிறேன்.

  அழகாய் இருக்கிறது படங்கள்.
  விவரங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவு நினைவிலுள்ளது.

   நன்றி கோமதிம்மா.

   Delete
 6. பூச்சி பிடிப்பானைப் பற்றிய நுணுக்கமான செய்திகளை அறிந்தோம்.

  ReplyDelete
 7. பளிச் படங்கள்..

  தகவல்கள் மிக சிறப்பு..

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin