வியாழன், 16 நவம்பர், 2017

அவளும் நோக்கினாள் - சிறுகதை

வலை உலகில் தங்கள் பாணி புதிய பாணி என ஒரு பல்சுவை இதழாகச் செயல்பட்டு வருகிறது “எங்கள் ப்ளாக்”.  அதன் ஆசிரியர்களில் ஒருவரான திரு ஸ்ரீராம், மறைந்த அவரது தந்தை எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசைப்படி, ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என நிறைவடையுமாறு கதை எழுத நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார். தன் தந்தை உறவினர் வட்டத்தில் முயன்றிடச் சொன்னதை அனைவருக்குமான அன்பு வேண்டுகோளாக முன் வைக்க... அந்த வரிசையில் 27_வது கதையாக எனது பார்வையில் சீதை ராமனை மன்னிக்கும் கதை..


அவளும் நோக்கினாள்
சிலுசிலு என்று வீசிய வேப்பமரக் காற்று உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆறுதலாய் இருக்க, வாசற்படியில் சாய்ந்து அமர்ந்திருந்த மைதிலி அப்படியே அதில் லயித்துக் கண் அசந்து விட்டாள்.

‘பாம்.. பாம்’

‘ஆஆ.. அவர் கார்..  ஆ.. வந்துட்டார்..’

‘பேரன் பேத்தி எடுத்த பிறகும் இப்படி வாசப்படியில ஒக்காந்து... வேடிக்கைப் பார்க்கிறேங்கற பேர்ல... வெட்கமாயில்ல...’ ஈட்டிப் பார்வையில் ஒலிக்காமல் ஒலித்த வார்த்தைகள் உள்ளத்தைத் துளைக்க விதிர்விதிர்த்து எழுந்து நின்றாள் மைதிலி.

எதிரில் எவருமில்லை. அவளையறியாமல் கராஜைப் பார்த்தாள். அவருடைய கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது அதன் வண்ணமே தெரியாத அளவுக்குத் தூசு படிந்து.

இரு தெருக்கள் சந்திக்கும் முனையில் இருக்கிறது அவர்களது வீடு. வளைவில் திரும்பும் போது ஒலியெழுப்பியிருக்கிறது ஏதோ ஒரு வாகனம். அது அவரது காரின் அதே  ஹாரன் சத்தம்.

வேகமாக வீசிக் கொண்டிருந்த ஆடிக் காற்றிலும் அப்படி வியர்த்து விட்டிருந்தது. ஒரு நொடிதான். தெளிந்து விட்டாள். ஆனாலும் வெட்கமாக இருந்தது. எல்லாவற்றையும் கடந்து, தீர்க்கமான முடிவுடன் எப்படிக் கம்பீரமாகச் சென்று கொண்டிருக்கிறோம் நாம்.. என்றிருந்த பெருமிதம், அது கொடுத்து வந்த தைரியம் இரண்டுமே சற்றே ஆட்டம் கண்டு விட்டதில் வந்த வெட்கம். அடிமன வேதனைகள் ஆறாத ரணமாகதான் இருக்கிறது என்றே தோன்றியது. இன்று காலை நடந்த சம்பவம் கூட அந்த ரணத்தை சற்றே கிளறி விட்டிருக்கலாம்.

தவைச் சாத்தி விட்டு உள்ளே வந்தவள் ஹாலை அடுத்து மாடிக்குச் செல்லும் வழியில் இருந்த படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் ராமச்சந்திரன். நெஞ்சின் மேல் நேற்று கொரியரில் வந்திருந்த புத்தகங்களில் ஒன்று. சென்ற ஆண்டு வெளியான கவிதைத் தொகுப்புகளில் சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்துத் தரக் கோரி அனுப்பிருந்தது ஒரு இலக்கிய அமைப்பு. படுக்கையைச் சுற்றி சிதறிக் கிடந்த மற்ற நூல்களை அடுக்கி அருகிலிருந்த  முக்காலியில் வைத்தவள் காலையில் அவர் வாசிக்க வற்புறுத்திக் கையில் தந்த அந்தப் புத்தகத்தை, அவசரமாக வாசித்து விட்டுத் திருப்பி வைத்ததை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அட்டையில், சுதந்திரமாக வானில் சிறகடித்துப் பறக்கும் புறாக்கள்! அப்பொழுதே கவனத்தை ஈர்த்த படம் மனதிலே பதிந்து போனதால் நூலை எளிதாக அடையாளம் காண முடிந்தது. பெண் கவிஞர் எழுதியது.  ‘இலைகள் பழுக்காத உலகம்”!  கவிதையின் பெயர் நினைவில் இருந்தது. ‘அவள்’! புரட்டி மீண்டும் வாசிக்கலானாள்:

நிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன
குறிப்பாக அவளிடமிருந்து

அவளுள் இருந்தார்கள்
மகள் தாய் மனைவி தங்கை தோழி
அத்தனை பேரும்

மிகப் பெரிய குற்றங்களையோ
மறக்க முடியாத துரோகங்களையோ
எவருக்கும் செய்துவிடவில்லை

சில தற்செயலாக நிகழ்ந்தவை
பல காலகாலமாக எல்லோரும் செய்தவை
அவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு
வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை

நிறைய நோகச் செய்திருக்கிறேன்
அது குறித்துக்
கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன்
இப்போது
மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன..
மன அமைதிக்காக

காலம் கடந்து விட்டது
எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்
கசிந்துருகி நிற்கும் எனக்குக்
காட்டப்படுகிற கருணையில்
உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது
நான் யாசிக்கிற மன்னிப்பு
மறுக்கப்படுகிறது

கையில் அள்ளி வீசும் நீராக
அலைக்கழித்த என்னை
ஆழ்கடலின் பேரமைதியுடன்
அச்சுறுத்துகிறாள் இன்று.

பெரிய புன்னகை படர்ந்தது. ‘ஆம், நானே அவள்!’

புத்தகத்தை எடுத்த இடத்தில் திருப்பி வைத்தாள்.  பகல் வெளிச்சம் அவர் தூக்கத்தைக் கலைந்து விடாதிருக்க சன்னலின் திரைச்சீலைகளை இழுத்து மூடியவள் அவர் முகத்தை உற்று ஒரு கணம் பார்த்தாள். உலகம் கொண்டாடும் கவிஞர். ஊர் மெச்சும் ஆடிட்டர். இந்த சாந்தமான முகத்துக்குள் இருக்கும் இன்னொரு முகத்தை அறிந்தவள் அவள் மட்டுமே. பாவமாகதான் இருந்தது. கடந்த இரண்டு வருடமாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார்.  பரணில் எதையோ எடுக்க ஏணியில் ஏறியவர் கீழே விழுந்ததில் தண்டு வடத்தில் அடிபட்டுக் கால்கள் செயலிழந்து போயின. அன்றிலிருந்து தாய்க்கு மேலாக அவளேதான் எல்லாமும் பார்க்கிறாள். எத்தனையோ முறை மகன்களும் சரி, அவரும் சரி கெஞ்சிப் பார்த்து விட்டார்கள், ‘ஒரு ஆண் அட்டெண்டர் போட்டுக்கலாம்’ என. இவள் பிடிவாதமாக மறுத்து விட்டாள். காலையில் கூட இப்படிதான் பேச்சை ஆரம்பித்தார்.

‘மைதிலி எனக்கு நீ செய்யற ஒவ்வொரு பணிவிடையும் மனசுல பாரமா ஏறி உட்காருதும்மா. இதுக்குல்லாம் நான் அருகதையே கிடையாது. நீ சம்மதிக்காம அட்டெண்டரை வைக்கவும் எனக்குத் தைரியமில்லை. எங்கே ஒம்மனசை திரும்பவும் நோகடிச்சிருவனோன்னு ஒரு பயம். அப்புறம் உன்னோட இந்த அருகாமை கிடைக்காமப் போயிடுமோன்கிறது அதை விடப் பெரிய பயம். தேவைக்கு மிஞ்சி ஒரு வார்த்தை எங்கிட்ட நீ பேசறதில்ல. அட்லீஸ்ட் தகவலோ கேள்வியோ பதிலோ அவசியத்துக்காவது பேசறியேங்கறது ஒரு ஆறுதல். ஆனா என் முகத்தைப் பார்த்து நீ பேசி எத்தனை வருஷம் ஆச்சுன்னு எனக்கே தெரியலை.”

சொல்லும் போதே தழுத்தழுத்து விட்டார் ராமச்சந்திரன். “ஆரம்பத்துல நீ அப்படி நடந்தப்போ எனக்கு மிதப்பா இருந்தது.  ஆனா இப்போ என்னால தாங்க முடியலை” ஏறக்குறைய அழுது விட்டார். அவர் உடலைத் துடைத்து விட்டு, பவுடர் தூவி, உடைமாற்றி, புத்தகம் வாசிக்கத் தோதாக தலையணையில் சாய்வாகப் படுக்க வைத்தவள் வழக்கம் போலவே அமைதி காத்தாள். கவிதைப் புத்தகங்களையும் கூடவே மூக்குக் கண்ணாடியையும் கையில் கொடுத்தாள். ‘ஒரு நிமிஷம்’ என்றவர் அப்போதுதான் அந்தத் தொகுப்பைத் திறந்து ‘நானே எழுதிய மாதிரி இருக்கு’ என்றந்தக் கவிதையைப் படிக்கக் கொடுத்தார்.

இவள் புத்தகங்களைத் தொட்டாலே பிடிக்காது. ‘இதென்ன அதிசயமாய்!’ ஆனால் மறுக்கவில்லை. வேகமாக வாசித்தவளுக்கு தொடர்ந்து என்ன சொல்லப் போகிறார் எனப் புரிந்து போயிற்று. எழுந்த எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் நூலை மூடி மேசை மேல் ‘பட்’ எனும் சத்தத்துடன் வைத்து விட்டுத் திரும்பி நடந்தாள். அவர் விடுவதாயில்லை..

 “நில்லு மைதிலிம்மா, நானும் இப்படியேதான்.. உன்னோட மன்னிப்புக்காகதான்.. மருகிட்டிருக்கேன். அது கிடைக்க வாய்ப்பேயில்லையா? தப்பு செஞ்சவங்க திருந்தவே மாட்டாங்களா? ஒரு வேளை இந்தப் பாராமுகம்தான் நீ எனக்குக் கொடுக்கும் தண்டனையா? அப்படின்னா அதையாவது சொல்லிட்டுப் போ. சந்தோஷமா ஏத்துக்கறேன்.”

எந்தப் பதிலும் சொல்லாமல் மேலே நடந்தவளைப் பார்த்து “அத்தனை வெறுப்பா மைதிலி என் மேல..” என்றார் பரிதாபமாக.

‘வெறுப்பா...’

கதவை ஒருக்களித்து மூடி விட்டு வெளியே வந்தவள்,  ‘இது வைராக்கியம்’ மெல்ல சொல்லிக் கொண்டாள்.

‘இந்த வைராக்கியம் கூட இல்லா விட்டால் நான் என்ன மனுஷி? ஒவ்வொரு தடவையும் அடி வாங்கியது என் சுய மரியாதை ஆச்சே’

மையலை ஆரம்பித்தாள். கைகள் தன்னிச்சையாக வேலைகளைச் செய்ய, மனதுள் வேகவேகமாய் ஓடியது நாற்பது வருட வாழ்க்கையும். அழகும் வனப்பும் அறிவும் திறனும் ஆண்டவன் தந்தது. அவள் அப்பா அம்மா கொடுத்தது. அதில் அவள் பிழை என்ன? சற்றே தன் அறிவைக் காட்டி விடக் கூடாது. நான்கு பேர் முன் பளிச் எனத் தானாக வந்து விடக் கூடாது.  அந்த சின்ன ஊரின் அத்தனை பெரிய புள்ளிகளுக்கும் இவரே ஆடிட்டர். அந்நாளில் இவர் கவிதைகளும், கட்டுரைகளும் வெளியாகாத பிரபல பத்திரிகைகளே இல்லையெனலாம். தினம் தேடி வந்து போவோர் கூட்டம் அதிகம். அவர்களில் யார் முன் வரலாம், யார் முன் வரக் கூடாதென்பதும் அவர் முடிவே. எல்லாம் கண்கள் கக்கும் கனலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், விசேஷம் விழாக்களுக்கு பெருமை காட்ட மனைவி வேண்டும். அவர் சொல்லும் உடையை, காட்டும் நகையை அணிய வேண்டும். இலக்கிய விழாக்கள் என்றால் காட்டன் புடவைகள், முத்து மாலைகள். ஊர் பெரியவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அவளுக்குப் பிடிக்காத வண்ணங்களில் சாண் உயர சரிகை போட்டப் பட்டுப் புடவைகள், தங்க வைர நகைகள். அவளின் ரசனை அவளுக்கே மறந்து போனது.

கல்லூரி காலத்தில்  எம்.எஸ். அம்மாவின் பாடல்களை, குறிப்பாக ‘காற்றினிலே வரும் கீதம்.., குறையொன்றும் இல்லை..’ பாடல்களை மேடையில் இவள் உருகிப் பாடும் போது அரங்கமே அமைதியில் உறைந்து போகும். பாடி முடிக்கையில் கண்கள் கசிய அரங்கிலுள்ளோர் எழுப்புகிற கரகோஷம் பல நிமிடங்கள் நீடிக்கும். தன் ஆத்ம நண்பன் என அத்தனை பேரிடமும் இவர் மார் தட்டிச் சொல்லும் வக்கீலின் வீட்டுக் கொலுவில் இவள் பாடிய தினத்தோடு அந்த சங்கீதம் முடக்கப் பட்டது. இவரின் எழுத்துக்கள் வெளியாவதாலேயே  பத்திரிகைகள் மறுக்கப் பட்டன. இதெயெல்லாம் கூட அவளால் சகித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் ஈட்டிப் பார்வையால் எத்தனை சந்தர்ப்பங்களில் இவளை நோகடித்திருக்கிறார் என்பதற்குக் கணக்கே இல்லை. மற்றவர் முன் பார்வையால் என்றால் தனிமையில்... நினைக்கவே கூசும் சொல்லடிகள்.

‘உங்களோடயே வந்திடறம்மா..’ பெரியவன் அருணைக் கருவுற்றிருந்த புதிதில், பார்க்க வந்திருந்த அம்மாவின் மடியில் படுத்துத் தாங்க மாட்டாமல் ஒரு முறை கதறித் தீர்த்து விட்டாள்.  ஆறுதல் எதிர்பார்த்த இடத்தில் ஏமாற்றமே எஞ்சியது.  ‘என்ன பேசற நீ.. மாப்பிள குடிக்கிறாரா, போட்டு அடிக்கறாரா இல்ல வேற கெட்ட சகவாசம் உண்டா? ஊரே கண்ணு போடுது, எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை கெடச்சிருக்கு உங்களுக்குன்னு. இதெல்லாம் காலப்போக்கில சரியாப் போகும். நீ வீட்டோட வந்துட்டா தம்பிங்களுக்கு எப்படிக் கல்யாணமாகும்?’ ஓங்கி மூடிக் கொண்ட அந்தக் கதவுகளை அதற்காக மீண்டும் அவள் தட்டவேயில்லை. இந்தக் காலத்தைப் போல பிரச்சனை என்றால் பொசுக் என விட்டு விலகி தனியாக வாழ முடிந்த காலமும் இல்லை அது.

அடுத்தடுத்து ராகவ், பிரணவ் பிறக்க மகன்களின் மழலையிலும், ஒவ்வொரு வளர்ச்சியிலும் கிடைத்த மகிழ்ச்சி மற்றதைப் பின்னுக்குத் தள்ளியது. ராமச்சந்திரன் அப்படியேதான் இருந்தார். மன உளைச்சல்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால் அதில் அவள் தொலைந்து போய் விடாமல் குழந்தைகள் காப்பாற்றி விட்டார்கள். எது எப்படியோ, தாய்மையை அவளுக்குக் கொடுத்ததற்காகவும், அந்த இன்பத்தைப் பரிபூரணமாக அனுபவிக்க விட்டதற்காகவும் மட்டுமே அவருக்குத் தான் கடமைப் பட்டிருப்பதாகப் பல சமயங்களில் நினைத்திருக்கிறாள்.  அவர் படுத்த படுக்கையானதும் அதே தாய்மையை நன்றியாக அவருக்குத் திருப்பிக் கொடுக்கவும் முடிந்திருக்கிறது.

பிள்ளைகள் எங்கே படித்து எப்படி ஆளானர்கள் என்பது கூடத் தெரியாமலிருந்தவர் ராமச்சந்திரன். நேரமின்மையோ, அலட்சியமோ அல்லது இவள் பார்க்கட்டுமே என்கிற எண்ணமோ எதுவானாலும் அதற்காகச் சின்ன சலிப்புக் கூட அவள் அடைந்ததில்லை. பிள்ளைகள் அவளைக் கூடுதலாக நேசித்ததற்கு அதுவே ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  சின்ன வயதிலிருந்து அவர்களது எல்லாத் திறமைகளுக்கும் ஊக்கம் கொடுத்தாள். படிப்பிலும் அதிபுத்திசாலிகளாய் இருந்தார்கள். பண்பட்டவர்களாய் அவர்கள் வளர வேண்டுமென்பதில் கூடுதல் கவனம் வைத்திருந்தாள்.

என்றைக்கும் கணவரைப் பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்ததேயில்லை. வளர வளர இளையவர்களுக்கு அவள் நிலைமை சொல்லாமலே புரியத் தொடங்கியது. ஆனால் ஊருக்குள் ராமச்சந்திரனுக்கு இருந்த செல்வாக்கு, இலக்கியவாதியாக அவர் பெற்றிருந்த புகழ் இதெல்லாம் ஒரு கட்டத்தில் அருணை அதிகமாக ஈர்க்க அப்பாவை ஆதர்சமாகக் கொள்ள ஆரம்பித்து விட்டான். மைதிலியிடம் மரியாதைக் குறைவாக நடக்கவில்லை என்றாலும் மெல்ல அவளை விட்டு விலகி விட்டானென்றே சொல்ல வேண்டும்.

மைதிலியின் பாராமுகம்  மனதில் பாரமாக இறங்குவதாக இப்போது இறைஞ்சும் ராமச்சந்திரனே இந்தச் சூழலுக்கு முழுக் காரணம். இன்றைக்கு அவரை மட்டும்தான் ஏறெடுத்துப் பார்க்காதிருக்கிறாள். ஆனால் அவரின் குத்தல் பார்வைகளால் ஒரு காலக் கட்டத்தில் எவரையும் ஏறெடுத்துப் பாராமல் எங்கோ பார்த்துப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டாள் ஒரு கவசமாக. முதலில் அவரது நண்பர்கள் முன் ஆரம்பித்துப் போகப் போக ஆண் பெண் பேதமின்றி யாரோடு பேசினாலும் எங்கோ பார்த்தோ அல்லது தரையைப் பார்த்தோ பேசும் வழக்கம் தொற்றிக் கொண்டது. பலரும் கேலி பேசும் நிலைக்கும் போனது.

அதையெல்லாம் மாற்றியது இளையவர்கள்தான். “இப்படி இருக்காதம்மா.. எங்க மூணு பேரையும் இவ்வளவு உயரத்துக்குக் கொண்டு வந்த நீ எப்படித் தலை நிமிர்ந்து வாழணும்! யாருக்காகவும் உன்னை நீ குறைச்சுக்காதே. உனக்கு எப்பவும் நாங்க இருக்கோம்” சொல்லிச் சொல்லி தைரியம் தந்து அவளைத் தேற்றி விட்டார்கள். ஆனாலும் ஒரு சில பேரைச் சந்திக்கும் போது பழைய அனுபவங்களால் அவளையறியாமல் எங்கோ பார்த்துப் பேசும் பழக்கம் போக மாட்டேன்கிறதே. ஏன், ராமச்சந்திரனே மாறிய பிறகும் கூட. ஆம், பிள்ளைகள் தலையெடுத்ததும் இவளிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்க ஆரம்பித்து விட்டார். முறைப்பும் விறைப்பும் அப்படியேத் தொடர்ந்தாலும் கொடுக்குகளை மடக்கிக் கொண்டார்.

இன்றைய நிலையில் எல்லாம் உணர்ந்து உத்தமராகி என்னவோ இவள்தான் கொடுமைப் படுத்துவது போல அவ்வப்போது இப்படியொரு நச்சரிப்பு. இவளும் வேண்டுமென்றா இருக்கிறாள்? முடியவில்லை, இயல்பாக இருக்க, பழக முடியவில்லை. உண்மையிலேயே மனிதர் திருந்தி விட்டாரா என்றெல்லாம் ஆராயக் கூட விருப்பமில்லை. மன்னிப்புக்கு மருகுவதாக இன்று சொல்வது தனிமை தந்த ஞானத்தாலும் இருக்கலாம்.

ஆரம்பத்தில் அடிக்கடி வந்து பார்த்த நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனார்கள். மொபைலில் அழைத்து இவர் மணிக்கணக்கில் பேசத் தொடங்க அழைப்புகளை ஒதுக்கினார்கள். ஒரு அறைக்குள் டிவி, டேப்லட்டில் இணையம், கொஞ்சம் எழுத்து, பின் வாசிப்பு என ஒரு மனிதன் வெளியுலகம் பாராமல் வாழ்வது கொடுமைதான். இப்படி ஒரு கட்டத்தில் வேறு வழியற்றுப் போனபின்னர்தானே இவள் துணை முக்கியமாகப் படுகிறது? இவளைப் பொறுத்தவரை பட்ட வேதனைகளை இந்த வைராக்கியம் ஒன்றே மறக்கடிக்கிறது. தனக்கும் சுய மரியாதை உண்டென்பதை உரக்கச் சொல்கிறது. அவள் கடன் பணி செய்து கிடப்பதே என்றுதானே அதுகாலமும் நடத்தினார். எல்லாப் பணிகளையும் செவ்வனே ஆற்றியதைப் போல அவரையும் ஆயுளுக்கும் இப்படியே பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மேல் என்ன வேண்டுமாம்?

ணி என்றதும் வெறொன்று அவளுக்குள் ஓடியது. எல்லாக் கடமைகளையும் சரிவர ஆற்றி விட்டோமா என்பது. அருண் மட்டும் உள்ளூரில் சற்றுத் தள்ளி அவன் கட்டிக் கொண்ட வீட்டில் இருக்க, ராகவ் டெல்லியிலும், பிரணவ் வெளிநாட்டிலுமாய் பெரிய பதவிகளில்! பிரணவ்வுக்கு அவன் விரும்பிய ஜெர்மன் பெண்ணையே உறுதியாய் நின்று கட்டி வைத்தாள். பாசமான மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என எந்தக் குறையுமில்லை. ஆனால்.. திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகியும் மூத்த மருமகள் அனுவின் கண்களில் ஒரு மலர்ச்சி இல்லை.

அருண் அப்பாவைப் போல அத்தனைக் குரூரமானவன் இல்லை. அவள் வளர்த்த பிள்ளை ஆயிற்றே. ஆனால் அப்பாவின் குணங்களில் பாதியைக் கொண்டிருந்தான். தான் என்ற கர்வம், அனுவை அடக்கி வைக்கும் போக்கு இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். இது குறித்துப் பேச முற்படும் போதெல்லாம், எதையாவது சொல்லி நழுவி விடுகிறான். அப்பாவோடு அவனுக்கு ஒட்டதல் ஏற்பட்டதும் விழுந்த இடைவெளியை நிரப்ப முடியாததால் அவன் மனதை நெருங்கப் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. அனுவின் முகத்தில் உண்மையான மலர்ச்சியைக் கொண்டு வந்தால்தான் இந்த ஜென்மம் சாபல்யம் அடையும்.

ப்படி எதை எதையோ நினைத்தபடி வாசலில் வந்தமர்ந்தவள் தன்னை மறந்து அயர்ந்து போயிருந்திருக்கிறாள், பகலில். அந்த நினைவுகள் தந்த அழுத்தத்தில்தான் ஹாரன் சத்தம் கேட்டதும் தான் வெலவெலத்திருக்க வேண்டும். எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி நிகழும்? மீண்டு வா, நேசக் கரம் நீட்டு என எப்படி இவரால் எளிதாகக் கேட்க முடிகிறது?

அன்று வெள்ளிக் கிழமை.

மாலை நேராக ஆபிஸிலிருந்து வந்து விடுவான் அருண். அதே வண்டியில் டிரைவரோடு அவளை கோவிலுக்கு அனுப்பி விட்டு அவள் திரும்பும் வரை அப்பாவைப் பார்த்துக் கொள்வான்.

அன்று நுழையும் போதே, “அம்மா இன்னிக்கு டின்னர் இங்கதான். அவசரம் ஒண்ணுமில்ல. நீங்க கோயிலுக்குப் போய்ட்டு வந்து மெதுவா செய்யுங்க”

“அதுக்கென்னப்பா. செஞ்சிட்டாப் போச்சு. அனுவுக்கு ஒடம்பு ஏதும் முடியலையா என்ன? போகும் போது அவளுக்கும் ஆர்த்திக்கும் பேக் பண்ணித் தரட்டுமா?”

“இல்லம்மா அவங்க ரெண்டு பேரையும் இப்பதான் பஸ் ஏத்தி விட்டுட்டு வர்றேன். அனு அப்பாக்கு ஒடம்பு முடியாம ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம். சன் டே வந்திருவா.”

“நீ கூடப் போகலியா..” வாய் வரை வந்த கேள்வியை விழுங்கினாள் அவன் பதில் என்னவாக இருக்கும் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவளாய். நிதானமாகப் பேச வேண்டும். சாப்பிடும் போது பார்க்கலாம் என முடிவெடுத்தவளாய் “நல்ல மனுஷர். அவருக்கும் சேத்து வேண்டிக்கறேன். சீக்கிரம் நல்லாகி வரட்டும்”  என்றாள். வேகமாக மாடிக்குச் சென்று புடவையை மாற்றிக் கொண்டாள். அன்று சற்று சீக்கிரமாகவே வந்து விட்டவனுக்கு ஒரு வாய் காஃபியைக் கொடுத்து விடலாமெனத் தோன்றியது.

நாளைக்கு ஒனக்கு ஆஃப்தானே? நீயும் கூடப் போயிருக்கலாமே.”

“நா எதுக்குப்பா? அப்படி பெரிசா பயப்பட ஒண்ணுமில்ல. ஜஸ்ட் எ மைல்ட் ஹார்ட் அட்டாக்.”

“மரியாதைக்காகவாவது ஒரு எட்டு நீ போக வேண்டாமா?”

வியப்பு மேலிட அறைக்குள் நுழையாமல் வெளியிலேயே நின்று விட்டாள் மைதிலி. 

ராமச்சந்திரன் தொடர்ந்தார், “இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. நாளைக்குப் போலாமே. ஞாயித்துக் கெழம ஆர்த்திய மட்டும் அழைச்சுட்டு வந்திரு. அவ இங்கிருந்து ஸ்கூலுக்குப் போட்டும். அனு, சம்பந்தி ஆஸ்பத்திரில இருந்து வர்ற வரைக்கும் அங்க  இருக்கட்டுமே”

“இவ எதுக்கு சும்மா? அவ அண்ணன் இருக்கான். பெரிய கூட்டமே இருக்கு அங்க. மாமாவோட தம்பி தங்கச்சிங்க எல்லாம் கூட வந்திருக்காங்களாம். இவ போய் டேரா போடறதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. இந்த சாக்குல சொந்தக்காரக் கூட்டத்தோட அரட்டை அடிச்சு ஊரச் சுத்திட்டு வருவா.”

“வாய்க்கு வந்தபடி பேசாத அருண். எத்தனை பேரு இருந்தாலும் பெத்த பொண்ணு கூட இருந்தா ஒரு பலம்தானே அவருக்கு.” எனக் குரலை உயர்த்தியவர் சற்று நிதானித்து “உங்கிட்டக் கொஞ்சம் சீரியஸாவே பேசணும் எனக்கு” என்றார்.

“அப்படியென்னப்பா! சரி, சொல்லுங்க”

“அருண், ஒன்னோட இந்த வசதி, வளர்ச்சி எல்லாத்தையும் நினைச்சாலே பெருமிதமாதான் இருக்கு. அதே நேரம் ஒரு வருத்தமும் இருக்கு.”

“வருத்தமா?”

“கவலைன்னு கூட வச்சுக்கலாம். அனு சந்தோஷமாதான் இருக்கிறாளா?”

“ஒண்ணும் புரியலை. அவளுக்கு என்ன நா குறை வச்சிருக்கேன்?”

“முதல்ல, நீ நிறைன்னு நினைக்கிற எதுவுமே அவ பார்வையில ஒரு பொருட்டா கூட இருக்க வாய்ப்பில்லைங்கறத புரிஞ்சுக்கோ. அதுவுமில்லாம நாம என்ன சாதிச்சு என்ன? என்ன சம்பாதிச்சு என்ன? நம்ம கூடவே நமக்காகவே இருக்கிற ஜீவனோட மனசுல இடம் பிடிக்க முடியலைன்னா வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்டுதான். ஏதோ ஒரு அகங்காரம்.. நமக்கே தெரியாமன்னு சொல்ல மாட்டேன். தெரிஞ்சேதான்.. விரும்பி வேணும்னேதான்.. அதுக்குப் பால் வார்த்துட்டிருக்கோம். எப்பவும் நமக்குக் கீழேயே வந்தவள இருத்தி வைக்கணும்னு! வச்சா நம்ம லைஃப் சேஃப்ன்னோ.. இல்ல அதுல கிடைக்கிற அந்த அல்ப சந்தோஷமோ தெரியலை, வெறியா ஆட்டி வைக்குது நம்மளை. காலங்கடந்த பிறகு எதையும் சரி செய்ய முடியாது.

எனக்கொரு உறுத்தலும் இருந்துட்டே இருக்கு. என்னன்னு கேளு. ஒன் தம்பிங்க கல்யாணம் உங்கம்மாவோட சாய்ஸ். ஆனா உன்னுது முழுக்க முழுக்க என் சாய்ஸ். ‘ஸ்கூல் பிரின்ஸ்பால் பொண்ணு, ரொம்ப பிரில்லியண்ட். அப்பா ஸ்கூல்லியே மேக்ஸ் டீச்சரா இருக்கா. அழகு. அடக்கம்.’னு என் ஃப்ரெண்ட் சொன்னப்போ உடனேயே போய் பேசி முடிச்சவன் நான். நாம சொன்ன சொல்லுக்காக வேலைய விட்டுட்டு வந்தா. அப்பா மாதிரியே திறமைசாலி. ஆனா அந்த திறமைக்கும் நாம என்ன மரியாதை செஞ்சோம்னு கொஞ்ச காலமாவே யோசிச்சிட்டு இருக்கேன். ஆர்த்தி இப்ப வளர்ந்திட்டா. அனுவோட படிப்பு வீட்டப் பாத்துக்கவும் ஆர்த்திய வளர்க்கவும் மட்டுமே பயன்படணுமா? மேக்ஸ் அத்தனை ஈஸியா எல்லோருக்கும் நல்லா வந்திராது.  அவ விருப்பப்பட்டா திரும்பவும் வேலைக்குப் போகட்டுமே? வேலையப் பத்தி நா சொல்றது ஒரு உதாரணத்துக்குதான். அதில்ல முக்கியம். பளிச்சுன்னு சொல்றனே.. அவ விருப்பங்களுக்கு மதிப்பு குடுக்க ஆரம்பி. அவளை மரியாதயா நடத்து. உண்மையான சந்தோஷம் எதுல இருக்குங்கறத அப்ப புரிஞ்சுப்ப”

கனத்த அமைதியில் கழிந்தன அடுத்த சில கணங்கள்.

உள்ளே நுழைந்தாள் மைதிலி.

குழப்பத்துடன் அமர்ந்திருந்த அருணின் ஒரு கையைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டிருந்த ராமச்சந்திரன், அவளைப் பார்த்ததும் அவசரமாகக் கைகளை விலக்கிக் கொண்டார்.

கொண்டு வந்த காஃபியை அருணிடம் கொடுத்தவள், உக்கிரமான மேற்கு வெயிலைத் தடுக்க மதியம் இழுத்து விட்டிருந்த  சன்னல் திரைச்சீலைகளை நன்றாகத் திறந்து விட்டாள். அந்திச் சூரியன் வேக வேகமாக இறங்கிக் கொண்டிருந்தாலும் அதன் மிதமான பொன் மஞ்சள் வெயில் அறையை நிறைத்தது.

“நா கெளம்பறேன்,  அருண். ஏழரை மணிக்குள்ள வந்திருவேன்” என்றவள் நேராக ராமச்சந்திரன் எதிரில் போய் நின்றாள்.

“அருணுக்கு பூரி மசால் செய்யலாம்னு இருக்கேன். கஞ்சிக்குப் பதிலா உங்களுக்கும் அதையே தரட்டுமா?” அவரது கண்களுக்குள் பார்த்து மென்மையாகக் கேட்டாள்.

**

---------------------------------------------------------------------------------------------------------------------
எங்கள் ப்ளாக் தளத்தில் 14 நவம்பர் 2017 அன்று வெளியான இக்கதைக்கு வந்த கருத்துகளை இங்கே http://engalblog.blogspot.com/2017/11/27.html சென்று வாசிக்கலாம். திரு ஸ்ரீராமுக்கும்,  கதை குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் அன்பு நன்றி.


***



18 கருத்துகள்:

  1. ' ஊரில், தொடர்ந்த பயணங்களில் ' எங்கள் ப்ளாக்' வலைத்தளத்தில் வந்த உங்கள் சிறுகதையை படிக்காமலேயே விட்டிருக்கிறேன் என்பதை இப்போது இங்கே உங்கள் சிறுகதைக்கான முன்னுரையைப்படித்ததும் தெரிந்து கொண்டேன்.

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தேர்ந்த எழுத்தாளரின் நடை. மன உணர்வுகளை அழகாய்ச் செதுக்கியிருக்கிறீர்கள். இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  2. கதை மிகவும் நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி. அங்க்கும் படித்தேன்.
    இன்னொரு ராமசந்திரன் உருவாகாமல் அருணை நல்வழிபடுத்தியது அருமை.
    அனு இனி சந்தோஷமாய் இருப்பாள்.
    மனத்தில் இடம்பிடிக்க வில்லையென்றால் வாழ்ந்த வாழ்க்கை வீண்தான்.
    வாழ்க்கையை உணர்ந்து கொண்ட ராமனை மன்னித்த மைதிலி அருமை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி.

    இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் // முதல்ல, நீ நிறைன்னு நினைக்கிற எதுவுமே அவ பார்வையில ஒரு பொருட்டா கூட இருக்க வாய்ப்பில்லைங்கறத புரிஞ்சுக்கோ. அதுவுமில்லாம நாம என்ன சாதிச்சு என்ன? என்ன சம்பாதிச்சு என்ன? நம்ம கூடவே நமக்காகவே இருக்கிற ஜீவனோட மனசுல இடம் பிடிக்க முடியலைன்னா வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்டுதான்...... // என்கிற வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு கதை. அங்கேயே படித்து ரசித்தேன்.

    சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. அங்கும் படித்தேன் தொய்வில்லாத நடை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  6. எங்கள் ப்ளாக் ல படிக்க முடியவில்லை...


    இன்று படிக்கவும்....தான் உணர்கிறேன் மிக நல்ல கதையை தவறவிட்டு இருக்கிறேன்...



    மன்னிப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல...செயல்களின் மூலமாக உணர வேண்டியது என மிக அழகாக கூறியுள்ளீர்...


    மிக அருமையாக உணர்வுகளை வெளிபடுத்திய கதை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. பிரமாதமான கதைக்கரு. எழுதிய விதமும் பிரமாதம். இப்படிதான் பல பெண்களுடைய வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போய்விடுகிறது. அடி உதை மட்டுமல்ல.. அலட்சியப்படுத்தலும் அவமானப்படுத்தலும் கூட ஒருவகையான வன்முறைதான் என்பதை பலரும் ஏனோ உணர்வதில்லை. நல்லதொரு சிறுகதை. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /ஒருவகையான வன்முறைதான்/ ஆம், அழகாகச் சொல்லி விட்டீர்கள். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  8. அருமை. உண்மை உள்ளத்தைப் பிசைகிறது. தங்கள் தொடர்பு முகவரி தேவை்

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்களேன். அதை இங்கே வெளியிடாமல் உங்களுக்குப் பதில் அனுப்புகிறேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin