Tuesday, September 26, 2017

ஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)

மைசூர் அரண்மனையைப் பார்த்து ரசிப்பவர்கள் பெரும்பாலும் பார்க்கத் தவறிவிடுவது மேற்கே சற்று தொலைவிலேயே அமைந்த ஜெகன்மோகன் அரண்மனையை. இந்த அரண்மனை மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்டது. இந்து பாரம்பரியப் பாணியில் மூன்று தளங்களோடு கட்டப்பட்டுள்ளது. 1900_ஆம் ஆண்டில் வெளிப்புறத்தில்.. முகப்பில்.. மூன்று நுழைவாயில்களுடனான (படத்தில் காணலாம்) பெரிய கூடம் புதிதாக இணைக்கப்பட்டது. அரண்மனையின் உட்புறம் சுவர்ச் சித்திரங்களோடு திகழ்கிறது. மைசூர் ஓவியப் பள்ளியின் பாணியில் தசரா காட்சிகள், யானை சவாரி போன்றவை  மூன்று நீண்ட சுவர்களில் வரையப்பட்டுள்ளன. தொடக்கக் கால தசராக் கொண்டாட்டத்தைக் கண் முன் கொண்டு வரும் இந்த ஓவியங்கள்  காய்கனிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகளைச் சாயமாகப் பயன்படுத்தி வரையப்பட்டிருக்கின்றன. மரத்தில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட தசாவதாரக் காட்சிகளையும் இங்கே பார்க்கலாம். 

உடையார் குடும்பத்தினர் அம்பாவிலாஸ் அரண்மனை கட்டப்படும் வரை இங்குதான் இருந்தனர். 1912-ல் அம்பா விலாஸ் அரண்மனை முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படும் வரை ஆண்டுவிழா மற்றும் தசரா விழாக்கள் இங்குதான் கொண்டாடப்பட்டிருக்கின்றன. கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தூண்களையும், சிற்பங்களையும் கொண்ட இந்த அரண்மனை தற்போது அருங்காட்சியமாகவும் ஓவியக் கலைக் கூடமாகவும் பராமரிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்களோடு உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிகளின் வரலாறும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

அவற்றுள் என்னை மிகக் கவர்ந்தவை ஓவியர் ராஜா ரவிவர்மா வரைந்த அசல் ஓவியங்கள் பதினாறு.
ராஜா ஜெயச்சமராஜேந்திர உடையாரால் காட்சியகத்துக்குப் பரிசாக வழங்கப்பட்டவை. பல சித்திரங்கள் முன்னர் எங்குமே பார்த்திராதவை. ஒவ்வொரு ஓவியத்திலிருந்தும் கண்களை அகற்ற மிகச் சிரமப்பட வேண்டியிருந்தது. உயிர்ப்புடன் பிரமிக்க வைத்தன. படங்கள் எடுக்க அனுமதியில்லை. இவற்றைப் பார்ப்பதற்காகவே மைசூர் செல்லலாம். அதுவும் ஓவியக் கலைஞர்கள் ஒருமுறையேனும் இவற்றைப் பார்க்க வேண்டியது மிக அவசியம்.

அரசக் குடும்பத்தினர் பயன் படுத்திய உடைகள், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்கள், ரவிவர்மாவால் எழுதப்பட்ட அரச குடும்பத்தினரின் ஓவியங்கள், ஓய்வு அறைகள், படுக்கையறைகள், உணவுக்கூடங்கள், அரசர்கள் சிறு வயதினராக இருந்தபொழுது பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள், அரச குடும்பத்துப் பெண்கள் வெளியில் செல்வதற்கு பயன்படுத்திய மூடிய பல்லாக்குகள் போன்றவை உள்ளது. 

அத்தோடு போர்க்கருவிகள்; நாணயங்கள்; அதிசியக்க வைக்கும் இயந்திர நுட்பத்துடன் செய்யப்பட்ட, சிப்பாய்கள் ஊர்வலம் செல்லும் பிரெஞ்சு கடிகாரம்; அரிசி மணியில் ஓவியம்.. இவற்றுக்கிடையே ரசிக்க வைத்தன விதம் விதமான அறிந்த அறிந்திராத இசைக்கருவிகள். வீணை மட்டுமே எத்தனை வடிவங்களில்..

ஹால்டங்கர் வரைந்த லேடி வித் எ லாம்ப் ஓவியத்தில் பெண்ணின் கையிலிருக்கும் விளக்கு அவர் முகத்தை ஒளிரச் செய்வதை இருட்டில் பார்த்து ரசிக்கத் தனியாக ஒரு அறையில் காட்சிப்படுத்தி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

மைசூரில் உள்ள ஜகன்மோகன் அரண்மனையில், நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் திருமணத்தின் போது அமைக்கப்பட்ட திருமண விதானம் தற்போது தர்பார் ஹால் என அறியப்படுகிறது.  அங்குதான் மன்னர் தன் பிறந்த நாள் விழாக்களை விமரிசையாக கொண்டாடியதாகத் தெரிகிறது.  அரண்மனை வளாகத்தின் உள்ளேயே ஒரு தனி அறையில் அரசர்கள், படைத்தளபதிகள், படைவீரர்கள் பயன்படுத்திய வாள், வேல், ஈட்டி, கத்தி, கவச உடைகள், துப்பாக்கிகள், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட கத்திகள், குத்து வாள் போன்றவையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அரண்மனை, கர்நாடக அரசினாலும் இந்திய தொல்லியல் துறையினாலும் பராமரிக்கப்பட்டு வருவதோடு பொதுமக்கள் பார்வைக்கும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. உள்ளே படங்கள் எடுக்க அனுமதி கிடையாது. கேமரா மட்டுமின்றி ஸ்மார்ட் ஃபோன்கள் வராத அந்நாளில் குறைந்த பிக்ஸலில் மட்டுமே படம் எடுக்கும் வசதி கொண்ட எங்கள் செல் ஃபோன்களையும் பிடுங்கி லாக்கரில் வைத்துக் கொண்டே உள்ளே அனுமதித்தார்கள் :)!
*

[2012_ஆம் வருடம் சென்றிருந்த அனுபவப் பகிர்வுடன், 
தகவல்கள்.. விக்கிப்பீடியா மற்றும் இணையத்திலிருந்து தமிழாக்கம் செய்தவை.]
**

14 comments:

 1. தகவல்கள் சுவாரஸ்யம். அங்கு வைத்திருக்கும் அரிசி மணியில் ஓவியங்களில் ஒன்று குறையுமே... அதைத்தான் மைக்கேல் மதன காமராஜனில் குஷ்பூ எடுத்துக்கொண்டு வந்து கமலிடம் கொடுத்து விட்டாரே!!!!!! :))

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒரு காட்சி வருகிறதா:)? கொஞ்சம் அசந்தாலும் பல பட்டாசு நகைச்சுவைத் துணுக்குகளைத் தவற விட்டு விடுவோம் நடிகர் கமலஹாசன் - வசனகர்த்தா கிரேஸி மோகன் கூட்டணிப் படங்களில்.

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. மைசூரில் அரண்மனைகளைப் பார்க்காத குறை உண்டு

  ReplyDelete
  Replies
  1. அங்கே பலமுறை சென்றும் பார்த்ததில்லை என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது.

   வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி sir.

   Delete
  2. வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன்

   Delete
  3. நல்லது. பிறகு பார்க்கலாம் என எண்ணியே தட்டிப் போயிருக்கக் கூடும்.

   Delete
 3. Lady with a lamp ஓவியம் பளிச் என்று நினைவில்.(2009)! இந்த அரண்மனை முகப்பு புதிதாக பார்ப்பது போல் உள்ளது. நினைவுக்கு வரமறுக்குது!
  அரண்மனை சிறியது என்பதால் இந்தோ சரசானிக், ரோமன், திராவிடம், 4 குமிழ் கோபுரம்,9 கலசம்,X நீளம்,Y அகலம் போன்ற Detailings காணவில்லை போலும்:).
  தொடர்ந்து சலிக்காமல் சாரமுடன் எழுதுவதற்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோபுரம், கலசம்... அதிகப் படங்கள் எடுக்காததால் விரிவான தகவல்கள் தரவில்லை. ஆனாலும் நீங்கள் கேட்டு விட்டதால் இப்போது முதல் பத்தியில் மேலும் சில வரிகள் சேர்த்தாயிற்று. / இந்து பாரம்பரியப் பாணியில் மூன்று தளங்களோடு கட்டப்பட்டுள்ளது. 1900_ஆம் ஆண்டில் வெளிப்புறத்தில்.. முகப்பில்.. மூன்று நுழைவாயில்களுடனான (படத்தில் காணலாம்) பெரிய கூடம் புதிதாக இணைக்கப்பட்டது./ என்பது உட்பட:)!

   படங்களைப் பகிரும் போது தகவல்களைச் சேகரித்து அளிப்பது சுவாரஸ்யம் + நாமும் தெரிந்து கொள்ள முடிகிறது. முடிந்தவரை இது தொடரும்.

   நன்றி:).

   Delete
  2. எழில் மிகு கட்டிடங்கள், உணர்வும் உயிர்ப்பும் நிறைந்த ஓவியங்கள், கலைநயம் மிக்கப் பொருட்கள்.., இவை போன்ற படைப்புகளைத் தாண்டி இவற்றைப் படைத்த ஆளுமைகளின் நுட்பமான சிந்தனை, வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது இல்லையா?

   இம்மாந்தர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் சட்டென கடந்துவிடும் கதை அல்லவே!

   அன்பு, பாசம், நேசம், காதல், காமம், பிரிவு, துயரம், துரோகம், வெட்கம், அவமானம்,தோல்வி, பிடிவாதம், வைராக்கியம், நட்பு, வீரம், வெற்றி, பெருமை, ஆணவம், நிதானம் என உணர்வுக் குவியல்களின் சங்கமம் அது.

   உங்களைப் போன்ற ஆர்வம், பொறுமை, சிரத்தை, நேர்த்தி, திறமை உடையவர்கள் படைப்புகளைக் கடந்து படைத்தவர்களின் நுட்பமான உணர்வுப் போராட்டங்களை உள்ளது உள்ளபடி எழுத முன்வரவேண்டும்.:).

   என்ன, அதற்கு ஒரு 4 அல்லது 5 ஆண்டுக்கால உழைப்பு, நேரம் மற்றும் சூழல் அமைய வேண்டும்.

   ஆனால் அது சிருஷ்டிக்கப்பட்ட முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட மகுடமாக அமையும் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.:).

   Delete
  3. நீங்கள் சொல்வது மிகப் பெரிய பணி. நேரம், சூழல் அமைவது சிரமமே.

   Delete
 4. மைசூர் பயணத்தின்போது பார்த்துள்ளேன். மைசூரில் பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. ஆம். அவசியம் காண வேண்டிய இடம். நான் முதலிரண்டு முறைகள் செல்லாமல் விட்டிருக்கிறேன். மற்றவர்கள் தவற விடக் கூடாதென்பதற்காகவே இதைத் தனிப் பதிவாகப் பகிர்ந்துள்ளேன்.

   நன்றி.

   Delete
 5. மைசூர் அரண்மனையை பள்ளி சுற்றுலாவில் பார்த்தது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதிம்மா. பெங்களூர் வரும் சமயம் ஓரிரு நாட்கள் ஒதுக்கினால் மீண்டும் பார்த்து வரலாமே.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin