Wednesday, January 11, 2012

‘அகநாழிகை’ பொன். வாசுதேவனின் "ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை"-ஒரு பார்வை-உயிரோசையில்..கவிதைகளைப் பிரசுரித்த இதழ்களின் பட்டியலே அவற்றின் சிறப்புக்கு அணிந்துரையாக மிளிர, கவிஞரின் நெடிய இலக்கிய பயணத்தை எண்பத்து ஏழு கவிதைகளுக்குள் அடக்கிக் கொண்டதாக ’ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை’. பாசாங்குகளற்ற நேர்மையான மென்மையான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. வாழ்வின் மீதான அவதானிப்புகளுடன் சில என்றால் அன்பைத் தேடுவனவாக பிரியங்களைப் போற்றுவனவாக இருக்கின்றன பல.

எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.

தொடங்கியிருக்கிறோம்’ கவிதையில்..,
“...எனக்குள் பூத்த ஆண்டாளைப்
பறித்தெடுத்து சூடிக்கொள்கிறேன்
எதற்கெனத் தெரியாமல்.”

கொடுக்கல் வாங்கல்’ எனும் ஒரு கோட்டில் பயணிக்கும் உலகில் இந்தக் கோட்பாட்டை உடைத்து, விதிவிலக்காக நிபந்தனைகளற்று இருந்தால் மட்டுமே அன்பு அன்பாக இருக்கமுடியும்:
“நொடிகளைத் துரத்தும் நிமிடங்களாய்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
அன்பு காலம் காலமாய்
...

அன்பின் பிரதேசத்தால் வாய்த்திருக்கிறது
வாழ்வின் ஆசிர்வாதம்

உனக்கும் எனக்கும்
அவருக்கும் இவருக்கும்
யாவருக்கும்”

காற்றைப் போல் கலைந்து விடக்கூடிய, ஒளியைப் போல் மறைந்து விடக்கூடிய சாத்தியங்களைத் தன்னோடு கொண்ட அன்பினைச் சார்ந்து வாழ்வதன் சிரமங்களைப் புரிந்திருந்தாலும் அதனை யாசிப்பதை நிறுத்த முடிவதில்லை எவருக்கும். இங்கே கவிஞருக்கும். வாழ்க்கையின் அடிநாதம் அன்பு என்கிற புரிதலுடன் அதனை யாசித்துப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் துணையிடமும் ‘பிரிந்து போன தோழி’யிடமும் தாய்மையைக் கண்டு போற்றி நிறைவு கொள்கிறார். ‘சொல்ல இருக்கிறது காதல்’, ‘பால்ய விளையாட்டு’ எனப் பிரியம் பேசும் பல கவிதைகளுக்குள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பை இழைத்துக் கொண்டு வார்த்தைகளான வரிகள் சில:

பிரியத்தில் விளைந்த கனி’:
“.. பிரியத்தின் பொருட்டே
உனக்குள் என் வாழ்வு
பூரணமடைந்திருக்கிறது”

பிரியங்கள் உதிர்த்த கனி’:
“வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களைத்
திசைக்கொன்றாய் வீசிச் சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று’

புசிக்கத்தூண்டும் பிரியங்கள்’:
”நிகழ்வின் சாத்தியங்களாக
அன்பும் பிரியமும் மட்டுமே
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
பிரியங்களுக்கு”

உண்மையான அன்பின் மொழி மெளனமே. அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்த பின், அதன் திண்மை இளகி இனிமை கூடுவது இயல்பாக நிகழ்வது. பரிமாற்றம் தவறும் போது இனிமையின் இடத்தில் வலியும் வேதனையும் வந்தமர்கிறது என்றால் பரிமாற்றங்களுக்கும் பிறகும் கூட பலவீனப்படுகிற அன்புகளால் இணையை அலட்சியப்படுத்துவதும், அன்பை சாதகமாக எடுத்துக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக அனுபவிக்கும் வலியைப் பற்றிய கவலையிருப்பதில்லை. பாலினப் பாகுபாடின்றி, அன்பிற்காகவே அனைத்து உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு செல்லும் இணைகள் கொண்ட உலகம் இது. இப்படியான அன்பின் எல்லாப் பரிமாணங்களையும் காட்டுவதான தொகுப்பின் முதல் கவிதை ‘மொழி’வது:
“உன்னுடன் சேர்ந்து வரும்
மெளனம் போதுமெனக்கு
...
உனது மெளனம் என்னை
மறுத்துப் பேசாது
...
தொடர் பின்றி நான் பேசினாலும்
உனது மெளனம் என்னிடம்
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
...
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மெளனத்தைக் கடைபிடிக்கும்வரை.”

பிரியங்களின் வன்முறை’யில்..
“வன் எழுத்துக்களில் புலனாகும்
குரூரம் யெப்போதும் யாரையும்
அண்டச் செய்வதில்லை என்கிறாள்

பிரியங்களின் கொடுமனம் நிகழ்த்தும்
வன்முறை பற்றி
ஒருபோதும் நான் அவளிடம்
கேட்டதேயில்லை”.

கடைசி நிறுத்தம் வரை சென்று கொண்டிருக்கும் இவரது ‘பிராயணம்’ போலவே கடக்கின்றது தொகுப்பு பாடுபொருளாய்ப் பல வாழ்வியல் காட்சிகளை உள்ளடக்கி. ‘தன்னையே கீறக்கூடுமென அறிந்திருந்தும்’ வளர்க்கும் நகங்களைப் பற்றிப் பேசுகிறது ‘இருப்பு’. உய்தலுக்கானப் போராட்டத்தை எப்படி விலங்குகளுடன் நடத்த வேண்டி வருகிறது மனிதனுக்கு என்பதைக் காட்டுகிறது ‘இருத்தல்’. தந்திரங்களையும் வஞ்சகங்களையும் சூழ்ச்சித் திறம் என்று கொண்டாடும் உலகெங்கும் இவர் காட்டும் ‘மிதந்து கொண்டேயிருக்கும் வலை’கள் ஏராளம்.

ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்’, ‘ஓவிய நீட்சி’ ஆகியன பிடித்த கவிதைகள் எனில், பிடித்த வரிகளைக் கொண்டதாக ‘என்னிடம் வந்த இந்த நாள்’:
“தாழப்பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்த செல்கிறது இந்த நாள்”.

கவிஞர் ஒரு வழக்கறிஞர். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதில் அவருக்குச் சம்மதமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படும் பலபேரின் பின்னணியை, சிறுவயதுப் போராட்டத்தை, எது அவர்களை அச்செயலுக்கு உந்தியது எனும் காரண காரியங்களை நீதிமன்றங்கள் அலசுகின்றனவா? அவற்றைக் கருத்தில் கொண்டு பரிவு காட்டப்படுகின்றதா? விடை தேடுவதே அவசியமற்றதாக ஒதுக்கப்படும் கேள்விகள் இவை.
“அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்...”

‘அகநாழிகை’ என்ற பெயரில் சிற்றிதழும் பதிப்பகமும் நடத்தி வரும் பொன். வாசுதேவனின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் ‘கடவுளைச் சுமந்தவன்’ சொல்லுகிறான்:
“பத்திரமாக கோவிலில்
இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்
மனநிறைவாகவும் இருந்தது
கடவுளுக்கும்”

இருபது ஆண்டுகளாகச் சுமந்து வந்த கவிதைகளைத் தொகுப்பாக இறக்கி வைத்த கவிஞருக்கும் இது பொருந்தும். மன நிறைவு வாசிப்பவருக்கும்!
***

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
விலை ரூ:70. பக்கங்கள்: 112. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

ஜனவரி 5 முதல் 17 வரைக்குமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், கடை எண்: F 27.
*** *** ***

11 ஜனவரி 2012 உயிரோசையில்.., நன்றி உயிரோசை!

29 comments:

 1. நம்மோட தோஸ்து இவர். Facebook-ல் பார்த்தா இன்னும் ஜாலியா கமண்ட் போட்டு விளையாடிகிட்டு இருப்பார். படு படு படு பயங்கர வாசிப்பு பேர்வழி ! புக் எக்சிபிஷனில் இவர் வாங்கும் புத்தகங்கள் பார்த்து மிரண்டு போனேன். அவ்வளவும் படிக்கவும் செய்வார்.

  உங்களின் கருத்துரைக்கு நன்றி ராம லட்சுமி

  ReplyDelete
 2. இவரது கவிதைகளில் புது தமிழ் வார்த்தைகளையும் மிக நுட்பமான விஷயங்களையும் இவர் ரசிப்பதும் அதன் தொனியும் மிகவும் அற்புதமாய் இருக்கும்.. வாசிக்கையில் நானும் சில சொற்களையும் வார்த்தை பிரயோகத்தையும் பார்த்து அசந்தும் அதில் இருந்து மனம் விலகாதும் இருந்த நாட்கள் பல உண்டு!! இலக்கியத்தை விரல் நுணியில் கையாளும் இவர் திறன் இலக்கியம் முழுயாய் அறியாத எனனையே இத்தனை ஈர்த்ததென்றால் இலக்கியம் அறிந்தவர்களை மெய் மறக்கத்தான் செய்யும்.

  // எனக்குள் பூத்த ஆண்டாளை//

  இப்படி ஒரு வார்த்தை பிறருக்கு தோன்றுமா? இது தேடிக்கிடைத்த வார்த்தையா க்விஞரின் வார்த்தை ஜாலமா?

  // “பத்திரமாக கோவிலில்
  இறக்கி விட்டேன் கடவுளை

  நிம்மதியாகவும்
  மனநிறைவாகவும் இருந்தது
  கடவுளுக்கும்”//

  இதில் இவரின் ஆளுமை நிறைந்திருக்கிறது..

  இன்னும் நிறையவே உண்டு குறிப்பிட பின்னுட்டமே ஒரு பதிவாகிவிடும்..உங்கள் பார்வையால் மேலும் மிளிர்கிறது “ ஞாயிற்றுக் கிழமை மதியப்பூனை”

  ReplyDelete
 3. வாழ்த்துகள் கவிஞருக்கும்...உங்களுக்கும்....

  ReplyDelete
 4. புத்தகத்தை வாங்க தூண்டியுள்ளது - உங்கள் விமர்சனம்.

  ReplyDelete
 5. அருமையான விமர்சனம் அக்கா.

  ReplyDelete
 6. வார்த்தை ஜாலங்கள் வியக்க வைக்குது.

  அருமையான விமர்சனம் ராமலஷ்மி..

  ReplyDelete
 7. நல்ல பதிவு.
  இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. எனக்கும் பிடித்தாமன கவிஞர்.நன்றி அக்கா !

  ReplyDelete
 9. எடுத்துக் காட்டியிருக்கும் அருமையான ரசனை மிக்க வரிகளும், விமரிசனமும் புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகின்றன. வாழ்த்துகள், ஆசிரியருக்கும், உங்களுக்கும்!

  ReplyDelete
 10. அருமையான விமர்சனம்.பொன் வாசுதேவனுக்கு வாழ்த்துக்கள்.நிறைய வாசிக்கிறீங்க ராமலஷ்மி,பாராட்டுக்கள்.
  உங்க வீட்டு புத்தக அலமாரி தான் நினைவு வருது.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 11. //எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.//
  உண்மைதான் ராமலக்ஷ்மி.
  அன்புக்கு அன்புதான்.

  கவிதை விமர்சனம் படிக்க தூண்டுகிறது.

  வாழ்த்துக்கள், பொன். வாசுதேவன் அவர்களுக்கும், உங்களுக்கும்.

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு. கவிதையும் நன்றாயிருக்கிறது. உங்கள் பகிர்வும் நன்றாயிருக்கிறது!

  ReplyDelete
 13. நல்ல பகிர்வு ராமலஷ்மி.

  ReplyDelete
 14. மோகன் குமார் said...
  // படு படு படு பயங்கர வாசிப்பு பேர்வழி ! புக் எக்சிபிஷனில் இவர் வாங்கும் புத்தகங்கள் பார்த்து மிரண்டு போனேன். அவ்வளவும் படிக்கவும் செய்வார்.

  உங்களின் கருத்துரைக்கு நன்றி ராம லட்சுமி//

  ஆம், பரந்த வாசிப்பனுபவம் உடையவர். நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 15. தமிழரசி said...

  //இன்னும் நிறையவே உண்டு குறிப்பிட பின்னுட்டமே ஒரு பதிவாகிவிடும்..உங்கள் பார்வையால் மேலும் மிளிர்கிறது “ ஞாயிற்றுக் கிழமை மதியப்பூனை”//

  உண்மைதான், குறிப்பிட நிறையவே உள்ளது. எனது விமர்சனமும் சுருக்கமானதே. ரசனையுடனான பகிர்வுக்கு நன்றி தமிழரசி.

  ReplyDelete
 16. பாச மலர் / Paasa Malar said...
  //வாழ்த்துகள் கவிஞருக்கும்...உங்களுக்கும்....//

  நன்றி மலர்.

  ReplyDelete
 17. தமிழ் உதயம் said...
  //புத்தகத்தை வாங்க தூண்டியுள்ளது - உங்கள் விமர்சனம்.//

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 18. சுசி said...
  //அருமையான விமர்சனம் அக்கா.//

  நன்றி சுசி.

  ReplyDelete
 19. அமைதிச்சாரல் said...
  //வார்த்தை ஜாலங்கள் வியக்க வைக்குது.

  அருமையான விமர்சனம் ராமலஷ்மி..//

  நன்றி சாந்தி.

  ReplyDelete
 20. Rathnavel said...
  //நல்ல பதிவு.
  இனிய பொங்கல் வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 21. ஹேமா said...
  //எனக்கும் பிடித்தமான கவிஞர்.நன்றி அக்கா !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 22. கவிநயா said...
  //எடுத்துக் காட்டியிருக்கும் அருமையான ரசனை மிக்க வரிகளும், விமரிசனமும் புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகின்றன. வாழ்த்துகள், ஆசிரியருக்கும், உங்களுக்கும்!//

  மிக்க நன்றி கவிநயா.

  ReplyDelete
 23. Asiya Omar said...
  //அருமையான விமர்சனம்.பொன் வாசுதேவனுக்கு வாழ்த்துக்கள்.நிறைய வாசிக்கிறீங்க ராமலஷ்மி,பாராட்டுக்கள்.
  உங்க வீட்டு புத்தக அலமாரி தான் நினைவு வருது.பகிர்வுக்கு மகிழ்ச்சி.//

  நன்றி ஆசியா:)!

  ReplyDelete
 24. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //அருமையான விமர்சனம்//

  நன்றி டி வி ஆர் சார்.

  ReplyDelete
 25. கோமதி அரசு said...
  //உண்மைதான் ராமலக்ஷ்மி.
  அன்புக்கு அன்புதான்.

  கவிதை விமர்சனம் படிக்க தூண்டுகிறது.

  வாழ்த்துக்கள், பொன். வாசுதேவன் அவர்களுக்கும், உங்களுக்கும்.//

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 26. ஸ்ரீராம். said...
  //நல்ல பகிர்வு. கவிதையும் நன்றாயிருக்கிறது. உங்கள் பகிர்வும் நன்றாயிருக்கிறது!//

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 27. செல்வராஜ் ஜெகதீசன் said...
  //நல்ல பகிர்வு ராமலஷ்மி.//

  நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

  ReplyDelete
 28. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin