திங்கள், 19 ஆகஸ்ட், 2013

உலகப் புகைப்பட தினம் - புகழ் பெற்றக் கலைஞர்கள் என்ன சொல்றாங்கன்னா..

*1
ஒளிப்படம்  என்பது எடுக்கப்படுவதில்லை. உருவாக்கப்படுகிறது” - அன்சல் ஆடம்ஸ்

# An Apple a Day..


சிறப்பான புகைப்படங்களைக் கொடுக்க, எப்படி எடுத்தால் நல்ல படமாகும் என விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். பார்ப்பவர்கள் ஆர்வத்துடன் நம் படத்தை இரசிக்க வேண்டுமெனில் எதைச் சேர்த்தால் பலம், எதைத் தவிர்த்தல் நலம் என்கிற புரிதல் இருக்க வேண்டும்.

*2. “நீங்கள் எடுத்த முதல் பத்தாயிரம் படங்களே உங்களது மோசமான படங்கள்” - ஹென்ரி கார்ட்டியர்-ப்ரிசன்

அதிர்ச்சியாகி விட வேண்டாம் எல்லாமே மோசமா என. பத்தாயிரம் என்பது ஒரு பேச்சுக்கு. இதுவரை நாம் எத்தனை முறை கேமராவை ‘க்ளிக்’கியிருப்போம் என்பதற்கு சரியான கணக்கு இருக்க முடியாதுதான். உத்தேசமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான படங்களை எடுத்த பிறகே..,
நமது படங்களை சரியான முறையில் அலசிப் பார்க்கிற திறமை நமக்கு வர ஆரம்பிக்கிறது என்பதாகக் கொள்ள வேண்டும். நாம் எடுத்த படத்தை நமதாக நினைக்காமல் மூன்றாம் நபராக நின்று விமர்சித்துப் பார்த்தால் குறை நிறைகள் தெரிய ஆரம்பிக்கும்.

நமது முதல் படத்தை சமீபத்தில் எடுத்த படத்தோடு ஒப்பிட்டு நோக்குகையில் முன்னேற்றம் தெரிகிறதா? எப்படி நமது முதல் சிலபடங்களை வெகுவாகு நேசித்தோம் என்பது நினைவில் உள்ளதா? இப்போதும் அவற்றை நேசிக்கிறோமா? அல்லது அவற்றை படங்களே அல்ல என இன்று ஒதுக்குகிறோமா? கேட்டுக் கொள்வோம் நம்மை நாமே.

# வர்ணங்கள் இரண்டு
ஃபேஸ்புக் “புகைப்படப் பிரியன்” குழுவின்
வாராந்திர தீம்: இரண்டு வர்ணங்களில்
 இரண்டாம் இடம் பெற்ற படம்:

*3
 “எல்லாவற்றிலும் அழகு இருக்கிறது, அதைக் கண்டுகொண்டு ஒரு படைப்பாளியாக அதைச் சிறப்பாகக் கொண்டு வருவதே சாதாரண படத்துக்கும் ஒளிப்படத்துக்குமான வித்தியாசம்” - மட் ஹார்டி

பெரும்பாலானவர்கள் தம்மைச் சுற்றியிருக்கும் அழகான விஷயங்களைப் பார்க்கவோ உணரவோ தவறி விடுகிறார்கள், யாரேனும் அதை காட்டித் தரும் வரை. உங்களைச் சுற்றி வரப் பாருங்கள். உங்கள் கணினியிலிருந்து கூட நகராமல் சன்னல் வழியே பார்க்கலாம். ஒரு தினசரிக் காட்சியையே வித்தியாசமாகப் புதுமையாகக் காட்ட முயன்றிடலாம். ஒரு விஷயம் ஒரு நொடி நம்மைக் கவர்ந்தால் மீண்டும் பார்க்கலாம்...

# ஒரு மழைக்கால மாலை.. என் சன்னலிலிருந்து


*4
எதுவுமே நடக்காது வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால். வெளியில் செல்லும் வேளைகளில் எப்போதும் கேமரா இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். என்னை சுவாரஸ்யப்படுத்தும் அந்தநேரக் காட்சி எதுவானாலும் படமாக்கிடுவேன்.” - எலியாட் எர்விட்

# பேரம்
உலகமே நாம் தீட்ட வேண்டிய சித்திரம் எனில் அந்தச் சித்திரம் பேசிட, எப்போதும் தூரிகையை, அதாவது கேமராவை கையோடு வைத்திருந்தல் அவசியம். இப்போது மொபைலிலேயே வசதி உள்ளது. எதையும் படமாக்கத் தவறிவிட்டோமே எனும் வருந்தும் நிலை வரக் கூடாது.

*5.
எனது எந்தப் புகைப்படம் என் மனதுக்குப் பிடித்தமானது? நாளை நான் எடுக்கப் போகிற ஒன்றே” - இமோகென் கனிங்ஹாம்

எப்போதுமே திருப்தி அடையக் கூடாது நாம் இதுவரை கடந்த வந்த பாதை மேல், படங்கள் மேல். நமது சிறந்தபடத்தை இனிதான் இந்த உலகுக்கு வழங்க வேண்டுமென்கிற எண்ணத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து படமெடுத்தபடியே இருப்போம்......

*6
கடுமையான உழைப்புக்குத் தயாராக வேண்டும். யாராலும் தர முடியாத படங்களைத் தர சுற்றிலும் பார்க்கத் தொடங்க வேண்டும். இருக்கிற கருவிகளின் உதவியோடு சோதனை முயற்சிகளில் ஆழமாக இறங்க வேண்டும்.” - வில்லியம் ஆல்பர்ட் அலார்ட்

ஏன் ஒரு படம் சரியாக வரவில்லை என்பதை விளக்கக் காரணங்களைத் தேடுவதில் பயனில்லை. ஃப்ரெஞ்ச் புகைப்படவல்லுநரான கார்ட்டியர்-பிரிசன் ஃப்லிம் சுருள் கேமராவை வைத்து ஒரே ஒரு லென்சையே உபயோகித்து, ஒரே ஷட்டர் ஸ்பீடில், ஃப்ளாஷ் இல்லாமல் பிரமாதமான படங்களைத் தந்தவர்.

உங்களுக்கு காணக் கிடைப்பவை எல்லோரும் காணும் வாய்ப்பற்றவையாக இருக்கலாம். அதைப் பயன்படுத்துங்கள். மற்றவர் காணக் கொடுங்கள்.

எல்லோருக்கும் காணக் கிடைப்பவையாகவே இருக்கட்டும். அதையும் கொடுங்கள், ஆனால் உங்கள் கேமராப் பார்வையில்.




*7
நல்ல படம் ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் போன்றது. அதை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சிறப்பானதெனக் கொள்ள முடியாது ” யாரோ சொன்னது.

சிலநேரங்களில் படம் எடுக்கப்பட்ட கதை சுவாரஸ்யம் அளிப்பதோடு புதியதொரு கோணத்தில் மீண்டும் அதை இரசிக்க உதவும் என்பது உண்மைதான். ஆனால் பொதுவாக ஒரு படத்துக்கு எந்தக் கதையும் அவசியமில்லை. படம் அதுவாகவே பேச வேண்டும்.

# Trial

*8
கேமரா வ்யூஃபைண்டர் வழியாக நான் காண்கின்ற ஒன்று வழக்கமானதாகவே இருந்தாலும், ஏதாவது செய்வேன் அதை வித்தியாசப் படுத்த ” - கேரி வினோகிரான்ட்

எத்தனை தடவைகள் நினைத்திருப்போம் இது நல்ல படம்தான், ஆனால் ‘ஏதோவொன்று இதில் குறைகிறதே’ என்று, ‘எதையாவது செய்து இதை வித்தியாசப்படுத்தியிருக்கலாமோ’ என்று. சிலநேரங்களில் சில சிறிய விஷயங்கள் பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்த வல்லதாக இருக்கும். பரீட்சித்துப் பார்க்கத் தயங்கக் கூடாது.
புகைப்படத்துக்கு நன்றி:
நித்தி ஆனந்த்
 *9
“ஒரு வருடத்தில் பனிரெண்டு படங்கள் குறிப்பிடத் தக்கதாக அமைந்து விடுமானால் அதை நல்ல அறுவடை எனக் கொள்ளலாம்.” - ஆன்சல் ஆடம்ஸ்

புகழ்பெற்ற அமெரிக்கப் புகைப்படக் கலைஞரான இவர் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்கள் பலவும் காலண்டர்கள், போஸ்டர்கள், புத்தகங்களில் வெளியானவை. வருடத்தில் பனிரெண்டு என்பதே அவருக்குத் திருப்தி தரும் இலக்காக இருந்திருக்கிறது. வாங்க, நாமும் கடந்த ஒரு வருடத்தில் எடுத்த படங்களில் தேடிதான் பார்க்கலாமே. ஒரு பனிரெண்டு மற்றவற்றை விட சிறப்பானதாக மிளிராதா என்ன:)? அப்படியானால் நாமும் திருப்தி பட்டுக் கொள்ளலாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோமென.

# நகரமயமாக்கல்

பாண்டிச்சேரி ஃபோட்டோகிராஃபி க்ளப்பின் வாராந்திர தீம்: Urbanisation போட்டிக்கு நடுவராக செயலாற்ற வாய்ப்பு வந்த வேளையில், அந்த தலைப்பில் ஃப்ளிக்கரில் நான் பகிர்ந்த படம்:



இறுதியாக, ஒரு படத்தை மேம்படுத்துதல், எடிட் செய்தல் சற்று சிரமமான அல்லது நேரமெடுக்கும் ஒன்றாக இருப்பினும், பெரும்பாலானவருக்கு மிகுந்த திருப்தி தரக் கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

சிறந்த படங்களை வழங்கும் நோக்கத்துடன் நம் பயணம் தொடரட்டும்.

புகைப்பட ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவருக்கும்
உலகப் புகைப்பட தின நல்வாழ்த்துகள்!
***

இந்தப் பகிர்வு தமிழில் புகைப்படக் கலை (PiT) தளத்திலும்.

32 கருத்துகள்:

  1. எல்லாவற்றிலும் அழகு இருக்கிறது, அதைக் கண்டுகொண்டு ஒரு படைப்பாளியாக அதைச் சிறப்பாகக் கொண்டு வருவதே சாதாரண படத்துக்கும் ஒளிப்படத்துக்குமான வித்தியாசம்- மிகவும் அழகான கருத்து.

    நல்ல படம் ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் போன்றது. அதை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சிறப்பானதெனக் கொள்ள முடியாது - எவ்வளவு உண்மை!

    புகைப்பட ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் உலகப் புகைப்பட தின நல்வாழ்த்துகள்!

    ரசனையான புகைப்படங்களால் எங்கள் மனத்தைக் கவரும் உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி :) உங்க கேமரவில் உங்க கையால போட்டோ எடுத்துக்க கொடுத்து வைக்கலையே :(

    நான் இன்னும் பத்தாயிரம் போட்டோக்கள் எடுக்கலையே. அப்போ கால் கேமராவுமன் கூட இல்லை நானு :(

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் புகைப்படத் தினத்திற்கும் எந்த வித ‘ஒட்டும்’ இல்லை. இருந்தும் படம் எடுக்குற உங்களை மாதிரி ஆளுகளுக்கு என் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. பிரபலங்களின் வார்த்தைகளுடன், உங்கள் டிப்ஸ் அருமை. ஒவ்வொரு புகைப்படமும் அருமை. புகைப்பட தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. பிரபலங்களின் கருத்துக்களும் படங்களும் அருமை....

    உங்களுக்கும் உலக புகைப்படக் கலைஞர் தினத்துக்கு வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  6. இன்று போட்டோகிராபி டேயா? வாழ்த்துக்கள்!
    உங்கள் பதிவில் கடைசியில் என்னை போட்டோ எடுத்தீர்களே, நான் நன்றாக விழுந்திருக்கேனா?
    ஒரு காப்பி அனுப்புங்கள்.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  7. அன்புச் சகோதரிக்கு
    வணக்கம்!

    ஒளிப்படக் கலையில் மகளிர் பங்களிப்பு மிகக் குறைவு! -அதில்
    தலைமை இடத்தைத் தாங்கள் தக்கவைத்துக்கொண்டிருப்பதில்
    எங்களுக்கு எல்லாம் பெரு நிறைவு!

    தங்கள் படங்களைக் கண்டு கண்டு
    அவற்றின் நுட்பங்களை எல்லாம் கண்டுகொண்டு
    சுவைப்பவன் யான்.
    இருப்பினும் இதுவரை பின்னூட்டம் இட்டவன் இல்லை!

    ஒளிப்பட உலக நாளான இன்று
    தங்களைப் பாராட்டி எழுதுவதில் பெரு மகிழ்ச்சி காண்கிறேன். _ தனிப் பெருமை பூண்கிறேன்!

    உளி பிடித்துச் சிலை வடிக்கும் சிற்பி போல நீங்கள்
    ஒளி பிடித்துக் கலை வண்ணம் நன்கு
    வெளிப்படும் வண்ணம் காட்டுகிறீர்கள்!
    வகைவகையாய்
    வண்ணப் படங்களை எடுத்து நீட்டுகிறீர்கள்.

    வாழ்க தங்கள் ஆர்வம் ; வளர்க தங்கள் ஒளிப்படக் கலைத் திறமை!

    புகைப்படம் என்ற சொல்லைத் தவிர்த்து ஒளிப்படம் என்ற சொல்லை ஆண்டால் சிறப்பாக இருக்கும்!

    அன்படன்
    பெஞ்சமின் இலெபோ
    பிரான்சில் இருந்து.

    பதிலளிநீக்கு
  8. இன்று உலக் புகைப்பட தினம் என்று படித்தவுடன் உங்கள் நினைவு வந்தது அப்படி புகைப்படக் கலைஞ்ராக மனதில் இருக்கிறீர்கள் நீங்கள் பகிர்ந்து கொண்ட படங்களால்.
    எல்லாம் ஒளி பொருந்தியது தான். அனைவர் நெஞ்சிலும் ஒளிர்ந்து கொண்டு இருப்பதால் திரு . பெஞ்சமின் இலெபோ சொல்வது போல் ஒளிப்படங்கள் தான்

    பதிலளிநீக்கு
  9. பல நேரங்களில் காணும் படங்கள் எல்லாம்
    மனம் லயித்து எழுதத் தூண்டும்..
    அத்தகைய எண்ணத் தூரலை நெஞ்சில் விதைக்கும்
    அற்புதமான புகைப்பட கலைஞர்களுக்கு என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. காமிரா தின வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
    புகைப்பட தினம் என்றால் காமிரா இல்லாமல் ஏது. காமிரா பிடிக்கும் கைகள்,கண்கள் எல்லாமே அருமையாக நினைக்க வேண்டும். அப்பொழுது படமும் அழகாகாக் கச்சிதமாக வரும். அந்தக் குழந்தையின் கருவண்டு விழிகளைப் போல.

    பதிலளிநீக்கு
  11. ரசித்தேன் ராமலக்ஷ்மி.. உங்களின் பகிர்வும் புகைப்படங்களும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது - நானும் இவைகளையெல்லாம் பழவேண்டும் படிக்கவேண்டும் என்கிற துடிப்பு வருகிறது.
    நன்றி.. அருமை அருமை..

    பதிலளிநீக்கு
  12. பிரபலங்களின் கருத்துக்கள் அங்கங்கு ஜொலிக்கின்றன. இப்போது செல்போனிலேயே வசதி இருப்பதால் கேமரா எடுத்து வரவில்லையே என வருந்த வேண்டாம்.எதையும் வித்தியாசமான கோணத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும் அழகிய பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  13. //நாம் எடுத்த படத்தை நமதாக நினைக்காமல் மூன்றாம் நபராக நின்று விமர்சித்துப் பார்த்தால் குறை நிறைகள் தெரிய ஆரம்பிக்கும்.//

    அதேதான்..

    நமக்கு வாழ்த்துகள் :-)

    பதிலளிநீக்கு
  14. @மதுமிதா,

    அடுத்த சந்திப்பில் எடுத்திடலாம்!

    பத்தாயிரம் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குதான் எனக் குறிப்பிட்டுள்ளேனே:)!

    உங்களுக்கும் எனது வாழ்த்துகள் மதுமிதா!

    பதிலளிநீக்கு
  15. @தருமி,

    நன்றி.

    இப்படி சொன்னால் எப்படி:)? உங்களுக்கு என் புகைப்பட தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  16. @சகாதேவன்,

    மிக்க நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துகள்:)! copy வந்து கொண்டேயிருக்கிறது:)! நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் எனக்கு பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு
  17. @நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ,

    வருகையில் மகிழ்ச்சி. பொதுவாக ஒளிப்படம் எனும் சொல்லையே அதிகம் உபயோகிக்கிறேன். பரவலாக அறியப்படுவதால் இத்தினத்தை புகைப்படதினமாக குறிப்பிட்டேன். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. @கோமதி அரசு,

    அன்பான பாராட்டுக்கு நன்றி கோமதிம்மா:)!

    பதிலளிநீக்கு
  19. @வல்லிசிம்ஹன்,

    அழகாய்ச் சொன்னீர்கள். நன்றி. உங்களுக்கும் கேமரா தின வாழ்த்துகள் வல்லிம்மா:)!

    பதிலளிநீக்கு
  20. @ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி,

    இதைவிட மகிழ்ச்சி வேறெதுவாக இருக்க முடியும்? தொடங்கிடுங்கள். வாழ்த்துகள்:)! நன்றி விஜி.

    பதிலளிநீக்கு
  21. @Viya Pathy,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அட்டகாசம். வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி. ஏதோ எடுத்து ஏதோ போட்டுக்கிட்டு இருக்கேன் சில வருடங்களா. அத பர்ஃபெக்டா செய்யணும்னு தோணுது.. ஆனா ரொம்ப டைம் எடுக்குதே.. ஹாஹா.. கம்யூட்டர்லேயே உக்கார்ந்துகிட்டு இருக்கேன்னு திட்டு. இதுக்காகவும் சேர்த்து இப்போ வாங்கிக்கணும்..

    உங்க ஒளிப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம் தோணுது.. இது மாதிரி அழகா எடிட் பண்ணி போடணும்னு. முயற்சிக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  23. @Thenammai Lakshmanan,

    நேரம் எடுத்தாலும், விரும்ப ஆரம்பித்து விடுவீர்கள் பாருங்கள். தொடர வாழ்த்துகள்:)! நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin