வியாழன், 5 ஜனவரி, 2017

கல்கியில்.. ஈரோடு கதிரின் ‘கிளையிலிருந்து வேர் வரை’ - ஒரு பார்வை


நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பது அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுந்து அடங்கும் கேள்வி. விடை தேடுபவர் சிலர். தம் சிந்தனைக்கு எட்டிய வகையில் ஒரு பதிலைக் கண்டு திருப்தி அடைந்து விடுபவர் பலர். ஆசிரியரின் பார்வையில் விரிகிற உலகம் வெகு இயல்பாக இந்தத் தேடலைப் பூர்த்தி செய்கிறது. ‘நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்' என்றே தன்னை அழைத்துக் கொள்ளும் ஈரோடு கதிர் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து விடும் அன்றாட நிகழ்வுகளையும் சாதாரண மனிதர்களையும் தன் ஆழ்ந்த அவதானிப்பால் புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறார். ..

8 ஜனவரி 2017 இதழில்.. 




'உங்கள் குழந்தைகள் உங்களுடைய குழந்தைகள் அல்ல.  அவர்கள் உங்கள் வழியாக வந்தார்களேயன்றி உங்களிடமிருந்து வரவில்லை.' எனும் கலீல் ஜிப்ரானின் வரிகளை உணர வைக்கிறார் ‘தாயுமானவனாக’ ஒரு தந்தை இருக்கப் பழக வேண்டியதன் அவசியத்தைச் சொல்லுகையில்.  கூட்டுப் புழுக்களின் குட்டி உலகம்’, ‘இந்தப் பாவம் செய்யாதவர்கள் கை உயர்த்துக’ ஆகியன அழுத்தங்களும் ஆபத்துகளும் நிறைந்த உலகில் குழந்தைகளை வளர்க்கத் தடுமாறும் பெற்றோருக்கானவை.  பாசம், பிரியம் என்ற பெயரில் கெளரவம், அந்தஸ்து என நினைத்து பின் விளைவுகளை யோசிக்காமால் குழந்தைகளுக்கு கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து, அதுவே தீங்காக முடியும் வேதனைக்கு யார் பொறுப்பு? ‘தங்கக்கூண்டு’களில் குழந்தைகளை சிறை வைத்திருக்கிறோம் என்பதை எப்போது உணருவது?

ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருக்கிறது குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகள். நகர வாழ்வில் தொலைத்த எத்தனையோ விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது அடுத்த தலைமுறைக்கு அந்த அனுபவங்களை சுவை மாறாமல் ‘கடத்த முடியாத’ இயலாமை. கையாலாகாத இந்நிலை வெறுமையாக மனதுள் வியாபிப்பதை நாமும் மறுப்பதற்கில்லை.

அழுத்தமாக அவர் சொல்லிச் சொல்லும் பல விஷயங்களை மேலும் அழுத்தமாக மனதில் நிற்க வைத்து விடுகிற கட்டுரைத் தலைப்புகளில் ஒன்றுதான் ‘வாழ்தல் அறம்’.  ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் மனதை உலுக்கிப் போடும் தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஜீரணிக்க சிரமமான இந்த மரணங்களைப் பற்றிப் பேசுகையில், ‘சாவதற்கான காரணங்களை விட, வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது’ எனத் தேடிப் பார்க்கக் கேட்டுக் கொள்கிறார். ‘வாழ்தலை விடவும்’ இனிதாய் என்ன இருந்து விடப் போகிறதென நம்மைக் கேட்டுக் கொள்ளவும் வைக்கிறார்.

வாழ்ந்து முடித்தவர்கள்தாம் என்றாலும் பாசத்தைப் பொழிந்த  ‘ஆயா’க்களும் ‘தாத்தா’க்களும் பூவுலகை விட்டுச் செல்லுகையில் நம் உள்ளங்களில் ஏற்படும் வெற்றிடம் வெற்றிடமாகவேதான் இருந்து போகிறது. மனித உறவுகளைப் பிணைக்கும் உறவுப் பாலமாகத் திகழும் தேரோட்டம் நகரங்களுக்கு நகர்ந்து விட்டவர்களை ஏங்க வைக்கிற நிகழ்வு. கைப்பிடித்து நம்மை திருவிழாக் கூட்டத்துக்குள் அழைத்துச் செல்கிறது ‘தேர் நோம்பி’. ஒரு ஒளிப்படக் கலைஞர் தன் பார்வையில் இந்த விழாவைப் பதிவு செய்திருந்தால் கூட நாம் அதில் இத்தனை விவரங்களைக் கவனித்திருப்போமா, தெரியாது.

சிங்கப்பூர் மற்றும் இலங்கைப் பயண அனுபவங்கள் அந்த தேசங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியன நிறைய இருப்பதை உணர்த்துகின்றன.  ‘நீர்த்துப் போகும் சுயம்’ விலங்குகள் மீது தம் பலத்தைப் பிரயோகிக்கும் மனிதனை சிந்திக்க வைக்கும். அழுகை கோழைத்தனமென யார் சொன்னது? வலிபோக்கியாய் மனிதனை ஒவ்வொரு இக்கட்டிலும் வேதனையிலும் உடனிருந்து ஆற்றுப் படுத்தும் கண்ணீர்.. இனிதென்கிறார். ‘கேரி பேக்’, பிளாஸ்டிக் பயன்பாடு தொடருமாயின் மூன்றாம் உலகப் போர் மூளக் கூடும் - தண்ணீருக்காக.., அயர்ச்சியுடன் எச்சரிக்கிறார்.

தன்னைச் சுற்றியிருக்கும் உலகின் அசைவை உற்று நோக்கி பயணிக்கும் 45 கட்டுரைகளிலிருந்து ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். பொதுவாக, சமூகத்தையும் சக மனிதரையும் விமர்சிக்கும் எழுத்துக்களில் ஒரு வித விரக்தியும், நம்பிக்கையின்மையும் இழையோடுவதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் கதிரின் எழுத்துகளின் அடிநாதமாக இருப்பது மனிதமும் அன்பும் அக்கறையும். வாழ்வை நேசிக்க, மனிதர்களை மதிக்க, பிஞ்சு மனங்களைப் புரிந்து போற்ற, சமூகத்தில் நாமும் ஒரு அங்கம் என உணர்ந்து செயல்பட, பிறருக்கு உதவ, பிரச்சனைகளைத் தாண்டி தன்னம்பிக்கையுடன் வாழ்வை வரம் எனத் தொடர வழிகாட்டுபவையாக கிளை பரப்பி நிற்கின்றன இவரது அனுபவங்கள்.

***
நன்றி கல்கி!



"கிளையிலிருந்து வேர் வரை"
பக்கங்கள்:192; விலை: ரூ.150
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
கிடைக்குமிடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,கே.கே. நகர், சென்னை-78
தொலைபேசி எண்கள் : 9940446650 / 044-65157525
இணையத்தில் வாங்கிட: http://tinyurl.com/nq4hrwx
மற்றும்
நாளை முதல் 19 ஜனவரி வரை.. சென்னை புத்தகக் கண்காட்சியிலும்..

அத்துடன் ஆசிரியரின் மேலும் இரு புது நூல்களாக..

‘பெயரிடப்படாத புத்தகம்’ டிஸ்கவரி புக் அரங்கிலும்,

குங்குமத்தில் தொடராக வெளிவந்து வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘உறவெனும் திரைக்கதை’


சென்னை புத்தகக் கண்காட்சியின் சூரியன் பதிப்பக அரங்குகளிலும் (அரங்கு எண்கள்: 593-594) கிடைக்கும்.

நல்வாழ்த்துகள் கதிர் :)!
***

14 கருத்துகள்:

  1. நன்றி சகோதரியாரே
    அவசியம் வாங்குவேன்

    பதிலளிநீக்கு
  2. அழகான தெளிவான விமர்சனமும் நூலறிமுகங்களும். நன்றி ராமலக்ஷ்மி. நூலாசிரியர் கதிர் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. கல்கி வாங்கிப் படிப்பது நின்று காலங்கள் ஆகிவிட்டது இம்மாதிரி படிப்பதே சில எழுத்துகளை தவற விடுவதைத் தெரிவிக்கிறது நல்ல விமரிசனம்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin