வினோத்குமார் சுக்லா கவிதைகள்
ஞானபீட விருதைப் பெறுவிருக்கும், வினோத்குமார் சுக்லா:
2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் பெயர் பெற்றவர். அன்றாட வாழ்வின் சிக்கல்களை துணிச்சலான குரலில் இணக்கமாகவும் நீடித்தும் பதிவு செய்து தனித்துவமாக விளங்கியவர். நேற்று, 22 மார்ச் 2025 அன்று, இவருக்கு 59_ஆவது ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி இலக்கியத்தில் இந்த கௌரவத்தை பெறும் 12_ஆவது எழுத்தாளர் இவர்.
பல இலக்கிய விருதுகளை பெற்ற இவர் ‘தீவார் மே ஏக் கிடுகீ ரஹதி தி’ (சுவரில் இருந்த ஒரு சன்னல்) நாவலுக்காக, 1999_ஆண்டின் சிறந்த இந்தி படைப்பிற்கான சாகித்ய அகாடமி விருதை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் எனும் இடத்தில் பிறந்தவர். விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்று வேளாண் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவரது எழுத்துகளில் பெரும்பாலும் கிராமப்புற வாழ்க்கை, சாதாரண மனிதர்களின் அனுபவங்கள், சமூகத்தைக் குறித்த அவதானிப்புகள் ஆகியன கருப் பொருளாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். எளிய, நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் இவரது எழுத்துகள் உண்மையாகப் பிரதிபலிப்பதாகக் கொண்டாடப்பட்டு வந்தன. இதையே தற்போது பாரதீய ஞானபீட அமைப்பு செய்தியாளர்களுக்கான அறிவிப்பிலும் குறிப்பிட்டுள்ளது: ‘இவரது எழுத்துகள் அவற்றின் எளிமை, உணர்வுப்பூர்வம், தனித்துவம் ஆகியவற்றுக்காகப் பெயர் பெற்றவை. நவீன இந்தி இலக்கியத்தில் சோதனை ஆய்வுகளை மேற்கொண்டு, புகழ் பெற்றவை.”
**
1.
ஒருவர் தனது சொந்த வீட்டினை தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்
ஒருவர் தனது சொந்த வீட்டினை
தொலைவிலிருந்து பார்க்க வேண்டும்.
ஒருவர் தனது வீட்டினைப் பார்ப்பதற்கு
ஏழு கடல்களையும் தாண்ட வேண்டும்,
நிராதரவான நிலையிலும்
என்றேனும் திரும்புவோம் எனும் முழு நம்பிக்கையுடன்.
பயணத்தின் போது, ஒருவர் திரும்பிப் பார்க்க வேண்டும்,
தனது சொந்த நாட்டினை மற்றொரு நாட்டிலிருந்து.
தனது பூமியை, விண்வெளியிலிருந்து.
அப்போது தன் வீட்டில் குழந்தைகள்
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனும் சிந்தனை,
பூமியில் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்
எனும் சிந்தனையாக உருவாகும்.
வீட்டிற்கான உணவு, பானங்கள் குறித்த அக்கறை
பூமிக்கான உணவு, பானங்கள் குறித்த அக்கறையாக உருவாகும்.
எந்தவொருவர் பூமியில் பசித்திருந்தாலும்
தன் வீட்டில் ஒருவர் பசித்திருப்பதற்குச் சமமாகத் தெரியும்.
பூமிக்குத் திரும்புவது என்பது
தன் சொந்த வீட்டுக்குத் திரும்புவதற்கு ஒப்பாகத் தெரியும்.
வீட்டின் சூழல் அங்கே அத்தனை குழப்பமாக உள்ளது
வீட்டிலிருந்து சில அடிகள் நடந்து சென்ற பிறகு,
வீட்டை நோக்கித் திரும்பி நடக்கிறேன்
அது பூமியைப் போல் இருப்பதாக.
*
மூலம்: One Should See One's Own Home From Far Off.
**
2. ஒரு குழந்தை இருப்பதை அது உறுதிப்படுத்துகிறது
ஒரு குழந்தை இருப்பதை அது உறுதிப்படுத்துகிறது.
சில மலர்கள் மலர்ந்து கொண்டிருப்பதை அது உறுதிப்படுத்துகிறது
மகிழ்ச்சி இருப்பதை அது உறுதிப்படுத்துகிறது
சாடியில் இருக்கும் தண்ணீர் குடிக்க உகந்தது என்பதையும்
காற்றிலிருந்து இழுத்துக் கொள்ளலாம் மூச்சினை என்பதையும்
அது உறுதிப்படுத்துகிறது
மீதமிருக்கும் உலகில் நான் இருக்கிறேன்
வரவிருக்கும் யுத்தத்திலிருந்து தப்பிப் பிழைத்தவனாக.
நான் இறக்க விரும்புகிறேன், நான் யாரோ அவராக
அதனால் இறப்பதற்கு முந்தைய கடைசி தருணத்தில்
என்றும் உயிரோடிருக்க நான் விரும்பிடுவேன்
ஏனெனில் சிதறிக் கிடக்கின்றன சில மலர்கள்
மற்றும் உலகம் உள்ளது.
*
மூலம்: It Affirms That There Is A Child
**
3. சந்தையில் ஒரு தெரு
சந்தையில் ஒரு தெரு,
தீவிரமான ஒரு வாடிக்கையாளர்,
சற்று கிழிந்த
சேறுபடிந்த பையினை
ஒவ்வொரு கையிலும் பிடித்தபடி,
ஒன்று காலியாக, ஒன்று நிரம்பியதாக.
அதனுள், உருளைக் கிழங்குகள்,
பச்சைக் காய்கறிகள், ஒரு சிறிய
கரம் மசாலா பொட்டலம், மற்றும் மிளகாய்கள்,
சிகப்பு அல்லது பச்சை.
நான் எவ்வளவு ஆசைப்படுகிறேன்
ஒரு பத்து ரூபாய் தாளாகி
அந்தப் பைக்குள்
அடைக்கலம் தேடிட.
ஆனால் நான் தடுக்கப்பட்டேன்
என்னுள்ளிருந்த எண்ணங்களால்.
*
மூலம்: A Street In The Bazaar
**
4. ஒரு சிறிய அறை
ஒரு சிறிய அறை
சித்திரங்களைத் தொங்கவிட
சுவர்களில் ஆணிகளுடன்.
ஆனால் ஒரு சித்திரம் கூட
காணப்படவில்லை.
எங்கெங்கு கைகள்
எளிதாக எட்டுமோ,
தொங்குகின்றன துணிகள்
நேர்த்தியாக ஆணிகளில்,
மேலும் சில முறைகள்
மீண்டும் அணிவதற்கு.
*
[மூலம்: A Small Room]
**
5. ஒரு சாவிக் கொத்தை தூக்கி எறிகிறேன்
ஒரு சாவிக் கொத்தை
காற்றுவெளியில் தூக்கி எறிகிறேன்,
ஆகாயம் திறந்து கொள்கிறது.
ஒருவேளை எனது வலுவான பெட்டியின்
சாவி பொருந்தியிருக்கக் கூடும்.
உயரத்தில்
தெளிந்த வானத்தில்
ஐந்து போர் விமானங்கள்
தோன்றி மறைவதை நான் பார்க்கிறேன்,
எனது வலுவான பெட்டியின் உள்ளிருக்கும்
ஒன்றிரெண்டு கரப்பான் பூச்சிகள்
வெளியே வர மறுக்கின்றன
பெட்டி தலைகீழாகப் பிடிக்கப்பட்டும் கூட.
*
[மூலம்: I Toss A Bunch Of Keys]
**
6. ஒரு மனிதர் விரக்தியில் அமர்ந்திருந்தார்
ஒரு மனிதர் விரக்தியில் அமர்ந்திருந்தார்
எனக்கு அந்த மனிதரைத் தெரியாது
ஆனால் எனக்கு விரக்தியைத் தெரியும்
ஆகையால் நான் அவரிடம் சென்று
எனது கரத்தினை நீட்டினேன்,
என் கரத்தினைப் பற்றி, அவர் எழுந்தார்
அவருக்கு என்னைத் தெரியாது
ஆனால் நான் நீட்டிய கரத்தினை அவர் அறிவார்
நாங்கள் இணைந்து நடந்தோம்
நாங்கள் ஒருவரையொருவர் அறிந்தவரில்லை.
ஆனால் இணைந்து நடக்க நாங்கள் அறிந்திருந்தோம்.
*
[மூலம்: A man had sat down in desperation]
**
Source: https://www.poemhunter.com/
ஆங்கிலம் வழித் தமிழில்: ராமலக்ஷ்மி
***
நன்றி சொல்வனம்!
[22 மார்ச், ஞான பீட விருது அறிவிப்பானதும் 23 மார்ச் நேற்று, ஞாயிறு வெளியான இதழுக்காக குறைந்த அவகாசத்தில் தமிழாக்கம் செய்து கடைசி நொடியில் அனுப்பி வைத்த ஆசிரியர் குறிப்பு மற்றும் கவிதைகள். ஒத்துழைப்பு நல்கிய சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு நன்றி!]
***
அறிமுகம் அறிந்து கொண்டேன். கவிதைகளை ரசித்தேன்.
பதிலளிநீக்குஞானபீடப் பரிசு பெறவிருக்கும் கவிஞர் வினோத்குமார் சுக்லாவை இதுவரை அறியாதிருந்தேன். இப்போது கவிதைகள் மூலம் கவிஞரை அறிந்துகொண்டேன். எவ்வளவு அழகான ஆழமான கவிதைகள். இங்கு நீங்கள் மொழிபெயர்த்திருக்கும் எல்லாக் கவிதைகளிலும் ஒரு சாமான்யனின் வாழ்க்கையும் அதன் சவால்களும் உட்பொருளாய் இருப்பதை உணர முடிகிறது. சொல்வனத்தில் வெளியானமைக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஞானபீடப்பரிசு பெறவிருக்கும் கவிஞர் சுக்லா அவர்களீன் கவிதைகள் அருமை.
பதிலளிநீக்குசொல்வனத்தில் வெளியானதற்கு மகிழ்ச்சி.
வாழ்த்துகள்
பதிலளிநீக்குகவிதைகள் அருமை. பெயர் எங்கோ பார்த்தது போன்ற நினைவு. கவிஞரைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. சொல்வனத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகீதா