வியாழன், 10 அக்டோபர், 2013

நெல்லை ‘அரசுப் பொருட்காட்சி’ - படங்கள் 25



#1. சொக்குதே மனம்

அதே வளையல், பிளாஸ்டிக், தட்டுமுட்டுச் சாமான் கடைகள்; விளையாட்டுப் பொருட்கள்; கலை நிகழ்ச்சிகள், ரெகார்ட் டான்ஸ்; மெகா அப்பளம், பானி பூரி, மெளகா பஜ்ஜி.., ஜீப், ஹெலிகாப்டர், டிராகன் சீசா, குதிரை சவாரி, கப் அண்ட் சாஸர் ரைட்; அதே பேய் உலகம், அதே ஜெயண்ட் வீல்...

#2. போலாம் வாங்க..

வருடா வருடம் எல்லாம் அதே அதேதான், என்றாலும் அலுப்பதில்லை சலிப்பதில்லை நெல்லை மக்களுக்குப் பொருட்காட்சி. ‘என்னத்த புதுசா....’ என இழுத்தபடியே, கிளம்பி விடுவார்கள்:)! ஒவ்வொரு வருடமும் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டத்தையொட்டி ஜூன் மூன்றாம் வாரத்தில் தொடங்கி 45 நாட்களுக்கு நடக்கிறது நெல்லை அரசுப் பொருட்காட்சி.

‘ஏல ஓடாத..’
‘ஏட்டி கையப் பிடிச்சிட்டுக்கிட்டு நடன்னு சொல்லுதன்ல..’
எனக் குழந்தைகள் பின்னால் ஓடும் பெற்றோர்கள்..

‘எப்ப வந்திய ஊர்லருந்து?’
‘என்ன மயினி சவுக்கியமா? அண்ணாச்சி வரலியா’
‘என்னல, இப்படித் துரும்பா எளச்சிட்ட?’
 நிறைந்து வழிகின்றன மைதானமெங்கும் குசல விசாரிப்புகள். எங்கெங்கு திரும்பினாலும் வெள்ளந்தி மனிதர்கள்.

பொருட்காட்சி நடக்கும் சமயத்தில் ஊர் போக வாய்க்காதவர்களுக்காகவும், அப்படியே சென்றிருந்தாலும் போக நேரமில்லாது போனவர்களுக்காகவும், வேறு நகரங்கள், நாடுகள் என இடம் பெயர்ந்து விட்டாலும் ஊருடனான நினைவுகளை நெஞ்சோடு சுமந்து கொண்டிருப்பவர்களுக்காகவும்... இந்தப் பதிவு!

2010 பொருட்காட்சி அனுபவம் படங்களுடன் இங்கே. [@ ஸ்ரீராம் & DD, இணைப்புகள் தனி tab-ல் திறக்கும்படி அமைத்து விட்டேன் :)!] சென்ற வருட ஆகஸ்டில் ஒருவாரம் சென்றிருந்தேன் முன் போலவே தங்கை ஒரு சின்ன விடுமுறையில் வந்திருந்த போது. கிடைத்த நேரத்தில் அவசர அவசரமாய் அரைமணிக்குள் ஒரு சுற்று சுற்றி வந்து விட்டோம். போன வருஷப்படங்களானால் என்ன? பார்ப்பவர்களில் பலபேருக்குப் பொன்னான நினைவுளை எழுப்பக் கூடியவையாயிற்றே!

#3. பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்..


#4. பாதி தின்று தரக் கேட்கிறதோ மர்ஃபி பாப்பா..


#5. நினைச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை..


#6. எள் என்றால் எண்ணையாக்கும்..
பச்சை வளையலைத் தொட்டதுமே பொட்டலம் கட்ட ஆரம்பித்து விட்டார் பாருங்க..
#7. அப்படிப் போடு போடு..


#8 ‘ஆச்சி பாத்துட்டே இருப்பேன். அப்பளத்த வாங்கிட்டு அஞ்சே நிமிசத்துல வந்தரணும்.. ஆமா..’

#9 டெல்லி அப்பளம்

#10. ரெடியாய்...


#11 பானி பூரிக்கு..
வெயிட்டிங்...

#12. பஜ்ஜிக்கு ஊட்டி மொளகா.. தோரணமாய்..


#13 வறுத்த கடலை..  வாசம் வருதா..

#14. ‘ஊதி ஊதி உழைக்கணும்..’
சந்தோஷமாய் போஸ் கொடுத்தார்.
#15. இளைய பாரதம்

#16 பள்ளிச் சுற்றுலா

#17 படிப்புக்காகத் தொழிலா? படிப்பை இழந்து தொழிலா?
#18. ஓரம் போ.. ஓரம் போ..

#19.  ‘நான் நல்லாருக்கேனா..’

#20. சுத்தி சுத்தி வந்தீக..


#21. திகில் காஆ...டு


#22. அஞ்சா நெஞ்சன்


#23. பைகள் பத்திரம்..

#24. இணை பிரியாத் தோழர்கள்


#25. பாச மலர்கள்..
வாழ்க வளமுடன்:)!
 ***





37 கருத்துகள்:

  1. நானும் பலமுறை போயிருந்தும் பொருட்காட்சி அலுக்கவே இல்ல.

    பதிலளிநீக்கு
  2. நெல்லை மணம் கமழும் பொருட்காட்சி படங்கள் எல்லாம் காவியம்.
    பொருட்காட்சியில் முக்கியமான அனைத்தையும் தவற விடாமல் படம் எடுத்து அதற்கு கீழ் கொடுத்த கருத்து ஒயியங்கள் அழகு, அற்புதம்.
    பொம்மை விற்பவர் பொம்மை போலவே இருக்கிறார்.(நினைத்து பார்க்கிறார் நீங்கள் கொடுத்த பாடலை)
    ஆச்சியின் அன்பு கட்டளை அற்புதம்.
    பொன்னான நினைவுகளை கொண்டு வந்த படங்கள் தான் உண்மை.
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாமே அருமையாக எடுத்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஆம்! லிங்க் க்ளிக் செய்ததும் தனி டேப்லதான் ஓபன் ஆனது. நன்றி! :))

    படங்களும் குசல விசாரிப்புகளும் இளமை நினைவை இசைத்துப் பார்த்தன! ஊருக்கு ஊர் உண்டு இல்லே அரசுப் பொருட்காட்சி! :))

    பதிலளிநீக்கு
  5. மனம் கவரும் அருமையான புகைப்படங்கள்...

    பதிலளிநீக்கு
  6. மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் மனக்காட்சிகள்

    பதிலளிநீக்கு
  7. ஆஆஆன்னு பாத்துட்டிருக்கிறேன் ராமலக்‌ஷ்மி. உங்க கேமராவில் என்னவோ இருக்குங்கறேன் :)

    பதிலளிநீக்கு
  8. 'படிப்புக்காக தொழிலா படிப்பை இழந்து தொழிலா?' போன்ற நல்ல தலைப்புகள். படங்கள் அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  9. அழகான படங்கள். கோவையில் சிறுவயதில் பொருட்காட்சி சென்ற நினைவுகளை மீட்டுத் தந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  10. புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
    பொருட்காட்சிக்கு சென்ற உணர்வைக் கொடுத்தன....
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  11. @ஸ்ரீராம்.,

    ஊருடனான நினைவுகள் என்பது எல்லோருக்கும் பொருந்தும்:)! நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  12. @Viya Pathy,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சிறு வயது கிராமத்து திருவிழாவை நினைவுக்கு கொண்டுவந்து விட்டீர்கள்! நன்றி.

    பதிலளிநீக்கு
  14. எத்தனை சந்தோஷம் இந்தப் பொருட்காட்சிகளில். அதுவும் இந்த எல, ஏட்டி கேட்டு எவ்வளவு நாட்கள் ஆச்சு.
    அருமையான படங்கள் ராமலக்ஷ்மி.
    அருமையான விவரங்கள். கைத்தறிக் கண்காட்சியில் ஒன்றரை ரூபாய்க்கு ஜரிகை கட்டம் போட்ட துணி நினைவுக்கு வருகிறது. நன்றிமா.

    பதிலளிநீக்கு
  15. பொருட்காட்சி சீஸனும், குற்றால சீஸனும் ஒண்ணு போல வர்றதால காத்துல தலைமுடி கலையும். நம்ம ஊரு பாஷைல ஒலையும்.அதனால எப்பவுமே கைவசம் சீப்பு இருக்கும்.

    ‘தலைய சீவுல. இன்னைக்கு நெறய பிள்ளேள் வந்திருக்கு’.

    உள்ளே நுழையும் போதே குஞ்சு சொல்லுவான்.

    சீப்பை எடுத்து அவசர அவசரமாக தலை சீவிக் கொள்வேன். ஆனாலும் ஒரு பெண் பிள்ளையும் கடைசி வரைக்கும் திரும்பியே பார்க்காது.

    மறக்கவே முடியாத ஜெயிண்ட் வீல், மரணக் கிணறு, அரசு ஸ்டால்கள் . . .

    டெல்லி அப்பளம், மொளகா பஜ்ஜி, வருடத்துக்கொருமுறை மட்டும் பார்க்க முடிகிற பேல் பூரி, பானி பூரி, பஞ்சு மிட்டாய், பாண்ட்ஸ் பவுடர், சர்வோதயா சங்கத்து ஜவ்வாது என எல்லா வாசனையும் காற்றில் கலந்து வரும். கூடவே சொக்கு மாமா வீட்டு அத்தை மாதிரியான அந்தக் காலத்துப் பொம்பளைகள் வீட்டில் இருந்தே தயார் பண்ணி கொண்டு வருகிற முறுக்கு, தட்டை மற்றும் மொளகாப் பொடியும், நல்லெண்ணையும் தடவின இட்லி வாசனையும் மூக்கைத் துளைக்கும்.

    நாடக அரங்குக்கு எதிரே புல்தரையில் ஜமுக்காளம் விரித்து, கால் நீட்டி உட்கார்ந்தபடி, ‘ஏட்டி! கூட ரெண்டு இட்லி தின்னு. நெறய அவிச்சுட்டேன். அப்புறம் வம்பாப் போயிரும்லா’ என்பாள், சொக்கு மாமாவின் சம்சாரம்.

    ‘ஆசயா சொல்லுதாங்க. ரெண்டு வாங்கி தின்னுட்டு போவோமேல!’

    வெட்கமே இல்லாமல் குஞ்சு கேட்பான்.

    குஞ்சுவின் கணக்கு இட்லியல்ல, சொக்கு மாமாவின் மகள் ஈஸ்வரிதான் என்பது எனக்கு தெரியுமென்பதாலும், சொக்கு மாமாவின் பச்சைக்கலர் தண்டி பெல்ட் என் கண்ணுக்கு பளிச்சென்று தெரிவதாலும் குஞ்சுவை அந்த இடத்தை விட்டு இழுத்துச் செல்வேன்.

    உங்களின் இந்த நெல்லை அரசுப் பொருட்காட்சி புகைப்படங்களைப் பார்த்தவுடன் எனக்கு இந்த நினைவுகளனைத்தும் மனதில் சுழலத் தொடங்கி விட்டன.

    இந்த புகைப்படங்களுக்காக உங்களைப் பாராட்டுவது சரியல்ல. வாழ்வின் அற்புதமான தருணங்களை, அதன் தன்மை கெடாமல்,இயல்பான முறையில் பதிவு செய்திருக்கும் உங்களுக்கு நன்றி சொல்வதுதான் முறை.

    நன்றி ராமலக்‌ஷ்மி.

    சுகா

    பதிலளிநீக்கு
  16. திருச்சி பொருட்காட்சி நினைவில் வந்துபோகிறது. ஒன்றிரண்டு முறை போயிருக்கிறேன். ஒரு திருவிழாவுக்கு நிகரான நினைவுகளை அள்ளித்தரும் தினங்கள் அவை. அழகழகான படங்களோடு பொருத்தமான கருத்துக்களோடு ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்க அழகு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin