திங்கள், 4 செப்டம்பர், 2017

அம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)

சரா நெருங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை பேர், குறிப்பாகப் புகைப்படக் கலைஞர்கள் மைசூருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்களோ தெரியாது. சுற்றுலா நகரமாக வருடம் முழுவதுமே ஏராளமான பயணிகளை ஈர்க்கும் மைசூர், கோலாகலமான தசரா சமயத்தின் பத்து நாட்களில் (சென்ற வருடக் கணக்குப்படி)  சராசரியாக 10 முதல் 12 இலட்சம் மக்கள் வருகை தரும் இடமாக இருந்து வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்நேரத்தில் திட்டமிடப் பயனாகவும் ஒரு நினைவூட்டலாகவும் இருக்கட்டுமே என, ஐந்து வருடங்களுக்கு முன் சென்றிருந்த போது எடுத்த படங்கள் இருபத்தேழுடன் ஒரு பகிர்வு:

மைசூருக்குப் பெருமை சேர்க்கும் முதல் இடமாக இருப்பது “அம்பா விலாஸ்” அரண்மனை.
#1

மைசூர்  மாகாணத்தின் மையப் பகுதியில் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் கலைநுட்பத்துடன் கட்டப்பட்ட அரண்மனையானது  1897ம் ஆண்டு எதிர்பாராத வகையில் தீப்பிடித்து எரிந்து போக, அப்போது மன்னராக இருந்த மும்மடி கிருஷ்ணராஜ உடையார் புதிய அரண்மனை உருவாக்க திட்டமிட்டார்.
அதற்கான பொறுப்பை சென்னை மாகாணத்தில் கட்டிடக்கலை நிபுணராக இருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி இர்விடம் ஒப்படைத்தார். இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கி பதினைந்து ஆண்டு கால முடிவில் 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

மூன்று அடுக்குகளை கொண்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் ஒவ்வொரு மூலையில் வரும் கோபுரங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


#2
தெற்குப் பகுதியின் குமிழ் கோபுரங்கள்

 #3
வடக்குப் பகுதியின் குமிழ் கோபுரங்கள்

45,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை கட்டி முடிக்க அந்நாளில் இதற்கு ஆன செலவு சுமார் 41 லட்சம் ரூபாய். ஏறக்குறைய 50 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது.

#4

அரண்மனை 245 அடி நீளம், 150 அடி அகலம் கொண்டது. தரையிலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரம் கொண்டது.

#5
உப்பரிகைகள்

அரண்மனையை ஒட்டி 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொண்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது. இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

#6
மையக் கோபுரங்களும் கலசங்களும்

#7

#8
தெற்கு கோபுரம்( (Tower)
#9
வடக்குக் கோபுரம்( (Tower)

கலசங்கள்
#10

#11

அரண்மனை வளாகத்துக்குள் நுழைய நான்கு வாயில்கள் உண்டு. கிழக்கிலிருக்கும் பிரதான வாயில் ‘ஜெய மார்த்தாண்டா’ எனவும், வடக்கு வாயில் ‘ஜெயராமா’ எனவும், தெற்கு வாயில் ‘பலராமா’ என்றும் மேற்கு வாயில் ‘வராஹா’ என்றும் அறியப் படுகின்றன.

பிரதான வாயில்
#12

#13
கொடி பறக்குது..

எட்டுக் குமிழ் கோபுரங்களுடன்..
#14


ரண்மனையை நிதானமாகச் சுற்றிப் பார்க்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரங்களாவது தேவைப்படும். அரண்மனையின் முன் பக்கம், பரந்த மைதானத்தைத் தாண்டி நேராகத் தெரியும் பெரிய நுழைவு வாயில் வழியாகவும் நுழையலாம். பெரும்பாலும் அரண்மனைக்குள்ளே செல்லாமல் வெளியிலிருந்தே ரசிக்க வருகிறவர்கள் இந்த வாயிலின் வழியாகவே வருவார்கள்.

சுற்றுலா பயணிகள் நுழைவுச் சீட்டு எடுத்து, கேமராக்களை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்து வரும்  வசதி தெற்கு வாயில் பகுதியில் உள்ளது.

 #15

#16

அரண்மனை வளாகத்தின் உள்ளே 12 கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று
வடகிழக்கு மூலையில் திருநேஸ்வரஸ்வாமி திருக்கோவில். மூன்று கண்களுடன் அருள் பாலிக்கும் சிவன் வீற்றிருக்கும் இந்தப் பெரிய கோவில் திராவிடக் கட்டிடக் கலை அடிப்படையில் கட்டப்பட்டது.

#17

ராஜா உடையார் (1578-1617) காலத்துக்கும் முன்பாகவே எழுப்பப்பட்டது. தொட்டக்கரே நதிக்கரையில் அமைந்திருந்த கோவில் மாளிகை வளாகம் விரிவாகிக் கொண்டே போனக் காலக் கட்டங்களில் [காந்திரவா நரசராஜ உடையார் (1638-1659) மற்றும் அவரது வாரிசான தொட்ட தேவராஜ உடையார் (1659-1672)] அரண்மனை வளாகத்துக்குள்ளே வந்து சேர்ந்து விட்டது.

#18


அதன் பின்னர் ஆட்சியில் இருந்த மகராஜாக்களால் கோவில் மேலும் விரிவாக்கப்பட்டதோடு புதுப்பிக்கவும் பட்டிருக்கிறது.

#19

ரண்மனைக்கு உள்ளே கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம். இப்பகுதி பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் பராம்பரியப் பொம்மைகள் அலங்கரிக்கும் கேலரியைக் கொண்டது. அதையடுத்து சற்று தூரத்தில் இருக்கும் யானை வாசல், அரண்மனையின்  மையத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் பிரதான வாசல்.

இராஜ தர்பார் மண்டபம், உள்ளே மல்யுத்த மைதானம், அடுத்து அந்தப்புரம் என சுமார் 175 அறைகளைக் கொண்டது. கட்டிட உள்பகுதி முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தெற்குப் பகுதியில் மன்னர் குடும்பத்தினர் திருமணம் வைபவம் நடக்கும் அரங்கின் மையக் கூரை எண்கோண வடிவக் கண்ணாடிகளால் ஆனது. மகராஜா தனிப்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கும் அம்பா விலாஸா எனப்படும், கண்களைக் கவரும் பகட்டான அலங்காரங்களைக் கொண்ட கூடம் முதல் தளத்தில் கிழக்குப் பார்க்க அமைந்துள்ளது. அதே தளத்தில் தெற்கே பார்க்க அமைந்துள்ளது பார்வையாளர்களைச் சந்திக்கும் தர்பார் மண்டபம். இம்மண்டபம் மன்னர் தினம் மாளிகையிலிருந்தே தேவி சாமுண்டீஸ்வரியை தரிசிக்கும் விதமாக மலையை நோக்கி அமைந்திருக்கிறது.

மாளிகையிலிருந்து சாமூண்டீஸ்வரி கோவில் அமைந்த குன்று
#20

#21


திறந்த வெளி ஹால்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் எனப் பிரமாண்டமாகப் பரந்து நிற்கும் அரண்மனையில் உலக பிரசித்தி பெற்றதாக கருதப்படும் தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள்;  ரவிவர்மா, எல்லோரா ஆகியோர் வரைந்த ஓவியங்களைக் கொண்ட அரங்கங்கள் உள்ளன.  அரண்மனை வளாகத்தில் ஆங்காங்கே உடையார் ஆட்சி காலத்தின் 25 வாரிசுகளின் வரலாற்றை விளக்கும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. அரச குடும்பத்தினர் பயன்படுத்திய உடைகள், நகைகள் ஆகியனவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஆயுத அறை, நூலகம்,வேட்டை அறை ஆகியன மூன்றாவது தளத்தில் உள்ளன. லிஃப்ட் வசதியும் இருந்திருக்கிறது.

அரண்மனை வளாகத்தில் ஆங்காங்கே கண்ணாடிச் சுவர்கள் பொருத்தியுள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் தொழிலாளர்கள் வடிவமைத்துள்ள ஜன்னல், அலங்கார கண்ணாடி, அலமாரிகளின் வேலைப்பாடுகள் தற்போதும் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன. நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சீமை மரக் கதவுகள், முழுக்க முழுக்க வெள்ளியினால் ஆன கதவுகள், சர விளக்குகள், ஓவியங்கள் தீட்டப்பட்டக் கண்ணாடிகளால் ஆன கூரைகள் ஆகியவையும் கண்களுக்கு விருந்து. ராஜாக்களின் பகட்டான வாழ்க்கைக்குச் சான்று.

ந்தியா சுதந்திரம் பெற்ற பின் அரண்மனை அரசுடமையாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரண்மனையைச் சுற்றி 97 ஆயிரம் மின் விளக்குகள் பதிக்கப்பட்டன. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு ஒரு மணி நேரம் இந்த விளக்குகள் ஒளிரும். மின் விளக்குகளின் வெளிச்சத்தில் தங்கம் போல ஜொலிக்கும் அரண்மனையைக் காண ஆயிரக்கணக்கானவர்கள் கூடுகின்றனர். தசரா விழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் மின் விளக்குகள் போடப்படுகின்றன. (குமிழ் கோபுரங்களில் அந்த மின் விளக்குகள் தெளிவாகத் தெரிகின்றன படங்களில்..) . இரவில் ஜொலிக்கும் அரண்மனையை ஏற்கனவே சென்ற இரண்டு முறைகள் சென்றிருந்தபோது பார்த்து விட்டிருந்தபடியாலும், தசரா கூட்டத்தில் சென்று திரும்ப நிறைய நேரம் எடுக்கும் என்பதாலும் தவிர்த்து விட்டிருந்தோம்.

#22
தசரா முடிந்து, மறுநாள் காலை..

இடைச் செருகலாக எது என்ன என்றால், இரவு ஒளியில் அரண்மனையை எடுக்காத குறையைத் தங்கியிருந்த விடுதியை எடுத்துத் தீர்த்துக் கொண்டேன்:).
#23
Fortune JP Palace
மேலும் ஒரு தகவலுக்காகவும் இந்தப் படம். சிறியது, பெரியது என்றில்லாமல் இங்கே தெருவுக்குத் தெரு எல்லா விடுதிகளுமே தங்கள் பெயரோடு இறுதியில் ‘பேலஸ்’ என சேர்த்து வைத்துக் கொண்டிருப்பதைப் பல இடங்களில் பார்க்க முடிந்தது. இந்த விடுதியில் அரண்மனையைப் போலவேக் குமிழ் கோபுரங்களும்.

ரு தினங்கள் கழித்து மைசூரிலிருந்து கபினிக்குக் கிளம்பிய போது அரண்மனையைத் தாண்டிச் செல்லுகையில் கண்ட காட்சி. தசராவில் கலந்து கொண்ட யானைகள் மறுநாள் தத்தமது இடங்களுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தன.
#24

#25

#26
ஆனைகளோடு அணிவகுத்து வெளியே வந்த கொண்டிருக்கும் வாகனங்கள்

#27
வர்றட்டா..?

யானைகள் தசராவின் போது பல மைல் தூரங்கள் பயணித்து வந்து ஊர்வலத்துக்குப் பழக்கப்படுத்தப் படுவதோடு, அந்த நேரங்களில் பல மணி நேரங்கள் வெயிலில் நிற்பதால் ஏற்படும் அவஸ்தைகள் குறித்து பல செய்திகள் ஒவ்வொரு வருடமும் வந்தபடியேதான் இருக்கின்றன. ஆனால் மக்கள், நம்பிக்கை போன்ற விஷயங்களுக்கு முன் இதற்கான தடை வருவது எளிதல்ல என்பதைத் தொடர்ந்து நம் நாட்டில் பல விஷயங்களில் பார்த்து வருகிறோம்.
*

[அனுபவப் பகிர்வுடன், தகவல்கள்.. விக்கிப்பீடியா மற்றும் இணையத்திலிருந்து தமிழாக்கம் செய்தவை.]
**

2012-ஆம் ஆண்டு தசரா குறித்த பதிவுகள் 3 பாகங்களாக இங்கே:
402_வது மைசூர் தசரா (Mysore Dasara) ஊர்வலக் காட்சிகள் : பாகம் 1

மைசூர் தசரா (Mysore Dasara) 2012 - ஊர்வலத்தில் கலைஞர்கள் : பாகம் 2

கொட்டு மேளங்கள் - மைசூர் தசரா (Mysore Dasara) படங்கள் : நிறைவுப் பாகம் 

மற்றும் பிற மைசூர் பயணப் பதிவுகள் இந்தப் பகுப்பின் (Label) கீழ் பார்க்கலாம்: மைசூர்
***



16 கருத்துகள்:

  1. 27 படங்கள் என்பதால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டீர்களோ!

    எனவே நீங்கள் ஐந்து வருடங்களாக மைசூர் செல்லவில்லை என்று தெரிகிறது. இந்த வருடம்?

    கேமிராக்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து வரும் வசதியா? அப்புறம் படம் எப்படி எடுப்பது?!

    மேகங்களுடன் திருநேஸ்ஸ்வரஸ்வாமி கோவில் படத்தின் பக்கவாட்டுத் தோற்றம் அழகு.

    யானை துதிக்கையை வெளியில் நீட்டியபடி நிற்கும் கடைசிப்படமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது படங்களையே நான் ஏன் ஸ்க்ரீன் ஷாட் செய்ய வேண்டும்? அது இரட்டை வேலையும். ம்ம். சமீப காலமாகவே அதிக படங்களுடனான இதுபோன்ற தொகுப்புகளைத் தவிர்த்து வந்திருக்கிறேன் கை, கழுத்து வலி காரணமாக. அதனாலேயே பகிரப்படாத பயணப் படங்கள் பல சேர்ந்தும் போயுள்ளன. புதிதாக பதியும் ஆர்வம், நேரம் தற்போது இல்லாததால் இருப்பவற்றைப் பகிரும் முயற்சி தொடங்கியிருக்கிறது. படங்கள் அனைத்தும் கடந்த 10 நாட்களில் நேரம் இருக்கும் போது நான்கைந்து படங்களாக வலையேற்றி சேமித்து வரப்பட்டவை:). அதிலும் 3 முன்னரும் பகிர்ந்தவை.

      இந்த வருடம் மைசூர் செல்லும் திட்டம் இல்லை. ஆனால் சமீபத்திய புது கேமராவுடன் மீண்டும் ஒரு முறை தசரா நேரத்திலேயே செல்லும் ஆசை உள்ளது:).

      கேமராக்கள் அரண்மனை வளாகத்துக்குள் அனுமதி. வெளியிலிருந்து படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அரண்மனைக்குள் கொண்டு செல்லக் கூடாது. மறுபடியும் நுழைவாயில் பக்கம் வந்து லாக்கரில் வைத்து விட்டே போக வேண்டும்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சகோ, மைசூரில் , லோக்கல் sightseeing tour operators இருக்கிறார்களா? இந்த வருடம் , தசராவுக்கு சென்றால், ஏதேனும் சிறந்த 3 நாட்கள் இருக்கிறதா? கண்டுகளிப்பதற்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டூர் ஆப்பரேட்டர்ஸ் எல்லாம் தேவையில்லை. நாமே இடங்களை விசாரித்துக் கொண்டு சென்று விட முடியும். நீங்கள் சென்று தங்கும் விடுதிகளிலேயே பொதுவாக எல்லா விவரங்களும் கொடுப்பார்கள். நாங்கள் தங்கியிருந்த Fortune JP Palace_ல் தந்த தகவல்களின்படியே தசரா ஊர்வலத்தை Banni பன்னி மண்டபம் அருகே சென்று படமாக்கினேன். இந்த வருட தசரா நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய உதவுகிறது கர்நாடக அரசின் இந்த இணையப் பக்கம்: http://www.mysoredasara.gov.in/home/. இதில் Events என்பதைச் சுட்டினாலும் நிகழ்ச்சி நிரலும், நடக்கும் இடங்களும் தரப்பட்டுள்ளன. உதவுமா பாருங்கள்.

      நன்றி.

      நீக்கு
  3. பல முறை மைசூர் போய் இருந்தாலும் இன்னும் அரண்மனை பார்க்கவில்லை ஆனால் 360 டிகிரி வீடியோ ஒன்றை எனக்கு வந்ததைப் பகிர்ந்து இருக்கிறேன் டாக்டர் கந்தசாமிக்கு அனுப்பியதும் நினைவில் வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலமுறை சென்றும் நீங்கள் பார்க்கவில்லை என சொல்வது ஆச்சரியமாக உள்ளது. சில விஷயங்கள் இப்படி ஆவதுண்டு. பெங்களூர் அரண்மனையை இன்னும் பார்க்கவில்லை நான்:).

      உங்கள் பகிர்வின் சுட்டி இருப்பின் கொடுங்கள். நன்றி GMB sir.

      நீக்கு
  4. மிக முக்கியமான தகவல்கள் அடங்கிய நல்ல தொகுப்பு. இரண்டு நாட்கள் குடும்பமாக மகிழ்ந்த தருணங்கள் நெஞ்சத்தில் நினைவுகளாக. பகட்டானது என்பது பார்வைக்கு பார்வை வேறுபடக்கூடும்.அரண்மனையின் கம்பீரமும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் ஆளுமையுமாகவே அவை எனக்குத் தென்பட்டது. மிகவும் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /பார்வைக்கு பார்வை/ உண்மைதான். மேலும் மன்னர் ஆட்சியில் மாளிகை வாழ்க்கை யாவும் ஆடம்பரமானவையே. மக்களை வாடவிடாமல் பார்த்துக் கொண்டவர்களெனில் அந்த ஆளுமையைக் கொண்டாடலாம், இல்லாவிடில் பகட்டாகவே தோன்றும் இன்னொரு சாராரின் பார்வைக்கு. எப்படியானாலும் அவர்களின் கலாரசனையைக் குறைத்து மதிப்பிட முடியாது:). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. நீங்கள் நிச்சயம் பட்டிமன்ற நடுவராக அமரலாம். :).
      மன்னிக்கவும். ஆடம்பரம், எளிமை என்பது படைப்புகளில் இல்லை. வாழ்க்கை முறைகளில் இருக்கலாம்.

      ஒரு படைப்பு ஆடம்பரமாகத் தோற்றமளிப்பது பார்ப்பவர்களின் மனோபாவத்திலிருந்து எழும்பும் அனுமானங்களே என்பது என் கருத்து.

      ஆட்சி, அதிகாரம் என்பது ஒரு தளம். கலை, படைப்புகள் வேறு தளம். இந்த இரண்டையும் இனைத்து எழுதப்படும் தீர்ப்புகள் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமாகவே இருக்கக்கூடும்.

      நீங்கள் மிகச்சிறந்த கலைஞர். உங்களுக்கு தெரியாதா என்ன?

      நீக்கு
    3. /படைப்புகளில் இல்லை. வாழ்க்கை முறைகளில்/ உண்மைதான். படைப்பாளிகள் தங்களுக்கு இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த படைப்புகளை அனுபவிப்பது வாழ்க்கை முறைக்குள்தானே வருகிறது? குறிப்பாக மக்களின் வரிப்பணத்தில் முழுக்க முழுக்க வெள்ளியினாலான கனமான கதவுகள் போன்றவை.. அவற்றைக் காணும் போது அவ்வகை எண்ணம் ஓர் நொடி எழுவது தவிர்க்க முடியாதது. யோசித்துப் பார்த்தால் இன்றைய அரசியல்வாதிகள் சேர்க்கும் பணத்தோடு ஒப்பிடுகையில் மன்னர்கள் வாழ்க்கை ஒன்றுமேயில்லை என்றாகி விடுகிறது.

      நல்லது. அவரவர் கருத்து அவருக்கு. இத்தோடு இந்தப் பட்டி மன்றம் கலைகிறது:).

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் அழகு.
    பலவருடங்களுக்கு முன் பார்த்த நினைவுகள் வருகிறது.
    ராஜாக்களின் ரசனையான வாழ்க்கைக்கு அரண்மனை அலங்காரங்கள் எடுத்துக்காட்டு.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin