படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 26)
ஆசியா கண்டத்தில் இந்தியா, இலங்கை முதல் கிழக்கு மற்றும் தென் சீனா, இந்தோனேசியா வரையிலுமான இடைப்பட்ட பகுதிகளில் செம்பகங்கள் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன.
செம்பகப் பறவை குயில் வரிசைப் பறவைகளில், ஆனால் பிற பறவைகளின் கூட்டில் திருட்டுத்தனமாக முட்டையிடும் வழக்கம் இல்லாத, பெரிய பறவை இனங்களுள் ஒன்று.
#1
ஆங்கிலப் பெயர்: The Greater Coucal, Crow Pheasant, Garden Bird |
#2
உயிரியல் பெயர்: Centropus sinensis |
தோட்டச் சுவர்களில் நடந்தும் செல்வதைப் பார்க்கலாம். சிறு பூச்சிகள், முட்டைகள் மற்றும் ஏனைய பறவைகளின் கூடுகளை உணவாகக் கொள்ளும் இவை மயில்களைப் போல பறக்கும் தன்மை குறைந்த ஒரு பறவையாகும். தாழ உள்ள மரக்கிளைகளுக்கோ அல்லது கிளை விட்டுக் கிளை தாவியோ சிறு தூரங்களையே இவை பறந்து கடக்கின்றன. செம்பகப் பறவைகள் எழுப்பும் ஒலி வெகுதூரம் வரை கேட்கும். மழை பெய்ந்து ஓய்ந்த மதிய நேரங்களில் குகுக் குகுக் எனக் கத்தி அழைக்கும் ஒலி எளிதில் இவற்றை இனம் காண உதவும்.
#3
வேறு பெயர்கள்: செம்போத்து, செங்காகம், (சங்கநூலில்.. செம்பூழ் |
இடத்திற்கிடம் தோற்றத்தில் சில வித்தியாசங்களுடன் இதன் இனங்களுக்குள் வகைகள் காணப்படுவதுண்டு. நிற அமைப்பிலும் ஒலியிலும் கூட நிறைய வித்தியாசங்கள் இருப்பதுண்டு.
தென்னிந்தியாவில் காணப்படும் செம்பக இனமொன்று கருமையான தலையையும் ஆழ் நீல நிறத்திலமைந்த கீழ்ப் பகுதியையும் கபில நிறம் கூடிய அளவில் அமைந்த நெற்றி, முகம், கழுத்து பகுதிகளையும் கொண்டிருக்கும்.
செம்பகங்களின் இறக்கைகளின் நிறம் அவற்றின் ஆண், பெண் என்பவற்றுக்குப் பொதுவானதாகும். எனினும், பெண் பறவைகளின் இறக்கைகள் சற்றுப் பெரிதாக இருக்கும். வெண்ணிறக் கலப்புள்ள செம்பக இனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
#4
செம்பகத்தின் இனப்பெருக்கக் காலம் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையாகும். கூடு கட்டுகிற செம்பக ஜோடி 0.9-7.2 ஹெக்டேர் வரையிலான நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுமாம். இது தொடர்ந்து 3 முதல் 4 வரையிலான முட்டைகளை இட்டு அடைகாக்கும். இதன் முட்டைகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். செம்பகம் பொதுவாகப் பூச்சிகள், புழுக்கள் மற்றும் சிறு பாம்புகள் போன்ற சிறு முண்ணாணிகள் (Chordates - முதுகெலும்பில்லா உயிரினங்கள்) ஆகியவற்றை உட்கொள்ளும்.
மேலும் அது முட்டைகள், பழங்கள், விதைகள் போன்றவற்றையும் உண்ணக் கூடியவை. நச்சுப் பழங்களையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றன. நன்கு பழுத்த தாளிப் பனையின் பழங்களை உண்பதால் தாளிப் பனை விளைச்சலுக்குப் பெரிதும் கேடு விளைவிக்கின்றன. தமிழ் நாட்டில் அவை பொதுவாக நத்தையுண்ணிகளாகவே காணப்படுகின்றன. மழைக்காலத்தில் என் வீட்டுத் தோட்டத்தில் ஏராளமான நத்தைகளைப் பார்க்க முடியும். அப்போது இப்பறவைகளின் வரத்தும் அதிகமாக இருக்கும்.
#5
காலை வேளைகளில் செம்பகங்கள் தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்து, தனியாகவோ ஜோடியாகவோ சூரியக் குளியல் மேற்கொள்ளும். வீட்டுத் தோட்டச் சுவருக்கு அடுத்து வெளியே இருக்கும் உயரமான மரத்தில் இவை அதிகாலை இளஞ்சூட்டு வெயிலில் இறக்கைகளை விரித்து உட்கார்ந்திருக்கும் காட்சி அடிக்கடி காணக் கிடைத்திருக்கிறது. காலையிலும் மாலையிலும் இளஞ் சூட்டு நேரங்களிலேயே மிகச் சுறுசுறுப்பாகக் காணப்படும்.
**
முதல் படத்தில் செம்பகப்பறவை நீங்கள் படமெடுப்பதை எச்சரிக்கையுடன் எட்டிப்பார்க்கிறது! அதிலிருந்து ஏதாவது விடுபட்டு நம்மைத் தாக்க வருகிறதா என்கிற எச்சரிக்கை!
பதிலளிநீக்குபொதுவாகவே இவை மிகுந்த எச்சரிக்கையுடைய பறவைகள். தோட்டத்துக்கோ பால்கனிக்கோ நாம் சென்று நின்றால் உடனே இரண்டே எட்டில் தாவி விர்ரெனப் பறந்து விடும். நானும் சூரியக் குளியலைப் படம் எடுக்கப் பல முறை முயன்று தோற்றிருக்கிறேன். இந்தப் படம்., அறைக்குள் மறைந்திருந்து எடுத்த போதும் கண்டு பிடித்து விட்டது :).
நீக்குஏனைய பறவைகளின் கூடுகளையா, குஞ்சுகளையா, முட்டைகளையா? இவற்றை இது உணவாக உட்கொள்ளும்? எதுவாயினும் அநியாயம்!!!
பதிலளிநீக்குகூடுகளையும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கூடுகளை எப்படி உண்ண முடியும் என்பதுதான் புரியவில்லை.
நீக்குஅலகுகள் கிளி, கழுகு இனத்தைப்போன்று இருக்கின்றன. எந்தத் தலைமுறையிலோ ஏதோ ஒரு காகமும், குயிலும் ஜாதிமாறி கலந்திருக்க வேண்டும் என்கிற மாதிரித் தோற்றம் பொதுவாக!
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்கள்.
ஆம். ஆனால் அந்தக் கபில நிறம் தனித்துவம்.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
ரசனையுடன் அழகாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசெம்போத்து என்றதும் தகவல்கள் தேடினேன் நன்றி
பதிலளிநீக்குநன்றி GMB sir.
நீக்குசெம்பகப்பறவைகள் மிக அழகு! நம் ஊர்ப் பக்கத்தில் பார்த்த மாதிரி தோன்றவில்லை.
பதிலளிநீக்குநானும் இந்த வீட்டுக்கு வந்த பிறகே முதன் முறையாக இவற்றைப் பார்த்தேன்.
நீக்குநன்றி மனோம்மா.
சென்பகப்பறவை மிகவும் ரசிக்ககூடிய பறவை நம்தேசத்தில் அதிகம் காணக்கூடியது இப்போது உங்கள் பகிர்வில் காணுகின்றேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅழகான செண்பக பறவை. பழைய வீட்டில் இருக்கும் படங்கள் எடுத்து பகிர்ந்து இருந்தேன்.
பதிலளிநீக்குநீங்கள் பகிர்ந்த நினைவிருக்கிறது. நன்றி கோமதிம்மா.
நீக்கு