வெள்ளி, 8 டிசம்பர், 2017

செந்தார்ப் பைங்கிளி (அ) சிகப்பு ஆரக்கிளி - பறவை பார்ப்போம் (பாகம் 21)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 25)
ச்சை நிறத்துடன், வளைந்து சிவந்த அலகும், நீண்டு கூர்மையாக முடியும் வாலும் கொண்டவை செந்தார்ப் பைங்கிளிகள்.

#1
ஆங்கிலப் பெயர்: Rose-ringed parakeet

வால் அதன் சிறகுகளையும் சேர்த்து 40 செ.மீ நீளம் கொண்டவை. விரிகிற ஒரு பக்க இறக்கையின் நீளம் மட்டும் சராசரியாக 15-17 செ.மீ வரை இருக்கும்.

#2
உயிரியல் பெயர்: Psittacula krameri
ஆண் கிளிகளுக்கு கருப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தில் கழுத்தில் வளையம் போன்ற ஆரம் இருக்கும். அதனாலேயே ஆரக்கிளி எனும் பெயர் வந்தது. பெண் கிளிகளுக்கும் இளம் கிளிகளுக்கும் ஆர வளையம் இருக்காது. ஒரு சிலவற்றிற்கு
ஆழ்ந்த சாம்பல் வண்ண வளையம் இருக்கும். ஆர வளையம் தவிர்த்து மற்றபடி பெண்கிளிகள் எல்லாவகையிலும் ஆண்கிளியைப் போலவே இருக்கும். குறிப்பாக இரு பாலினக் கிளிகளுக்கும் சிறப்பம்சம் அவற்றின் பளீர் பச்சை வண்ணம்.


#3
வேறு பெயர்கள்: சிகப்பு ஆரக்கிளி ,
(இலங்கையில் பேச்சு வழக்கில்) பயற்றங்கிளி

வடமேற்கு இந்தியாவில் இவற்றின் இனப்பெருக்கக் காலம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலும். இவற்றுக்கு ஒரே வாழ்க்கைத் துணை எனக் கிடையாது. ஒவ்வொரு இனப்பெருக்கக் காலத்திலும் துணைகளைத் தேடிக் கொள்ளும். குளிர்காலம் ஆகையால் பெண்கிளிகள் முட்டை இடத் தேவையான ஊட்டச்சத்தை அப்போது விளைச்சலில் இருக்கும் பட்டாணிப் பயிர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும் குஞ்சுகளைப் பராமரிக்கும். இளம் கிளிகள் மழைக்காலத்துக்கு முன்னே கூடுகளை விட்டு வெளியேறத் தயாராகி விடும்.

இப்பறவைகள் தாவர உண்ணிகள். மொட்டுகள், காய்-கனிகள், குறிப்பாகச் சதைப் பற்றுள்ள பழங்கள், கொட்டைகள், விதைகளை உண்டு வாழும். கூட்டமாக வயல்வெளிகள், தோட்டங்களைத் தேடிப் பல மைல்கள் பயணிக்கும். ஒன்று சேர்ந்து பயிர்களுக்குக் கடுமையான சேதங்களை விளைவிக்கும். தானியங்கள் இவற்றுக்குப் பிடித்தமானவை. நெற்பயிர்கள், சோளக் கதிர்கள் என்றால் கொண்டாட்டமே. இந்தியாவில்  தானியங்களை உண்டு களிக்கும் கிளிகள், எகிப்தில் வசந்த காலத்தில் முசுக்கட்டைப் பழங்களையும், கோடை காலத்தில் ஈச்சம் பழங்களையும் உண்டு வாழும்.

#4
பூர்வீகம்: தெற்கு ஆசியா

இப்பறவைகள் கூண்டுகளில் வைத்தும் வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கும் போது விதம் விதமான காய்கள், பழங்கள், சமைத்த உணவுக் கவளங்கள், புரோட்டினுக்காக சமைத்த இறைச்சி  சிறிதளவு இவையெல்லாமும் கொடுத்து வளர்க்கிறார்கள். ஆனால் உப்பு, எண்ணெய், சாக்லேட், ஆல்கஹால், உணவுகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் preservatives ஆகியன கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை.

‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ என்பது நாம் அறிந்ததே.
இவை சுற்றுப்புற சத்தங்களை ஆழ்ந்து உள்வாங்குவதோடு மனிதர்கள் சொல்லும் சொற்களைக் கேட்டு அவற்றைத் திரும்பச் சொல்லும் சக்தி கொண்டவை. கிளிகளின் இந்தத் திறமை, சர்க்கஸில் வித்தை காட்ட மனிதர்களுக்குப் பயன்படுகிறது.

செல்லப் பறவைகளாக சிறைப்படுத்தப் படுவதால் இக்கிளிகளின் பூர்வீகமான தெற்காசியாவிலேயே இவற்றின்  எண்ணிக்கை வெகுவாகு குறைந்து வருகிறது. உள்ளூர் சந்தைகளில்  இதன் விற்பனை தடை செய்யப்பட்டு வந்தாலும், பறவைகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூடப் பரவலாக இந்திய துணைக் கண்டங்களில் இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டேதான் வருகிறது.

#5


**

தகவல்கள்: விக்கிப்பீடியா உட்பட  இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.


***



8 கருத்துகள்:

  1. ​படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.​

    பதிலளிநீக்கு
  2. விக்கிபீடியாவிலிருந்து தகவலைத் திரட்டி, மொழிபெயர்த்து உரிய படங்களுடன் தந்துள்ள உங்களின் பணி போற்றத்தக்கது.

    பதிலளிநீக்கு
  3. ஸ்வாரஸ்யமான தகவல்கள். படங்கள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin