புதன், 17 டிசம்பர், 2008

விடையற்ற வியப்புக் குறிகள்!!!






'ன் வயிற்றில்
உதித்த நான்-
உத்தமனாய் வாழ்ந்து காட்டி-
உன் பெயரை
ஊர் உலகம்-
உயர்வாகப் போற்றிடச்
செய்வேனம்மா !'
**

மரித்திட்ட
தன் தாய்க்கு-
தந்திட்ட வாக்குதனை-
வேதமெனக் கொண்டு
வேலை தேடி-
வீதி வழி நடந்தானே!
**

நெஞ்செல்லாம்
இலட்சியக் கனவோடு-
அஞ்சாது செய்திட்ட
சத்தியத்தின் நினைவோடு-
சென்றவனின்
கண்ணிலே பட்டவன்தான்-
பிக்பாக்கெட் தொழிலினிலே
பிரபலக்கேடி!**

விழிமுன்னே மற்றவரின்
பர்சு ஒன்று-
பரிதாபமாய்
பறி போவதைப்
பார்த்திட்ட அவனுமே
'எவன் சொத்தோ போகுதடா
எனக்கென்ன கவலையடா?'
என்று-
இன்று இப்
புனிதப்
பூமியிலே-
போற்றிக் காக்கப்படும்
பொன்னான கொள்கை
புரியாதவனாய்-
பாய்ந்தோடிக்
கேடியினைப் பிடித்தானே!
**

கேடியெனும்
பட்டமெல்லாம் சும்மாவா ?
கில்லாடியான அவன்-
கிட்டத்தில் ஓடிவந்த
காவலரின்
கரத்தினையே-
தேடிப் பற்றி
சம்திங் தந்தானே!
**

நீதி
காக்க வேண்டிய
காவலரோ-
கரன்சி செய்த வேலையினால்-
கமுக்கமாகச் சிரித்தபடி-
கயவனவன் முதுகினிலே-
'செல்'லுமாறு
செல்லமாகத்
தட்டி விட்டு-
அப்பாவியான இவன்
கழுத்தினிலே கை போட்டு-
'அட
நடடா, இது புது கேசு '
என்றாரே!
**** **** ****

லர வேண்டிய பருவத்திலே
மடிய நேரும்
மொட்டுக்கள்!!!**

கலர் கலராய்
கண்ட கனவுகள்
கருகிப் போகும்
சோகங்கள்!!!
**

பழி ஓரிடம்
பாவம் ஓரிடம்-
பரிதாபப் பட
யாருமின்றி
பரிதவிக்கும்
பலியாடுகள்!!!
**

'அவரவர் விதி'யென்றும்
'அவன் தலைச் சுழி'யென்றும்-
ஆராய அவகாசமின்றி
அவசர கதியில்
அள்ளித் தெளிக்கப் படும்
ஆழமற்ற
அனுதாபங்கள்!!!
**

ஆங்கோர் பக்கம்-
சி.பி.ஐ
ஆதாரங்களுடன்
கைதாகும்
கனவான்கள்-
சில மணியில்-
சிரித்தபடி
சிறை விட்டு
விடுதலையாகி
வெளியேறும்
விநோதங்கள்!!!
**

அவருக்காக
குரல் கொடுத்துக்
கவலைப் படக்
கணக்கற்றக்
கூட்டங்கள்!!!
**

இப்படி
ஏராளமாய்
இருக்கின்றன-
விடையற்ற
வியப்புக் குறிகள்!!!
**** **** ****



[படம்: இணையத்திலிருந்து]




'இறைவனிடம் ஒரு கேள்வி' என்ற தலைப்பில் 1984-ல் திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரிலும்; கடைசி சில பத்திகளின் சேர்க்கையுடன் June 23, 2005 திண்ணை இணைய இதழிலும்; 4/11/2008 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும் 6 மே 2009 இளமை விகடன் இணைய தளத்திலும் வெளியாகிய கவிதை.



வியாழன், 11 டிசம்பர், 2008

நிழல்கள்-டிசம்பர் PiT போட்டிக்கு

'பங்களிப்பே சிறப்பு’ என வந்து விட்டேன் நானும் நிழல்களோடு.
முதல் நான்கு படங்கள் மட்டும் நிழல்களுக்காகவே முயற்சித்தவை.
மற்றவை முன்னரே எடுத்தவை; என் ஆசைக்கு வைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு.
'முதலிரண்டில் ஒன்றை'ப் போட்டிக்குத் தர எண்ணியுள்ளேன்.



வரிவரியாய் கவிபாடும் நிழல்கள் கீழே!
தெரிகிறது நிஜத்தின் பிம்பம் மேலே!









வளைந்து குழைந்த திரைச்சீலை மேலே
நெளிந்தே விழுகின்றன நேர்க்கம்பியின் நிழல்கள்



பார்த்துப் பழகு
நேர்ப் பாதையிலே செல்லுபவனாய்
நீ இருந்தாலும்
பார்ப்பவருக்கு இந்நிழல் போலவே
கேள்விக்குறியாவாய்- சென்று நீ
சேர்கின்ற கூட்டத்தார்
வசதிக்கும் வாய்ப்புக்கும்
வளைந்து நெளிந்த
குறுக்குப் பாதையைத்
தேர்ந்தெடுப்பவரானால்!







குருவியின் குடை







வெள்ளிக் கம்பிகளாய் அருவி வீழ்கின்ற நீரிலே
விரிந்து மலர்ந்திருக்கிறது உச்சி மரத்து நிழலே!







அடிப்பது அனல் வெயிலானாலும் இந்தக்
கண்ணனின் வெண்ணெய் உருகாது
பிடிக்கின்ற பந்து போலத் தெரிந்தாலும்
பள்ளம் நோக்கிப் பாயாது!








குன்றிலே கோபுரம் ஒளி வெள்ளத்தில்!
குளிர்வாய் பாறை அடிவாரத்தில்!







மறுகோடியில் கொளுத்தும் கோடையில் கடல்
மாறாக இப்பக்கம் மரங்களின் அருளாலே குளுகுளுவென்று நிழல்
ஊடுருவி நலம் விசாரிக்கிறது ஆங்காங்கே வெயில்








நிழல் நிரம்பிய சோலையும்
வளைந்து திரும்பும் சாலையும்!








உள்ளம் கொள்ளை போகுதே



கடலும் வானும் அலையும் மணலும்
மரமும் நிழலும் புல்லும் செடியும்..
உள்ளம் துள்ளுது நெஞ்சை அள்ளுது !





‘பார்த்துப் பழகு’
கவிதை நான் எடுத்த படத்துடனேயே ‘நேர்க் கம்பியின் நிழல்கள்’ ஆக ஏப்ரல் 2009 'மனிதம்' மின்னிதழில்:

வியாழன், 4 டிசம்பர், 2008

முடிவில் ஒரு விடிவு

அன்றாட வாழ்வில் இன்றைக்கும் ஏதாவது ஓரிடத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவலங்களைக் கண்டு அயர்ந்து போகும் நாம் எங்கேனும் நல்ல மாற்றங்கள் நிகழுகையில் போற்றுதல் முறைதானே!

அப்படிப் போற்றி 2003-ல் திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. எதைப் போற்றி...?

அப்போதைய சிவகாசி மாவட்ட ஆட்சியாளர் அங்கு குழந்தைத் தொழிலாள முறை முற்றிலுமாகக் களையப் பட்டதாக மகிழ்வுடன் வெளியிட்டிருந்த பேட்டியை Times of India-வில் படித்து அறிந்த போது போற்றிப் பாடியது.







முடிவும்







விடிவும்





































சிவகாசி சீமையிலிருந்து
சிறப்பான செய்தி ஒன்று!
சித்திரங்கள் தீட்ட வேண்டிய
சின்னஞ்சிறு கைகள்
சிதறி வெடிக்கும் மருந்துகளைச்
செய்து வந்த அவலங்கள்
முடிவுக்கு வந்ததென்று
முத்தாய்ப்பாய் செய்தியொன்று-அம்
முத்துக்களின் முன்னேற்றத்துக்கு
முகவுரையாய் வந்ததின்று!

மத்தாப்பாய் மலர வேண்டிய
மழலை மொட்டுக்கள்
மத்தாப்புத் தயாரிப்பில்
மகிழ்ச்சிகளைத் தொலைத்த
மாசு இன்று பல
நல்ல மனங்களால்
தூசு தட்டப் பட்டு
துலங்குவது குதூகலமே.

கற்றிருந்தால்
கல்பனா சாவ்லா போல்
விண்வெளியை ஆராயும்
வித்தகர்களாய்
விளைந்திருக்கக் கூடிய
வித்துகள்!

கல்வி என்பதே
கானல் கனவாகிப் போனதால்
வான்வெளியில்
வாண வேடிக்கைக்கு வெடிகள்
வார்ப்பதிலே-
வாய்ப்புக்களையும்
வாழ்வின்
வசந்தங்களையும்-தாரை
வார்த்து விட்டக்
குருத்துகள்!

இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!

பக்குவம் இல்லாத
பழைய தலைமுறை
பணத்துக்காகப்
பச்சிளம் பாலகரைப்
பட்டாசுச் சாலையிலே
பயன் படுத்தியது
பாவம் என்று-
படித்துத் தேர்ந்த
புதிய தலைமுறை
புரிந்து கொண்டது
புண்ணியமே!

எழுபது ஆண்டுகளாய்
இத் தொழிலிலே
ஈட்டிய பணம் யாவும்
எத்தனை
எளிய பிஞ்சுகளின்
எதிர்காலத்தை
ஏய்த்துப் பிரட்டியது என்பதை
எண்ணி உணர்ந்த-இன்றைய
எஜமானர் வர்க்கம்
ஏற்றமிகு சமுதாயம் கண்டிட
ஏக மனதாய் பாடுபடுவது
போற்றுதலுக்குரியதே!

அரசு அரட்டியதால் மட்டுமின்றி
மனசும் அரற்றியதால் வந்தது
இந்த மாற்றமே!
உலகம் தூற்றியதால் மட்டுமின்றி
உறங்கிக் கிடந்த மனசாட்சியும்
விழித்துக் கொண்டதாலும்
விளைந்தது
இந்த ஏற்றமே!

ஆட்சியாளரே தருகிறார்
சாட்சி இன்று:
தன்னிறைவு நோக்கித்
தடம் புரளாமல்
பயணிக்கிறது சிவகாசி-
பருவத்தே பயின்றிடப்
பாடசாலைகளும்
கருத்துடன் கற்றிடக்
கல்லூரிகளும்
தொழிலிலே தேர்ந்திடப்
பயிற்சி கூடங்களுமாய்ப்
பல்கிப் பெருகி...
பெருமை சேர்கிறது.

வேலை வாய்ப்புக்கும்
குறைவேது?
விதவிதமாய்
வெடிவெடித்து
வேடிக்கையாய்
கேளிக்கைகளைக்
கொண்டாடிட-
உலகமே இருக்கிறது
இவர் ஒருவரையே
எதிர் பார்த்து...
வாழ்வும் வளமாகிறது.

இப்போது
உழைப்புக்கு ஊதியங்களும்
லாபமாய் லகரங்களும்
உறுத்தல்கள் ஏதுமின்றி
உண்மையின் பாதையிலே!
வெறுப்புக்கு இடம் கொடாமல்
வெற்றியினை நோக்கி
வேக நடை போடுவது-இரண்டு
வர்க்கங்களுமே!

*** *** *** *** ***




ஆனால் இந்நிலை இன்றும் அங்கு தொடர்கிறதா..?

அன்று ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்று எனைத் தூண்டிய அதே TOI, தீபாவளி அன்று (அக்டோபர் 27,2008 நாளிதழில்) இந்த வருடம் பட்டாசு அதிகமாக விற்பனை ஆகாததற்கான காரணங்களைப் பட்டியல் இட்டிருந்தது. அதில் ஒன்றாக.. இன்னும் குழந்தைகள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுத்தப் படுவதாக வந்த தகவல்களால் மக்களில் சிலர் இந்த முறை பட்டாசைப் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.

அன்று போற்றி எழுதியது பொய்யாகிப் போகாது மறுபடி மெய்பட வேண்டும். அங்கு மட்டுமின்றி எங்கும் குழந்தைகளை வேலை வாங்கும் அவலம் முற்றிலுமாய் முற்றுப் பெற வேண்டும்.
குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமின்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது. கடந்த மாதம் பெங்களூரில் மட்டும் இரண்டு சம்பவங்கள் காவலர் மற்றும் மீடியாவின் கவனத்துக்கு வந்து குழந்தைகள் மீட்கப் பட்டனர்.

இதற்கெல்லாம் முடிவாய் ஒரு விடிவு விரைவில் வர வேண்டும்.



படங்கள்: இணையத்திலிருந்து

August 28, 2003 திண்ணை இணைய இதழில் "சிவகாசி சித்திரங்கள்" என்ற தலைப்பில் வெளிவந்தது. 2 ஜூன் 2009 யூத் விகடன் இணைய தளத்திலும்:


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin