வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

காட்டுச் சிலம்பன் - Jungle Babbler - பறவை பார்ப்போம் (பாகம் 16)

#1
ஆங்கிலப் பெயர்: Jungle babbler
காட்டுச் சிலம்பன் மைனாவைவிட சற்று சிறிதாக ஆனால் அதை விடக் குண்டாக, தவிட்டு நிறத்தில், சற்றே நீண்ட வாலுடன் இருக்கும். எப்போதும் ஏழெட்டு பறவைகளாகத் திரியும் என்பதால் ஆங்கிலத்தில் செவன் சிஸ்டர்ஸ் என்ற பெயரும் உண்டு.

ஆண், பெண் இரண்டும் பார்க்க கிட்டத்தட்ட ஒரே போலவே இருக்கும். தவிட்டுக் குருவியும் இதே தோற்றத்தில் இருப்பதால் பலர் இரண்டையும் ஒன்றாகக் கருதுவதுண்டு. ஆனால் yellow-billed babbler எனப்படும் தவிட்டுக்குருவியின்
உயிரியல் பெயர் Turdoides affinis. காட்டுச் சிலம்பனாகிய Jungle Babbler_ன் உயிரியல் பெயர் Turdoides striata. காட்டுச் சிலம்பனுக்கு மேற்பாகம் சற்று ஆழ்ந்த நிறத்தில் இருக்கும்.

#2
உயிரியல் பெயர்: Turdoides striata
இந்திய துணைக் கண்டத்தில் பரவலாக வாழும் பறவை.பெரு நகரங்களின் தோட்டங்களிலும், புதர் செடிகள் நிறைந்த பகுதிகளிலும், வயல்வெளி மற்றும் வனப் பகுதிகளிலும் சர்வ சாதாரணமாகத் தென்படுகிறவை. இவற்றின் இறக்கைகள் குறைந்த நீளத்தில் வளைந்து இருப்பதால் குறிப்பிட்ட உயரத்திற்கு மேலாகவோ, வேகமாகவோ பறக்க முடியாதவை. அதனாலேயே இவை வலசை செல்வதில்லை.

எங்கள் தோட்டத்திற்கு ஏழெட்டாகக் கூட்டமாகவே வரும் போகும். சில நேரங்களில் ஜோடிகளாகவும் வருவதுண்டு.
#3

அதிகமாகச் சத்தமிடும் பறவைகள். பொதுவாக அணில்கள் மற்ற பறவைகளைக் கண்டால் ஒதுங்கி ஓடி விடும். ஆனால் இவற்றோடு சேர்ந்தே புல்வெளியில் ஓடித் திரிந்து பழங்களையும் பூச்சிகளையும் உண்பதைப் பார்க்கலாம்.

#4
வேறு பெயர்கள்:  
காட்டுப் பூணியல், பூணில், 
வெண்தலைச் சிலம்பன்,
ஏழு சகோதரிகள் பறவை
வருடம் முழுவதுமே இவற்றுக்கு இனப்பெருக்கக் காலம்தான் என்றாலும் மார்ச்-ஏப்ரல், ஜூலை-செப்டம்பர் மாதங்கள் முக்கியமானதாக இருக்கிறன. சராசரியான ஆயுட்காலம் 16 1/2 வருடங்கள். குஞ்சுகள் 3 வருடங்களில் இனப் பெருக்கத்துக்குத் தயாராகின்றன. கூடுகளை கட்டிடச் சுவர்கள், இலை தழைகள் நிறைந்த மரங்களில் கட்டும். மூன்று, நான்கிலிருந்து ஏழு முட்டைகள் வரைக் கூட இடும். ஆழ்ந்த பச்சை, நீல வண்ணங்களில் இருக்கும். வட இந்தியாவில் ஜூலை-செப் மாத காலங்களில் இவற்றின் கூடுகளில் கொண்டைக் குயில்களும் (pied crested cuckoo) அக்காக் குயில்களும் (common hawk-cuckoo)  தங்கள் முட்டைகளை இட்டுச் சென்று விடுவது வழக்கம். அத்தனை குஞ்சுகளையும் வளர்க்கப் பெற்றோருக்கு உதவ வந்து விடுமாம் முந்தைய பருவத்தில் பிறந்து, தற்போது வளர்ந்து விட்டிருக்கும் பறவைகள். இவர்கள் ‘உதவியாளர்கள்’ (helpers) என அறியப்படுகிறார்கள். சிறகு முளைத்த பெண் பறவைகள் தாய்க் கூட்டத்திலிருந்து இரண்டு வருட காலத்தில் பிரிந்து செல்கின்றன.

#5

பறவைகள் தங்கள் குழுவுக்குள் ஒன்றையொன்று துரத்தியும், பொய்ச் சண்டைகள் இட்டும் விளையாடும். தங்கள் அலகுகளால் சிறகுகளை ஒவ்வொன்றாக நீவிச் சீரமைக்கும். மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல்,  எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சில நேரங்களில் இவை இறந்து விட்ட மாதிரி நடிக்கவும் செய்யுமாம்.

#6

**

தகவல்கள்: விக்கிப்பீடியா உட்பட  இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.
ஒளிப்படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - (பாகம் 20)

***

15 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். என் பார்வையில் எல்லாப் பறவைகளும் குருவி! அவ்வளவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி எல்லாப் பறவைகளும் :)? இது போன்ற சின்ன அளவில் இருப்பவை என்றாவது சொல்லுங்கள். நன்றி.

      நீக்கு
  2. இந்த பற்வைதானே தவிட்டுக்குருவி என்று அழைக்க படுவது?
    கூட்டமாய் மொட்டை மாடியில் பார்ப்பேன்.
    இங்கும் தோட்டத்தில் ஆறு ஏழு பறவைகள் கீச் கீச் என்று கத்திக் கொண்டு இருக்கும்.
    விவரங்கள் அருமை.படம் அழகு.

    பதிலளிநீக்கு
  3. பதிவை மீண்டும் படித்தேன் இந்த பற்வைக்கும், தவிட்டுக்குருவிக்கும் ஒற்றுமை உண்டு என்று.இனி பார்க்கும் போது கூர்ந்து கவினிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. இரண்டுக்கும் சிறு வித்தியாசங்கள் இருக்கக் கூடும். நாம் கவனித்தாலும் அறிய முடியுமா தெரியவில்லை. இங்கேயும் கூட்டமாகவே வருகின்றன.

      நீக்கு
  4. சிட்டுக் குருவிபோல் இருக்கிறது. அது சரி பல பறவைகளைப் பார்த்தால்தானே வித்தியாசம் தெரியும் இதைவிட சற்றே பெரிய சைஸ் செம்போத்து என்பார்களே அதுவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவை எல்லாமே குருவி வகையைச் சார்ந்தவைதான்.

      செம்போத்து கருப்பு நிறத்தில் காகத்தை விடப் பெரிதாக இருக்கும். இரு பக்கமும் இறக்கைகள் சிகப்பை ஒட்டிய பழுப்பு நிறத்தில், கண்களும் அதே நிறத்தில் இருக்கும். அதை கார்டன் பறவை என்றும் சொல்வார்கள். மிக வேகமாகப் பறந்து விடும். கேமராவில் சரியானபடி இன்னும் சிக்கவில்லை:). விரைவில் அது குறித்தும் பகிருகிறேன்.

      நன்றி.

      நீக்கு
  5. காட்டுச்சிலம்பன் கதை சுவாரஸ்யமானது. எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இறந்துவிட்டதுபோல் நடிக்கவும்செய்யுமா? மனிதனின் சாயல் தெரிகிறதே குணத்தில்! இந்தப் பறவையைப் பார்த்ததாக நினைவில்லை. படங்கள் இனி அடையாளம் கண்டுகொள்ள உதவும்.தவிட்டுக்குருவியைப்பார்த்திருக்கிறேன் கிராமத்தில் நிறைய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் ஊர் பக்கமும் தவிட்டுக்குருவிகள் அதிகம். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. பறவைகள் குறித்து எனக்கு அதிக ஆர்வம் இல்லை,எனினும் நீங்கள் சொல்லிச்சென்றவிதம் படிக்கச் சுவாரஸ்யம்."வலசை" சொல், பொருள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகளைக் கவனிப்பது சுவாரஸ்யம் என்றால் அதன் வாழ்வியல் தகவல்கள் பலவும் வியப்பானவை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin