வியாழன், 1 நவம்பர், 2018

சர்வதேச பிரமிட் வேலி, பெங்களூரு

#1
ர்வதேச பிரமிட் பள்ளத்தாக்கு (International Pyramid Valley) பெங்களூரிலிருந்து 30 கிமீ, நான் வசிக்குமிடத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது. பெங்களூரின் தெற்கே கனகபுரா தாலுக்காவைச் சேர்ந்த ராம்நகரில் பல ஏக்கர் அளவில் பசுமையும் எழிலும் வாய்ந்த இடத்தினுள் எழுப்பப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப் பெரிய தியான பிரமிட் என்கிறார்கள்.

தன்னை உணரும் அனுபவத்துக்கான தேடலில் ஒரு கருவியாக இது மக்களுக்கும் அமைப்புகளுக்கும் உதவ 2003_ஆம் ஆண்டு பிரம்ம ரிஷி பத்ரிஜி இது உருவாக்கப்பட்டுள்ளது.  முதலில் மைத்ரேய புத்த விஸ்வாலயம் என்று அழைக்கப்பட்ட இந்த ஆன்மீக தியான ஸ்தலம்  இந்தியாவில் உள்ள ‘பிரமிட் ஸ்பிரிச்சுவல் ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் வந்தபிறகு பிரமிடு வேலி (பள்ளத்தாக்கு) என்று பெயரில் அழைக்கப் படலாயிற்று.

#2

இந்த ஆன்மீக மையத்தின் பிரதான நோக்கம் தியானம் என்ற அம்சத்தில் உள்ள அறிவியல் ரீதியான உண்மைகளை பரப்ப வேண்டும் என்பதாக இருக்கிறது.  தியானத்திற்கான பிரத்யேக இடமாக, பிரமிடு தியான இயக்கத்தின் கேந்திரமாக உள்ளது.

ளாகத்தின் பிரதான ஈர்ப்பாக பிரமிட் இருந்தாலும் நுழைவிடத்திலிருந்து அங்கு செல்லும் வழியெங்கும் இருக்கும் பாறைகள், மூங்கில் மரங்கள், அழகிய நீர் நிலைகள், அழகாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஜென் தோட்டங்கள் ஆகியன மனதுக்கு இரம்மியமான சூழலை அளிக்கின்றன:

 #3


#4

 #5

வளாகத்தின் பிரதான நுழைவாயிலை அடைவதற்கு சற்று முன் காணக் கிடைத்தத் தாமரைக் குளம்:

#6

#7

உள்ளே பிரமிட் மண்டபத்திற்கு சற்று முன்னே வரவேற்கிறார் பச்சை நிற தியான புத்தர்.

#8


பிரமிடை எந்தப் பொருள் கொண்டும் செய்யலாம். பிரமிட் என்பது நான்கு முக்கோண வடிவிலான பக்கங்களைத் தாங்கி நிற்கும் சதுரமான அடிப்பாகம் கொண்டதாகும். நான்கு முக்கோணங்களின் முனைகள்  சேர்க்கப்பட்டு உச்சியில் கூம்பு போன்ற வடிவைக் கொண்டிருக்கும்.

#9

பிரமிட் அமைப்பு ஏன் தியானத்துக்கு முக்கியமானது என்பதைப் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யமானவை. அங்கே வாங்கிய ‘ஆனாபானாசதி’ எனும்
நூலிலிருந்து சில விவரங்களைச் சுருக்கமாக்கிப் பகிருகிறேன்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், எகிப்து நாட்டவர் முதன் முதலாக பிரமிடை உருவாக்கினார்கள்.  அந்தக் காலக் கட்டத்தில் மனிதன் ஆன்மிக முன்னேற்றம் அடையவும், அதனுள்ளே தியானப் பயிற்சியும் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின் காலப் போக்கில் அது கைவிடப்பட்டு, காலமான அரசன், அரசி ஆகியோரின் உடல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. பன்னெடுங்காலம் அவை கெடாமல் இருந்தது ஆச்சரியம் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நூற்றாண்டிலும், பல விஞ்ஞானிகள் பிரமிடின் உள்ளே ஆராய்சிகளை மேற்கொண்டு,  அதன் அபூர்வ சக்திகளைக் கண்டறிந்துள்ளனர். இயற்கையில் இருக்கும் சக்தி (Cosmic energy)யை சேகரித்துத் தன்னுள்ளே சேகரிக்கும் அபூர்வத் திறன் கொண்டவைதான் பிரமிட் அமைப்புகள்.
சரியான வடிவத்திலும், கோணத்திலும், பக்கங்களின் விகிதத்திலும், கட்டப்பட்ட பிரமிட் ஆனது நோய்களைக் குணப்படுத்துவது, எதையும் கெடாமல் பாதுகாப்பது எனப் பல அபூர்வ சக்திகளைக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிகள் கூறுகின்றன. பிரமிட் உள்ளே தியானம் செய்வது தியான அனுபவத்தை மேம்படச் செய்து அதன் பலனை முழுமையாக அடைய உதவுகிறது.

பிரமிடுக்குள் நாம் நுழையும் முன் முதன் முறையாக அங்கு வருகிறோமா எனக் கேட்கிறார்கள். ஆம் எனில் வலப்புறம் இருக்கும் சிறிய அறையில் நடக்கும் தியான வகுப்புக்கு விருப்பமாயின் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். பத்து நிமிட வகுப்புதான் என்கிறார்கள். ஆனால் வகுப்பு
சுமார் 40 நிமிடங்கள் வரையிலும் நடந்தது. 20 பேர்கள் அமரும் வகையிலான அறையில் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தியானத்தின் மேன்மையைப் பற்றியும் அங்கு தியானம் செய்ய வேண்டிய முறையைப் பற்றியும் விளக்குகிறார்.

சுருக்கமாக அதிலிருந்து சில விவரங்கள்:

ஆனாபானசதி! இது கெளதம புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன் பயிற்சி செய்து வந்த தியான முறை என்கிறார்கள். இதை விடாமல் பின்பற்றிய பின்னரே மனிதரான சித்தார்த்தர், கெளதம புத்தர் எனும் மகானாக மாறினார். 
#10
பாலி மொழியில், “ஆனா” எனில் “உள் இழுக்கும் மூச்சு”; “அபான” எனில் “வெளி வரும் மூச்சு”; “சதி” எனில் “ஒன்றியிருப்பது”.  ஆக, “ஆனாபானசதி” எனில், “நம் சுவாசத்தோடு நாம் ஒன்றியிருப்பது” என்று பொருள். சுவாசத்தின் மீது கவனம் வைப்பது.

இந்த தியானத்தை எப்படி அமர்ந்து எவ்வாறாகச் செய்ய வேண்டுமென்பதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அங்கேயே பத்து நிமிடங்கள் வரை செய்யவும் வைக்கிறார்கள். யார் மூலமாக பிரமிட் மையம் அறிமுகமானதென்பதையும் கேட்டு அறிந்து கொள்கிறார்கள். பெங்களூரில் வசிக்கும் என் தம்பி (பெரியம்மாவின் மகன்) இங்கே அடிக்கடி செல்வார். அவர் சொன்னதன் பேரில் ஆர்வம் ஏற்பட்டு வந்ததைச் சொன்னேன். பெளர்ணமி மற்றும் அதன் முந்தைய பிந்தைய தினங்களில் இங்கே தியானம் செய்யும் போது கிடைக்கும் சக்தியும் பலனும் அதிகமாக இருக்குமென்கிறார்கள். முழுநிலவு தினங்களில் நள்ளிரவு 2 மணி வரையிலும் மக்களை அனுமதிக்கிறார்கள். இரவு  பத்தரை மணி முதல் இரண்டு மணி வரையிலும் தியானம் செய்வதற்கென்றே தேடி வரும் மக்கள் கூட்டம் அதிகமாம். அதே போல ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் என தம்பி சொல்லியிருந்ததால், இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்துச் சென்றிருந்தோம்.

வருகிற மக்களிடம் நன்கொடைகள் கேட்டு தொல்லை தராமல்,  எதையும் விற்க முற்படாமல், எந்தவித இடையூறுகளும் இல்லாமல் தியானம் மற்றும் அமைதியை அனுபவிக்க அவர்களுக்கு உதவுவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு இயங்குவதாகச் சொல்லப்படுவது உண்மைதான்.

 #11


#12

நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை, என்றாலும் தியான மண்டபத்துக்குள் நுழைவதற்கு ஒவ்வொருவருக்கும் நுழைவாயில் அருகே ஒரு சீட்டு வழங்கப்படுகிறது, உணவுக்கும் சேர்த்து. குறிப்பிட்ட நேரத்தில் மதிய உணவு, மற்றும் இரவு உணவை இலவசமாக வழங்குகிறார்கள். திரும்பி வர நேரமாகி விடும் என்பதால் நாங்கள் முயன்று பார்க்கவில்லை. Snacks மட்டும் விற்கிற கட்டண உணவு விடுதி ஒன்று உள்ளது.

ப்போது, பிரமிடுக்குள் செல்லலாம். சாம்பல் நிறத்தில் இருக்கும் இந்த பிரமிடுன் உயரம் 102 அடி. 160 x 160  அடியில் அடிப்பாகமானது 25600 சதுர அடியில் அமைந்துள்ளது. கிஸா (Giza) பிரமிட் அமைப்பைப் பின்பற்றி உருவாக்கப் பட்டது.  நான்கு முக்கோணங்களும் பொருத்தப்பட்ட  52 டிகிரி 51’ கோணம் ஆனது இந்தக் கட்டிடக் கலையின் தனித்தன்மையாக அமைந்திருக்கிறது.

#13

இதனுள் 5000 பேர்கள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய முடியும் என்கிறார்கள். ஆங்காங்கே இருக்கைகளும் அமைத்துள்ளார்கள். பிரமிட் மண்டபத்தின் நடுப்பாகத்தில் 65 அடி வரை உயர்ந்து நிற்கிற  வட்ட வடிவ மேடையை அடைய சுழற்படிக்கட்டில் ஏறிச் செல்ல வேண்டும். பிரமிட் மண்டபத்தின் உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லாததால் இந்த மேடையின் படத்தை புத்தகத்திலிருந்து ஸ்கேன் செய்து பகிர்ந்துள்ளேன்:
#a
பிரமிடின் உச்சியிலிருந்து கீழே மூன்றில் ஒரு பாக உயரத்தில் அதன் சக்தி அதிகம் என்பதால் அதைக் கணக்கிட்டு தியானம் செய்பவர்கள் அமரும் போது அவர்களது தலை அந்த உயரத்தில் வருமாறு இந்த மேடையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இங்கே சுமார் 60 பேர்கள் வரை அமர இருக்கைகள் உள்ளன. தியானம் முடித்து சிலர் இறங்கியதும் மற்றவர் ஏறிச் செல்கின்றனர். நாங்களும் மேலே சென்று தியானம் செய்தோம். அருமையான அனுபவமாக இருந்தது.


மண்டபத்தை விட்டு வெளியே வந்ததும் இடப்பக்கமாகச் செல்லும் நீண்ட தாழ்வாரத்தில் அழகான சயன புத்தரும்.. தியான புத்தரும்..

#14

#15

#16

#17

இவற்றைத் தாண்டி வந்தால் தாழ்வாரத்தின் முடிவில் உள்ளது  புத்தக நிலையம். தியானம் குறித்த புத்தகங்கள்,  காணொளித் தகடுகள், தியானம் செய்யும் போது கேட்பதற்கான இசைத் தகடுகள் ஆகியவற்றோடு விதம் விதமான வடிவில் அளவில் புத்தர் சிலைகள், தியானம் செய்யும் போது அணிந்து கொள்ள  பிளாஸ்டிக் அல்லது அட்டையினால் ஆன பிரமிட் வடிவ தொப்பிகள், மேலே பிரமிட் அமைப்பைக் கொண்ட பிரம்பினாலான இருக்கைகள் ஆகியனவும் விற்பனைக்கு உள்ளன. வளாகத்தில் மக்கள் அமர ஆங்காங்கே இருக்கும் கல் இருக்கைகள் கூட மேலே பிரமிட் அமைப்புடன் இருந்தன. அவற்றைப் படம் எடுக்க விட்டுப் போயிற்று. தியானம் மட்டுமே பிரதானம் என்பதால் அதற்கான சூழலை இயல்பாக எல்லா இடங்களிலும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பெங்களூரில் வசிப்பவர்கள், எப்போதேனும் சுற்றிப் பார்க்க வருகிறவர்கள் ஒருமுறையேனும் சென்று வரலாம்.
#
***

20 கருத்துகள்:

  1. சென்று பார்க்கவேண்டும் என்கிற ஆவலை உண்டாக்குகிறது. என் அப்பா 90 களில் வீட்டில் சிறிய அளவிலான பிரமிட் பொம்மைகளை வாங்கி வைத்திருப்பார். அதிகபட்சம் அதற்குள் ஒரு பிளேடை வைக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உபயோகித்த பிளேடை பிரமிட் பொம்மைக்குள் வைத்ததில் அது மாதக் கணக்கில் கெட்டுப் போகவில்லை என சொல்லக் கேட்டிருக்கிறேன்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அருமையான இயற்கை சூழ்ந்த இடம் தியானத்திற்கு ஏற்ற இடம்.
    நானும் பிரமிடுகள் சின்னது, பெரிது என்று வைத்து இருக்கிறேன்.
    தியானம் செய்யலாம் தலையில் வைத்துக் கொண்டு.
    நம் பிரார்த்தனைகளை அதில் வைக்கலாம்.
    பிரமிடுகள் தியான கூடம் வீட்டில் அமைத்து தியானம் செய்தால் நல்லது என்று சொந்த வீட்டுக்காரர்களிடம் ஒரு காலத்தில் வேண்டுகோள் விடுத்தார்கள்.
    பிரமிடுக்குள் வைக்கும் காய் கனிகள் கெட்டு போகாது. நீங்கள் அங்கு போய் வந்தது மகிழ்ச்சி.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமிட் தொப்பிகளோடு பிரமிட் கூரை கொண்ட பிரம்பு நாற்காலிகள் விற்பனைக்கு இருந்தன. பூங்காக்களில் கல் இருக்கைகள் இருப்பது போல, இங்கே வளாகமெங்கும் பிரம்ட் கூரை கொண்ட வட்ட வடிவ கல் இருக்கைகளைப் பார்க்க முடிந்தது.

      நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. ஒரு முறையேனும் சென்று பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தங்களின் பதிவும் படங்களும் தூண்டிவிட்டுவிட்டன
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. அங்கு உள்ள சுற்றுப்புற சூழலே அமைதியை சொல்கிறது... பிரமிட் பற்றிய தகவல்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு அறிமுகம்.
    கனவுகள், இலக்குகளை அடைய மிகப்பெரும் தடையாக இருப்பது உள்ளுக்குள் இருந்து எழும்பும் கவனச்சிதறல்கள். வழி விலகச் செய்யும் ஆயிரக்கணக்கான எண்ண ஓட்டங்களில் இருந்து மனதை விலக்கி நமக்கானப் பாதையில் பயணிக்கத் தியானம் உதவுகிறது.

    நீங்கள் குறிப்பிட்டுள்ளப் பயிற்சி, ஒரு சில மணித்துளிகள் மனதில் எண்ணங்களற்ற அமைதியை உருவாக்குவதை அனுபவித்திருக்கிறேன்.

    "International Pyramid Valley" அமைவிடத்தின் Serenity ஐ அழகாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.

    கட்டாய நன்கொடைகள், தேவையற்ற கட்டணம், இடையூறான கடைகள் இல்லாமல் பராமரிக்கும் அமைப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இது தொடரவும் வேண்டும்.

    ,//பிரமிடின் உயரம் 102 அடி. 160 x 160 அடி.., கிஸா (Giza) பிரமிட் அமைப்பு...,. நான்கு முக்கோணங்கள் 52° 51’(Seconds துல்லியம்!!!)// தியானமே ஆனாலும் காரியத்தில் கவனமும், கருத்தாகவும். :-).

    ஒருமுறையாவது குடும்பமாகச் செல்ல வேண்டும் எனும் விருப்பத்தை ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் சென்று பாருங்கள்.

      /காரியத்தில் கவனம்.. கருத்து../ செய்வன சற்றே திருந்தச் செய்யலாமே என்றுதான்:)!

      நீக்கு
  6. உங்கள் பதிவை படித்துக்கொண்டிருந்த போது நானும் உங்கள் கூடவே பயணிப்பது போலவே இருந்தது. பச்சை நிற புத்தரின் தோற்றம் மனதில் ஒரு வகையில் அமைதியை உண்டாக்குகிறது!

    எகிப்து பிரமிடுகள் உடல்களை பதப்படுத்த உருவாக்கப்பட்டவை என்றே அறிந்திருகிறேன். அதற்கும் முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவை தியானக்கூடங்களாக விளங்கிய விபரம் உங்களால் தான் அறிந்து கொண்டேன். என் மகன் எகிப்து போய் வரலாமா என்று கேட்ட போது நான் மறுத்து விட்டேன். இப்போது போய் வரலாம் என்று சொல்லலாம் போல இருக்கிறது!!

    படங்களும் விபரங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சியும் நன்றியும், மனோம்மா. ஆம், எகிப்து போய் வரட்டுமே. முதன் முதலில் பிரமிடின் மகிமையை அறிந்து உணர்ந்து உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடாயிற்றே. அவர்கள் அமைத்த பிரமிடைக் காணும் வாய்ப்புக் கிடைப்பின் சிறப்புதானே.

      நீக்கு
  7. அறிந்திராத இடத்திற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன். பல கோணங்களில் புத்தரின் சிற்பங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  8. இதுவரை கேள்விப்படாதது தகவலுக்கு நன்றி பதிவர்களில் புத்தரைப் பற்றி ஆய்வு செய்யும் முனைவர் ஜம்புலிங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி GMB sir. அவரும் பதிவைப் பார்த்துக் கருத்தளித்திருக்கிறார்.

      நீக்கு
  9. மிக அருமையான இடமாக இருக்கிறது ..

    வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் செல்கிறோம் ..படங்கள் மிக அழகு ..

    எனக்கு பாண்டிச்சேரி ஆரோவில் நியாபகம் வந்தது இந்த பிரமிடை காணும் போது ..
    மேலும் இந்த கனகபுரா ரோடுல் தானே ஸ்ரீ ரவி ஷங்கர் art of living ஆசிரமமும் உள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், art of living ஆசிரமத்திலிருந்து வெகு பக்கமே. அதைத் தாண்டிதான் சென்றோம்.

      நானும் இந்த இடத்தைப் பற்றி தம்பி சொன்னபோதே ஆராவில் போலவா எனக் கேட்டேன்:). இதே அனுபவம் பல ஆண்டுகளுக்கு முன் ஆரோவில் சென்ற போதும் கிட்டியது. அங்கும் உச்சிக்கு அருகாமையிலிருக்கும் தளம் வரை ஏறிச் சென்று தியானம் செய்தோம்.

      நன்றி அனுராதா. வாய்ப்புக் கிடைத்தால் சென்று வாருங்கள்.

      நீக்கு
  10. அழகான இடமாகத் தெரிகிறது. படங்கள் சிறப்பு.

    தியானத்திற்கு ஏற்ற இடம் என்று தெரிந்து மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin