புதன், 1 ஜனவரி, 2014

விடை பெற்ற வருடத்தில்.. முத்துச்சரம்

விடை பெற்ற வருடத்தைத் திரும்பிப் பார்ப்பது என்பது சிறப்பான தருணங்களை நினைத்து மகிழ மட்டுமின்றி பிறந்திருக்கும் புது வருடத்தை உற்சாகமாக எதிர் கொள்ளவும், இந்த வருடத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிடவும் உதவவே செய்கிறது. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் எடுக்கிற நிலைப்பாடுகளில் எவற்றையெல்லாம் சரியாகப் பின்பற்றுகிறோம் என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் ஓரளவேனும் அவை நாம் செல்ல வேண்டிய பாதையை சீர் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

2013 ஆம் ஆண்டினை வேகமாக ஒரு பார்வை:)!

118 பதிவுகள்.  வருட ஆரம்பத்தில் வாரம் இரண்டு அல்லது மூன்று என சீராக வந்த பதிவுகள் வருட இறுதியில் முடிந்த போது மட்டும் பதிகிற முடிவில் இடைவெளிகள் அதிகம் ஏற்பட்டன என்றாலும் இந்த வருடம் ஐநூறு பதிவுகளை எட்டியதோடு, மூன்று லட்சம் பார்வையாளர்களையும் தாண்டியது முத்துச்சரம்.

பிப்ரவரி மாதத்தில் ப்ளிக்கர் ஆயிரம் என எனது ஃப்ளிக்கர் பக்கம் ஆயிரம் படங்களைத் தாண்டியது குறித்த பகிர்ந்திருந்தேன். முத்துச்சரத்தில் தொகுப்பாக புகைப்பட பதிவுகள் வழங்கியது பாதி வருடத்தோடு நின்று போனது ஏற்பட்ட கைவலியின் காரணமாக. அதன் பிறகு ஆரோக்கியம் பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாதென்பதில் மிகக் கவனமாக இருந்து வருகிறேன். ஆயினும் தினம் ஒன்று அல்லது இரண்டு என ஃப்ளிக்கரில் படங்கள் பதிவதும் பின்னர் அவற்றை FB-யில் பகிர்வதும் தொடருகிறது ஆயிரத்து நானூறை எட்டியபடி:)! ஓரிரு படங்களுக்கு மட்டுமே தினம் வேலை பார்ப்பதால் கைவலி வராமலும் பார்த்துக் கொள்ள முடிகிறது. அவற்றை முத்துச்சரத்திலும் சேமித்து வைக்கவே ஆசை. இயலும் போது செய்கிறேன்.

ஆகஸ்ட் மாதம் விகடன்.காம் தளத்தில் வெளியான சுதந்திர தின மலர் கண்காட்சிப் படங்கள், கல்கி தீபாவளி மலரில் ஒளிப்படங்கள், டிசம்பர் மாத ‘பெஸ்ட் போட்டோகிராபி டுடே’ பத்திரிகையில் என்னைப் பற்றிய குறிப்பு (விரைவில் பகிருகிறேன்) ஆகியனவும் புகைப்படம் சார்ந்த பயணத்தில் நினைவில் நிற்பவை.

பிப்ரவரி மாதம், புன்னகை கவிதை இதழின் 71-வது இதழ் எனது கவிதைகளின்  சிறப்பிதழாக வெளிவந்தது; மார்ச் மாதம் மகளிர் தினத்தையொட்டி “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்.. : வரிசையில் தினகரன் வசந்தம் தந்திருந்த அறிமுகம்; குமுதம் பெண்கள் மலரில்.. “பெண்மொழி பேசும் புகைப்படங்கள்” எனும் தலைப்பில் வெளியான நேர்காணல்; புகைப்படம், எழுத்து இரண்டுக்குமாக அமெரிக்க பத்திரிகை “தென்றல்” தந்த அங்கீகாரம்; ஏப்ரல் மாதம் ரியாத் தமிழ் சங்கம் நடத்திய உலகளாவிய கல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் கிடைத்த சிறப்புப் பரிசு; மே மாதம் வளரி இதழ் வழங்கிய கவிப் பேராசான் மீரா விருது ஆகியன மனதுக்கு நிறைவைத் தந்தவை.

சினிமா குறித்த செய்தி என்றாலே எப்படியான வரவேற்பு இருக்கும் என்பதை நிரூபித்தது எடுத்த சிங்களின் படங்களுக்காக சிங்கம் 2 - ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டாம்ல..  என வேடிக்கையாக நான் வைத்த தலைப்பு. முத்துச்சரத்தின் all time popular post அதுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்:)!

கல்கி, ஆனந்த விகடன், குங்குமம் தோழி பத்திரிகைகள்; அமீரகம் ஆண்டுவிழா மலர், நவீனவிருட்சம், மலைகள் இணைய இதழ்கள்; புன்னகை உலகம், தினமணி ஆன்லைன், தி இந்து ஆன்லைன்  ஆகியனவற்றில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள் ஆகியவற்றோடு புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள் ஆகியோர் குறித்த அறிமுகங்கள், நேர்காணல்களும் மனதுக்கு நிறைவைக் கொடுத்தவை. பத்திரிகைகள், இணைய இதழ்கள், நமது பகிர்வுகளைப் பலரிடம் கொண்டு சேர்க்கும் திரட்டிகள், சமூக வலைத்தளங்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றி.


இறுதியாக,

எனது படைப்புகள் நூலாக வெளிவரவிருப்பதில் கிடைத்திருக்கும் ஆத்ம திருப்தி. அது குறித்த பகிர்வு நாளை:)!

வாசிப்பைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் எடுக்கும் நிலைப்பாட்டினை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் சேர்ந்து கொண்டே போகின்றன புத்தகங்கள். பாதியையேனும் இவ்வருடம் முடிக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் எழுத வேண்டும். அதே போல பகிராத ஒளிப்படங்கள், பதிவுலகம் சார்ந்த சந்திப்புகள், எழுத நினைத்து நேரமின்மையால் விடுபட்டுப் போனப் பல விஷயங்கள் இவற்றை ஒவ்வொன்றாகப் பதிய வேண்டும். மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரம் ஒதுக்க வேண்டும்.

நிலைப்பாடுகளை இங்கே பதிந்து வைப்பது, செய்ய வேண்டுமென்கிற நிர்ப்பந்ததை ஏற்படுத்துமேயானால் நல்லதுதானே:)!

முத்துச்சரத்தை தொடரும் அனைத்து நண்பர்களுக்கும் புது வருட வாழ்த்துகளுடன், என் அன்பு நன்றி!!!
***




29 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிகச் சிறந்த சாதனை ஆண்டாக
    2013 இருந்ததைப் போலவே இனி வருகிற
    ஆண்டெல்லாம் அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இந்த வருடமும் தொடர்ந்து சிகரங்கள் தொட வாழ்த்துகள். புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. சாதனை நாயகியின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
    உங்கள் படைப்புகள் நூலாக வருவது மிகுந்த மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. இந்த ஆண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. சாதனைகள் இவ்வாண்டும் தொடரட்டும்.. பாராட்டுகள்..

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. தங்களின் அபார சாதனைகளுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  8. சாதனைகள் தொடரட்டும்......

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கிடைத்த சந்தோஷங்கள் என்ற வகையிலேயே பகிர்ந்துள்ளேன் என்றாலும் அவற்றை சாதனைகளாகப் பார்க்கும் உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி:)!

    பதிலளிநீக்கு
  11. சட்டியில் இருக்குது; கரண்டியில் வருது.

    இன்னும் தொடர்ந்து அகப்பை நிறைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. 2013ஐ விட 2014 சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. சாதனைப்பட்டியல் அனுமார் வாலாய் வளர்ந்துகொண்டே போக வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. இவ்வருடமும், இனி வரும் வருடங்களும் இதைவிட சிறப்பானவையாய் அமைய என் பிரார்த்தனைகள் அக்கா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin