Thursday, November 7, 2013

கதை நேரங்கள் - தினமணி தீபாவளி சிறப்புப் பக்கத்தில்..

சுவாரஸ்யங்களுக்குக் குறைவில்லாமல்
தத்தமது அனுபவங்களைக் கலந்து
சொல்லி வந்தார்கள் கதைகளை
உற்சாகமாய் உறவுகள்
உச்சுக் கொட்டும் குழந்தைக்கு.

மாமா அத்தைகளின் கதைகளில்
சாகசங்களும் திரும்பங்களும்
அதிகமாய் இருந்தன.

அன்பாலும் பரிவாலும்
நெய்யப்பட்டப் பாசவலைகளாகப்
பாட்டிகளின் கதைகள்.

குடும்பத்தின், நாட்டின், உலகின்
வரலாற்றுக்கு முக்கியத்துவம் தந்த
தாத்தாக்களின் கதைகளில்
அவர்கள் ஆற்றிய பங்கும்
அவசியம் இடம் பெற்றிருந்தன.

நிறைவேறாது போன தம் ஆசைகளை
குழந்தையின் எதிர்காலக் கனவுகளாக்கிடும்
முனைப்பில் அம்மா அப்பாக்களின் கதைகள்.

நிலாக் காய்ந்த வீட்டு முற்றத்தில்
நட்சத்திரங்கள் இரசித்திருக்க
குழந்தையை மடியில் சாய்த்துத்
தலையைக் கோதிவிட்டபடியோ,
உப்பு மூட்டை தூக்கியபடியோ,
தட்டாமாலை சுற்றியபடியோ,
திண்ணையில் அமர்ந்து
பாத ஊஞ்சலில் நிற்க வைத்து
ஆட்டியபடியோக் கழிந்தன அப்போது
கதை நேரங்கள்.

சேனல் தொடர்களிலும் கார்ட்டூன்களிலுமாக
ஏதோவொரு ரூபத்தில் பிழைத்துக் கிடப்பதாய்
ஆசுவாசிக்கும் இன்றைய கதை நேரங்களுக்குள்
தொடருகிறது
கதைசொல்லிகளின் அனுபவக் கதைகளும்..
அதே சுவாரஸ்யத்துடன்
கணினி, கைப்பேசிகளின் வழியே
உச்சுக் கொட்டும் சமூக வலைத்தளங்களில்.

காய்ந்து கொண்டிருக்கிறது அதே நிலா
வெற்றுத் திண்ணை தாண்டி
காலி முற்றத்தில்.

***

படம் நன்றி: இணையம்

தினமணி இணைய தளத்தின் தீபாவளி சிறப்புப் பக்கத்தில்.. இங்கே , நன்றி தினமணி!

20 comments:

 1. கதைசொல்லிகளும், அதை கேட்கும் குழந்தைகளும் இன்னும் இருப்பது மகிழ்ச்சியே!

  கதை வடிவம், சொல்லும் முறை மாறி இருக்கிறது.

  திண்ணை, நிலாகாயும் முற்றம் இப்போது இல்லை. இருந்தாலும் அவை பழமையை சொல்லிக் கொள்ள ஒரு காட்சிபொருளாக, சாட்சியாக பாதுகாக்கப் படுகிறது.

  திண்ணை, முற்றம் மலரும் நினைவுகள் என்றும் நெஞ்சைவிட்டு மறையாது.

  வாழ்த்துக்கள் தினமணி இணையதளத்தில் தீபாவளி சிறப்பு பக்கத்தில் வந்தமைக்கு.

  ReplyDelete
 2. அசத்தல் ராமலக்ஷ்மி. தினமணியில் வந்தமைக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. கதை கேட்க குழந்தைகள் தயாராக இருக்கிறார்கள்! அவர்களுக்கு சுவாரஸ்யமாக சொல்லக்கூடிய பாட்டி தாத்தாக்கள் தான் இல்லை! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 4. திண்ணையும் முற்றமும் நிலாவும்
  பாட்டியின் மடியும் மீண்டால்...அருமையாகத்தான் இருக்கும். இப்பொழுது பேரன் தினம் ஒரு கதை சொல்லிக் கேட்கிறான். நானும் கற்பனையில் வலை பின்னி சொல்வதைக் கேட்டபடி தூங்குகிறான் .
  ஸ்கைப் வாழ்க:)
  அருமை ராமலக்ஷ்மி நெஞ்சைத் தொட்டு நிற்கிறது தங்கள் வரிகள். நன்றி மா.

  ReplyDelete
 5. படிக்கும்போது அன்றைய காலத்துக்கே போய்விட்டோம்.
  தினமணி வாழ்த்துகள்.

  ஸ்கைப் பாட்டி :) வாழ்த்துகள் வல்லிசிம்ஹன்.

  ReplyDelete
 6. பாட்டி தாத்தாக்களுக்கு சீரியல் பார்க்கவே நேரம் போதவில்லை. கதை எங்கே சொல்ல?!! குழந்தைகளும் சீரியல் கதைதான் தெரிந்து கொள்கிறார்கள்! :))))

  ReplyDelete
 7. சிறப்பான படைப்பு. பாராட்டுக்கள்.

  தினமணி தீபாவளி சிறப்பு பக்கத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. கவிதை அருமை அக்கா...
  வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. ஊருக்குப் போனப்ப என் பசங்களும் அண்ணாக்கள் மற்றும் உறவுக்காரங்க பசங்களும் தினமும் வட்டமா உக்காந்து கதை சொல்லிட்டிருந்தாங்க..

  தினமணியில் வந்தமைக்கு வாழ்த்துகள் அக்கா :))

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி...

  //காய்ந்து கொண்டிருக்கிறது அதே நிலா
  வெற்றுத் திண்ணை தாண்டி
  காலி முற்றத்தில்//.

  அருமையான வரிகள்

  ReplyDelete
 11. @கோமதி அரசு,

  ஆம், வடிவங்கள் மாறி விட்டன. நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 12. @s suresh,

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 13. @வல்லிசிம்ஹன்,

  நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் நீங்களும். எந்த விஷயத்திலும் தனித்துவம் நிறைந்தவர் நீங்கள். இணையப் பயன்பாட்டில் இப்படி ஒரு நன்மை. நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 14. @ஸ்ரீராம்.,

  ஆம், பல வீடுகளில் அதுதான் நடக்கிறது:). நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 15. @சுசி,

  கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி சுசி:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin