வெள்ளி, 3 மே, 2019

அனந்தபுரம் ஏரிக் கோயில் - சைவ முதலையும்.. கடு சர்க்கரை யோகமும்.. - கேரளம் (5)

#1

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் அனந்தபுரா கிராமத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கிறது “அனந்தபுரம் ஏரிக் கோவில்”.  கேரள மாநிலத்தில் ஏரிக்குள் அமைந்திருப்பது இந்தக் கோவில் மட்டுமேயாகும். கும்பாலா எனும் இடத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது. நாங்கள் பேகலில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

நண்பகல் ஒரு மணி ஆகிவிட்டபடியால் கோவிலின் மூலஸ்தானம் மூடி விட்டிருந்தார்கள். அமைதியான சூழலில் அமைந்த கோவில். ஆலயம் எழும்பி நிற்கும் ஏரியானது சுமார் 302 சதுர அடி அளவிலானது.

#2

#3
 #4

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் குடிகொண்டுள்ள அனந்த பத்மநாபசுவாமியின் மூலம் இதுவே என்கிறார்கள்.  புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இது என நம்பப் படுகிறது. இதை அங்கிருந்த பெரியவர் ஒருவரும் கூறினார்.


#5
சுவாரஸ்யமான மற்றுமோர் புராணத் தகவலாக இருக்கிறது, கோவிலின் வலப்பக்க மூலையில் இருக்கும் இந்தக் குகை வழியாக ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி திருவனந்தபுரம் வரை சென்று திரும்புவார் என்பது.

கோவிலின் தல வரலாறும் சுவாரஸ்யமானது.

#6
கோபுரம்

#7
இடப்பக்கப் பார்வையில்..

#8
வலப்பக்கப் பார்வையில்..

திவாகர வில்வ மங்கலா எனும் முனிவர் அனந்தபுரா கிராமத்தில் நாராயண பகவானை வழிபட்டு வந்திருக்கிறார். பகவான் சிறுவன் வடிவில் அவர் முன் தோன்றியிருக்கிறார். சிறுவனின் அழகினாலும் முகத்தில் இருந்த தெய்வீகக் களையினாலும் ஈர்க்கப்பட்ட முனிவர் அவனை யார் என வினவ, அவனோ தான் தாய் தந்தை மற்றும் யாருமற்ற அனாதை எனக் கூறியிருக்கிறான். பரிதாபப்பட்ட முனிவர் தன்னோடு தங்கிக் கொள்ளச் சொல்ல சிறுவன் அதற்கொரு நிபந்தனை விதித்திருக்கிறான். எப்போதேனும் தான் மன வருத்தம் அடைய நேருமாயின் உடனே அங்கிருந்து சென்று விடுவதாய்ச் சொல்ல முனிவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

சில காலம் முனிவருக்குச் செவ்வனே தொண்டாற்றி வந்த சிறுவன், நாளடைவில் குறும்புகளை ஆரம்பித்திருக்கிறான். ஓர் நாள் அவனது குறும்பு எல்லை மீறிச் சென்றதால் முனிவர் கோபித்துக் கொள்ள, தன்னை அவமானப்படுத்தி விட்டதால்  விடை பெறுவதாகவும், இனி தன்னைப் பார்க்க வேண்டுமென விரும்பினால் சர்ப்பங்களின் கடவுளான அனந்தனின் காட்டில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் சொல்லி விட்டுச் சடாரென மறைந்து போக, அப்போதுதான் வந்தது வேறுயாருமல்ல, அந்த பரந்தாமனே என உணர்ந்திருக்கிறார் முனிவர்.

வருந்திய முனிவர் கண்ணில் பட்டிருக்கிறது சிறுவன் மறைந்த இடத்திலிருந்த குகை. அவனைத் தேடிக் குகை வழியே சென்றிருக்கிறார். ஒரு கடற்கரையை ஒட்டி வெளியேறியவர் தொடர்ந்து தெற்கே சென்று கடலோரத்தில் இருந்த ஒரு கானகத்தை அடைந்திருக்கிறார். அங்கே அவர் முன் தோன்றிய சிறுவன் கணத்தில் ஒரு இலுப்பை மரமாக மாறியிருக்கிறான். அடுத்த நொடி இலுப்பை மரம் சரிந்து ஆயிரம் தலை சர்ப்பத்தின் மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு பகவான் வடிவத்தை அடைந்திருக்கிறது. இந்த இடமே ஆலயமாக மாறியிருக்கிறது என்கிறது புராணம்.

#9


முதலைக் காவலன்


ற்றுமொரு ஆச்சரியமான கதை இருக்கிறது இந்தக் கோவிலுக்கு. பல்லாண்டு காலமாக இந்த ஏரியில் ஒரேயொரு முதலை வாழ்ந்து வருகிறது. ஒரு முதலை இறந்தால், வியக்கத்தகு வகையில்  இன்னொரு முதலை அதன் இடத்தை எடுத்துக் கொண்டு விடுகிறதாம். வழிவழியாக வரும் இந்த முதலைகள் ஒவ்வொன்றுமே பாபியா (Babia or Babiya)  என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அது இக்கோவிலைக் காவல் காப்பதாக மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

மற்றுமொரு ஆச்சரியம், இது மனிதர்களை இதுவரையிலும் காயப்படுத்தியது கூட இல்லை. சுத்த சைவம். மீன்களைக் கூட உண்பதில்லை. குளத்தில் மக்கள் தைரியமாகக் குளிக்கிறார்களாம். கோவில் பூஜை முடிந்ததும் முதல் பிரசாதம் இதற்கே என்கிறார்கள். பக்தர்கள் கரையிலிருந்து அளிக்கும் அரிசி, வெல்லப்பாகு சேர்த்து செய்த கூழே இதன் உணவாக இருக்கிறது.

இந்த முதலை இங்கே தோன்றியதற்கு மேலே சொல்லியிருப்பதைத் தவிர்த்து ஒரு மாற்றுத் தல புராணக் கதையும் உள்ளது.

வில்வமங்கல் முனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்த போது கிருஷ்ண பகவான் சிறுவனாகத் தோன்றி அவருக்கு இடைஞ்சல் செய்ய கோபமுற்று தன் இடக்கையால் சிறுவனைத் தள்ளி விட்டிருக்கிறார் முனிவர். உடனே அந்தச் சிறுவன் அருகேயிருந்த குகைக்குள் சென்று மறைய வந்தது கடவுளே என உணர்ந்திருக்கிறார் முனிவர். அன்றிலிருந்து அந்தக் குகைக்கும் கோவிலுக்கும் காவலாகத் தோன்றியதாம் பாபியா முதலை. நாங்கள் சென்றிருந்த வேளையில் முதலை கண்ணில் தென்படவில்லை.

கோவிலின் முகப்பில் அருள்பாலித்திருந்த 
ஆஞ்சநேயரும், கருடரும்..
#10

#11

#12

கோவில் தாழ்வாரம்
#13


#14

ஏரியின் மற்றொரு பக்கத்தில் இருந்த 
கோஷாலகிருஷ்ணா கோவில்
#16

ந்த ஏரி சுவையான ஊற்று நீரால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே பாழடைந்து தென்படும் சில இடங்கள் கோவிலின் பழமையைப் பறை சாற்றுவதாய் உள்ளன. ஸ்ரீகோவில் (கருவறை), நமஸ்கார மண்டபம், திட்டப்பள்ளி, ஜல துர்கா சன்னிதானம் மற்றும் குகையின் நுழைவாயில் ஆகியவை ஏரிக்குள் உள்ளன. நமஸ்கார மண்டபம் கிழக்குப் பக்கப் பாறையோடு ஒரு சிறுபாலத்தால் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவே கருவறைக்குச் செல்ல வேண்டும். [படங்கள் 1,7,8,9] கருவறையின் இருப்பக்கமும் மரத்தால் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட துவார பாலகர்களையும் காணலாம். அதேபோல மண்டப விதானத்தில் மரத்தால் செதுக்கப்பட்ட தசாவதாரக் காட்சிகளைப் பார்க்கலாம்.

கடு - சர்க்கரை - யோகம்

ஒரு காலத்தில் இதன் அசல் சிலைகள் உலோகத்தினாலோ கல்லினாலோ செய்யப்பட்டிருக்கவில்லை. “கடு - சர்க்கரை - யோகம்” எனப்படும் 70 வித மருத்துவக் குணமுடைய பொருட்களால் செய்யப்பட்டிருந்திருக்கின்றன. 1972ஆம் வருடம் இவை பஞ்சலோகச் சிலைகளால் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. அவை காஞ்சி மடத்திலிருந்து பரிசளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்போது மீண்டும் “காடு - சக்கர - யோகம்” கொண்டு செய்த சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இங்கு பகவான் விஷ்ணு, சர்ப்பங்களின் அரசனான, ஐந்து தலை கொண்ட, அனந்த பகவான் மேல் உட்கார்ந்திருப்பது போன்ற மூல விக்கிரகம் வழிபாட்டில் இருக்கிறது.

மதம், சாதி பாடுபாகுமின்றி அனைத்து மக்களுக்காகவும் இக்கோவில் திறந்திருக்கிறது.

#14


தகவல்கள்: இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்யப்பட்டவை.

***






10 கருத்துகள்:

  1. ஆஞ்சநேயரும், கருடரும் மிக அழகாய் இருக்கிறார்கள்.
    சைவ முதலை விஷயம் வியப்பாய் இருக்கிறது.
    காடு சக்கர யோகம் பற்றியும் புதிய செய்தி அறிந்து கொண்டேன்.
    படங்கள் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அழகிய இடம். வெகு அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் துல்லியமான படங்கள்... மிகவும் ரசித்தேன்...

    தகவல்கள் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  4. கோவிலும் சிலைகளும் மிக மிக அழகு!

    பதிலளிநீக்கு
  5. அரிய கோயில். நல்ல தரிசனம். அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin