Saturday, October 26, 2013

யுகமாய் நீ - நவீன விருட்சத்தில்..

கூட்டை உடைத்துக் கொண்டு நீ
வெளியில் வரக் கேட்டுக் கொண்டது
வரலாற்றின் ஒரு காலக் கட்டம்

தயக்கங்கள் உதறிச் சிறகுகள் விரித்து
பெண்ணே நீ
உயர உயரப் பறந்து பொழுது
செம்பிழம்புச் சூரியன்
வெம்மை உனைத் தாக்கிடுமோவென
முகில்களுக்குப் பின் ஒளிந்து கொண்டது

ஒவ்வொரு துறையிலும் நீ
சிகரம் தொட்ட வேளைகளில்
மலையெங்கினும் பூத்தன  மலர்கள்
மகிழ்ச்சியில்

வீதியில் இறங்கி நீ நடக்கையில்
மகளெனப் பரந்த வானம்
குவிந்து ஆசிர்வதிக்கப்
பூரிப்புடன் துணை வந்திருந்தாள்
பூமாதேவி

அறம் பூரணமாய்த் தழைக்க
அதர்மம் முற்றிலுமாய் அழிய
வரம் வாங்கியிராத மண்ணில்,
துளிர்க்கின்ற சந்தோஷங்கள்
செழித்து வேர்விடும் முன்னரேப்
பறித்தெறியப்படுகின்றன
வக்கிர மனங்களால்

கைகளைக் கட்டிக் கொண்டு
வேடிக்கைப் பார்க்கிறது
கொடுப்பது போல் கொடுத்து
எடுத்துக் கொள்ளும்
கோரவிளையாட்டில்
என்றுமே தோற்காத காலம்

ஏனென ஏறிடும் உன் விழிகளை
எதிர்கொள்ள இயலாமல் நிலவு தகிக்க
எரிந்து விழுகின்றன நட்சத்திரங்கள்

தாங்கிப் பிடிக்கக் கீழே வலையற்ற
நூறடி உயரத்தில் கட்டப்பட்ட
நூலிழை வித்தைக் கயிற்றினை,
உலகின் விமர்சன வெளிச்சங்கள்
உடம்பெங்கினும் ஊடுருவக்
கடக்கிறாய்..
கைகளைக் காற்றில் பரப்பி
ஒவ்வொரு அடியாக

***

24 அக்டோபர் 2013, நவீன விருட்சம் மின்னிதழில்..,
நன்றி நவீன விருட்சம்!

ஓவியம் - நன்றி: முரளிதரன் அழகர்
http://www.flickr.com/photos/murali-art/

29 comments:

 1. தலைப்பிற்கேற்ற பொருத்தமான வரிகளும் படமும் அருமை !
  ஆறாம் பூரணமாய்த் தழைக்க
  அதர்மம் முற்றிலுமாய் அழிய
  வரம் வாங்கியிராத மண்ணில்
  துளிர்க்கின்ற சந்தோசங்கள்
  செழித்து வேர் விடும் முன்னரே
  பறித்து எறியப் படுகின்றன
  வக்கிர மனங்களால் !!
  வலி நிறைந்த வரிகள் மனதைச்
  சிலிர்க்க வைத்தன வாழ்த்துக்கள் அம்மா .
  இனிய கவிதை வரிகள் இனியும் தொடரட்டும் .

  ReplyDelete

 2. "யுகமாய் நீ -"

  தலைப்பும் ஆக்கமும் அருமை.

  பாராட்டுக்கள்.

  நவீன விருட்சத்தில் வெளி வந்தமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. ஏனென ஏறிடும் உன் விழிகளை
  எதிர்கொள்ள இயலாமல் நிலவு தகிக்க
  எரிந்து விழுகின்றன நட்சத்திரங்கள்


  ---


  கவிதையின் வரிகளும் அதற்கான படமும் அருமை அக்கா...

  ReplyDelete
 4. யுகமாய் நீ கவிதை கலங்க வைக்கிறது.
  மலர் போனற சிறுமியர்களின் நிலை கண்டு முகிழ்ந்த கவிதை.

  நவீன விருட்சத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.


  ReplyDelete
 5. அற்புதமான கவிதை
  கவிதைக் கருவும் சொல்லிச் சென்ற நேர்த்தியும்
  கவிதையின் வீரியத்தை உச்சத்திற்குக்
  கொண்டு செல்கிறது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நவீன விருட்சத்திலும் படித்தேன்.... இங்கே மீண்டும் ஒரு முறை படித்து ரசித்தேன்.

  சிறப்பான கவிதை சகோ....


  பாராட்டுகள்.

  த.ம. 4

  ReplyDelete
 7. புது யுகமாய் புது வெள்ளமாய்
  அழுக்கை அடித்துச் சென்ற பிறகு தோன்றிய புதுமைப் பெண் இனியாவது நலம் பெறட்டும்.
  அற்புதக் கவிதை படைத்த ஞானமகள்
  ராமலக்ஷ்மிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. அருமை. வக்கிர மனங்களின் பொறாமையை மீறி இன்னமும் கூட செழித்து வளர வேண்டும்.

  ReplyDelete
 9. அருமையான கவிதை... படமும்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. பெண்ணியத்திற்குப் பெருமை சேர்க்கும் கவிதை! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  ReplyDelete
 11. அருமையான கவிதை. பாராட்டுக்கள். புகைப்படக் கலைதவிர கவிதை எழுதுவதும் உங்கள் கை வண்ணத்தில் பரிமளிக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. உங்கள் கவிதையும் புகைப்படம்போல அருமை

  ReplyDelete
 13. @வெங்கட் நாகராஜ்,

  நவீன விருட்சத்தில் அளித்திருக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
 14. @ஸ்ரீராம்.,

  நல்வாக்கின்படியே ஆகட்டும். நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 15. @திண்டுக்கல் தனபாலன்,

  நன்றி, விருட்சம் மின்னிதழில் அளித்திருந்த கருத்துக்கும்.

  ReplyDelete
 16. @Chellappa Yagyaswamy,

  வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 17. நல்ல கவிதை நல்ல ஓவியம் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. பெண்களின் பிரத்யட்ச நிலையை மனதில் பதிக்கிறது கவிதை! வெகு ஜோர்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin