செவ்வாய், 20 டிசம்பர், 2016

மங்கையின் உள்ளம்.. மாதுளம்

மாதுளையின்  தாவரவியல் பெயர் Punica Grantum. தமிழில் ஏன் மாதுளை என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் சுவாரஸ்யமானது. மங்கையின் உள்ளம் (மாது + உளம்), அதாவது எப்படி ஒரு பெண்ணின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை எளிதாக அறிந்திட இயலாதோ அதே போல பழத்தின் தோலை உரிக்காமல் அதன் முத்துக்களைக் கண்டறிய முடியாது. அதனால்தான் மாதுளங்கனி எனப் பெயர் பெற்றதாம். மாது உளம் கனி என்று பிரித்துச் சொல்கிறார்கள் கவிஞர்கள்.

மாதுளங்கனியில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக முன்னோர்கள் சொல்லிச் சென்றதும் பரவலாக நம்பப் படுகிறது.
#1

ஏற்கனவே கடந்த தோட்டத்துப் பதிவுகளில் சில மாதுளை மலர்களின் படங்களைப் பகிர்ந்திருப்பினும் மேலும் சில இங்கே.. தகவல்களுடன்..

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தை மாதுளை மாதமாகக் கொண்டாடுகிறார்கள். கலிஃபோர்னியா, அரிசோனா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் அதிகம் விளைகிறது.
#2
மொக்கு
இப்பழத்தின் பூர்வீகம் ஈரான். மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகளிலும், தென் சீனம், தென் கிழக்கு ஆசியாவிலும் பெருமளவில் பயிராகிறது. இந்தியாவில் மஹாராஷ்டிராவும் கர்நாடாகாவும் மாதுளை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலங்கள்.

பல விதைகள் கொண்ட பழத்தை பெர்ரி Berry என்பார்கள் ஆங்கிலத்தில். மாதுளையும் அப்படியே.  ஒரு பழத்தில் 200 முதல் 1400 வரை விதைகள் வரையில் இருக்கும்.

பிப்ரவரி-மார்ச் மாதத்தில் பூவிடும் மாதுளை ஜூலை-ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும்.

#3

100 கிராம் மாதுளையில்  சக்தி - 83 கிலோ கலோரி; கார்போஹைட்ரேட் - 18.7 கிராம்; சர்க்கரை - 13.67 கிராம்; நார்சத்து - 4 கிராம்; கொழுப்பு - 1.17 கிராம்;
புரதம் - 1.67 கிராம் இருப்பதாகத் தெரிகிறது.

B1 - 6%; B2 - 4%; B3 - 2%; B5 - 8%; B6 - 6%; C - 12%; E - 4%; K - 16%  ஆகிய விட்டமின்களும்,  சுண்ணாம்பு - 1%; இரும்பு - 2%; மக்னீசியம் - 3%; மங்கனீசு - 6%; பாஸ்பரஸ் - 5%; பொட்டாசியம் - 5%; சோடியம் - 0.1%; துத்த நாகம் - 4% ஆகிய நுண் உப்புகளும் உள்ளதாம்.

#4

மாதுளையின் இளந்தளிர் இலைகள் சிகப்பாக இருக்கும். மாதுளையின் செக்கச் சிவந்த மலர்கள் கண்ணைக் கவரும் வனப்புடன் காற்றில் ஆடும். மற்ற மரங்களை விடவும் மாதுளை மரத்திலேயே அணில்கள் ஆனந்தமாக விளையாடியபடி இருக்கும். கொய்யா மரத்தையோ, பழங்களையோ கூட அவை கண்டு கொள்ளாது.

#5

‘விட்டேனா பார்..’ என ஒரு கனி கூட கைக்கு வராதபடி அணில்கள் அதிகாலையில் ஆரம்பித்து அவ்வப்போது வந்து வந்து கொறித்தபடி இருக்கும்.

#6


‘செய்வனத் திருந்தச் செய்’ எனும் குறள் அணில்களுக்குத் தெரிந்திருக்கிறது. இப்படி சுத்தமாகத் துடைத்தெடுக்க 2 முதல் 3 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

தலை கீழாகத் தொங்கியபடி பலவிதமான வித்தைகளை காட்டியபடி அவை உண்ணும் அழகே அழகு.

#7


#8


எப்படி இருக்கிறது வீட்டுக் கனியின் சுவையென அறிய பிளாஸ்டிக், துணிப் பைகளை ஓரிரு காய்களில் கட்டி வைத்துப் பார்த்தும் பலனில்லை. அவற்றுள் பூஞ்சை போல வர ஆரம்பித்தன.  அதனால் அணில்களுக்கே குத்தகைக்கு விட்டிருந்தோம். ஆம். விட்டிருந்தோம். இப்போது என்னாயிற்று?

#9

கடந்த ஆறு மாதங்களாக விடாமல் செழிப்பாகப் பூத்துக் காய்த்தபடி இருந்த மாதுளை மரம் திடீரென இரு வாரங்களுக்கு முன் பட்டுப் போகவே அகற்ற வேண்டியதாயிற்று :( . மீண்டும் துளிர்க்குமென அடிமரத்தை அப்படியே விட்டிருப்பதோடு அதன் அருகிலே மீண்டுமொரு கன்றை நட்டு வைத்துள்ளோம்.

இப்போதும் அணில்கள் வருகின்றன. ஆனால் அதிக நேரம் பார்க்க முடிவதில்லை. முருங்கைப் பூக்களை விரும்பிச் சாப்பிட்டாலும் மாதுளை மரத்தில் கிடைத்த முழுநேர விருந்து மாதிரி மற்றவற்றில் இல்லை போலும்.. :)

#10


சுற்றுச்சுவரையொட்டி நீருற்றுக்கு இடப்புறம் நிற்பது மாதுளை. வலப்பக்கம் கருவேப்பிலை மரத்தில் ஆரம்பித்து இளஞ்சிகப்பு, வெள்ளை செம்பருத்தி மற்றும் சிகப்பு அடுக்குச் செம்பருத்தி மரங்களும், பிரம்மக் கமலம், முருங்கை, கொய்யா மரங்களும் வரிசையாக நிற்கின்றன. கீழே துளசி, சாமந்தி வகை, வாடாமல்லி பூச்செடிகள். 

#11

இடப்பக்கம் முதலில் மா. அடுத்து தென்னை, ஜாம்ருல் மரங்கள். சுற்றுச் சுவர் அருகே தெரியும் வாழை இப்போது ஐந்தடிக்கு வளர்ந்து விட்டது. இவை அவ்வப்போது எடுத்த படங்கள். இந்த மா வகை மற்றும் ஜாம்ருல் வருடத்துக்கு இரண்டு சீஸன். இரண்டுமே இப்போது ஒரு இடைவெளிக்குப் பிறகு பூ வீட்டுள்ளன.

#12
மாம்பூ


#13
ஜாம்ருல்


பெரும்பாலும் பூச்செடிகள் 3 மாத காலங்களுக்கு வருகின்றன.  வாடாமல்லி 3 மாதங்களுக்கு வாடாமல் அழகு காட்டின. இப்போது அதன் சீசன் முடிந்து விட்டது.

#14

#15
தரையில் படர்ந்து.. கொத்துக் கொத்தாய் மலர்ந்து..

#16
Gomphrena globosa (purple)
புதிய Nikon d750_யில் எடுத்த இப்படம் ஃப்ளிக்கரில் கடந்த ஒரு வாரமாக ஆயிரத்துக்கு மேலான பக்கப் பார்வைகளைத் தாண்டி, தொடர்ந்து புகைப்பட ஆர்வலர்களின் விருப்பத்தைப் பெற்று வருகிறது..

#17
தென்னையின் உயரத்தை எட்டிப் பிடிக்க முயன்று வரும் கொய்யாத் தளிர்..


தோட்டப் பகிர்வுகள் தொடரும்...
*

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 7)
**



11 கருத்துகள்:

  1. படங்கள் அழகோ அழகு
    மாதுளையின் பெயர்க் காரணம் அறிந்து மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  2. படங்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு...!

    ரசித்தேன் பலமுறை....

    பதிலளிநீக்கு
  3. மாது உளம் கனி! அருமை.

    படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  4. மாது உளம் கனி..காரண பெயர் ..ஆஹா..

    படங்களும்....தகவல்களும் ..அருமை...உங்க வீட்டு தோட்டம் சூப்பர்..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin