புதன், 20 பிப்ரவரி, 2013

விருது - நவீன விருட்சத்தில்..



முதுமையைத் தொட்டபோது
ஒட்டிக் கொண்டன
தனிமையும் தளர்வும்.

இளமையில் துணையிருந்த
திறமைகளும் திடமும்
விடை பெற்றிருந்த வேளையில்,
காலம் கடந்து
அறிவிப்பான விருதை
ஏற்க மறுத்தப் பெருமிதத்துடன்
அவனது இரு கைகளும்
இறுகப் பற்றிக் கொள்கின்றன
மேசை இழுப்பறையில்
பத்திரமாய்ப் பாதுகாத்து வந்த
பேனாவையும் தூரிகையையும்.

எல்லோரும் கொண்டாடிய
எத்தனையோ கவிதைகளுக்கான
மையைச் சுரந்திருக்கிறது அந்தப் பேனா.
புருவங்களை உயர வைத்த
அழகோவியங்கள் பலவற்றைத்
தீட்டியிருக்கிறது அந்தத் தூரிகை.

மூதாதையர் கடிகாரத்தின்
பெண்டுலச் சத்தம் பின்னணி இசைக்கச்
சொட்டுச் சொட்டாகக் கசிகிறது
பேனாவிலிருந்து மை.
பெருகிப் பிரவாகிக்கிறது சமுத்திரமாக.
மிதந்த பேனாவின் மேல் அமர்ந்து
வேகமாகப் பயணிக்கிறது மனம்
படைப்பாற்றலில் உச்சத்திலிருந்தக்
கணம் நோக்கி.

சிறிய பெரிய மீன்கள்
யானையை விடப் பெரிய
சுறாக்கள் திமிங்கலங்கள்
ஆயிரம் வயதான ஆமைகள்
ஆரவாரத்துடன் பின் தொடருகின்றன.

தோலின் சுருக்கங்களைத் தாண்டிப்
பிரகாசித்த முகத்திலிருந்து
வெளிப்பட்ட வெளிச்சம்
இன்னொரு கையிலிருந்த
தூரிகையைப் பிடுங்கி அவசரமாய்த்
தீட்டத் தொடங்குகிறது - மன
நிறைவு தந்த நினைவுகளின்
களிப்பையே
கலைஞனுக்கான விருதாக.
***

படம் நன்றி: இணையம்

3 பிப்ரவரி 2013, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்.

28 கருத்துகள்:

  1. கடைசி நான்கு வரிகள் அற்புதம்! அருமையான கவிதை! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அருமை. சுறாக்கள் திமிங்கிலங்கள் ஆமைகள் உவமை எதைச் சுட்டுகின்றன என்று புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பாக இருக்கு..பாராட்டுக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான கவிதை.

    //மன
    நிறைவு தந்த நினைவுகளின்
    களிப்பையே
    கலைஞனுக்கான விருதாக.
    *** //

    மிக அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  5. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அருமையான நடையில் அழகிய கவிதை.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான கவிதை. முதுமையில் நிறைவு தந்த பழைய நினைவுகளே பெரிய விருது தான் கலைஞனுக்கு.

    நவீன விருட்சத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. முதலில் எல்லோரும் ஒத்துகொள்ளவேண்டிய முதல் வரிகள் மறுக்க முடியாத உண்மை.

    பதிலளிநீக்கு
  9. விருட்சத்திலேயே படித்து விட்டேன்... நல்ல கவிதை...

    பதிலளிநீக்கு
  10. @ஸ்ரீராம்.,

    பலதரப்பட்ட மனிதர்கள் எனக் கொள்ளலாம். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. @தி.தமிழ் இளங்கோ,

    முத்துச்சரம் குறித்தத் தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin