Tuesday, November 12, 2013

காட்டுத் தீ - கமலா தாஸ் ஆங்கிலக் கவிதை (4) - மலைகளில்..

சமீபமாக, எனக்குள் ஒரு பசியை உணருகிறேன்
காட்டுத் தீயின் பேராசையுடன்
காண்பதையெல்லாம் கபளீகரம் செய்கிற அது
ஒவ்வொன்றை அழிக்கையிலும்
அதிக வெறியுடன் அதிக பிரகாசத்துடன்
கனன்று எரிகிறது.
தள்ளு வண்டியில் அமர்ந்திருக்கும்
தலையில் முடி முளைக்காத குழந்தையை
நான் மட்டும்தான் பார்ப்பதாய் நினைக்கிறீர்கள்,
ஆனால் நீங்களும்தான்,
மரத்துக்குப் பின்னாலிருக்கும் ஒடிசலான காதலர்களே,
நீவிரும்தான்..
சூரிய ஒளியில் தலை முடிகள் மின்ன
கையில் செய்தித்தாளுடன் நிற்கும் வயதானவரே,
நீவிரும்தான்..
என் கண்கள் தழுவுகின்றன,
தீயின் ஜூவாலையைப் போல்
என் நரம்புகள் விழுங்கின்றன
தள்ளுவண்டியில், மரத்துக்குப் பின்னே,
பூங்கா இருக்கையில் இருக்கும்
உங்கள் அனைவரையும் அணைத்து முடித்ததும்
கக்குகிறேன் சாம்பலை சிறு குவியல்களாய்,
வேறெதுவும் இல்லை. ஆனால் என்னுள்
இக்காட்சிகளும் வாசனைகளும் சத்தங்களும்
சுழன்றபடியே இருக்கின்றன. என்னுள் துயிலும்
அந்தத் தள்ளு வண்டிக் குழந்தை உறங்கி விழித்து
சிரிக்கிறாள் பொக்கைவாய் திறந்து.
என்னுள் நடக்கிறார்கள் அந்தக் காதலர்கள்
கைகளைக் கோர்த்தபடி. என்னுள், வேறெங்கே,
அந்த வயோதிகர் அமர்ந்து சூரியனின்
வெம்மையில் காய்கிறார்.
என்னுள், தெருவிளக்குகள் மங்கலாக ஒளிர,
நடன மங்கையர் துள்ளியாட,
திருமணக் கொட்டுகள் மீண்டும் ஒலிக்க,
வண்ணப் பாவாடைகள் சுழலத் திருநங்கையர்
சோகமான காதல் பாடல்களைப் பாட,
காயமுற்றோர் முனக,
என்னுள் மரணித்துக் கொண்டிருக்கும்
தாயின் கண்கள் நம்பிக்கையுடன்
சுற்றுமுற்றும் உற்றுப் பார்த்துத் தேடுகின்றன,
இப்போது வளர்ந்து வேறு ஊர்களுக்கு,
வேறு கரங்களுக்குள் சென்று விட்டத்
தன் குழந்தையை.

**


மூலம்: Forest Fire by Kamala Das

17 அக்டோபர் 2013, மலைகள் 36ஆம் இதழில் வெளியான தமிழாக்கக் கவிதை. நன்றி மலைகள்!

17 comments:

 1. தமிழாக்கம் அருமை...

  கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அற்புதமான கவிதை
  அருமையாக மொழிபெயர்த்து
  அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 3. தமிழாக்கம் அருமை.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. ரஸிக்க வைக்கும் தமிழாக்கமும்,சூரிய ஒளியில் மின்னுவது போலவே.

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. நன்றாக இருக்கிறது. ஆனால் எதைச் சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்வதில் சிரமமாயிருக்கிறது.

  ReplyDelete
 6. சிறப்பான தமிழாக்கம்!

  ReplyDelete
 7. நெஞ்சின் தாகம்.தாயின் ஏக்கம். தனிமை
  அருமையான கவிதை. அருமையான மொழியாக்கம்.வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 8. அருமையான கவிதை.....

  தொடரட்டும் உங்கள் மொழிபெயர்ப்பு கவிதைகள்....

  ReplyDelete
 9. @ஸ்ரீராம்.,

  பலவற்றைச் சொல்லிச் செல்கிறார். இறுதி வரிகள் புரிந்திட எளிதென்றே நினைக்கிறேன். நன்றி ஸ்ரீராம்:).

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin