திங்கள், 19 டிசம்பர், 2011

‘சதுரங்கம்’, ‘ஒருவேளை உணவு’ - 2010_ன் சிறந்த பனிரெண்டு சிறுகதைகளில்.. - ஒரு பகிர்வு (கீற்றினில்..)


சில கதைகளை எழுத்தாளருக்காகவே வாசிப்போம். சிலசமயம் எழுதியவர் யார் என்று கவனிக்காமலே வாசிக்கத் துவங்குவோம். பாதி வாசிக்கையிலேயே நடையாலோ கருத்தாலோ ஈர்க்கப்பட்டு அவசரமாய் பக்கத்தைத் திருப்பி யார் எழுதியது எனப் பார்ப்போம். அப்படியான அனுபவமே முதன்முறை ஆனந்த் ராகவ் அவர்களின் எழுத்தை வாசித்தபோது எனக்குக் கிட்டியது. கதையின் பெயர் நினைவில் இல்லை. பலமாதங்கள் முன்னர் வடக்குவாசலில் வெளியானது. புதியதாக வாங்கிய காரை ஓட்டிச் செல்லும் ஒருவனது மனநிலையைப் பற்றியதானது. பிறகு விகடனில் அவர் கதைகள் வெளியானபோது எழுதியவரின் பெயருக்காகவே முதலில் வாசித்தேன். வாசகர்களைக் கதைக்குள் இழுக்கும் நடைக்குச் சொந்தக்காரர். சென்ற வருட சிறந்த பனிரெண்டு கதைகளில் ஆகச்சிறந்ததாக இவரது கதை தேர்வாகியிருப்பதோடு இரண்டு கதைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சிறப்பையும் பெறுகிறார். அக்கதைகள் குறித்த பகிர்வுக்கு முன் இத்தொகுப்பைக் குறித்துச் சிலவரிகள்.

1970-லிருந்து கடந்த 41 வருடங்களாக இலக்கிய சிந்தனை வானதிபதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டு வருவதே இந்தப் பனிரெண்டு சிறந்த சிறுகதைகள் தொகுப்பு. பிரதி மாதம் கடைசி சனிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி மண்டபத்தில் இலக்கிய சிந்தனை அமைப்பின் கூட்டம் தவறாமல் நடைபெற்று வருகிறது. கூடுகிற வாசகர்களில் ஒருவர் கடந்த மாதத்தில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். ஆண்டு இறுதியில் புத்தகமாக 12 கதைகளையும் தொகுக்கும் முன், அதிலிருந்து ஒன்றைச் சிறந்ததாக தேர்ந்தெடுத்து அறிவிப்பதுடன், அனைத்துக் கதைகளுக்கும் மதிப்புரையும் வழங்கும் பணி ஒரு தேர்ந்த எழுத்தாளாருக்கோ அல்லது தீவிர இலக்கியத் திறானாய்வாளருக்கோ வழங்கப்படுகிறது. இந்த விவரங்களைத் தொகுப்பின் பதிப்புரை மற்றும் மதிப்புரையிலிருந்தே அறிய முடிந்தது. இம்மாதம் இப்பணியைச் சிறப்புற ஆற்றியிருப்பவர் மு. இராமநாதன் அவர்கள்.

சதுரங்கம் (ஆனந்த் ராகவ்), ‘அமுதசுரபி’ வெளியீடு: தாய்லாந்தின் எல்லையை எதிர்கொண்டபடி இருக்கும் மயாவடி எனும் பர்மிய நாட்டு எல்லையோர ராணுவ அவுட் போஸ்டில் முவங்தான், மின்டோன் ஆகிய இரண்டு முரட்டு அதிகாரிகளுக்கிடையேயான சதுரங்க ஆட்டம். எப்போதாவது அகப்படும் கேரன் படை கொரில்லாக்களுடன் சுபிட்சமில்லாத தம் நாட்டை விட்டுத் தாய்லாந்துக்குப் பிழைப்புத் தேடி தப்பியோடும் பர்மியரையும் சிறைப்படுத்துகிற இவர்கள், கைதிகளை எப்படி வெறித்தனமாகக் கொடுமை செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகச் சதுரங்க விளையாட்டைப் பயன்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

சதுரங்கத்தை இதுகாலமும் புத்திசாலித்தனம், சாதுர்யம் நிறைந்த ஒரு விளையாட்டாகப் பார்த்தும் போற்றியும் வந்த நம்மில் பலரும் இக்கதையை வாசித்த பின்னர் நிச்சயமாய் அதைவேறு பரிமாணத்தில் பார்க்கத் தொடங்குவோம். உலகின் அத்தனை குற்றங்களுக்கும் பின்னான காய்நகர்த்தல்கள் எத்தனை கொடூரமானவை என்பது புரியவரும்.

முன்னே பின்னே பக்கவாட்டில் என்று குதித்து போர்களத்தின் வீச்சை நாலு எட்டில் எட்டி விடும் அந்தக் காயின் ஓட்டத்தைக் கண்டுபிடித்தவன் நிச்சயம் குதிரை சவாரியின் அற்புத அனுபவத்தை உணர்ந்த ஒரு புத்திஜீவி. குதிரை ஓட்டியபடியே ஓடும் மனிதர்களை துரத்திச் சுட்டுக்கொல்லும் முவங்தானுக்குப் பிடித்தமான வசீகரமான விளையாட்டைச் சதுரங்கக் குதிரையைக் கண்டுபிடித்தவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஆண்டாண்டு காலமாகத் தொடரும் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தையும் போராட்டங்களைப் பற்றியதான அலட்சியம் மிகுந்த அவர்தம் எண்ணங்களையும் காட்டுகிறார்: “ராணுவத்திடம் பிடிபடும் சாத்தியக்கூறை மீறி எல்லை தாண்டுபவர்களின் எண்ணிக்கை குறையாமல் தொடர்வதும், உயிரைப் பயணம் வைத்து விடுதலை தேடும் வேட்கையும், முவங்தானால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. நாற்பத்தி எட்டு வருட ராணுவ ஆட்சியின் குரூரமான அடக்கு முறைக்கு அடிபணிந்த, நசுக்கப்பட்ட சமூகம் அவனை அவ்வளவாக எதிர்த்ததில்லை. எப்போதாவது எழும் போராட்டக் குரல்களும் ஊர்வலங்களும், ஆர்ப்பரிப்பும், வெடிக்கும் துப்பாக்கிகளில் சிதறிப்போய் தெருவெங்கும் ரத்தம் சிந்திவிட்டு சொற்ப நாட்களுக்குள் அடங்கிப் போய்விடும்.”

சதுரங்கப் பலகையை உற்று நோக்கியபடி மேலும் தொடர்கிறார்: “ ஒரு ராணுவ வீரனாய் அவன் அந்நிய நாட்டு எதிரிகளை விட சொந்த நாட்டின் ஜனங்களைக் கொன்றது அதிகம். அதுவேறு வகையான சதுரங்க ஆட்டம். ஆயுத பலம் பொருந்திய ராணுவத்தினருக்கும், நிராயுதமாணிகளான ஜனநாயகம் விரும்பும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் நிரந்தர சதுரங்க ஆட்டம். எதிரணியின் தலைமையைச் சிறையிலடைத்து அவர்கள் ஆதரவாளர்களை நகரக் கூட அனுமதிக்காத அடக்குமுறை ஆட்டம்.

ஆட்டத்தில் தோல்வியடையும் அதிகாரி ஆத்திரத்தில் சதுரங்கப் பலகையிருந்த மேஜையையே தூக்கியெறிகிறான். வென்றவனின் ஆர்ப்பரிப்பும் கொக்கரிப்பும் உச்சக்கட்டப் போர் கொடூரத்தை நோக்கி நகர்வதாகக் கதை முடிகிறது.

நம்பிக்கையூட்டும் படியாக இக்கதையின் முடிவு அமையாததற்கு பதில் சொல்லும் விதமாக மு. இராமநாதன் அவ்ர்கள் தன் மதிப்புரையில் எடுத்தாண்டிருக்கும் பி.ஏ. கிருஷ்ணனின் வரிகள் மறுக்க முடியாத உண்மையாக, “தருமம் வெல்வதும், சூது தோற்பதும் மனிதனின் நிறைவேறாத ஆசைகளில் முக்கியமானது... ஆனால் வெட்ட வெட்ட வளரும் தலைகள் சூதினுடையது.. தருமம் வெல்ல இன்னும் பலநாட்கள் ஆகும் என்பது பற்றி ஒரு நல்ல சிறுகதை கோடி காட்டிவிடும்”!

ஒருவேளை உணவு (பாவண்ணன்), ‘வடக்குவாசல்’ வெளியீடு: பெருநகரங்களில் ‘ஹெளஸ் கீப்பிங்’ எனும் சொல்லோடு வேலைக்கு எடுக்கப்படும் அடித்தட்டு பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்: “ஒப்பந்தக் காரர்களிடம் எப்போதும் இரண்டு தூண்டில்கள் உண்டு. கிராமத்தில் வாழ வழியில்லாமல் நகரை நோக்கி வருகிற, உடலுழைப்பாளர்களை நோக்கி ஒரு தூண்டில் எப்போதும் நீண்டிருக்கும். வசதியில்லாத காரணத்தால் நகரத்திலேயே பள்ளியிறுதிப் படிப்போடு கல்வியை முடித்துவிட்டு எதிர்காலம் குறித்த அச்சத்தோடு உலவிக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஈர்க்கும் வகையில் மற்றொரு தூண்டில் நீண்டிருக்கும்.

கதைசொல்லி பேருந்து நிறுத்தத்தில் தான் சந்திக்க நேரும் சாவித்திரி எனும் பெண்மணி, ஜி எம் குவார்டர்ஸில் வேலை செய்வதை அறிய வருகிறார். நாளடைவில் அவள் நட்புடன் தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளின் மூலமாக ஒருவேளை உணவுக்காக இவர்கள் எப்படி சுயமரியாதை மறந்து வாழ வேண்டிய சூழலில் என்பதையும் பணம் என்கிற ஒரேயொரு விஷயத்தில் மேம்பட்டு விட்டதால் மனிதர் மனிதரை எப்படியெல்லாம் கீழ்தரமாக நடத்தவும் பேசவும் துணிகிறார்கள் என்பதையும் சொல்வதாகக் கதை அமைந்துள்ளது. சாவித்திரி சொல்லுகிறாள்: “ஒருவேளை சோத்துக்கூட வழியில்லன்னுதான இந்த வேலைக்கு வந்தம். மானம் ரோசம்லாம் பாத்தா எங்க போயி நிக்கறதுன்னு பல்ல கடிச்சினு போயிடுவேன்.

சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தாண்டி, இன்னும் பல தேவைகளையும் தீர்த்து வைக்கும் அளவுக்கு சக்தியுள்ளதாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உரையாடலில் உணவைப் பற்றிய பேச்சே இடம் பெறுவதில்லை. வீடு, வாசல், வாகனம், சொத்து எனப் பல திசைகளில் உணவைத் தாண்டிய தேவைகளை நோக்கி விரிந்து போகிறது. சிலர் வருமானம் உணவுத் தேவையைத் தீர்த்துக் கொள்ளவே முடியாதபடி பற்றாக்குறையாக இருக்கிறது. அவர்கள் மன ஆழத்தில் உள்ளூர உணவைப் பற்றிய அச்சம் எப்போதும் நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தபடியே இருக்கிறது.” விவரிக்கும் கதை சொல்லிக்கு மேல்வர்க்கம் இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தைப் பார்த்து ஏற்படுகிற நடுக்கம் நமக்கும் பரவுகிறது.

வூடு (பாரதி தம்பி) ‘ஆனந்த விகடன்’ வெளியீடு: மனிதனுக்குப் பிறப்பு என்பது ஒரே விதமாகதான் நடக்கிறது. வறுமை என்பது தொப்புள் கொடியோடு சேர்ந்தா வருகிறது? அப்படித்தான் என்றால் எங்கோ பிழை இருக்கிறது.

பரந்த இவ்வானின் கீழ் தம் வீடென சொல்லிக்கொள்ள ஓரங்குல இடமும் அற்று வீதியோரத்தில் வாழ்க்கை நடத்தும் குடும்பம் ஒன்று. அதன் தலைவன் திறக்கப்படாத கட்டணக் கழிப்பறையில் தன் குடும்பத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு குடியேற்றுகிறான். அங்கேயே பால் காய்ச்சுகிறார்கள். வீட்டின் தனிமையை, தமது என்பதன் உரிமையை ரசித்து ருசிக்கிற குடும்பம் மீண்டும் வீதிக்கே வருவதே கதை. சிறுவன் ஜஸ்டிஸை முன் வைத்துக் கதை நகர்கிறது.

குறையொன்றுமில்லை (ஜோதிநகர் சிவாஜி கிருஷ்ணா) , கல்கி வெளியீடு: எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாது அரசு புறக்கணிக்கும் கிராமங்களில் நூறுசதவிகிதம் வாக்குப் பதிவாவதும் அவர்களை மதிக்க அரசு தவறுவதும் இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. அப்படியான ஒரு மலைக் கிராமத்துக்கு தேர்தல் சமயத்தில் வந்து சேரும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு எந்த வசதிக் குறைவும் வராது பார்த்துக் கொள்கின்றனர் அப்பாவி மக்கள். அந்தத் தேர்தலில் ஒரேயொரு வாக்கு மட்டும் குறைந்து போனதின் காரணம் கலங்க வைப்பதாக.

நான்கு கதைகளைப் பற்றி மட்டும் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். இவற்றுடன் ஆனந்த் ராகவ் எழுதிய ‘தரை தொடும் விமானங்கள்’ உட்பட செ. செண்பக கண்ணு, மாதங்கி, ஜெய் விஜய், சீதா ரவி, பாமதி மைந்தன், இராம. முத்து கணேசன், மலர் மன்னன் ஆகியோர் எழுதியதுமாக, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒன்றெனும் கணக்கில் பனிரெண்டு கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. பனிரெண்டு எழுத்தாளர்களுக்கும், கதைகளை வெளியிட்டப் பத்திரிகைகளுக்கும் வாழ்த்துகள். இலக்கிய சிந்தனை அமைப்பின் சேவைக்கும் வானதிப் பதிப்பகத்துக்கும் பாராட்டுக்கள். இந்த வருடம், 2011-ன் சிறந்த கதைகளின் தொகுப்புக்காகக் காத்திருப்போம்.
***

சதுரங்கம் - இலக்கியச் சிந்தனை 2010ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்


விலை ரூ:60. பக்கங்கள்: 154.

வெளியீடு: வானதி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடம்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006].
***

17 டிசம்பர் 2011, கீற்று இணைய இதழில், நன்றி கீற்று!

34 கருத்துகள்:

  1. மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரத் ஆனந்த் ராகவ். அவரது பல சிறுகதைகளையும் வெளிநாட்டில் பணி செய்து அவர் பெற்ற அனுபவங்களை எழுதியதையும் வாசித்திருக்கிறேன். அவரது சிறுகதை பரிசு பெற்றதில் வியப்பில்லை. இந்தப் புத்தகத்தை பு.கண்காட்சியில் வாங்கி எல்லாத்தையும் படிச்சுடறேன். நல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. எழுத்தாளர்களின் கனவு -இலக்கிய சிந்தனையால் கிடைக்க பெறும் அங்கீகாரம் என்று சொல்லலாம். நல்ல விமர்சனம். எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். எனது சிறுகதை ஒன்றும் இலக்கிய சிந்தனை வெளியீட்டில் வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  3. //தமிழ் உதயம் :எனது சிறுகதை ஒன்றும் இலக்கிய சிந்தனை வெளியீட்டில் வந்துள்ளது.//

    அடேடே...பாராட்டுகள் ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  4. said...

    //தமிழ் உதயம் :எனது சிறுகதை ஒன்றும் இலக்கிய சிந்தனை வெளியீட்டில் வந்துள்ளது.//

    அடேடே...பாராட்டுகள் ரமேஷ்.////

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  5. இலக்கியச்சிந்தனை அளிக்கும் இந்த நூல்களைப்படித்தாலே போதும் கதை எழுதவேண்டிய விதிகள் புரிந்துவிடும் ! தரமான கதைகள் அத்தனையும்..சதுரங்கத்தை உங்க எழுத்துமேடையில் கொண்டுவந்து சிறப்பித்தமைக்கு நன்றி ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. வாசிக்கக் கிடைக்குமாவென்று தேடுகிறேன்.நன்றி அக்கா !

    தமிழ் உதயம் அவர்களுக்கும் பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு
  7. அருமையான பகிர்வு, ராமலக்ஷ்மி!

    தமிழ் உதயம் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. கல்லூரி காலத்திலேயே இவர்களின் வருடாந்திர சிறுகதை தொகுப்பை வாசிப்பேன். இன்னும் தொடர்கிறார்கள் என இந்த பதிவு மூலம் அறிந்தேன்.சிறுகதைகள் குறித்து சொன்னமைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  9. கணேஷ் said...
    //மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரத் ஆனந்த் ராகவ். அவரது பல சிறுகதைகளையும் வெளிநாட்டில் பணி செய்து அவர் பெற்ற அனுபவங்களை எழுதியதையும் வாசித்திருக்கிறேன். அவரது சிறுகதை பரிசு பெற்றதில் வியப்பில்லை. இந்தப் புத்தகத்தை பு.கண்காட்சியில் வாங்கி எல்லாத்தையும் படிச்சுடறேன். நல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றி...//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம். said...
    //நல்ல பகிர்வு.//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. தமிழ் உதயம் said...
    //எழுத்தாளர்களின் கனவு -இலக்கிய சிந்தனையால் கிடைக்க பெறும் அங்கீகாரம் என்று சொல்லலாம்.//

    ஆம், இப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    //நல்ல விமர்சனம். எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். எனது சிறுகதை ஒன்றும் இலக்கிய சிந்தனை வெளியீட்டில் வந்துள்ளது.//

    மகிழ்ச்சியும் பாராட்டுகளும். அக்கதையை தங்கள் பக்கத்தில் ஏற்கனவே பகிர்ந்திருந்தால் அதன் சுட்டியை இங்கு பகிர்ந்திடுங்களேன். இன்னும் வலையேற்றவில்லையெனில் விரைவில் பகிர்ந்திடக் காத்திருக்கிறோம். நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  12. கோவை2தில்லி said...
    //நல்லதொரு பகிர்வு.//

    மிக்க நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  13. ஷைலஜா said...
    //இலக்கியச்சிந்தனை அளிக்கும் இந்த நூல்களைப்படித்தாலே போதும் கதை எழுதவேண்டிய விதிகள் புரிந்துவிடும் ! தரமான கதைகள் அத்தனையும்..சதுரங்கத்தை உங்க எழுத்துமேடையில் கொண்டுவந்து சிறப்பித்தமைக்கு நன்றி ராமலஷ்மி.//

    உண்மைதான். மிக்க நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  14. ஹேமா said...
    //வாசிக்கக் கிடைக்குமாவென்று தேடுகிறேன்.நன்றி அக்கா !//

    நன்றி ஹேமா, முயன்றிடுங்கள்.

    //தமிழ் உதயம் அவர்களுக்கும் பாராட்டுகள் !//

    கதையையும் வாசித்து இன்னொரு முறை பாராட்டி விடுவோம்!

    பதிலளிநீக்கு
  15. S.Menaga said...
    //நல்ல பகிர்வு!!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  16. கவிநயா said...
    //அருமையான பகிர்வு, ராமலக்ஷ்மி!

    தமிழ் உதயம் அவர்களுக்கும் வாழ்த்துகள்!//

    நன்றி கவிநயா. வாழ்த்துகளை அவருக்கு சேர்ப்பித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. சுசி said...
    //நல்ல விமர்சனம் அக்கா :)//

    மிக்க நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  18. அமைதிச்சாரல் said...
    //நல்லதொரு விமர்சனம்..//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  19. மோகன் குமார் said...
    //கல்லூரி காலத்திலேயே இவர்களின் வருடாந்திர சிறுகதை தொகுப்பை வாசிப்பேன். இன்னும் தொடர்கிறார்கள் என இந்த பதிவு மூலம் அறிந்தேன்.சிறுகதைகள் குறித்து சொன்னமைக்கும் நன்றி//

    இதுவே நான் வாசிக்கும் முதல் தொகுப்பு. நண்பர்கள் பரிந்துரையில் அறிய வந்தேன். நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  20. நல்ல விமர்சனம். பகிர்விற்கு நன்றி, ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  21. @ நித்திலம்-சிப்பிக்குள் முத்து,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவளா.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பகிர்வு
    அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும் என்கிற
    ஆவலைத் தூண்டிப் போகிறது
    பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  23. Ramani said...
    //அருமையான பகிர்வு
    அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும் என்கிற
    ஆவலைத் தூண்டிப் போகிறது //

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. 30 ஆண்டுகளுக்கு முன் நான் சென்றிருந்த இலக்கியச்சிந்தனைக் கூட்டம் ,அதில்,திருமதி சிவசங்கரி அன்றைய கூட்டத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றியதும் மலரும் நினைவுகளாக விரிந்தது.

    பதிலளிநீக்கு
  25. @ goma,

    நல்ல அனுபவமாக இருந்திருக்கும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin